சுப்புமணியும் சீஜிலும்

Spread the love

 

ஜாசின் ஏ.தேவராஜன்

 

 

(குறிப்பு: இக்கதை மலேசியத் தமிழ் இளந்தையர்களின் விளிம்புநிலை கூட்டத்தாரின் பேச்சு மொழியில் சொல்லப்பட்டது. தளச்சூழலில் தமிழும் மலாயும் கலந்து பேசுகின்ற நிலை வெகுநாட்கள் புழக்கத்தில் உள்ளன. பின்வரும் சொற்கள் வாசகர்களின் புரிதலுக்காக வழங்குகிறேன். சீஜில்- சான்றிதழ், பெர்ஹிம்புனான் – பள்ளியில் மாணவர் சபை கூடல், ஹரி அனுகெராஹ் செமெர்லாங்- விருதளிப்பு நாள், துங்கு டுலு- முதலில் காத்திரு, ஜபாத்தான் – (கல்வி) இலாகா, எஸ்.பி.எம் – 17/18 வயதில் அமரும் பள்ளித் தேர்வு, மஜ்லிஸ்ல – நகராண்மைக் கழகத்தில், ஜடுவால் துகாஸ் – கடமை அட்டவணை, NGO – அரசாங்கச் சார்பற்ற நிறுவனம், ச்சிப்பாட் பஙூன் – சீக்கிரம் எழுந்திரு, சிலுவாரு – காற்சட்டை)

பெர்ஹிம்புனான்ல பின்னாடி ஒக்காந்திருக்கோம். ஸ்கூல்ல ஹாரி அனுகெராஹ் செமெர்லாங். மேடையில புள்ளைங்க சீஜில் வாங்குற நாளு. நான் பேசாம இருந்தாலும் கூட்டாளிங்கதான் பக்கமா வந்து ஒக்காந்துக்கிட்டு நீ அப்படி என்னடா பன்னுணேன்னு கேக்குறாய்ங்க. படிச்சவனால மட்டுந்தான் ஒலகத்துல வாள முடியுமாடான்னு மொத கேள்வி கேட்டோன ஊமக்கோட்டானாட்டம் முலிக்கிறாய்ங்க, சிப்பாட் ப

“இந்த ஒலகத்துல முக்காவாசி பேரு படிக்காதவன் இருக்கிறதுனாலதான் படிச்சவனே வாள முடியுது தெரிஞ்சுக்குங்கோடா. படிச்சவன் செய்ய முடியாத எத்தனையோ வேலைகளப் படிக்காதவன் செஞ்சிக்கிட்டிருக்கான்டா. அவ்ளொ யேன்… தோ நானே செஞ்சிருக்கேன்! பதினேலு வயசுல நானே ஒரு ஒம்…போ…து பேரு உயிரக் காப்பாத்திருக்கேனே! சும்மாவா?!”

“ அப்படீன்னா… ஒனக்கும் இன்னிக்கு சீஜில் கெடைக்கும்னு சொல்றெ மச்சான்!”

“ அதெல்லாம் எனக்குத் தெரியாதுடா. ஆனா வாத்தியாருங்கக்கிட்ட சொன்னப்போ

பெத்துல்கா தம்பி… துங்கு டுலுன்னு சொன்னாய்ங்க. நான் என்னா படம் புடிச்சா வெச்சிருக்கேன்… கொண்டாந்து காமிக்க?!”

“ டே வேணும்னா பாரென்… ஒனக்கும் இன்னிக்கி கெடைக்கும்டா . சரி சீக்கிரம் சொல்லுடா மணி”ன்னு வெரல சுண்டுறாய்ங்க. பெர்ஹிம்புனான்ல வாத்தியாரு பேசுறத இவிங்க யாரு கேக்குறா? எவ்னையாவது நோண்டிக்கிட்டிருப்பாய்ங்க.அதனால நானே சொல்லித் தொலையுறேன்.

