ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்

This entry is part 15 of 29 in the series 3 நவம்பர் 2013

14. மாய லோகத்தின் அறிமுகம்

பணம் இருந்த தைரியத்தில் உடனே தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான். தன்னுடைய இயலாமையைச் சொல்ல வெட்கமாக இருந்தது. அதனால் மறுபடியும் பொய் சொல்லத் தீர்மானித்தான்.

“அப்பா நான் அங்கே வரப் போகிறேன்..”

“அப்படியா.. ரொம்ப சந்தோஷம். ஒப்பந்தம் முடிஞ்சிட்டதா?” என்றார் ஆவலுடன்.
“ஊம்.. முடிஞ்சிட்டது. இருந்த கொஞ்ச நாள்ல்லயே.. நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சி, நிறைய சம்பாதிச்சேன். கொஞ்ச பணத்த சேர்த்தும் வைச்சிருக்கேன். அதனால உங்களப் பார்க்க வரலாம்ன்னு இருக்கேன்” என்று கூறினான்.

“இங்கே வந்தா எங்களோடேயே இருப்பேயில்லையா?” என்றார் மேலும் ஆவலுடன்.

“ஆமாம். உங்க வயசான காலத்துல உங்க பக்கத்துல இருக்கலாம்ன்னு தான் வரேன். என் கிட்டே நிறைய பணம் இருக்கு..” என்றான் சான்.

சான் சொன்னதனைத்தும் உண்மை என்று கருதினார் சானின் தந்தை. அவன் எப்போதும் போல் பொய் சொல்கிறான் என்று சிறிதும் எண்ணவில்லை.

“அப்படின்னா சரி.. சீக்கிரம் கிளம்பி வா..” என்று கூறினார் தந்தை.

அனுமதி கிடைத்ததுமே ஆஸ்திரேலியா செல்ல ஆயத்தமானான்.

தன்னிடம் பணம் இருக்கிறது என்று சொல்லியாகிவிட்டது. அதை உறுதிப்படுத்த வேண்டாமா?

ஓ சாங் தந்த பணத்தில், வாங்கியிருந்த கடன்களைக் திருப்பிக் கொடுத்தான்.

பெற்றோருக்கு பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்ல முடிவு செய்தான்.

வீட்டின் பக்கத்தில் நகைக்கடை ஒன்று இருந்தது. அதைக் கடக்கும் போதெல்லாம், நாமும் இந்த நகைகளை வாங்க மாட்டோமா என்று ஏங்கிய சமயங்கள் உண்டு. இப்போது அதற்கு நேரம் வந்தது.

நகைக்கடைக்குச் சென்றான். வெளியே நின்று எப்போதும் வேடிக்கை பார்ப்பவன் உள்ளே வந்ததும் கடைக்காரனுக்கு சந்தேகம் வந்தது. என்ன செய்யப் போகிறான் என்று பார்த்தார்.

நுழைந்ததுமே தன்னிடம் பணம் இருப்பதைக் காட்ட வேண்டும் என்று வேண்டுமென்றே பணத்தை வெளியே எடுத்துவிட்டு உள்ளே வைத்தான். கை நிறைய பணத்தைக் காட்டியதும், நம்பிக்கையுடன் கடைக்காரர் பணிவுடன் பொருட்களைக் காட்டினார். தந்தைக்கு மூவாயிரம் வெள்ளிக்கு ரோலெக்ஸ் கை கடிகாரமும் தாய்க்கு கற்கள் பதித்த கை கடிகாரமொன்றையும் வாங்கினான்.

இதையெல்லாம் செய்ததும், மீதமான பணம் ஆஸ்திரேலியா செல்வதற்கு வாங்க வேண்டிய பயணச்சீட்டுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.

கடைசியாக மீதமிருந்த கொஞ்ச பணத்தை, தான் இனி ஹாங்காங் திரும்பப் போவதில்லை என்ற முடிவுடன் கட்டிட நிர்வாகிக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பினான்.

“என்னுடைய வீட்டைப் பார்த்துக் கொண்டதற்காக இந்தாங்க. உங்கள் பேத்திக்கு ஏதாவது வாங்கிக்கங்க..” என்று மீதமிருந்த பணத்தைக் அவரிடம் தந்து விட்டுக் கிளம்பினான்.

நிர்வாகி, வீடு, ஹாங்காங் அனைவருக்கும் வந்தனம் செய்து விட்டு விமானம் ஏறினான்.

தான் இப்படி கதியில்லாமல் பிறந்த மண்ணை விட்டு ஓட வேண்டி இருக்கிறதே என்று எண்ண ஆரம்பித்தான்.

தான் ஏழு வயதில் தந்தையுடன் சீன நாடக கழகத்தில் சேரச் சென்ற நேரம் நினைவிற்கு வந்தது.

