தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !

Spread the love

 

சற்று நேரம் அமைதியாய் இருந்த என் உடல் செல்கள் வலியினால் அலரத் துவங்கிக்கொண்டிருந்தது. என்னைக் கொண்டு போய் க்ளினிக் கட்டிலில் படுக்க வைத்தார்கள். அங்கு வந்த சங்கர் அண்ணாவிடம், என் அம்மா, கால்ல சுடுதண்ணி கொட்டிக்கிட்டாப்பா என்று கூற, என்னைப் பார்த்து, உனக்கேம்மா இந்த வேலை என்றார். நானே வேண்டும் என்று சுடுதண்ணீரை எடுத்து என் மேல் கொட்டிக்கொண்டதைப் போல.

 

அவ கொட்டிக்கலப்பா அவ பொண்ணு தவறிக் கொட்டிட்டா என்றாள் அம்மா.

 

அச்சோ என்றொரு அனுதாப ஒலி எழுந்தது சங்கர் அண்ணாவிடமிருந்து.

 

ராமமூர்த்தி டாக்டர் வந்து காயத்தை ஆற்றிடலாம் என்றார் சிரித்தபடி. என்ன ஒரு நான்கு நரம்பு ஊசி, காயம் அதிகமாய் இருப்பதாலும், அடிக்கடி அழைத்து வர முடியாததாலும் அந்த மருந்தை அம்மாவின் வேண்டுதலின் பேரில் எழுதிக்கொடுத்தார்.

 

என் சிறிய தம்பியின் சிநேகிதியான சத்யா அரசாங்க மருத்துவ மனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். அவர் வந்து எனக்கு தினமும் ஊசி போடக் கேட்கப்பட்டது. உடன் கால் காயத்தை துடைக்க ஒருவரையும் ஏற்பாடு செய்தார்கள்.

 

காயம் பட்ட அந்த ஒரு மாத காலம் என்பது தமிழ்ச்செல்வியின் வாழ்வியலின் இருண்ட காலம் என்பேன். வேலைக்குப் போக முடியாமல், மாத வருவாய் போனது !  நீங்காத வலி வேதனை, உறக்கமின்மை, நடக்க முடியாமல், நகர முடியாமல், புரள முடியாமல் முடங்கிப் போனது, மரண பயம், எதிர்கால பயம், வாழ்ந்து முடித்த திருப்தியின்மை, நிறைவேறாத ஆசைகள், இழந்த உறவுகள், கிடைத்த உறவுகளின் வசைச் சொல்களோடு, குடும்பத்தினரின் ஆறுதல் தாங்குதல்கள் என்று ஒரு கதம்பமாய் தொகுக்கப்பட்ட நிகழ்வுகள்.  உண்ணல், உடுத்தல், இயற்கைக் கடமைகள் எல்லாம் என் படுக்கைக் கட்டிலில்தான் !  பொழுதே போகாமல் பகலும், இரவும் என் விழிப்பில் நிமிட முள் ஆமைபோல் நகர்ந்தது !

 

அலுவலகத்தில் விடுப்புக்காக விடுமுறைக் கடிதம் எழுதி A1 இடம் கொடுத்துவிட A – Asst. – உதவியாளர். வருவாய்த் துறையில் இருக்கும் உதவியாளர்களுக்கு ஒரு ஆங்கில எழுத்துடன் ஒரு எண்ணும் அடையாளத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கும்.

 

என்னிடம் சொன்னாயா, உன்னிடம் சொன்னாளா என்று, விடுப்பு கால ஊதியத்திற்காய் அலைந்தபோது,

சே ! இந்த குடும்பத்திற்காக ஒருவனிடம் போய் பிச்சைக் கேட்கும் பிழைப்பாய் போய்விட்டதே என்று வெந்து நொந்து தன்னையே காயப்படுத்திக்கொண்ட நிலை. வீட்டில் குடும்பத்தினரின் தாங்குதல்களும், பெற்றத் தாய் போல் கவனித்துக்கொண்ட, தம்பி மனைவி சூர்யா, மகள் சுகிர்தா என இருவர் உடன் இருக்க, என்னைப் பெற்ற தாயாரின் ஆழ்ந்த கவனிப்பினாலும் வேண்டுதல்களினாலும் உடல் தேறினேன்.