… அது வந்து மச்சான்… படிக்க வேண்டிய காலத்துல ஸ்கூலவுட்டே விரட்டிட்டாய்ங்க. அப்புறம் கொஞ்ச நாளு கலிச்சி ஜபாத்தான்லாம் போயி பாத்து, திரும்பி இந்த ஸ்கூலுக்கே வந்து இப்போ எஸ்.பி.எம்மு எலுதப்போறேங்கிறதுதான் ஒங்களுக்கு தெரியிமே.எனக்கில்ல தெரியும் போன எடத்துல என்னா நடந்துச்சுன்னு.பையைத் தோள்ல மாட்டிக்கிட்டு நான் கெளம்புனதப் பார்தீங்கல்லெ… என்னவோ சிங்கப்பூர்ல வேலை கெடைச்ச மாரித்தான் தெரிஞ்சிருக்கும் ஒங்களுக்கு, அப்பிடித்தானே? அதுக்கெல்லாம் ஒரு வயசு வேணாமாடா? எஸ்.பி.எம்மெ முடிக்காம யேன்டா புறப்பட்டுட்டேன்னு நீங்க கேக்கிறதுல ஞாயம் இருக்குடா. அதான் சொல்றேன்ல… நானா புறப்படலே… எல்லாருமா சேர்ந்து வெரட்டிட்டாய்ங்கய்யா வெரட்டிட்டாய்ங்கய்யா! எல்லாரும்னா யாரு ? எல்லாருந்தான்…! அப்ப நா‎‎‎‎‎‎‎ன் எங்கதான்டா போறது?

ஒங்களுக்குத் தெரியுமாடா… அன்னிக்கி ஒரு நாளு வாத்தியாரு மூனாவது லெட்டரு அதான் அமாரான் கெதீகா வீட்டுக்கு அனுப்பியிருந்தாருல்லெ. லெட்டரப் பார்த்த அப்பா, நொண்டி நொண்டியே ஸ்கூலுக்கு வந்தாரு. இனிப்பு நீருனால அப்பாவோட கால்ல ஒரே புண்ணு. ஏற்கனவே பெருவெரல வெட்டியெடுத்துட்டாய்ங்கலா, இன்னும் கொஞ்ச நாள்ல காலயே வெட்டப்போறதா டாக்டரு சொன்னத நானே காதாலக் கேட்டிருக்கேன்டா. அப்படியெல்லாம் வரக்கூடாதுன்னு முனியாண்டிய வேண்டிக்கிட்டு அவரோட கால கலுவி தெனைக்கும் நான்தான்டா மருந்தே போட்டேன். வெளிக்கி போறதுலிருந்து சாப்பாடு மருந்துன்னு அப்பாக்கு எல்லாமே நான்தான்டா! புண்ணிருக்கே… நீர் வடிஞ்சி பொண்ண வாடெ அடிக்கும். அப்படிப்பட்ட நெலைமையில அவரு நடந்தே ஸ்கூலுக்கு வரணுமா? அப்பாவ பார்க்க மனசுக்கு ரொம்ப ‘சாக்கெட்டா’ இருந்துச்சுடா.நீங்க ஏம்பா வந்தீங்கன்னு கேட்டதுக்கு அப்பாவுக்கு ஆத்திரம் வந்து என்னெ ஓங்கி அறைஞ்சிட்டாரு. நான் அந்த அர்த்தத்துல கேக்கலப்பான்னு அப்பாக்கிட்ட சொன்னேன். என்னையே நம்பவேமாட்டேன்னுட்டாருடா. இதான் சாக்குன்னு டிசிப்ளின் வாத்தியாரு என்னோட ரெக்கோட்ட தொறந்து காமிச்சி நான்தான் ஸ்கூல்லியே ரொம்ப பொந்தெங் பண்றேன்னும்… டீச்சர் எலுதிப் போடறத எலுதாம ரொம்ப பேசுறேன்னும் இன்னும் என்னென்னமோ சொல்ல, அத மறுக்கலாம்னா என்னால வாய தொறக்கவே முடியல.கோர்ட்டுல நிக்க வச்சி ஆளாளுக்குக் கேப்பாய்ங்களே,அப்பிடி! சத்தியமா சொல்லு நான் பொந்தெங் பண்றவனா?எங்க அம்மா ஒன்னும் என்னெ கேணயனா பெக்கலெ தெரியுமா?