கழகத்தின் கதவைத் திறந்து உள்ளே சென்றதும், ஒரு சிறிய கூடம் இருந்தது. அங்கே இருந்த அறையின் கதவுக்குப் பின்னால் பலத்த சத்தம் வந்து கொண்டு இருந்தது. எண்களைச் சொல்லும் குரல்களும், நிறைய பேர்கள் கத்தும் குரல்களும் கேட்டன. அந்தக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற போது, பெரிய அறையில் ஒரே மாதிரியான கருப்பு வெள்ளை உடைகளுடன் கிட்டத்தட்ட இருபது சிறுவர்களும் சிறுமியர்களும் இங்குமங்குமாய் பயிற்சி செய்து கொண்டு இருந்தனர். சிலர் குங்பூ சண்டைக்கான பயிற்சியிலும், சிலர் கத்தி, கட்டை, உருளைகளைக் கொண்டு போலிச் சண்டை செய்யும் பயிற்சியிலும், சிலர் பல்டி, குட்டிக்கரணம் போன்ற பயிற்சியிலும் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர்.
இதைக் கண்டு உற்சாகம் மிகக் கொண்ட நம் நாயகனுக்கு சொல்லவும் வேண்டுமா?

அந்த இடமே சொர்க்கம் போல் தோன்றியது.

கருப்பு அங்கியும் சராயும் அணிந்த மனிதர் அருகில் வருவதைக் கண்ட சார்லஸ், அவருடன் பேசத் தயாரானார்.

“நீங்கள் சான் தானே.. “ என்று கூறிக் கொண்டே அவருடன் கைகளைக் குலுக்கி, உடலை வளைத்து வணக்கம் தெரிவித்தார் வந்தவர். “நான் தான் யூ ஜிம் யூன். இந்தக் கழகத்தின் குரு” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

சார்லஸ{ம் பதிலுக்கு உடலை வளைத்து வணங்கி, “உங்கள் புகழ் நாடறிந்தது. உங்களைக் காண ஆவலுடன் வந்தேன்” என்று கூறினார்.

“நல்லது. அடடா.. உங்களுடன் மேற்கத்திய கௌபாய் வந்திருக்கிறானே..” என்று நம் கதை நாயகனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

“இவன் என் மகன் சான் கொங் சாங்” என்று கூறி, அவனை முன்னால் இழுத்து நிறுத்தினார். அவர் குனிந்து அவனது தொப்பியை எடுத்து முகத்தைக் காண முயன்றார்.

“கொங் சாங்.. பார்த்தால் நல்ல ஆரோக்கியமாகத் தெரிகிறாய். உடல் நலத்துடன் இருப்பவன் தானே.. ஏதேனும் கெட்டப் பழக்கங்கள் இருக்கிறதா?” என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் தந்தை சார்லஸ், “அவன் இதுவரை நோய்வாய்ப்பட்டதே கிடையாது. எந்தப் பெரிய காயங்களும் பட்டதில்லை. பழக்க வழக்கம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்.. அதற்காகத் தான் இங்கே வந்தோம்..” என்று இழுத்தார்.

குரு அதை அமைதியாகக் கேட்டுத் தலையை ஆட்டினார்.

அவர்கள் இப்படி பேசிக் கொண்டிருந்த வேளையில், நம் நாயகனின் கவனம் அங்கு இருக்கவில்லை. அங்கே சூழன்று கொண்டிருந்தவர்களைக் கண்டான். குதித்துக் கொண்டிருந்தவர்களைக் கண்டான். கரணம் அடித்துக் கொண்டிருந்தவர்களைக் கண்டான். சற்று நேரத்தில் ஆசையை அடக்க மாட்டாமல், “அப்பா.. அப்பா.. நானும் போய் விளையாடலாமா?” என்று கேட்டான்.

தந்தையார் சற்றே சலிப்புடன், “ஒரு நிமிசம் உன்னால் சும்மா நிற்க முடியாதே?” என்றார்.

குரு, சானை அன்புடன் நோக்கி, “போ.. போ.. போய் விளையாடு..” என்றார்.

சானுக்கு ஒரே மகிழ்ச்சி. அங்கு உள்ளவர்களுடன் சேர்ந்து, அவர்கள் செய்வதைக் பார்த்து, அதைப் போன்றே தானும் செய்தான். அனைவரும் அவனை அன்புடன் நடத்தினர். அங்கு இருந்த அனைவரையும் அவனுக்குப் பிடித்துப் போனது.

சார்லஸ் சான் அவனை அன்று முழுவதும் அங்கேயே விட்டுச் சென்றார்.

கதவைத் திறந்து உள்ளே விட்டச் சிறுவன் தான் அங்கிருந்தவர்களில் மூத்தவன். அவனை எல்லோரும் “பெரியண்ணா” என்று அழைத்தனர். அவன் அந்தப் பெரிய அறை முழுவதையும் அதிகாரத்துடன் வளைய வந்தான். மற்றவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தினான்.