 

இப்படியான சூழலில் தனியார் கம்பெனி, அரசாங்கத்திடம் டென்டர் எடுத்திருக்க, அந்த தனியார் நிறுவன ஊழியைதானே நீ, தினக்கூலி என்பதால் உனக்கு ஊதியம் இல்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட, வேலை வாங்கும் போது குழையும் அதே குரல், ஆபத்து நேரத்தில் சிறிதும் உதவ முன் வரவில்லையே என்ற எரிச்சல். அந்த வேலையின் மீது எனக்கொரு மாபெரும் வெறுப்பை தோற்றுவித்து விட்டது.

 

சொல்லும் பணிகளை நேரம் எடுத்தேனும் செய்துவிட்டுப் போகும் நான், எட்டு வருட உழைப்பின் பலன் ஒன்றுமில்லை என்பதை அறிந்த போது அந்த வேலையை விட்டுவிடவும் தீர்மானித்து, திரு.வையவன் அவர்களிடமும், திரு. ஜெயபாரதன் அவர்களிடமும் ஆலோசனை கேட்டேன். திரு. வையவன் அவர்கள் அந்த வேலையை விட்டு விடு சிறிது காலம் நீ கால் ஊன்றும் வரை உனக்கு தாரிணி பதிப்பகம் தட்டச்சு பணிகளை தரும் என்று கூறினார். சுய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள். பிறருக்கு உதவு, உன் வருவாயையும் பெருக்கிக்  கொள் என்று கூற, சிறு தைரியம் அடைந்தவளானேன்.

 

அதே சமயம் திரு. ஜெயபாரதன் அவர்களின், ஆலோசனை வேறு நல்ல வேலை கிடைக்கும் வரை, இருக்கும் வேலையை விடாதே என்ற  எதார்த்தத்தைத் தழுவியதாய் இருந்தது.

 

முடிவெடுத்தல் குழப்பதில் இருந்த எனக்கு உடனடி முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஒன்று வந்தது. அலுவலகத்தில் தொடர்ந்து ஏற்பட்ட அவமானம், பணிச்சுமை, ஒரு மாத விடுமுறைக் காலங்களில் நிலுவைப் பணிகளை நானே செய்த போதும் எனக்கு கொடுக்கப்படாத ஊதியம் என்று என் மனநிலையை மேலும் மேலும் ஒரு உச்சக்கட்ட முடிவெடுத்தலுக்குத் தள்ளியது.

 

சூழலை உணர்ந்த நான், துணிந்து நானாக சுயச் சிந்தையோடு ஒரு முடிவெடுத்தேன். அது என்ன வென்றால் எட்டு வருடகாலம் என் உழைப்பை சுரண்டிய அந்த அலுவலகத்தை விட்டு நான் 31.03.2015 அன்றோடு வெளியேறப் போகிறேன் என்பது தான் அது.

 

உன் வருமானத்திற்கு என்ன செய்ய போகிறாய்? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

 

உன் உணவிற்கு என்ன செய்யப்போகிறாய்? அதற்கும் பதில் இல்லை.

 

உன் மகளின் படிப்பிற்கு என்ன செய்யப்போகிறாய் அதற்கும் பதில் இல்லை.

 

ஆனால் திசைத் தெரியா வானத்தில் எறியப்பட்ட அம்பைப் போல ஒரு நிச்சயத்தன்மை உண்டு. அம்பு நிச்சயம் எங்கேனும் விழும் நானும் வெற்றி பெறுவேன். கடந்த வாழ்க்கையில் நான் பட்ட அத்தனைக் கஷ்டங்களையும் தாண்டி.

 

இதோ உங்களிடம்தான் நான் வேலையை விட்டுவிடப் போகிறேன் என்பதைக் கூறுகிறேன்.

 

ஆலோசனை கூறிய என் வாழ்வியல் குருக்களாக எண்ணிக் கொண்டிருக்கும் திரு. ஜெயபாரதன் அவர்களிடமோ அல்லவெனில் திரு.வையவன் அவர்களிடமோ இதை நான் கூட கூறவில்லை.

 

என் சுயத்தைக் காயப்படுத்திய அந்த வேலையை விட்டு வெளியேறப் போகிறேன்.

 

அது நிச்சியம் !

 

++++++++++++++++++++++

Series Navigationஒட்டுண்ணிகள்English rendering of Thirukkural