சுழலும் நினைவுகள்

மதியழகனின் ’வியூகம் கொள்ளும் காய்கள்’

சுமக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் இளம்பருவத்து நினைவுகள் சுழலச்சுழல, அவற்றை அசைபோடுவதையே இத்தொகுப்பின் மையப்போக்காக எடுத்துக்கொள்ளலாம். அகலாத இந்த நினைவுகள் பலவகையானவை. சாதியை முன்னிட்டு எழும் நினைவுகள். காதலை முன்னிட்டு எழும் நினைவுகள். களிப்பான காட்சிகளை முன்னிட்டு எழும் நினைவுகள். மனிதர்களை முன்னிட்டு எழும் நினைவுகள். பாதிக்கும் மேற்பட்டவை இப்படிப்பட்டவை. ஒரு கவிஞனாக, தான் பயன்படுத்தும் சொல்லின்மீது கவனமும் கட்டுப்பாடும் கொண்டவராக இருக்கிறார் மிக இயற்கையான வீச்சோடு சொற்களைப் பயன்படுத்தினாலும் எல்லாத் தருணங்களிலும் அவற்றை தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துள்ளார்.

சுழலும் நினைவுகள் என்னும் தலைப்பிலமைந்த கவிதை மிக முக்கியமான ஒன்று. வயதான பாட்டியின் நெஞ்சில் சுழலும் நினைவுகள். கடந்த ஆண்டு விடுமுறையில் வந்துபோன பேரக்குழந்தையைப்பற்றிய நினைவுகளை அசைபோட்டபடி, அடுத்த விடுமுறையையும் குழந்தையின் வருகையையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாட்டியின் மன ஓட்டமாக விரிவடைந்திருக்கும் இக்கவிதை மதியழகனின் கவியாளுமைக்கு ஒரு சான்று. ஒவ்வொரு வரியும் ஒரு சித்திரமாக விரிகிறது. ஒரு பழைய புகைப்படத்தொகுப்பைப் புரட்டிப் பார்ப்பதுபோல வீட்டின் முற்றம், தோட்டம், கடல் என ஒவ்வொரு இடத்திலும் குழந்தையோடு கழித்த கணங்களை அசைபோடுகிறது அந்த வயதான பாட்டியின் மனம். அக்குழந்தையின் வருகையை அவள்மட்டும் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு அக்குழந்தை அணிந்து விளையாடிவிட்டுப் போட்டுச் சென்ற கிரிடம் எதிர்பார்க்கிறது. தலையில் சூடி மகிழ்ந்த மயிலறகு எதிர்பார்க்கிறது. வானத்தில் பறக்கவிட்டு மகிழ்ந்த காத்தாடி எதிர்பார்க்கிறது. எல்லாவற்றுக்கும் உச்சம் அன்று அவள் நனைந்து ஆடி மகிழ்ந்த மழையும் எதிர்பார்க்கிறது என்பதுதான். தன் மனத்தோடு மெல்லமெல்ல தன்னைச் சுற்றியுள்ள அஃறிணைப்பொருள்களயும் இணைப்பதும், இறுதியாக இயற்கைத்தாயான மழையையும் இணைப்பதும் கவித்துவத்தின் உச்சம். தாய்மையின் தன்மையே காத்திருப்பதுபோலும் என உணர்த்தி, மேலும்மேலும் நம்மை அசைபோடவைக்கிறது கவிதை.

பருவத்தின் முதல் மழை தொகுப்பில் உள்ள மற்றொரு நல்ல கவிதை. அசைபோடும் தன்மையில் அமைந்த இக்கவிதையில் சித்தரிப்புத்தன்மையும் ஆதங்கக்குரலும் ஒருங்கே வெளிப்படுகின்றன. வானம் பார்த்த பூமியில் மழைபொழிந்ததும் ஏர்பூட்டி உழுது விதைத்து பயிர்செய்ததெல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டது இப்போது. இன்றும் பருவகாலம் வருகிறது. மழையும் பொழிகிறது. ஆனால் பயிர்செய்ய நிலம் இல்லை. நாற்கரச்சாலை விரிவாக்கத்துக்காகவும் வீட்டுமனைகளுக்காகவும் நிலம் போய்விட்டது. பயிர்செய்த விவசாயிகள் சாலையோரக்கடைகளில் பொழுதைக் கழிப்பதுபோல நிலைமை மாறிவிட்டது. இந்த ஆதங்கத்தையும் இழப்பையும் வலிமையாக உணரும்வகையில் கவிதையின் முதற்பாதிச் சித்தரிப்பைக் கச்சிதமாகக் கட்டமைத்திருக்கிறார் மதியழகன். சாமை, தினை, எள், துவரை, கொத்துமல்லி, பருத்தி என ஒவ்வொரு பயிரின் வளர்ச்சியையும் முன்வைத்திருக்கும் சிறுசிறு காட்சிகளால் இப்பகுதி நிறைந்திருக்கிறது. திணறும் தினை காற்றில் இசையுமிழ என்னும் சொற்சேர்க்கை அக்காட்சியை கண்முன்னால் நிறுத்துகிறது. இவ்வளவு காட்சிகளும் இப்போது நினைவில் மோதுவதற்குக் காரணம், இன்று அவை இல்லை என்னும் இழப்புணர்ச்சிதான். அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் எனத் தொடங்கும் சங்கச்செய்யுளின் அவலச்சுவைக்கு நிகரானதாக இந்த இழப்புணர்ச்சியைச் சொல்லலாம்.

அறிவிப்புத்தொனியும் கோரிக்கையும் கொண்டதாகத் தோற்றம் தந்தாலும் நுழைவாயில் கவிதையை நல்ல கவிதையின் பட்டியலில் வைக்கத் தோன்றுவதற்குக் காரணம், ஆன்மாவைத் தொடும் அதன் உண்மைத்தன்மை. ஒரு வீட்டின் தாழ்வான நுழைவாயில், தவிர்க்கவியலாத ஒரு குனிவையும் பணிவையும் நம் உடலிலும் மனத்தளவிலும் தூண்டிவிடுகின்றதன. புற உலகுக்குத் தேவையான பணிவுகளுக்கு இவை பயிற்சியாக அமைந்து, பணிவைப்பற்றிய மனத்தடையை அவை இல்லாமலாக்கி, மெல்லமெல்ல இயல்பான ஒன்றாக அதைக் கருதச் செய்து ஏற்றுக்கொள்ளவைக்கிறது. பணிவைத் தகவமைக்கிற இந்த வரலாறு மாறவேண்டும் என்கிற மதியழகனின் விழைவுதான் வீட்டின் நுழைவாயிலை பெரிதாக அமைத்துக் கட்டும்படியான கோரிக்கையாக உருப்பெறக் காரணம்.

முப்பதாண்டுகளுக்கும் மேல் எழுதிவரும் மதியழகன் தன் தயக்கங்களைக் களைந்து முதல் தொகுப்பைக் கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் தொடர்ந்து எழுதவேண்டும்.

(வியூகம் கொள்ளும் காய்கள். கவிதைகள். மதியழகன். காலச்சுவடு வெளியீடு. 669, கே.பி.சாலை. நாகர்கோவில். விலை. ரூ.75)

Series Navigationதுளித்துளியாய்…‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..18. நாஞ்சில்நாடன் – ‘எட்டுத் திக்கும் மதயானை’