தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !

This entry is part 16 of 27 in the series 6 செப்டம்பர் 2015

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

குழந்தை, கவிழப் பழகி, பின் கவிழ்ந்தபடி நகரப் பழகி, முழங்காலிட்டு நகரும், குழந்தைப் பருவம் போல், நானும் இந்த வயதில் முழங்காலிட்டு அந்த நீண்ட பாதையில் நகர்ந்து கொண்டிருந்தேன். முழங்காலிடுதலும் சில அரியக் காட்சிகளைக் கண்டுவிட ஏதுவாகும் போலும். அப்படி முழங்காலிட்டு நகர்ந்த போது தான் அந்த பல்லி துடித்துக் கொண்டிருப் பதைப் பார்த்தேன்.

அதன் வால் துண்டிக்கப்பட்டிருந்தது. அதன் நிறமோ மரப்பட்டையின் வெடிப்பின் நிறம் கொண்டிருந்தது. ஒரு கண் பழுதடைந்து குருதி அக்கண்ணின் ஒரு துளியாய் விழக் காய்ந்திருந்தது. மற்றொரு கண்ணில் சாம்பல் நிற கோடு ஒன்று. அது விழியாய் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். அங்கு ஒரு மரணம் நிகழ்ந்துக்கொண்டிருந்தது. அப்பல்லியின் உடல் எங்கும் காயங்கள்.

அவ்விடத்தில் அழவோ, பரிதவிக்கவோ, இதைச் செய்தாய் அதைச் செய்தாய் என்று அரற்றவோ, அல்லது இதைச் செய்யாமல் போகிறாயே என்று ஏங்கவோ ஒருவரும் இல்லை.

கொஞ்சம் மனதைப் பிழிந்தது போல் வலி! அங்கிருந்து நகர எத்தனிக்க விடாது தடுத்தது.

என் ஹேண்ட் பேகை எடுத்து வந்த அம்மா என்ன என்று கேட்டாள். நான் நகராமல் அங்கிருப்பதைப் பார்த்து. என்ன என்று வினவினாள். ஒன்றுமில்லை என்று ஒதுங்கி நகர்ந்தேன்.

அவளிடம் கூறினாள் என்ன செய்வாள் ? முன்பொரு முறை பல்லியைத் துரத்தி துரத்தி அடித்ததைப் போல அடிக்கக் கூடும். அச்சோ பாவம் என்றால்! சோத்துல விழுந்தா தெரியும் பாவம் பரிதாபம் எல்லாம் என்று ஆங்காரமாய்க் கத்துவாள். துடைப்பத்தை எடுத்துச் சட்டென்று தட்டி அந்த ஆங்காரத்திலே பயம் வந்து ஒட்டிக் கொள்ளும். பல்லி விஷம்!

பல்லிக்கு உடலில் மட்டும் தான் விஷம் என்று எண்ணிக்கொண்டேன். பல்லியின் வாலில் ஆணி அடிக்கப்பட்டு விட மற்றொரு பல்லி அப்பல்லிக்கு உணவு கொண்டு போய் கொடுத்து வந்ததாய் பேஸ்புக்கில் உலா வந்த அந்த செய்தி அந்த கணம் எனக்கு நினைவில் வந்தது.

தன்னுடையவர்கள் என்னும் போது உணர்வுகளின் வெளிப்பாட்டில் செயல்களின் உத்வேகத்தில் பல்லிகளுக்கும் விதிகள் மாறுபடவில்லை.

ஏன் முகம் சரியில்லை என்று வினாவினாள் அம்மா.

ஒன்றுமில்லை என்றேன். எப்படியும் கூட்டி வாரிவிடுவாள் அப்பல்லியை. அதைப்பற்றி அவளுக்கு எதுவுமில்லை. அது ஒரு உயிர் என்ற விழிப்புணர்வு கூட அவளுக்கு ஏற்படப் போவ தில்லை.

அவளைப்பொருத்தவரை அவள் பேத்தி பல்லியையும் கரப்பான் பூச்சியையும் பார்த்து அலறக் கூடாது. பல்லி சோற்றில் விழுந்து சோறு விஷமாகக் கூடாது.

நான்!

நானும் அப்படித்தான்…. என் பிள்ளைக்கு ஏதோ ஆபத்தென்றால் வெகுண்டெழத்தான் செய்வேன்…. ஆனாலும்… விரட்டிடலாமே என்று சொன்னால் எப்படி? அடுத்த கட்டப் போர் நடவடிக்கைப்போல் பாட்டியும் பேத்தியும் நிற்கும் தோரணைக்கு பயந்தே நான் அவளிடம் எதையும் சொல்லவில்லை.

அந்த பல்லிக்கு மேலும் இம்சை ஏற்படாமல் செத்துப் போகட்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

மெல்ல வெளியே நகர்ந்து சாய்மரம் போல் இருந்த அந்த சிமெண்ட் தரையில் விழாமல் எச்சரிக்கையுடன் இறங்கி ஒரு கையை சாய்தளத்தில் ஊன்றி எழ முற்பட்ட போது, தவளை ஒன்று ஒருகால் நசுங்கி கால்வாயில் எத்தியது.

கால்வாய் நாற்றம் நுரையீரலைத் தீண்டாமல் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டேன். எழுவதற்க்ச் சிரமப்படுவது தினமுமான வாடிக்கையாதலால் ஒரு புறம் மேல்வீட்டு பெண் பார்க்கிறாளே என்ற சுய இரக்க உணர்வு என்னைத் தீண்டினாலும் அவளைக் கவனியாதது போல் சுதாரித்து எழுந்து என் வாகனத்தருகே வந்தேன்.

மீண்டும் அம்மா என் முகத்தைப் பார்த்து கேட்டாள். ஏதாச்சும் கோவமா? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு ?

ஒண்ணுமில்லேம்மா என்றேன்.

அந்த பதிலில் அவள் திருப்தி அடையவில்லை.

மேல் வீட்டுக் குழந்தை படிகளில் இறங்கி ஓடி வந்தது. கையில் சாதி மல்லிகை.

குழந்தை என்னைப் பார்த்து அழகாய்ச் சிரித்தது.

“தீதி அம்மா கொடுக்க சொன்னாங்க.”

மேல் வீட்டுப் பெண் என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

அந்த புன்னகையில் நட்பு நெகிழ்ந்தது.

நான் ஊர்ந்து எழுந்து வாகனத்தில் ஏறுவதை மற்றவர்கள் பரிதாபத்தோடு பார்ப்பதாய் எண்ணிக் கொள்கிறேனோ என்ற எண்ணத்தை ஒதுக்கி அந்த மலரை வாங்கி தலையில் வைத்துக்கொண்டேன்.

நன்றியை ஒரு புன்னகையால் அவளுக்கு தெரிவித்து என் அலுவலகத்தை நோக்கி பயணிக்கும் போது உங்களிடம் மட்டும் ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன்.

எனக்கு மலர்கள் பெண்களின் தலையில் இருப்பதை விட செடியில் சிரிப்பதே பிடிக்கும்.

+++++++++++++++++

Series Navigationஊறிவழியும் கைபேசிப் பொய்கள்பாண்டித்துரை கவிதைகள்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *