ஜென் ஒரு புரிதல் பகுதி 9

Spread the love

ஜென்னைப் புரிந்து கொள்ள விருப்பந்தான். ஆனால் எங்கிருந்து துவங்குவது? ஒரு ஜென் கதை இது: ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திக்கு வாரிசாக ஒரே மகள். எனவே குழந்தைப் பருவம் முதலே அவள் விருப்பம் எதையுமே ராஜா தட்டுவதில்லை. அதனால் அவளை வழி நடத்துமளவு யாருமே இல்லை. ராணி செய்த முயற்சிகளையும் ராஜா தடுத்து விட்டார். இளம் பெண்ணாக வளர்ந்து விட்ட இளவரசிக்கு ஒரு நாள் ஒரு கண்ணில் அரிப்பும் எரிச்சலும் வந்தது. அந்தக் கண்ணைக் கசக்கிக் கொண்டே இருந்த போது இன்னொரு கண்ணுக்கும் பரவி விட்டது. ராஜா தமது சிறந்த மருத்துவர்களை அழைத்தார். யாரையுமே அந்தப் பெண் மருந்து போட விடாமல் கண்ணைக் கசக்கிக் கொண்டே இருந்தாள். இதனால் அவளது கண்ணின் நிலை இன்னும் மோசமாகி விட்டது. நாலைந்து நாட்கள் ஆகி விட்டன. தனது முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே இருந்ததால் அழுது அழுது கண்கள் மிகவும் நோய்ப் பட்டு விட்டன. ராஜாவுக்கு மிகவும் கவலையாகி விட்டது. அன்புடன் மகளை மருத்துவர்களை மருந்து போட விடும்படி வேண்டினார். ஆனால் அவள் சம்மதிக்கவில்லை. அப்போது ராஜா ஒரு அறிவிப்பு செய்தார். யாராயிருந்தாலும் என் மகளுக்கு கண் குணமாகும்படி செய்தால் அவர் சுமக்குமளவு பொற்காசும் விரும்புமளவு நிலம், மாடுகள் அனைத்தும் பரிசு என்று அறிவித்தார். ஒரு ஆள் வந்து நின்றான். நான் மருத்துவனில்லை. ஆனால் ஒரு மந்திரம் போட்டு குணப்படுத்துகிறேன். முதலில் அவளது கண்களின் நிலைமையைப் பார்க்க வேண்டும் என்றான். பார்த்த பிறகு நிலை மோசமாக இருக்கிறது. நான் ராஜாவிடம் மட்டுமே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றான். “ராஜா, ஒரு மந்திரம் போட்டால் 96 மணி நேரத்தில் குணமாகி விடும். ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் தேவை என்றான். ” அது என்ன என்று ராஜா கேட்டதும் ” முதல் 48 மணி நேரத்தில் மந்திரம் செயற்படும் போது இளவரசியின் நெற்றியின் இரண்டு பக்கங்களிலும் சிறு கொம்புகள் முளைக்கும். ஆனால் அது வெளிப்படும் போதே கவனித்து இந்த சந்தனத்தைத் தடவினால் முளைக்காது. பின்னர் மேலும் 48 மணி நேரம் முன்னெச்சரிக்கையாக சந்தனத்தை ஒரு மணிக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்றான் ” என்றான். மீறி கொம்பு முளைத்தால் உன் தலையை எடுப்பேன் என்று ராஜா எச்சரித்தார். அவன் சம்மதித்தான். இரண்டு நாட்களில் பாதி குணமானது. நான்கு நாட்களில் முழு குணம் தெரிந்தது. கொம்பும் முளைக்கவில்லை. ராஜா அவன் விரும்பிய அளவு பரிசு கொடுத்து அனுப்பினார். ராஜ வைத்தியர் அவனை வரவழைத்து குணப் படுத்திய விவரம் கேட்டு அவன் பயன் படுத்திய மந்திரம் என்ன என்று கேட்டார். அவன் சிரித்தபடியே “அந்தப் பெண் தனது கண்களை கசக்கிக் கொண்டே இருப்பதிலிருந்து அவள் கவனத்தைத் திருப்பவே அதைச் சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே நெற்றியைத் தடவிக் கொண்டே கொம்பு முளைக்கிறதா என்று கவனித்த அந்தப் பெண் கண்களைக் கசக்குவதை நிறுத்தினாள். தானே குணமாகி விட்டது.” என்றான்.

ஆன்மீகத் தேடலிலும் அதுவே தான் நடக்கிறது. நம் கவனமெல்லாம் அற்ப விஷயங்களிலோ அல்லது நாம் முக்கியத்துவம் கொடுத்தே பழகி விட்ட சாதாரண விஷயங்களிலோ மட்டுமே செல்கிறது. அவற்றிலிருந்து ஆன்மீகம் நோக்கி நாம் நகர மிகவும் முயற்சி தேவைப்படும்.

