தினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

ஒரு கதை சொல்லப்படுகிறது. உற்றுக் கேட்கிறேன், உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று மனம் இடித்துரைத்த பின்னும்.

அப்போது ஒரு குரல் என் காதில் விழுந்தது.

“ஒரு அடையாள அட்ட வேணும் மேடம்.”

ஏற்கனவே விண்ணப்பிச்சுட்டீங்களா? இல்ல இனிமே தான் விண்ணப்பிக்க போறீங்களா?

வந்திருந்த இருவரில் ஒருவன் நெடு நெடுவென வளந்திருந்தான். அடர் கறுப்பு நிறம்.

மற்றவன் அவன் வளர்ந்தவனின் தோள் பட்டையில் தலை உயரம் ஒத்திருக்க நின்றான் மாநிறம்.

“இல்ல மேடம் முன்னியே வந்து கேட்டேன். நீங்க சூலைல வரும்டி சொன்னீங்க.”

“ஒரு ரேஷன் கார்ட் ஜெராக்ஸ், அம்மா அப்பா யாருடையதாவது ஓட்டர் ஐடி ஜெராக்ஸ் டிசி எடுத்துட்டு வாங்க.”

“இல்ல மேடம் இவனுக்கு யாருமில்ல.”

“என்னது ?”

“படிக்கவேல்ல, சின்ன வயசிலே போனவங்க”

இப்போது அந்த மாநிறத்தான் இடைமறித்தான்

“எங்கப்பாக்கு ரெண்டு பொண்டாட்டி மேடம். எங்கம்மா 3 வயசிருக்கும்போ இறந்துட்டாங்க, அதுக்கப்புறம் வளத்துவங்க, பிறகு அப்பான்னு இப்ப பாட்டியும் காலமாயிட்டதால, பாட்டி செத்தப்ப சொன்னாங்க. இது தான் உன் ஊரு அங்க வீடு இருக்குன்னு இப்ப தான் வந்தேன்.”

“சின்ன வயசில இருந்தே வரலியா ?”

“இல்ல மேடம்.”

“உங்க பாட்டி எப்ப இறந்தாங்க ?”

“அஞ்சு வயசிருக்கும்போ.”

“அப்புறம் நீ எங்க இருந்த ?”

“வேலை செய்யற இடத்துல அண்ணா அண்ணா எங்க பாட்டி செத்துட்டாங் கன்னு மேஸ்திரி கூட தான், இப்ப தான் வடக்கால மேல்நாச்சிப்பட்டு அந்தாட்ட பொண்ணு பாத்தன், பொண்ணு வீட்ல கேட்டாங்க.”

“இப்போது வளந்தவன் இடைமறித்தான்.”

“பழகன தோசம் தான் மேடம் முன்னிக்கி ஒரு பத்து நா வந்திருந்தான் இப்பக்கியும் வந்து இங்கன தான் இருக்கான் அதான் கூட்டியாந்தேன்.”

ஓ !

“வீட்டு வரி ரசீது வாங்கி வாங்க! பிறகு விண்ணப்பம் போடலாம்.”

“அந்த பழைய வீடு அப்படியே இருக்கு, அதுக்கு வேணா வாங்கலாம் இவங்க போய் 30 வருசத்துக்கு மேல இருக்கும்.”

“வயசென்ன ?”

“23 மேடம்”

“டிசி கண்டிப்பா வேணுமேப்பா.”

“ஒரு நாள் கூட பள்ளிகொடத்துக்கு போனதில்ல மேடம்.”

“சரி வீட்டு வரி ரசீது கொண்டு வாங்க பார்க்கலாம்.”

அவர்கள் இருவரும் கடந்து போக “இன்னான்னா இது ஸ்கூலுக்கே போகல டிசி கேக்குறாங்க,” என்று முழுகை சட்டையை மடித்தபடி கேட்டுக்கொண்டே கண்களில் இருந்து மறைந்து போனான்.

ஐந்து வயதில் இருந்து அனுபவித்த தனிமையை அவன் சொல்லாத போதும் அறிந்த மனம் தவிக்கத்தான் செய்கிறது.

[தொடரும்]

Series Navigationவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11மொழிவது சுகம் ஜூலை 10 2014