காலங்காத்தால க்கிளாஸ வந்து பார்த்தாக்கா கண்டமேனிக்கு கெடக்கும். எங்கப்பா காலம்பறவே மஜ்லிஸ்ல குப்ப லோரி எடுக்கப் போறதுக்கு முன்னாடி, என்ன மொதல்ல ஸ்கூல்ல விட்டுட்டுத்தான் போவாரு. மேச மேல தலைய வச்சிக்கிட்டு க்ளாஸ்ல நான் ஒண்டியா ஒக்காந்திருப்பேன். பொலுது வெளுத்தோன ஏலு மணிக்கு மேலதான் மத்தவங்க வருவாய்ங்க. க்கிளாஸ் மோசமா ஆக்குனதே நான்தான்னு குண்ட தூக்கிப் போடுவாய்ங்க. என்னங்கடா இது… சீக்கிரம் வந்தாலும் தப்பு, வராக்காட்டியும் தப்பு! கேட்டாக்கா நாந்தான் காலைலயே வந்தேன்னு சொல்லி அதுக்குத் தண்டனையா எல்லாத்தையும் கூட்டி குப்பத்தொட்டியில கொட்டச் சொல்லுவாய்ங்க. வாரத்துல எப்படியும் மூனுவாட்டியாவது கூட்டிடுவேன். இப்பிடி காலாகாலமா கூட்டி…கடசீல என்னையே கூட்டித் தள்ளுவாய்ங்கன்னு தெரியாமப் போச்சேடா! எல்லாம் முடிஞ்சி தாண்டாஸ்ல போயி கைய கலுவிட்டு வந்தாக்கா பாடம் பத்து நிமிசத்துக்கு மேல ஓடியிருக்கும். க்ளாஸ் பொந்தெங் பண்ணிட்டேன்னு டீச்சரு எம்பேர டிசிப்ளின் புக்குல எலுதுவாய்ங்க. மண்டைக்கு மேல ஏறும்!அப்புறம் என்னத்தெ எலுதுறது படிக்கிறது? இதுல வீட்டுப்பாடம் வேறயா? நான் தெரியாமதான் கேட்கிறேன்.. க்கிளாஸ்ல பெருசா ஒட்டி வச்சிருக்காங்களெ ஜடுவால் துகாஸ், அது எதுக்காம்? வாயாங் காமிக்கவா? நல்லா படிக்கிறவய்ங்க அத செய்யக்கூடாதா? நாந்தான் தெனைக்கும் நொட்டுணுமா?எங்கப்பா குப்ப பொறுக்குறாருங்கிறதுக்காக நானும் பொறுக்கணும்னு தலயெலுத்தா? அதனாலயே ஸ்கூல்ல எனக்கு வேற பேரு. சுப்புமணியில்ல குப்பமணி! அதுவும் தமிலு ஸ்கூல்ல ஒன்னா படிச்சி ஒன்னா வளந்த புள்ளைங்களே… மத்தவங்கக்கிட்ட வச்சிவுட்டாக்கா மனசு வலிக்காதா!? நான் மட்டுமாடா யூரான் கட்டுறேன்? ஸ்கூலு முடிஞ்சி சீனம் பண்ணையில கோலி பீ அள்ளி யூரான் காசு கட்டுறது எனக்கில்ல தெரியும்! அப்படின்னா அவிங்க பண்றத வெளியெ சொல்லவா? நம்பமாட்டீங்க. அவிங்கெல்லாம் ஹை க்கிளாஸ்ல க்ரீமினல் வேலயெல்லாம் பண்ணுவாய்ங்க. எனக்குத் தெரியும்டா… அவங்க ஹென்போன்ல பாத்தாக்கா கண்ட கண்ட கருமாந்தரங்கல்லாம் இருக்கு. வேணான்டா! என்னா… பொய் சொல்லியே தப்பிச்சிட்றாய்ங்க… உண்ம பேசுறதுனால எப்போதிக்கும் நான்தான் மாட்டிக்கிறேன். எங்கம்மா காதுல விழுந்துச்சுன்னா செத்தே போயிடுவாங்க தெரிமா?

