தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்

Spread the love
இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக அதிகமாக, தற்கால சந்ததியினர் வலுவிழந்து கொண்டே போகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். டஜன் கணக்கில் பிள்ளை பெற்றவர்கள் பலமுடன் இருக்க, முதல் குழந்தைக்கே பற்பல சிகிச்சைகள் செய்யும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு விட்டனர். கருத்சிதைவும் சர்வ சாதாரணமாகி விட்டது. அதனால் ஒரு குழந்தை அல்லது அதிக பட்சம் இரு குழந்தைகள் மட்டுமே போதும் என்ற மனோநிலை வந்துவிட்டது. ஒரு குழந்தை என்றால், அது குடும்பத்தினரைப் பிற்காலத்தில் பாதுகாக்கும் ஆண் பிள்ளையாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.  அதே ஆண் பிள்ளைதான் வீட்டில் பெற்றோரைக் கவனிக்க முடியாமல், ஆசிரமங்களிலும் முதியோர் இல்லங்களிலும் சேர்த்து விடுகிறான் என்பது வேறு விஷயம்.
தொழில்நுட்பத்தில் தங்கம் என்ற தலைப்பிட்டு விட்டு, பிள்ளைப்பேறு பற்றி சொல்வது அவசியமா என்று நீங்கள் எண்ணுவது எனக்குத் தெரிகிறது. கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை, முதல் சில மாதங்களிலேயே இன்றைய நவீன சாதனங்கள் காட்டிவிடுகின்றன. இப்படி கருப்பையைச் சோதிக்கும் சாதனங்கள் சரியான முடிவுகளை எப்படித் தர முடிகிறது? இன்றைய சாதனங்களில் துல்லியமான முடிவுகளை எடுக்க எது உதவுகிறது? சாதனங்களில் பயன்படுத்தப்படும் தங்கத் துகள்கள் தாம். இதைத் தான் நானோ தொழில்நுட்பம் என்று கூறுகின்றனர்.
நானோ என்பது மிக மிக நுண்ணிய துகள்.
தங்க உலோக ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தத் தொழில்நுட்பம் வருங்காலத்தில் பலவற்றைச் சாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இத்துகள்கள் உடலில் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்க்க வல்லது. அதனால் மனிதனின் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தங்கம் மருத்துவத்தில் இப்போது மட்டுமன்றி பழங்காலந்தொட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறதே என்று நீங்கள் எண்ணுவதும் எனக்கு தெரியும். ஆம்.. ஆயிரக்கணக்கான வருடங்களாக மருத்துவத் துறையில் தங்கம் பயன்படுத்தப்பட்டு வருவது உண்மையே. கடவுள், இறைத்தன்மை, சுகாதாரம் என்று அனைத்திலும் தங்கம் தொடர்புடையது.
கி.மு. 2500இல் சீனர்கள் தங்கத்தைப் பயன்படுத்தியதாக சான்றுகள் உள்ளன. அம்மை நோய், குடற்புண் நோய்களை தீர்க்க பயன்படுத்தப்பட்டதாம்.
கி.மு. 7ஆம் நுற்றாண்டிலேயே பல்லுக்கு மாற்றாக தங்கக் கம்பிகளைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் பொடியாகவும், மாத்திரைகளாகவும் தங்கம் பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
தங்கத்தின் தகடாகும் தன்மையாலும், நம்பகத்தன்மையாலும் உரன் உடைமையாலும், உறுதியாலும், நீடித்து உழைக்கும் தன்மையாலும், அரிமானத்தைத் தடுப்பதாலும், உயிர்களுக்கு ஏற்றதாக இருப்பதாலும் தங்கம் மருத்துவத்திலும், இன்னும் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தங்கத் துகள்கள் மருத்துவத் துறையில் பெரும்பங்கு வகிக்கின்றன. மனித உடல் உறுப்பில் பாகம் வகிக்கும் போது, அரித்தல் தன்மை இல்லாமல் இருப்பது அவசியம். இதனால் பின் வளைவுகளைப் பல மடங்கு குறைக்கலாம்.
வாத மூட்டழற்சி நோய்க்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆராரோபின்னில் தங்கம் உண்டு. மூட்டு வலி நோய்க்கு, துகள்களைக் கொண்டு சிகிச்சை அளிப்பதினால், பலன் கிடைக்கும் என்கிறது நானோ தொழில்நுட்பம். தங்கத் துகள்களை உடலில் வேண்டிய பாகத்தில் செலுத்தி விட்டு, பின்னர் மருந்தினை அளித்தால், அது மிகச் சிறப்பான முறையில் அந்த இடத்தில் உறிஞ்சப்பட்டு, சிகிச்சையை எளிதாக்கக் கூடியது. இந்த நுட்பத்தைக் கொண்டு, கேன்சர் கட்டிகள் இருக்கும் இடத்திற்கு, சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
கண் காதுகளில் நடத்தப்படும் உட்பதி அறுவை சிகிச்சைகளுக்கும் இத்துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன. காது நுண் சிகிச்சைக்கு, அரிப்புத் தன்மையற்ற தங்கம் உபயோகிக்கப்படுகிறது. எச்.ஐ.வி நோய் உடலில் பரவும் தன்மையை தங்கத் துகள் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
மின் பற்றாக்குறையைத் தவிர்க்க, இன்று சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது மனித சழுதாயம்.  தற்போதுள்ள சூரியத் தகடுகள் குறிப்பிட்ட அளவு சக்தியை மட்டுமே கிரகிக்கும் தன்மை கொண்டுள்ளது. ஆனால், இதே நானோ துகள்கள் பதித்த சூரியத் தகடுகள், பன்மடங்கு சக்தியை கிரகித்து மின் சக்தியை அதிக அளவில் தரவல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதனால் தான் கனடாவில் 70 கிலோ தங்கத்தைப் பயன்படுத்தி, ஒரு கட்டடம் முழுவதிலும் இருக்கும் 14000 ஜன்னல்களுக்கு தங்க முலாம் பூசி, சூரியக் கதிர்களை தடுத்து, வெயில் காலத்தில் குளுமையாகவும், குளிர் காலத்தில் கதகதப்பாகவும் இருக்க வசதி செய்திருக்கின்றனர் பொறியாளர்கள்.
மக்கள் சுற்றுப்புறச் சூழல் மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். மனிதனுக்கு வரும் கொடிய நோய்கள் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகளால் என்பது தௌ;ளத் தெளிவான உண்மை. அதனால் கழிவுகளைக் குறைக்கவும், கழிவுகளை மாற்றுப் பொருட்களாக ஆக்கவும், பல்வேறு ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.  இந்தத் துறையில், தங்க ஊக்கிகள், வேதியியல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட வீணாகும் பொருட்களை மறுபடியும் மூலப் பொருளாகச் செய்ய வல்லது. இதன் மூலம் கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக், வர்ணக்கலவைகள் என்று மற்ற பொருட்களைச் செய்ய முடியும்.
தங்கம் உயிரகமேற்ற ஊக்கியாக இருப்பதால், உயிர் காக்கும் சுவாச உபகரணங்களிலும் அவசர சிகிச்சை உபகரணங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீயணைப்புப் படையினருக்கும், சுரங்கத் தொழிலாளர்களுக்கும் கரிம ஓருயிரக விஷவாயுவிலிருந்து தப்பிக்க இச்சாதனங்கள் உதவுகின்றன.
தங்கத்தை நாம் மிக மெல்லிய தகடாக ஆக்க முடியும்.  மிக மெல்லிய கம்பியாக நீட்ட முடியும். ஒரு அவுன்ஸ், 28 கிராம் தங்கத்தை, 0.000018 செ.மீ தடிமன் கொண்ட 9 சதுர மீட்டர் தகடாகச் செய்ய முடியும். அதே 28 கிராம் தங்கத்தை 5 மைக்கிரான் சுற்றளவு கொண்ட 80கி.மீ (50 மைல்கள்) கொண்ட மெல்லிய கம்பியாகவும் நீட்ட முடியும்.
இன்று நாம் பயன்படுத்தும் மின் கருவிகள் அனைத்திலும் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு கைபேசியிலும், குறைந்தது 50 ரூபாய் மதிப்புள்ள தங்கமாவது இருக்கும். அது கைபேசி சீராக செயல்பட உதவுகிறது. புகைப்படங்களையும், தரவுகளையும் பத்திரமாகச் சேமிக்க உதவுகிறது. தங்கத்தின் கடத்துத் திறனை தொழில் நுட்ப வல்லுநர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
உங்கள் கைபேசியின் உள்ளே திறந்து பார்த்தால், தங்கத்தால் ஆன சிறு பகுதிகள் கண்களில் தட்டுப்படும். பழைய கணினிகளைத் திறந்து பார்த்தாலும் கூட, சுற்றுப் பலகை இணைப்பி நுனிகளில் (சர்கியூட் போர்ட் கனெக்டர்), தங்கத் தகடுகள் இருக்கும். சுற்று சிக்கலானதாக இருக்கும் போது, அரிமானம் தடுக்கும் ஆற்றல், சிறந்த பலன் கொடுக்கிறது. அதிக மின் வெப்பங்கடத்தும் திறன் கொண்டதால், தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம், உயர் செயல்பாடு, பாதுகாப்பு சார்ந்த பயன்பாட்டுச் சாதனங்களில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. மீநுண் அளவுகோல் மின்னகத்தில் தங்கம் மிக மிக அவசியம். மின் துறையில் வருடத்திற்கு 300 டன்கள் அளவு தங்கம் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக உலகக் குழுமம் கணக்கிடுகிறது.