சான் மிகவும் மகிழ்ச்சியுடன் எல்லாவற்றையும் செய்வது கண்டு, அவர்கள் “கௌபாய் பையா.. சொல்வதைக் கேள்.. உனக்கு இது வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருப்பது போலத் தெரியும். ஆனால் இதைத் தான் நாங்கள் தினமும் உண்கிறோம். குடிக்கிறோம். கனவு காண்கிறோம்” என்று கூறி தங்கள் நிலையை எடுத்துக் கூறினர். ஆனால் அவர்கள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் சானுக்கு அப்போது புரியவில்லை.

ஆனால் அவர்கள் கூறிய விதம், பயத்தை மட்டும் ஏற்படுத்தியது. விளையாட்டில் அதை மறந்தும் போனான்.

அன்றைய இரவு உணவை அங்கு இருப்பவர்களோடு மகிழ்ச்சியுடன் சான் உண்டான். குருவின் அருகே அமர்ந்து கொண்டு, அன்று தான் கற்றதையெல்லாம் அவரிடம் மூச்சுவிடாமல் சொல்லி, வேண்டியதைச் சாப்பிட்டான். மற்ற சிறுவர் சிறுமியர் அவனை “மேற்கத்தியப் பையா” என்று அழைத்தனர். அவனது தொப்பியை மாறி மாறி போட்டுப் பார்த்து ரசித்தனர். சாப்பிட்டு முடிந்ததும் அனைவரும் தங்கள் வேலைகளைப் பார்க்கச் சென்றனர். சான் குருவுடன் அமர்ந்து தேநீரைப் பருகி விட்டு பிஸ்கெட்டுகளைச் சாப்பிட்டான்.

அன்றைய பொழுது வாழ்நாளிலேயே தலைசிறந்த தினமாக எண்ணியது அவன் வரை பொய்க்கவில்லை. எந்த வேலையுமின்றி, தந்தையின் திட்டுகளின்றி, அடிகளின்றி, குப்பை அறை வாசமின்றி, தான் விரும்பியதைச் செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்கு, அந்த ஏழு வயது சிறுவனுக்கு கொள்ளை மகிழ்ச்சி கொடுத்தது. இரவு அவன் தந்தை அழைத்துச் செல்ல வந்த போது, சானுக்கு அவருடன் செல்ல மனமேயில்லை. சார்லஸ{ம் குருவும் விடைபெறும் முன்னர் பேசிக் கொண்டு நின்ற போது, சான் கூடத்தில் நின்று கொண்டு, கற்பனை எதிரியை உதைத்த வண்ணம் நின்றான்.

கட்டடத்தை விட்டு வெளியே வரும்போது, எப்போதும் இல்லாத பரிவுடன் சார்லஸ் மகனைத் தட்டிக் கொடுத்து, “பாவ்.. என்ன இன்று சந்தோஷமாக இருந்ததா?” என்று கேட்டார்.

உடனே, “ஆமாம்.. அப்பா. அப்பா அப்பா நான் நாளையும் இங்கே வரலாமா?” என்று கேட்டான்.

சார்லஸ் அமைதியாகத் தலையை ஆட்டிவிட்டு சானை உடன் அழைத்துக் கொண்டு சிம் சா சுய் கூட்டத்துடன் கலந்தார்.

அடுத்த நாள் மிகவும் சுவாரசியமற்றதாக ஆரம்பித்தது. சான் முந்தைய நாளின் நினைவுகளிலேயே மிதந்த வண்ணம் இருந்தான்.

தாய் அறையில் ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டே, துணிகளைத் தேய்த்துக் கொண்டிருந்த போது, அவரது அருகில் சென்று, “அம்மா.. அம்மா.. அப்பா என்னை அந்தக் கழகத்துக்கு திரும்ப அழைச்சிட்டுப் போவாரா?” என்று கேட்டான்.

தாய் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டு இருந்தார்.

“அம்மா..” என்றான் மறுபடியும்.

அப்போது தாய் அவனைப் பார்த்து, “உனக்கு நிஜமாவே அங்கே ரொம்ப நல்லா இருந்ததா?” என்று கேட்டார்.

உடனே மகிழ்ச்சியுடன் தாயை அணைத்துக் கொண்டு, “ஆம்மாம்மா.. ரொம்ப நல்லா இருந்தது. ஆனா உன்னோட இருக்கற அளவுக்கு கிடையாது..” என்றான் அன்புடன்.

“பாவ்.. பாவ்.. அப்படின்னா.. நிச்சயமா உன்னோட அப்பா உன்னை அங்கே கூட்டிட்டு போவார்” என்று கூறிவிட்டு சானை உதவி செய்யுமாறு சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தார்.