புதுசா எந்த ஸ்கூலுக்கு மாறிப் போனாலும் நான் திருந்தப் போறதில்லன்னு அப்பா முடிவெடுத்தாரு. அதுக்கு என்னமோ ஒரு பலமொலி சொன்னாரு… ஆங்… நாயக் குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும் அது திரும்ப பீ திங்கத்தான் போகுமாம். அப்படித்தான்டா நெனைக்கிறேன். அதனால படிச்சிது போதுன்டான்னு என்னெ ஸ்கூலுட்டே நிப்பாட்டிட்டாய்ங்க. நான் திருந்தி நல்ல பையனா வரணும்னு அப்பாக்கு ஆசை. அதனால எட்டக்கையில இருக்கிற ஹோமுக்கு என்ன அனுப்பி வச்சாங்க. எந்த ஹோம்னு கேக்கிறீங்களா? ட்ரூ விஸ்டம்னு பேரு. ஏதொவொரு கோளாறு எனக்குள்ள இருக்குதுன்னு மனசுக்குள்ளெ நெனைச்சிக்கிட்டு சரி போய்தான் பார்ப்போமென்னு அங்க போய்ப் பாத்தாக்கா இதவிட பெரிய அம்பா மொதலைங்கெல்லாம் இருந்திச்சு. மொத ஒரு வாரம் என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாய்ங்க. அங்க ஏறக்குறைய பதினாறு பதினேலு பேரு இருப்பாய்ங்க. நாலஞ்சு சீனப்பையனுங்களும் இருந்தாய்னுங்க. அதுல நானும் இன்னொரு குண்டு பையனுந்தான் கொஞ்ச வெவரம் தெரிஞ்சவங்கன்னு வச்சுக்குவெமெ. போயி ரெண்டாவது நாள்லியே பையனுங்க என்கிட்ட ஈயும் பீயுமா ஒட்டிக்கிட்டாய்ங்க. இன்னொருத்தன் ஆளுதான் மாடு மாரி இருந்தான். ஆனா கோச டப்பா! மத்தவிங்க எல்லாம் பொடிப்பையலுவ. மொத நாளு ரொம்ப மரியாதையா பேசி, ஹோம்ல எப்படி நடந்துக்கணும்னு சொன்னாய்ங்க. ஹோம்ல சேர்ந்துட்டா எப்படிப் பராமரிப்பாய்ங்கன்னு வார்டன் லோகா சொன்னப்பொ, அப்பா அம்மாக்கு அவரு மேல ரொம்ப நம்பிக்கெ ஏற்பட்டுச்சு. அவரும் பாக்கறதுக்கு விவேகாநந்தர் மாரி ஜோக்காதான் இருந்தாக. எல்லாம் ட்டைம்மோட செய்யணும், சொந்தமா துணி தோய்ச்சிக்கணும், சாமி கும்பிடணும் இப்படி எல்லாமே சொந்தமாதான் செய்யணும்னு சொல்லி ரொம்ப க்கூலா கவனிச்சிக்கிட்டாய்ங்க. அதோட சிகரெட் குடிக்கிறது, சண்ட போடுறது, நெனைச்ச நேரம் டிவி பாக்குறது, ஹென்போன் பாய்க்கிறதெல்லாம் முடியவே முடியாதுன்னு ஸ்ட்ரிக்காச் சொல்லிட்டாய்ங்க. நானும் இவ்வள நாளா இதுதான் நம்பள கெடுத்து வச்சிருக்கோன்னு நெனைச்சேன். அதெல்லாம் ஓகேதான். ஆனா போகப் போகத்தான் எல்லாமெ தெரிய வர ஆரம்பிச்சது. நாங்க எதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொன்னாய்ங்களோ, அதவிட டபுளா அவிங்க செஞ்சாய்ங்க.

ஒரு நாளு ஹோம்ல உள்ள தமிளப் பையன் என்கிட்ட வந்து ஒரு விசயத்தெ மெதுவா சொன்னான், வார்டன் லோகா சிகரெட் குடிக்கிறார்னு. அப்படியெல்லாம் இருக்காதுடான்னு சொன்னதுக்கு அம்மா மேல சத்தியம் செஞ்சான். உண்மையாவான்னு தெரிஞ்சிக்க நானே துரோன் குடுத்தேன். ராத்திரில மேமாடிக்குப் போயி அவன் சொன்ன ரூம்புல எட்டிப் பாத்தாக்கா வார்டன் லோகா மேஜை மேல காலப் போட்டுக்குட்டு குப்பு குப்புன்னு பொகைய கிளப்பிக்கிட்டுப் படம் பார்த்துக்கிட்டிருந்தாக. மேசையில ஒரு போத்தலு இருந்துச்சி. அதுக்குப் பக்கத்துல கே.·ப்.சி கோத்தாக் இருந்திச்சி. நான் பேசாம தூங்கப் போயிட்டேன். எனக்கு அந்த ஆளு மேல மொத புள்ளி விலுந்ததே அப்பத்தான்.

