செல்வாவின் ‘ நாங்க ‘

அமராவதியில் அஜீத்தை அறிமுகப்படுத்தியவர், இந்தப் படத்தில் பத்து புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மீண்டும் பாலபாரதியின் இசை. கமலும் ரஜினியும் ஆசி வழங்கி இருக்கிறார்கள். நடித்தவர்களெல்லாம், சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகள். எல்லாமே புதுமையாக இருக்கிறதா? ஆனால் புதுமை எல்லாம் இதோடு ஸ்டாப். படத்தில்?

1985 கல்லூரிக்கால நண்பர்கள். பாஷா, தயா, சந்துரு, பாலா, பாண்டி என்பது போன்ற அந்தக் காலகட்ட பெயர்கள். அவர்களின் காதலிகள். ரெயில்வே வேலைக்காக பாடகனாகும் ஆசையை தியாகம் செய்யும் ஒருவன். அவன் ஆசையை ஈடு செய்ய பிரபல பாடகியாகும் அவன் காதலி. போலீஸ் வேலையில் சேர்வதாகப் போக்கு காட்டி, காதலியின் வீட்டில் வந்து போகும் பாஷா. அவனுக்குப் பயிற்சி கொடுக்கும் போலீஸ் அப்பா, (இயக்குனர் ராஜ்கபூர் – பட்டு கத்தரித்தாற்போல் நடிப்பும் உச்சரிப்பும் ) அவனை தன் மகனாகவே பாவிக்கும் செண்டிமெண்ட். அதனால் காதலி தங்கையாகும் வினோதம். கவிதை எழுதி காதலிக்கும் தயா, முறைமாமனைக் கொன்று சிறைபோகும் ஒரு கிளை. தவறைத் தட்டிக்கேட்டு அடிக்கடி அடிதடியில், ஸ்டைரைக்கில் ஈடுபடும் சந்துரு, கலெக்டராகும் முரண். மளிகைக் கடைக்காரரின் மகன் பாண்டி ( பாஸ் எ பாஸ்கரனின் சாப்பிட்டு தூங்கி, எழுப்புபவர் கையைக் கடிக்கும் சிறுவன் ) எந்த காதலும் வெற்றி பெறாத கேஸ். வயதான சித்ராவை (கஸ்தூரி – ஷகிலா ரேஞ்ச் பாத்திரம்- பாடி டாப்பு முகம் மூப்பு ) இனக்கவர்ச்சியால் கட்டிக் கெடுக்கும் பாலா, அதனால் சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் பரணை தூசு. கடைசியில், செக்சில் காதலை இழக்கும் பாலா, திருமணம் செய்யாமல், சித்ராவையே எண்ணி, பெரிய டாக்டராக, செக்சாலஜிஸ்டாக மாறும் பொயட்டிக் ஜஸ்டிஸ். ஒரே ஒரு காதல் தான் வெற்றி பெறுகிறது. அது சந்துரு, ரமா காதல். மற்றதெல்லாம் ஜோடி மாற்றம்தான். சிறையிலிருக்கும் தாயாவும், கோமாவிலிருந்து மீண்ட காதலியும், படித்த கல்லூரியில், நண்பர்களுடன், 25 வருடம் கழித்து சேர்ந்து, கல்யாணம் பண்ணிக் கொள்வதுடன் முடிவு.

கதை நிகழ்காலத்தில் ஆரம்பித்து, ஐந்து நண்பர்களின் ப்ளாஷ்பேக்குகளுடன், மெல்ல பயணிக்கிறது. இத்தனைக்கும் படம் இரண்டே மணி நேரம்தான். சைலண்ட் மூவிக்கு ஆஸ்கர் கிடைத்துவிட்டது. ஸ்லோ மூவிக்கு உண்டா?

செல்வாவின் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் பாராட்டவேண்டும். புதிய முகங்களை வைத்துக் கொண்டு மெனக்கெட்டிருக்கிறார். பத்து பேருக்கும் சரிசமமான வாய்ப்பு. ஒன்றிரண்டு பேர், அடுத்த படங்கள் எதிர்பார்க்கலாம். கோணங்களும் காட்சிகளும் பழைய வாசனையுடன் இருந்தாலும் துல்லியமான ஒளிப்பதிவு. பாலபாரதிக்கு கிடைத்த காட்சிகளுக்கு, இளையராஜா பாணியில் இசை அமைக்க வேண்டிய கட்டாயம்.

வசனங்கள் ஆங்காங்கே புன்னகை புரிய வைக்கின்றன. எல்லாமே மளிகைக் கடை பாண்டி மூலம். கொஞ்சம் கா.சொ.எ. சித்தார்த் மாதிரி இருந்தாலும், க்ளோசப்பில் வந்து பயமுறுத்தவில்லை.

‘ வேற ஏரியா பொண்ணைக் காதலிச்சா, தகராறில அடிவாங்கறது பெட்டர். அப்புறம் அவங்களே பிரண்ட்ஸ் ஆயிருவாங்க.. எனக்கு எல்லா ஏரியாவுலயும் ப்ரண்ட்ஸ் உண்டு. ஏன்னா, நான் அத்தனை ஏரியாவுலயும் அடி வாங்கியிருக்கேன். ‘

‘ காதல் ஆயா சுட்ட வடை மாதிரி.. ஏமாந்தா காக்கா தூக்கினு போயிரும். ஆனா பிரண்ட்ஷிப் ஆயா மாதிரி.. ஆயாவ யாரும் தூக்க முடியாது. ‘

‘ காதல் பனைமரம் ஏர்ற மாதிரி.. கெடச்சா நொங்கு, விழுந்தா சங்கு ‘

ஒப்பனையைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். கல்லூரி மாணவர் கெட்டப்பில் எல்லாம் விக், ஆனால் தெரியவில்லை. தற்காலத்தில், ஒரிஜினல் முடியை செதுக்கி அற்புதமாக ஓல்ட் கெட்டப் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சமீபத்திய படங்கள் சசிகுமார் பாதிப்பில், பெல்பாட்டம், பரட்டைத்தலை என்று வர ஆரம்பித்து விட்டன. அதில் இந்தப் படமும் ஒன்று. சசி அடுத்த கட்டத்துக்குப் போய் விட்டார். இவர்கள் இன்னமும் விடமாட்டேன் என்கிறார்கள்.

#

கொசுறு

பூந்தமல்லி பகவதியில் படம் பார்க்கும்போது, கண்களை அகலத் திறந்து கொண்டு, காதுகளை கொஞ்சம் மூடிக் கொள்ள வேண்டும். அஞ்சு பத்து பேர் பார்ப்பதற்கு, அத்தனை ஸ்பீக்கர்களும் அலறல். படம் முடிந்தவுடன், பகவதியின் முன் இருக்கும் ஒன்றரை கிரவுண்டைத் தாண்டும் வரை, மூக்கு மூடல் அவசியம். பாதை நெடுக கண்ட மேனிக்கு செடிகள். அவை வளர, போவோரெல்லாம் பொசிகிறார்கள் சிறு நீர்.

ஷீ, இன்சர்ட்டுடன் இளைஞர்கள் ஆர்டர் எடுக்க, தொப்பி போட்ட டிப்டாப் ஆசாமி சாப்பிட்ட தட்டை எடுக்கிறார். விதவிதமான சிற்றுண்டிகள் மெனு கார்டில். மலபார் இட்லி, கூடை இட்லி, வெங்காய, பொடி, மசால் தோசை.. சாம்பிளுக்கு சில. குமணன் சாவடியில் புதிய கடை ‘ மிஸ்டர் இட்லி. ‘

#

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்