ஜென்ம சாபல்யம்….!!!

ஏழேழு ஜென்மத்தின்
இனிய இல்லறம்…!.
இளையவளாய்….பொலிவுடன்
புக்ககம் நுழைந்தவள்…!

பிழையேதும் அறியாதவள்..
வேரோடு அறுத்து வேறிடத்தில்
நட்டாலும்…ஆணிவேர் இல்லாமல்
ஆழம்வரை வேர் விடுபவள்..!

உறவுகள்…ஊர்வாய்…என..
வகைக்கொரு விமர்சனம்….
புதைகுழியாம் மனக்குழிக்குள்..
மாயமில்லை…தந்திரமில்லை..!

மௌனத்தை…மௌனமாய்..
முழுங்கும் வித்தை கற்றவள்
கற்ற வித்தை ஏதும்..
துளியும் துணை கொள்ளாதவள்…!

குள்ள நரிக் கூட்டத்தின்
கூடவே வாழ்ந்தவள்…
நச்சுப்பாம்புக் கூடைக்குள் ..
மண்ணுள்ளிப் பாம்பு இவள்….!

வரமாய் வரவேண்டியதெல்லாம்
வினையாய் வந்த வலி ஓங்க…!
தாழ் போட்டவள்..இதயத்தை
இரும்புச் சிறைக்குள்..!

பாலானவள்…மாலையால்..
தனக்குள்ளே பாழானவள்..
எண்ணங்கள் மேலோங்கும்..
கன்னங்கள் சூடேறும்..!

இன்றும் உண்டு வாழ்நாள்
முழுதும் வனவாசம்…!
அழ இங்கு கண்ணீர் இல்லை..
அழும் மனசும் இங்கு இல்லை..

துணிவைத் துணையாய்
தூண் போல் பற்றி…
எதிர் நீச்சலில் காலத்தைக்
கடந்தவள்…எங்கும் .நவீன சீதை ..!

காலம் மாறும் கோலமும் மாறும்..
வலிகள் போன இடம் வடுக்களாய்…!
வாழ்ந்த பாதைகள் நெஞ்சுள்
நினைவுப் புயலாக…!

சிலரின் விதி வலிமையாய்..
வீதி கடந்துவிடும் மௌனமாய்…
இங்கும்…ஜென்மம் சாம்பலாவதே…
ஜென்ம சாபல்யம்….!!!

Series Navigationசுறாக்கள்அக்னிப்பிரவேசம் 2 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்