ரெண்டு நாளு கலிச்சி NGO ல இருந்து மூனு பேரு வரப்போர்றதாவும், அவிங்க வர்ற நேரத்துல நாங்க வாய தொறக்கவே கூடாதுன்னும் சொல்லி எச்சரிக்க பண்ணுனான். சொன்ன மாரியே அவிங்க வந்தப்போ, வார்டன் எங்கள அறிமுகப்படுத்தி வச்சிட்டு இந்த ஹோம்மெ நடத்துறதுக்கு எவ்ள செரமம்னு சொல்லி இப்போதைக்குச் சாப்பாட்டுக்கும் செலவுக்கும் காசு பத்தலென்னு ·பைலயெல்லாம் எடுத்துக் காமிச்சான். நான் ப்பேக்கான் மாரி பாத்துக்கிட்டிருந்தேன்.அரை மணி நேரங் கலிச்சிப் பாத்தாக்கா மூட்டை மூட்டையா அரிசி,பால்டின், மிலோ,பிஸ்கட், சொக்லெட், பெட்டிப் பெட்டியா ஓரஞ்சுன்னு வந்து எறங்குனுச்சு பாருங்க! போதாதுக்கு வித விதமா துணிமணிங்களும், அடேயப்பா! அப்புறம் ச்செக்கும் கொடுத்தாய்ங்க. எவ்ளொன்னு சத்தியமா தெரியாது. ரெண்டு வாரமா கண்ணுல வெலக்கெண்ணய ஊத்திக்கிட்டு வார்டனையே கவனிக்க ஆரம்பிச்சேன். NGO குடுத்த சாப்பாடும் எங்களுக்கு வந்து சேரல,துணிமணியும் வந்து சேரல. அப்படின்னா அதெல்லாம் எங்க போவுதுன்னு எனக்குள்ளாற ஒரு சந்தேகம். அதே சாப்பாடு. சாப்பாடுன்னா சோறும் மொடா சாம்பாருந்தான். சமயத்துல ஒரு கடிச்சிக்க,சப்னு இருக்கும்.காலைல தே ஓவும் தாவா ரொட்டியுந்தான். அதுவும் அளந்துதான் கொடுப்பாய்ங்க வார்டன் அன்ட்டி. வளர்ற புள்ளைங்களுக்குக் கொஞ்சம் கூட போடுங்க அன்ட்டின்னு பாவப்பட்டு வாய் தவறிக் கேட்டுட்டேன். அன்ட்டி என்னெ மொறைச்சிப் பார்த்தாங்க. கொடுக்கிறத தின்னுக்கிட்டிருக்கிறத விட்டுட்டு என்னடா எகத்தாளமா கேள்வி கேட்கவேண்டிக்கெடக்குன்ற அர்த்தத்துல ஒரு லுக்கு விட்டாங்க பாருங்கடா! பத்ரகாளியே தோத்துடும்! பையனுங்களுக்குக் கையும் காலும் வெட வெடன்னு ஆடுச்சி. கேட்கா வேணாண்ணென்னு கையப் புடிச்சிக்கிட்டுத் தடுத்தாய்ங்க. அதுல தடிமாடு ஒன்னு இருந்திச்சின்னு மொதல்லே சொன்னேன்லெ, இப்படித்தான் பசிக்குது, கொஞ்சம் கூட போடுங்கன்னு ஏற்கெனவே கேட்கப் போயி, வெளு வெளுன்னு வெளுத்துடாய்ங்களாம்.எனக்குச் சந்தேகம் வர ஆரம்பிச்சப்போ ராத்திரி தூங்குற நேரத்துல பையனுங்கள எலுப்புவேன், இல்லாக்காட்டி காலைல செடிக்குத் தண்ணி ஊத்துற நேரத்துல இங்க என்னடா நடக்குதுன்னு விசாரிச்சேன். மாசத்துக்கு எப்படியும் மூனுவாட்டி வெளியிலிருந்து ஆளுங்க ஒதவி செய்ய வருவாய்ங்களாம். வார்டனெ மோப்பம் புடிக்கிறதே எனக்கு வேலையா போனுச்சி. அட… இங்கையுமான்னு நெனைச்சுக்கிட்டேன். முன்ன ஸ்கூலு படிக்கிற ட்டைம்முல எவன் சிகிரெட்டு குடிக்கிறான், எவன் ஹென்போன் கொண்டுவர்றான், எவன் கேங் சண்டை போடுறான், எவன் லவ் பண்றான், எவன் என்னன்னா பண்றான்னு போலிஸ் மாரி ஸ்கூல் பூரா சுத்துவேன். ஏ.எஸ்.பி.தெய்வீகன் மாரி ஆகணும்னு மனசுல ஆசெ எல்லாம் இருக்கு. யாருக்கிட்டயும் சொல்லலெ.அதுக்கு ஒத்திகை மாரி ஸ்கூல்லியே ஆரம்பிச்செட்டேன். எத்தனையோ பேர டிசிப்ளின் வாத்தியாருக்கிட்ட மாட்டிவுட்டுருக்கேன்னு ஒங்களுக்கே தெரியும். இப்படியெல்லாம் செய்யப்போயி கடசீல வாத்தியாருங்களே எனக்குக் கொடுத்த பரிசு ‘புரோப்ளோம் ஸ்டூண்ட்’! வேகுதடா மனசு?!

