ஜென் ஒரு புரிதல் பகுதி 7

நகரங்களும் நகர வாழ்க்கையும் கிராமங்களிலிருந்து எவ்வாறு வேறு படுகின்றன? நகரங்களும் நகரவாசிகளும் சுகவாசிகளாகவும் சூட்சமம் மிக்கவர்களாகவும் கிராமவாசிகள் அப்பாவிகள் என்றும் சித்தரித்துப் பல திரைப் படங்களும் எழுத்துலகப் படைப்புகளும் வந்துள்ளன. இது சரியான அணுகுமுறை தானா என்று தொடராமல் நகரங்களுக்கே உரித்தான சில பிரச்சனைகளைப் பார்ப்போம். ஒரு நகரம் உருவான பின் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளுக்குமான வணிகமும் சேவைகளும் நகரில் மென்மேலும் வளருகின்றன. தன்னால் தாக்குப் பிடிக்க முடியாத ஒரு ஜனத்திரளை நகர் வரவேற்று சமாளித்து அனுப்புகிறது. ஒரு நிலையில் நகரினுள் அல்லது அதன் புறங்களில் கூட விவசாயமோ கால்நடை வளர்ப்போ இல்லாமற் போய் விடுகிறது. இதனால் ஒரு நகரம் சதா தனது தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும் வெளியிலிருந்து வரவேண்டிய சார்பு நிலைக்குத் தள்ளப் படுகிறது.

வெளியிலிருந்து தான் தீர்வு வரும் என்னும் மனப்பாங்கு மெல்ல மெல்ல நகர வாழ்க்கையின் பெரும்பாலான நடவடிக்கைகளில் ஊன்றிவிடுகிறது. போக்குவரத்து நெரிசல் அதிக செலவினங்கள் என நகரவாசி மிகவும் நிம்மதியில்லாத ஒரு வாழ்க்கை முறைக்குத் தன்னைப் பழக்கிக் கொள்கிறார். தனது குடும்பம் அல்லது தொழில் சம்பந்தப்பட்ட பணிகளை ஒரு கிராமவாசியுடன் ஒப்பிடும் போது இவர் அதிக முயற்சியும் இடர்களும் பட்டு கால அவகாசம் குறைவாக முடித்தே பழகி விடுகிறார். ஒரு ரகளையோ, பொது வேலை நிறுத்தமோ நகரங்களையே பெரிதும் பாதிக்கும். கிராமத்தில் வெளியிலிருந்து வர வேண்டியவை மிகக் குறைவானவை என்பது மட்டுமல்ல. அவை இன்றியும் அமையும் என்கிற அளவு இன்றியமையாத பொருளோ சேவையோ கிராமத்தில் உள்ளேயே உண்டு. இந்த ஒரு காரணத்தாலேயே கிராமவாசியால் நிம்மதியாக வாழ இயலுகிறது. நகரவாசியிடம் ஒரு பதட்டம் தென் பட்டுக் கொண்டே இருக்கிறது.

இதே போலத்தான் தனக்கு வெளியே எல்லாவற்றையும் தேடிப் பழகிய மனத்தால் ஆன்மீகம் நோக்கி நகர இயலுவதில்லை. புற உலகின் பரிமாணங்களான பூச்சு, ஒப்பனை, புனைவு, போலித்தனங்கள் எதுவுமே இல்லாத ஒரு அக உலகம் சாத்தியம் என்று நம்புவதே பெரிய சவாலாக உள்ளது. பெரிய சிக்கலான நூலின் உருண்டையாகத் தோன்றும் இதை ஒற்றைச் சரடாகப் பிரித்துக் காண முடியும் என்பது நம்பக் கூடியதாக இல்லை.

“சியாவ் ஜன் “ என்னும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிந்தனையாளரின் பதிவுகள் இவை:

குடிலின் சுவரின் மீது ஏரி செதுக்கிய பதிவு
———————————————-

நீ ஒரு மலைவாசி ஆக விரும்பினால்
போராடி மலைப் பாதைகள் வழி
இந்தியா சென்று ஒரு மலையைக் கண்டுபிடிக்கத்
தேவையில்லை

இந்த ஏரி எனக்கு ஒராயிரம் சிகரங்கள் காட்டும்
ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்தால் போதும்

புற்களின் மணம் வெண் மேகங்கள்
என்னை இங்கே இருத்தி வைக்கும்

உலகவாசியே எது உன்னை
அங்கே பிடித்து வைத்திருக்கிறது?