மின் கருவிகளில் பயன்படுத்தப்படும் தொகுப்புச் சுற்றுக்களில் (ஐ.சிகளில்) கூந்தலை விடவும் மெல்லிய தங்கக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.  99.999 சதவீத சுத்தத் தன்மை கொண்ட தங்கத்தால் இந்தப் பிணைப்புகளைச் சிறந்த முறையில் செயல்படுத்த முடியும்.
வெள்ளி, தாமிரம், நல்ல கடத்திகளாக இருந்த போதும், மங்குதலைத் தடுப்பதிலும், அரிமானத்தைத் தடுப்பதிலும், தங்கத்தை விடவும் குறைந்தவை. இன்று தங்கத்திற்குப் பதிலாக, வெள்ளி தாமிரம் கொண்ட உலோகக் கலவைகளைப் பயன்படுத்த முயன்று வருகின்றனர்.
தங்கத்தின் விலை அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், மின் பொருட்களின் விலை குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருந்து வருவதால், தங்கப் பிணைப்புக் கம்பிகளுக்கு பதிலாக, தாமிரப் பிணைப்புக் கம்பிகள் பயன்படுத்த முயற்சி நடந்து வருகின்றது.
விமானம் மற்றும் ஜெட் என்ஜின்களின் பாகங்களைப் பாதுகாப்பானதாக்க, தங்கம் உதவுகிறது. தங்கம் பறக்கவும் செய்கிறது.  ஆகாயத்தில் விமானம் பறக்கும் போது, உஷ்ணம் அதிகமாக இருக்கும். அந்தத் தன்மையைக் குறைக்க, மெல்லிய தங்க முலாம் பூசிய இறக்கைகள் மற்றும் ஜன்னல்கள் இருப்பது அக ஊதாக்கதிர்களை எதிரொளிப்புச் செய்ய உதவுகின்றன.
கார்களில் தங்கம் வினை ஊக்க மாசு அகற்றியாக பயன்படுகிறது. என்ஜினிலிருந்து வெளிப்படும் மாசுகளை, நச்சுத் தன்மையை தங்க நானோ துகள்கள் போக்க வல்லது. ஐரோப்பிய நாடுகளில், டீசல் கொண்டு ஓடக் கூடிய வாகனங்களில் வினை ஊக்கியாக நானோ துகள்கள் பொருத்தப்பட்டு, காற்றில் ஏற்படும் மாசுத்தன்மையை குறைத்து வருகின்றனர். வாகனங்களில் உராய்வு நீக்கும் பொருளாகவும், பொடி வைத்து இணைக்கவும், பற்ற வைக்கவும், நனைத்து பற்ற வைக்கவும் இத்துகள்கள் பயன்படுகின்றன.
செவ்வாய் கிரகத்தை ஆராயச் சென்ற பூகோள அளவியல் கருவியிலிருந்த தொலைக்காட்சி கண்ணாடியில் தங்க முலாம். விண்வெளி ஆராய்ச்சியில், வெப்பத்தை எதிரொளிக்கவும், அக ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், விண்வெளி வீரர்களின் தலைக் கவசங்களில் தங்க முலாம். அமெரிக்க கொலம்பியா விண்கலத்தில் 41 கிலோ தங்கம். இன்னும் நீரைச் சுத்தப்படுத்துவதற்கு தங்கத் துகள். முன்னேறிய சேமிப்புக் கருவிகளைச் செய்யத் தங்கத் துகள்.  வர்ணக் கலவைகளை பலப்படுத்த தங்கம். கண்ணாடிகள் பொருத்தும் துறையில், மெருகிடத் தங்கம்.
இப்படி எல்லாத் துறைகளிலும் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது அறிந்து கொண்டதால், தங்கத்தின் விலையேற்றம் ஏன் இந்த அளவில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
தங்கத்தை வாங்கிச் சேமிப்பது நல்லதா கெட்டதா என்ற கேள்வி அவரவர் வசதிக்கும் அவரவர் எண்ணத்துக்கும் ஏற்ப அமையும். கையில் பணம் அதிகப்படியாக இருந்து, நிலத்தில் போடுமளவிற்கு பணம் இல்லாத பட்சத்தில், தங்கத்தில் போடுவது நல்லது என்றே நான் எண்ணுகிறேன்.
Please click the following link the whole book with photos.
Series Navigationஊமைக் காயங்கள்…..!நினைவுகளின் சுவட்டில் – 88