பரவால்லடா மச்சான். மனசாட்சிக்கு ஞாயன்னு படுறதெ செய்யணும். அது யாராயிருந்தாலும், எந்தக் கொம்பனாயிருந்தாலும் அதப் பத்திக் கவலயில்லன்னு பையனுங்கக்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தப்போ வார்டன் லோகா காதுல விழுந்துருச்சு. அவன்தான் என்னையே ஸ்பை பண்றானே? நிச்சயமா இது அன்ட்டியோட வேலதான்னு எனக்கும் தெரியும். பெருச்சாளியப் புடிக்கிற பூன மாரி சுத்துதில்லெ.

வார்டன் லோகா வந்து என் நெஞ்சில வோங்கி தட்டி “என்னடா சொன்னெ மயிரு? நீ யென்னா பெரிய மண்டையா? ரொம்ப துள்ளுறீயா! நான் ஆரு தெரிமா”ன்னு அடியாளு ரேஞ்சுல பேசுனான். ஆளு தொந்தின்னாலும் என்னவிட கொஞ்சம் வளத்திதான். இதவிட பெரிய மண்டைங்க என் தாமான்லயும் இருக்காய்ங்க, சும்மா ஒரு க்கால் பண்ணா என்னாகும்னு இந்தாளுக்குத் தெரிமா?

நான் உள்ளதத்தானேன்னு சொன்னேன். எங்கள சிகரெட் குடிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு நீங்க குடிக்கிறீங்களே? NGO கிட்ட எங்களுக்கு நல்ல சாப்பாடு தர்றதா சொன்னீங்க. சொந்த புள்ள மாரி அன்பா பாத்துக்கிர்றதா வேற சொன்னீங்க. அப்படியா பாத்துக்கிறீங்க? புதுத் துணிமணி தர்றதா சொல்லி ரெண்டு ஜோடி உடுப்பையேதான் தோய்ச்சித் தோய்ச்சிப் போடுறோம்? எங்கள டிவில சேதிகூட பாக்க விடாம நீங்க மட்டும் சிடி யெல்லாம் போட்டுப் பாக்குறீங்க. ஹோம்ல தங்கிக்கிட்டு ஸ்கூலுக்கு அனுப்புறதாவும், பாடம் படிச்சித் தர்றதாவும் அன்னிக்கு அப்பா அம்மாக்கிட்ட யெப்ப்ப்ப்ப்ப்ப்படி சொன்னீங்க!? படிச்சித் தர்றீங்கலா? கையில கார்ட குடுத்து வெளியில டொனேஷன் வாங்க அனுப்புறீங்க. நாங்க இதுக்கா வந்தோம்? காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் வேலை வாங்குறீங்களே? இதுவரைக்கும் எங்களுக்கு என்னா படிச்சிக் கொடுத்தீங்கன்னு தைரியமா கேட்டுட்டேன்டா. சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடி எம்மூஞ்சியில வுட்டான் பாரு ஒரு செம்ம குத்து! சில்லி மூக்கு ஒடைஞ்சி ரெத்தம் கொட கொடன்னு கொட்டுச்சி!

அதுக்கு அவன் என்னா சொன்னான் தெரியுமா? “டே முட்டாளு! எனக்கே சொல்லித் தர்றியாடா? ஒன்னெ வெக்கிற எடத்துல வெக்கிறேன்டா”ன்னு அன்னிக்கு ஒரு நாளு முலுக்க நாங்க எல்லாருக்கும் பேய்ப் பட்டினி!