ஒரு குறிப்பிட்ட கோயிலில் புத்தத் துறவிகளுக்குக் காட்ட வேண்டியது
—————————————————————————–
எதுவும் செய்யாமை என்னும் கரையில் நீ இன்னும்
நங்கூரமிடவில்லையா?
அதற்காக வருந்துவது அற்பமானது

கிழக்கே உள்ள மலையின்
வெண் மேகங்கள் என்ன சொல்கின்றன?
மாலையானால் என்ன தடுமாறி விழுந்தால் என்ன
நகர்ந்து கொண்டே இரு

“குடிலின் சுவரின் மீது ஏரி செதுக்கிய பதிவு” என்னும் தலைப்பு மிகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் ரசனை மிகுந்ததாகவும் இருக்கிறது. ஒரு ஏரியில் சிறிய பெரிய பறவைகள், படகுகள், நிறம் மாறும் மேகங்களின் பிம்பங்கள், சூரியன் அல்லது சந்திரனின் ஒளியின் ஜொலிப்பு, காற்றில் பரவும் மெலிதான அலை, விரிந்த அதன் தோற்றம் காட்டும் கம்பீரமான அமைதி, ஏரியைச் சுற்றிலும் உள்ள நெடிதுயர்ந்த மரங்கள், மரங்களைத் தாண்டி மலைகள், அருவிகள் என எத்தனையோ எழில் மிகு காட்சிகள். இவை யாவும் குடிலின் சுவரின் மீது பிரதிபலிப்பது ஒரு பதிவாக சியாவ் ஜன்னுக்குத் தோன்றுகிறது.

அவர் இந்தியா என்று குறிப்பிட்டிருப்பது வெளியே என்றே பொருள் படும். ஏரி அவருக்கு பல சிகரங்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது என்பது வாழ்க்கையை ஏரியாக உருவகப்படுத்துதலே. தனது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை ஆழ்ந்து ஒருவர் அவதானித்தால் அவருக்கு வெளியே சென்று எதையும் தேடும் தேவை இல்லை.

மலை வாசத்தலத்திற்கு போகும் போதெல்லாம் நாம் சொல்லுவது ” இங்கேயே இருந்து விடலாம் போலிருக்கிறது.” ஆனால் நாம் உண்மையிலேயே அங்கே தங்குவதற்குத் தயாரா? மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறையை நாம் ஏற்றாலே அன்றி அது சாத்தியமே இல்லை. தனது இருப்பிடத்திலேயே மௌனமாக ஒரு அறையில் ஒரு மணி நேரம் ஒருவரால் உட்கார முடியுமா? நம்மை பிறரோ பிரச்சனைகளோ அலைக்கழிப்பது வேறு. நாம் எப்போதுமே ஆர்ப்பரிக்கும் மனத்தைப் பற்றிய புரிதல் இல்லாமலிருப்பது வேறு. நாம் முதுகில் சுமப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாமே நாம் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருப்பவை.

அலைப்புறும் மனம் பற்றியது அவரது அடுத்த பதிவு “ஒரு குறிப்பிட்ட கோயிலில் புத்தத் துறவிகளுக்குக் காட்ட வேண்டியது”

எதுவும் செய்யாமை என்பது சியாவ் ஜன் தனது காலத்தில் முன் வைத்த ஜென் பற்றிய கருத்தாகும். எதுவும் செய்யாமையில் நங்கூரமிடு என்கிறார். முடிக்கும் போது மேகங்கள் தொடர்ந்து செல்லும் படி சொல்கின்றன என்கிறார். எதுவும் செய்யாமை மனம் பற்றியது. எதுவும் செய்யாதிருக்க மனத்தை நாம் தொடர்ந்து முயலும் போது முதலில் நாம் உணருவது எது நம்முள் முன்னுரிமை பெருகிறது என்பதே. நாம் முதலாவதாக நினைப்பது எதுவாக இருந்தாலும் அதில் “இது என்னால் நடப்பது; இது என்னை மையமாகக் கொண்டது என “நான்” முன்னிற்பதைக் காண இயலும். எதுவும் செய்யாமையில் நங்கூரமிடுவதும் பின் மேற் செல்வதும் “நான்” என்னும் அடையாளம் எது என்னும் முடிவில்லாக் கேள்விக்கான விடையை நோக்கிய தேடலில் இருந்து நாம் பிறழ வில்லை என்று பரிசோதித்துக் கொள்ளத் தான். ஆத்ம பரிசோதனை ஆர்ப்பரிக்கும் மனம் எதுவும் செய்யாமல் தன்னுள் ஆழும் போது மட்டுமே சாத்தியம். மேலும் வாசிப்போம்.

சத்யானந்தன்

Series Navigationஉடைப்புவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்