தாயார் சொன்னது போல் நடந்தது. அடுத்த வாரத்தில் தந்தை அவனை அங்கே மறுபடியும் அழைத்துச் சென்றார். சில நாள்கள் கழித்து மறுபடியும். ஒவ்வொரு முறையும் அங்கேயிருந்து திரும்பவே மனம் வரவில்லை. ஒவ்வொரு முறiயும் தந்தை, “நன்றாக இருந்ததா?” என்று தவறாமல் கேட்டார். சானும் “மறுபடியும் எப்போது வருவோம்?” என்று கேட்கத் தவறவில்லை.

முடிவில் ஒரு நாள் அதிகாலை நன்கு உறங்கிக் கொண்டு இருந்த போது, சான் எழுப்பப்பட்டான்.

காலையில் சான் எழுந்த போது, நன்கு விடிந்துவிட்டிருந்தது. “அடடா ரொம்ப தூங்கிட்டோமே..” என்று சங்கடப்பட்டுக் கொண்டே குப்பை அறை வாசம் கண் முன்னே வர வேகவேகமாக எழுந்தான்.

“அப்பா.. மன்னிச்சிடுங்க..” என்றான் விழித்ததும்.

அப்போது தான் தன் பக்கம் நிற்பது தாய் என்பதை உணர்ந்தான்.

தாய் அவனது அருகில் அமர்ந்து, “பாவ்.. நன்றாகத் தூங்கினாயா?” என்று அவனது தலையைக் கோதிக் கொண்டே கேட்டார்.

“அப்பா எங்கே?” என்று அவசரமாகக் கேட்டான்.

“அவர் காலை உணவைத் தயாரித்துக் கொண்டு இருக்கிறார். அவர் நீ சிறிது நேரம் தூங்கினால் பரவாயில்லை..” என்று சொன்னார்.

இப்படிக் கேட்பது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதே என்று சான் எண்ணினான்.

“அப்பாவுக்கு என்ன ஆச்சு..” என்று கேட்டான்.

“அவர் நல்லாவே இருக்கார். சமையல் செய்துகிட்டு இருக்கார்” என்றார் தாய்.

“தூதுவருக்கு வேலை போயிடுச்சா என்ன?” என்றான் அழுத்தமாக.

“பாவ்.. இதென்ன கேள்வி.. எல்லாமே எப்போதும் போலத்தான் இருக்கு.. போறுமா..” என்றார்.

அவரது கன்னம் மட்டும் ஈரமாக இருந்ததை சான் கண்டான். தாய் சொன்னதை நம்ப முடியவில்லை. ஏதோ மாறாக நடக்கிறது என்பது மட்டும் சிறுவனுக்கு புரிந்தது. தந்தையில்லை. தூதுவரில்லை. அப்படியென்றால்..

இதயம் படபடக்க தாயின் கழுத்தை கட்டிக் கொண்டு, “அம்மா.. உங்களுக்கு ஏதாவது..” என்று கேட்டான்.

தாய்க்கு சானின் கேள்விகள் வியப்பைத் தந்தன. அப்போது தான் சான் தாய்க்கு அருகே பெட்டி ஒன்று இருப்பதைக் கண்டான். அது தாயின் பெட்டி. ஆனால் அதிலிருப்பது தாயின் பொருள்கள் இல்லை என்பது அதன் மேலிருந்த அவனது கௌபாய் தொப்பியைக் கண்டு புரிந்து கொண்டான்.

தான் எங்கோ போகப் போகிறோம் என்பது மட்டும் புரிந்தது. தான் போவதென்றால் கழகத்திற்குத் தான் போக வேண்டும். ஆனால் இந்த முறை விளையாட அல்ல.. அங்கேயே இருக்க.

சானின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அன்று கிளம்பியதிலிருந்து, தாயுடன் பாவ் பயணித்தான்.

“நான் ரொம்ப நாள்களுக்கு ரொம்ப தூரம் போகப் போகிறேன். நீ உன் அம்மாவைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகத் தான் உன்னை கழகத்தில் விடப் போகிறேன். உன்னைப் போன்ற பிள்ளைகளை அவர்கள் நல்லா கவனிச்சிப்பாங்க..” என்று அவனை அழைத்து அவனிடம் கூறினார்.

அவர் சொன்னதெல்லாம் காதில் ஏறவேயில்லை. கழகத்தில் தங்கப் போவது அப்படியே மாயலோகத்துக்குப் போவது போல் தோன்றியது.

வேலைகள் இருக்காது.

பயிற்சிகள் இருக்காது.

தண்டனைகள் இருக்காது.

இனி பள்ளி செல்வது இருக்காது.

இவையே அவன் மனத்தில் ஓடின.

Series Navigationகனவுசீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *