சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை

Spread the love

இந்த இதழ் முங்காரி ஆசிரியரும், சிற்றிதழ் சங்கங்களின் நிறுவனருமான குன்றம் மு. ராமரத்தினத்தின் புகைப்படத்துடன் வந்திருக்கிறது. எண்பது வயதைக் கடந்த அவர், தன் வீட்டின் முன்னால், ஒரு துடைப்பத்தை வைத்துக் கொண்டு, பெருக்கிக் கொண்டிருக்கிறார். பெருக்குவது என்பது அவருக்கு கை வந்த கலை. சிறு அமைப்பாக இருந்த சிற்றிதழ் சங்கத்தை, ஒரு பேரியக்கமாக மாற்றியதில், அவர் பங்கு மறுக்க முடியாதது. உள்ளே அவரைப் பற்றிய நினைவோட்டங்களும் ( கட்டுரை சுகன்) நமக்கு அவரைப் பற்றிய இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகின்றன.
சுகன் இப்போதெல்லாம் வெள்ளைத் தாளில் கருப்பு எழுத்துக்கள், படங்களுடனே வருகிறது. அன்னையின் பிரிவுக்குப் பிறகு இப்படித்தான் ஆகிப்போயிற்று என்று நினைக்கிறேன். பக்கங்கள் குறைந்ததால், சுகன் தன் தலையங்கத்தைச் சுருக்கிக் கொண்டு விட்டார். ஏனைய படைப்பாளிகளுக்கு இடம் விடுதல் ஆரோக்கிய ஆரம்பம். தி.மா.சரவணனின் கட்டுரையும் இரண்டு பக்கங்களோடே நின்று விடுகிறது.
இரவீந்திரபாரதியின் ‘ சந்தித்த வேளையியில் ‘ என்கிற கதை இலக்கியக்கூட்டம் தொடர்பானது. கவிஞர் கவீந்திரன் கூட்டத்துக்கு, பேருந்தில் பயணித்து, அழைப்பித ழில் பெயர் போடாமல் விட்டதை, பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு, அழைக்கா மல் வந்த பேராசிரியர், பேச அழைக்கப்பட்டதை கண்டு முகம் சுளிக்காமல், அவருடனே பயணப்பட்டு, வழியில் சிற்றுண்டிச்செலவு , பேருந்து கட்டணம் என எல்லாவற்றையும் பேராசிரியரே செலவழிப்பதைக் கண்டு வருந்தி, கடைசியில் தன் நூல் ஒன்றினை அவருக்கு அளிக்கும்போது, இடையில் நூறு ரூபாய் வைத்துக் கொடுத்து கணக்கை நேர் செய்வது தான் கதை. கதையைப் படித்தவுடன் நமக்குத் தோன்றியது, இது அவரது சொந்த அனுபவத்தின் பதிவு என்பதே. இரவீந்திரன், கவீந்திரன் என்று பெயரும் ஒரே ஓசையோடு இருப்பது இன்னமும் ஐயத்தைக் கிளப்பி விடுகிறது.
சுகனின் முக்கியமான பகுதி கூர். அதில்தான் வாசகர்கள் தன் எண்ணங்களை பதிவு செய்கிறார்கள். அதிக பக்கங்கள் கொண்ட பகுதியும் இதுவே. இந்த இதழும் விதி விலக்கல்ல. சுகனின் பொருளாதார நெருக்கடி அறிந்து பலரும் உதவ முன் வந்திருப்பது கடிதங்கள் வாயிலாகத் தெரிகிறது. சுகனின் இருபத்தி ஐந்தாம் ஆண்டு விழா தஞ்சையில் வரும் மே மாதம் 5ந்தேதி மற்றும் ஆறாம் தேதி ஆல்வின் மேல்நிலை பள்ளி, சுந்தரம் நகரில் நடக்க இருக்கிறது. இதழுக்கு உதவ நினைப்பவர்கள் அந்தக் கூட்டத்துக்கும் வரலாம். நேரில் வர இயலாதவர்கள், சி 46, இரண்டாம் தெரு, முனிசிபல் காலனி, தஞ்சை – 613 007 முகவரிக்கும் தொகை அனுப்பலாம். இரண்டும் முடியாத மனமிருப்பவர்கள் ஐ ஓ பி நீலகிரி வட்டக் கிளை கணக்கு எண்: 021202000005306-சௌந்தரசுகன் என்கிற வங்கிக் கணக்கும் நேரிடையாக கட்டி விடலாம். அதில் உங்கள் பெயர் குறிப்பிடுவது அவசியம்.
பக்கங்கள் குறைந்ததினால் ஒரேஒரு ஓவியம் தான் இந்த இதழில். அதுவும் கவியோவியத்தமிழன் 2007ல் வரைந்தது. இப்போதெல்லாம் வரைவதில்லையோ க.ஓ.தமிழன்?

0

Series Navigationபழமொழிகளில் நிலையாமைசுதந்திரம் … கம்பிகளுக்குப் பின்னால்