எனக்குக்கூட பரவாலடா. இந்தக் கஸ்டம்,பசி,சீக்குங்கிறதெல்லாம் நான் பாக்காததா?! யெங்கூட இருக்குற சின்னப் பையனுவள நெனைச்சாதான் மனசு பகீர்ன்னிச்சு! ராத்திரில பசியால துடிச்சாய்ங்க பாருங்கடா. ஏற்கெனவே, அப்பா அம்மாவ பிரிஞ்ச கவல. சிலருக்கு அப்பா அம்மான்னும் யாரும் இல்ல. அடுத்த நிமிசம் உயிர் வாலணுமே. பாவம்! அவனுங்களுக்கு யாருடா இருக்கா? அழுதாய்ங்க! வால்க்கையில மறக்கவே முடியாது! நல்ல காலத்துலேயே நாய்க்குப் போடுற மாரிதான் போடுவாய்ங்க. இப்ப அதுவும் இல்லைன்னா எப்படி? வயித்தப் புடிச்சிக்கிட்டு சுருண்டு படுத்துக்கிட்டு விடிய விடிய பிணாத்திக்கிட்டே தூங்குனாய்ங்க. ஒவ்வொருத்தனையும் அப்பத்தான் கிட்டப் போயி தொட்டுப் பார்த்தேன். ஒடம்புல அங்கயிங்க பட்டப்பட்டையா தளும்பு இருந்துச்சி. அடப் பாவிங்களா! இத்தன நாளு இதச் சொல்லாம இருந்திருக்காய்ங்களே! இந்த இருட்டடிகூட இங்க நடக்குதான்னு அப்பதான்டா யோசிக்க ஆரம்பிச்சேன்.இத பார்த்துட்டு என்னால தூங்க முடியுமான்னு நீங்களே சொல்லுங்கடா. விடிய விடிய முலிச்சிருந்தேன். அவனுங்க தூங்குன நேரமா பார்த்து ஹோம விட்டு ரொம்ம்ம்ம்ம்ப டெக்னிக்கா வெளியேறி பக்கத்துல இருக்கிற போலிஸ் ஸ்டேஷனுக்குப் போயி ஒன்னுவிடாம சொல்லிட்டு அப்படியே கொஞ்சம் சாப்பாடும் வாங்கிட்டு நல்ல பையன் மாரி வந்து பையன்கள எலுப்பி சாப்பாடு கொடுத்தப்பத்தான் இன்னொரு ஜென்மம் எடுத்தாய்ங்க. எனக்கு பசியே மறந்துபோச்சி! எல்லாருமே எம்மடியில கட்டிப் புடிச்சிக்கிட்டுப் பூனக்குட்டிமாரி படுத்துக்கிட்டாய்ங்கடா. எம்மேல இவ்ள பாசமா! எனக்குள்ள யாரோ…கடவுள்… இல்ல அதவிடப் பெரிசா ஏதோ எறங்குனமாரி அப்பதான்டா தோனுச்சி!

அதுக்குப் பிறகு எல்லா விசயத்துலயும் ரொம்ப கெடுபிடி. வார்டன் லோகா பச்சைப் பச்சையா பேச ஆரம்பிச்சான்டா. பிள்ளைங்கள வளக்க வக்கில்லாம நாய் மாரி பெத்துக்கிட்டு இங்க வந்து போட்டுட்டுப் போயிருக்காங்கன்னு அம்மா அப்பாவப் பத்தி கெட்டக் கெட்ட வார்த்தையில பேசுனான்டா. மண்டைக்குச் சுர்ருன்னு ஏறுனிச்சி. கைய வைச்சிடலாம்னு முடிவெடுத்த நாளுலதான் திடீர்னு போலிஸ் வந்தாய்ங்க. எங்கள எல்லாம் ஒக்கார வச்சிக்கிட்டு வார்டனுக்கிட்ட பேசுனாய்ங்க. பையனுங்க யாரும் வாயே தொறக்கல. என்னமோ பெரிய்ய்ய்ய்ய்ய உத்தமனாட்டம் இங்கிலீசுல சொல்லிச் சொல்லியே எல்லாத்தையும் வார்டனே பேசித் தொலைச்சான். எனக்குத்தான் ஒன்னுமே வெளங்கலையே. பெரிய பையன்றனால என்கிட்ட கேட்டாய்ங்க. வுடுவெனா…?! துணிஞ்சி எல்லாத்தையும் அக்கு அக்கா சொன்னேன். சிரிச்சாய்ங்க! ஒருகா நான் பேசுற ஓட்ட மலாயயும்,நான் நின்னுக்கிடிருக்கிற மொறையையும் பார்த்து நான் அடாவடியான பையன்ற முடிவுக்கு வந்திருக்கலாம் போலுக்கு. காமிடி பண்றென்னு போய்ட்டாங்க. வார்டன் என்னெப் பாத்து நக்கலா சிரிச்சான் பாரு,பொசு பொசுன்னு அப்பவே ஒரு ஏத்து ஏத்தனும்போல இருந்திச்சு!

