தளவாடங்கள்

Spread the love

படைக்கப்பட்ட நிலம் அனைத்திலும்

நடந்து களைத்திருக்கிறது போர்.

அதனூடே ஓடிக்களைத்தவர்கள்

பல்வேறு தேசங்களில்

ஓய்ந்தமர்ந்திருக்கிறார்கள்.

தனக்கான ஆயுதம் இதுதானென்ற

வரைமுறையின்றி

இயற்கைக் கூறனைத்தையும்

இருகரம் நெருக்குகின்றது போர்.

அதன் காலடித் தடங்களில்

நசுங்கிக்கிடக்கின்றன

பால் புட்டிகளும் சயனைடு குப்பிகளும்.

சுமக்கமுடியா சவங்களுடன்

புலம்பித் திரியும் போரின் முதுகிலமர்ந்து

தங்கள் ஆயுதங்களைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்

ஆயுத வியாபாரிகளும் போதை வியாபாரிகளும்.

கண்கள் தொலைந்து கைகளும் கால்களும் இழந்து

இரத்தம்தோய்ந்த பிணங்களின்மேல் விழுந்து

அழுதுகொண்டிருக்கிறது யுத்தம். 

Series Navigation