சென்ரியு கவிதைகள்

Spread the love

பரமனுக்குதெரியாதது
பாமரனுக்குதெரிந்தது………
பசியின் வலி.

ஊர் சுற்றும் பிள்ளையின்
வேலைக்காக……..
கோயில் சுற்றும் அம்மா

மனிதர்களில்
சிலர் நாற்காலிகளாய் ………..
பலர் கருங்காலிகளாய்

அடிக்கடி வருவார்
அம்மாவின் வார்த்தைகளில்……
இறந்துபோன அப்பா

தேவாலயமணியோசை
கேட்கும்பொழுதெல்லாம்….
சாத்தானின் ஞாபகம்

தேர் வராதசேரிக்குள்
தேசமே வரும்
தேர்தல் நேரம்

நம்பிக்கை விதைகளை

எங்கு விதைப்பது………..
வரண்ட பூமியாய் மனசு

சலனமில்லாத குளம்
தூண்டிலில் மீன்சிக்குமா…….
சலனத்துடன் மனம்

எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள் திருநங்கைகள்
சாயம்போன வாழ்க்கை

கர்த்தர்
நம்மைக்காப்பாற்றுவார்…
சிலுவையில் கர்த்தர்

ஆசிரியரின் பாடத்தில் அசோகன்
மாணவனின் மனதில்…
மரம் வெட்டும் தந்தை

அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்…
மண்வாசனை

விழா காலங்கள்
வரும் போகும்……
விடிவுகாலங்கள்….?

நீண்ட கூந்தல் பெண்
எழுதிக்கொண்டிருக்கிறாள்….
மொட்டைக்கடுதாசி

முள் குத்திய வலியிலும்
மறக்க முடியவில்லை…..
தொலைந்த செருப்பின் ஞாபகம்

யாருக்குமே பிடிக்காதவனை
விரும்பி பிடித்தது…..
ஏழரை சனி

இசை வாத்தியார்
அழுதாலும் சிரித்தாலும்….
சரிகமபதநி

அடம் பிடித்தது குழந்தை
விதவைத்தாயிடம்…..
தம்பிபாப்பாவிற்காக

-மாமதயானை (புதுச்சேரி)

Series Navigationவள்ளுவரும் பட்டுக்கோட்டையாரும்மாயை