அன்னிலிருந்து வார்டனுக்கும் எனக்கும் அடிக்கடி மாட்டிக்கும் .விடிய விடிய வேலை வாங்குனான். எம்மேல உள்ள கடுப்பெ பையனுங்கிட்ட காமிச்சான். தெனைக்கும் அடி ஒதைதான்! ஊஹ¤ம்.. இது சரிப்பட்டு வராதுன்னு பொறுத்து பொறுத்துப் பார்த்தென். எப்படியாவது தப்பிக்கணும்னு முடிவெடுத்து பையனுங்கக்கிட்ட சொன்னேன். அண்ணே போவாதிங்கன்னு காலப் புடிச்சி அலாத கொறையா கெஞ்சுனாய்ங்க. “டே இப்ப என்கூட வர்றீங்களா”ன்னு ஒட்ரே கேள்விதான்டா கேட்டேன். ஒம்போது பேரு சம்மதிச்சாய்ங்க. மத்தவனுங்களுக்குச் சொந்தம்னு யாரும் இல்லாதனால வெளிய வர பயந்தாய்ங்க. அன்னிக்கி செம்ம மலெ, போனா போவட்டும்னு ராவோடு ராவா மலைல நனைஞ்சுக்கிட்டே வேலி தாண்டி ரோட்டுல போற வர்ற லோரிக்காரன்கள நிறுத்தி வெலாவாரியா சொல்லி ஒதவி கேட்டு அவங்கவிங்க வீட்டுக்கு வலியனுப்பி வச்சேன். மறுநாளே வீட்டுக்குப் போய் சேர்ந்தோன அப்பா அம்மால்லாம் எனக்கு ·போன் பண்ணுனாய்ங்க. தெய்வம் மாரி எம்புள்ளை உசுர காப்பாத்துனதுக்கு நன்றி தம்பின்னு சொல்லி இந்த நிமிசம் வரைக்கும் பேசிக்கிட்டிருக்காய்ங்க. நெனைச்சாலே கண்ணு கலங்குதடா! அதனால… இப்ப ஒங்கலுக்கும் சேத்து சொல்றேன்டா, ஸ்கூலுக்கு வந்தமா படிச்சமான்னு மட்டும் இருங்குடா. வீட்ட விட சொர்க்கம் ஏதும் இல்ல. நம்மள பெத்து வளத்த கடவுளு பெத்தவங்கதான்டா. கோக்குமாக்கா அடிச்சாலும் நம்ம வாத்தியாருங்க எவ்ளோ மேலுடான்னு கையெடுத்துக் கும்பிட்டு யென் கதைய சொல்லி முடிச்சேன்.

இப்பிடி சொல்லிக்கிடிருந்தப்போ பின்னாடியிருந்து “சுப்புமணி…சுப்புமணி…ச்செப்பாட் பஙூன்!” னு டிசிப்ளின் வாத்தியாரு எம்பேரச் சொல்லி கூப்பிட்ற மாரி கேட்டுச்சி. சைட்டுல ஒக்காந்திருந்தவைங்க எல்லாரும் என்னையே பாக்கிறாய்ங்க. மத்தவங்கலே…. மேடை யேறி சீஜில் வாங்கும்போது ஒம்போ…….து பேர காப்பாத்துன எனக்கு கொடுக்காமலிருப்பாங்களான்னு எத்தினி நாளா ஏங்கிரிப்பேன்? இப்ப எனக்கும் சீஜில்டான்ற சந்தோஷத்துல சிலுவார பின்னால தொடச்சிக்கிட்டு கால அகட்டி துள்ளலா எந்திரிச்சப்போ அதே டிசிப்ளின் வாத்தியாரு… பின்னாடி வந்து ரோத்தான்ல ஓங்கிப் போட்டாரு சுளீர்னு… உயிரே போயிடிச்சி!

முற்றும்

Series Navigationபுள்ளியில் விரியும் வானம்பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்