ஜென் முன்வைக்கும் ஆன்மீகம் ஒரு குறிப்பிட்ட தடத்தில் செல்வது அல்ல. நம் இயல்புகளை அறிந்து மேற்செல்வதே. இயல்பு என நாம் எண்ணிக்கொண்டிருப்பவை நம் மீது பூசப் பட்டவை. ஒரு சிசு ஒரு மாதம் தான் ஆகிறது பிறந்து- அந்தக் குழந்தையை ஒரு நீச்சல் குளத்தில் விட்டால் அது நீந்தும். அதே குழந்தையை ஒரு வருடம் கழித்து அவ்வாறு காண இயலாது. நம் அசலான இயல்புகள் பிரபஞ்சத்தின் பிற உயிர்களின் அடிப்படை குணங்களோடு ஒப்பிடக் கூடியவை. ஆனால் மனித மனதின் சாத்தியங்கள் மேலானவை. அதாவது பிற உயிர்களுடன் ஒப்பிடக் கண்டிப்பாக மேலானவை.

மேலான நிலைக்குச் செல்லும் நம் ஆற்றலை நாம் அறிவோமா? இல்லை. ஏனெனில் அதற்கான உந்துதல் மீது புறவயமான கண்ணோட்டம் கற்பித்தவை நம்முள் மூடுபனியாகப் படர்ந்து விட்டன.

சரி, நம்முள் விதிவிலக்காக யாரேனும் இருக்கிறாரா? மாற்றுத் திறனாளிகளை எடுத்துக் கொள்வோம். அவர்களைக் காணும் போதெல்லாம் நாம் பிறரிடம் உள்ள எந்தத் திறன் அவரிடம் இல்லை என்று மட்டுமே காண்கிறோம். ஆனால் அவர் தமது ஏனைய ஆற்றல்களை எந்த அளவு குவித்து, ஒருங்கு படுத்தி தமது நடைமுறை வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார் என்பதைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவதே இல்லை. நம் பார்வையில் “இல்லை” என்பது தென்படுகிறது. அவரது வாழ்க்கை முறையில் “இருப்பது” என்பது வெளிப்படுகிறது. ஜென் நம்மிடம் காட்டுவதெல்லாம் இதே போன்ற இருப்பும் இன்மையுமே.

இன்மை பற்றி ஒன்பதாம் நூற்றாண்டில் “ஃபெங்க் கன்” எழுதியது இது:

ஒன்றுமே இல்லை
———————
ஒன்றுமே இல்லை
—————————————
உண்மையில் ஒன்றுமே இல்லை
துடைக்க ஒரு தூசி கூட
இவ்விந்தையைக் கரைத்துக் குடித்தவர்கள்
முதுகை நேராக்கி உட்கார வேண்டியதில்லை

கடலில் கல்லைப் போல மூழ்குதல்
—————————————
கடலில் கல்லைப் போல மூழ்கி
மூவுலகிலும் திரியும்
பரிதாபமான ஒரு சூட்சம வடிவம்
காட்சிகளுள் பொதிந்து கிடக்கும்
ஒரு மின்னல் கீற்று
வாழ்வும் மரணமும்
நீள்வெளியில் தூசிகள்
என்று சுட்டும் வரை

அடையாளங்களை யார் ஏற்றி விட்ட சுமை என்று தெரியாமல் சுமந்து திரிகிறோம். அடையாளங்களைப் போலவே காட்சிகளில் இருப்பதாகக் காண்பவை அசலில் இல்லாதவையே. எது இல்லையென்று எண்ணியிருக்கிறோமோ அவை அறியப்படாதவையே. பூ என்பது எது? மொட்டாயிருந்ததா? மலராயிருந்ததா?வாடியிருந்ததா? சருகாய் ஆனதா? பூவின் வெவேறு தோற்றங்களாய் நாம் ஏன் இவற்றைக் காணவில்லை? நாம் காணாததில் எது இருந்தது? எது இல்லை?

வாழும் கால அளவும் அனுபவங்களும் எனக்கொன்று உங்களுக்கொன்று அவருக்கொன்று என்றானவையா? மானுடத்தின் சிறப்புகளும் அவலங்களும் நிகழ்த்திக்காட்டும் அனுபவத் தொடருக்கு மரணமுண்டா? அனுபவம் வேறு உணர்வது வேறு இல்லையா? உண்மையை உணர்வதும் தேடுவதும் தனி மனித இயங்குதலாக நின்று போகுமா? புற உலக அனுபவங்களோ அல்லது ஆன்மீகத் தேடலோ அனுபவச் சங்கிலித் தொடரின் கண்ணிகளாகும் கணங்களில் எது எது யாருடையது? எந்த ஒருவரின் உடலின் முடிவுடன் அற்றுப் போகாத இந்தத் தொடரின் முன் மரணமெது? வாழ்வு எது? மேலும் தேடுவோம்.

சத்யானந்தன்

Series Navigationதாகம்சித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்