ஜென் ஒரு புரிதல் – பகுதி -16

சத்யானந்தன்

யானை எப்போதுமே வியப்பளிப்பது. அதன் பிரம்மாண்டமான தோற்றம், அதன் மிக வித்தியாசமான உடல் அமைப்பு, அதன் அசைவில் தென்படும் அழகு இவை அதன் உடல் சம்பந்தப் பட்டவை. அது ஒரு பாகனிடம் அடங்கி நடப்பது தான் இதை விடவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது. இன்னும் சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் யானை வளர்ப்பு மிருகங்களில் ஒன்றாயிருப்பதே அதியசயமாய்த் தோன்றும் எப்போதும். இயந்திரங்கள் வரும் முன் யானை கடுமையான பளுவை கையாளுவதில் முக்கியப் பங்கு வகித்தது. இடும் சிறு சிறு பணிகளைச் செய்வதிலோ அல்லது
போர்க்களம் போன்ற அச்சமும், காயமும் ஏற்படுத்தும் சூழலில் கூட அது எஜமானனின் பக்கமிருக்கத் தவறுவதில்லை. மனிதனின் வழிபாடு , கொண்டாட்டம் எல்லாமே யானைக்கு அத்துப்படி.

யானை பலம் என்னும் ஒரு உருவகம் இருக்கிறது. அது எவ்வளவு தூரம் சரியானது? கேள்வியை மாற்றினால் தெளிவாக இருக்கும். யானை தன் பலத்தை அறிந்துள்ளதுவா? பலம் என்பது தனது பலவீனங்கள் தனது பலத்தை வீணடித்து விடாமல் காத்து பலத்தை உணர்ந்து தேவையான இடத்தில் பிரயோகிப்பது என்னும் அடிப்படையில் யானை பலமானதா? அந்த அணுகுமுறையில் யானை பலமானது இல்லை என்றே கொள்ள வேண்டும். அவ்வாறெனில் யானையின் தோற்றமே நம் கண்ணோட்டத்தைத் தீர்மானித்தது. அதன் உண்மை நிலை அல்ல. இல்லையா? தோற்றம் அல்லது உருவம் மற்றும் செயற்பாடு பொருந்த வேண்டிய கட்டாயமில்லை என்பதற்கு மட்டுமல்ல யானை உதாரணம். தோற்றம் மற்றும் செயற்பாடு குறித்து நம்முள் ஆழ்ந்த பிரமை உள்ளது என்பதற்கும் யானையே சான்று.

கல்லின் மீது நான் இடறினேன் என்று சொல்லாமல் கல் என் மீது இடறியது என்று சொல்லுவது நம் பழக்கம். நமது பிரமைகளை நாம் மாயை என்று பெயரிடுவதும் அவ்வாறானதே. தோற்றங்களும் செயற்பாடும் தொடர்புடையவையே அல்லது பொருந்துபவையே என்னும் நமது கண்ணோட்டம் பல பிரமைகள் அல்லது சான்றில்லா தருக்கங்களுக்கு வழிகோலி விட்டன. ஜென் பற்றிய புரிதலில் மிக முக்கியமானது பிரமைகள் நம் அவதானிப்புகளை நீர்க்கடித்து விடுகின்றன என்பதே. இதனால் உண்மையின் அருகாமைக்கு நேரெதிர் திசையில் செல்வது நம் வழக்கமாகி விடுகிறது.

எல்லா துக்கங்களின் மற்றும் மறுபக்கம் கொண்டாட்டங்களின் அடிப்படை பிரமைகளே. மாயை நம்மைச் சூழ்ந்திருக்கவில்லை. நம் கண்ணை மறைக்கவில்லை. நாம் மாயையின் மடியில் நிம்மதி காண்கிறோம். நல்லது கெட்டது, உகந்தது பாதகமானது, பிடித்தது பிடிக்காதது, எனது அன்னியமானது என இருமைகளில் சிக்கித் தவிக்க மாயை துணையாகிறது. விடுதலை என்பது இருமைகளின்றும் மாயையினின்றும் மட்டுமே. தோற்றம் மற்றும் செயற்பாடு பற்றி துளிர் தேயிலையின் உதாரணத்தைச் சொல்லும் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜகுஷிட்சுவின் கவிதை மிக நுட்பமானது:

தேயிலை சேகரித்தல்
————————
கிளையின் முடிவையும்
இலையின் கீழ்ப்பகுதியையும்
கூர்ந்து அவதானி

பரவும் அதன் மணம்
தூரத்தில் இருக்கும்
மக்களை வசீகரிக்கும்

தோற்றம் மற்றும் செயற்பாட்டு
அதிகார விளிம்பிற்குள்
அது அடைபடாது

“மார்க் ட்வைனி”ன் ‘டாம் ஸாயரின் சாகசங்கள்’ என்னும் நாவல் மிகவும் நேர்த்தியானது. நாவலுக்கு உரிய பல அம்சங்கள் அதில் பொருந்தி இருப்பதைக் காண இயலும். “டாம் ஸாயர் வேலிக்கு வெள்ளையடிக்கிறான்” என்னும் அத்தியாயம் மிக சுவையானது. அவனது சேட்டைகளால் கோபமான அவனது அத்தை (அவளது பொறுப்பில் தான் அவன் வளர்கிறான்) அவனை ஒரு ஞாயிறு காலை வேலிக்கு வெள்ளை அடிக்கச் சொல்லி விடுகிறாள். டாமை விளையாடுவதற்கு என அவனது நண்பர்கள் அழைக்கிறார்கள். அவன் தனது நண்பர்கள் அழைக்க, கவனிக்க நேரம் இல்லாதது போல மிகவும் ஈடுபாட்டுடன் ஆர்வமாக அந்த வேலையைச் செய்வது போல் பாவனை செய்கிறான். அவனது நண்பர்கள் சற்று நேரம் அதை கவனித்துப் பிறகு தாங்களும் அதைச் செய்யலாமா என்று கோருகிறார்கள். மிகவும் தயங்குவது போல் பாவனை செய்து அவர்களையும் டாம் அதில் ஈடுபடுத்தி தன் வேலையைச் சுளுவாக்கிக் கொள்வதுடன் அவர்கள் தன்னைத் தவிர்த்து விட்டு விளையாடாது இருப்பதையும் உறுதி செய்து விடுகிறான்.

நமது முன்னுரிமைகள் பற்றிய அங்கதம் வெளிப்படும் அத்தியாயம் இது. நமது அடையாளம் மற்றவர் மனதில் நம்மைப் பற்றி உள்ள பிம்பம் தொடர்பானதே என்னும் அடிப்படை மனோபாவம் நம்முள் ஆழ வேரூன்றி இருக்கிறது. நாம் மேற் கொள்ளும் பணிகள் அல்லது தொழிலை இதுவே நிர்ணயிக்கிறது. தோற்றம் முதலாவதாகவும் பணி இரண்டாமிடத்திலும் இருக்க இரண்டும் பொருந்தி இருப்பதே நமக்கு ஆறுதல் தருகிறது. தனித்த அடையாளம் எனக்கு இல்லை. தனித்துவம் மிக்க புரிதல் எதைப் பற்றியுமே எனக்கு இல்லை என்று நாம் பிரகடனம் செய்தது போல ஒரு வாழ்க்கையை காலம் தள்ளுவது போல் வாழ்கிறோம். இதை உதறித் தள்ளிய தேடல் மட்டுமே ஆன்மீகத்தில் ஒரு நல்ல தொடக்கமாக இருக்க இயலும்.

Series Navigationநெஞ்சிற்கு நீதிசாத்துக்குடிப் பழம்