திரை விமர்சனம் நேற்று இன்று நாளை

சிறகு இரவிச்சந்திரன்
0
வெகு நாட்களுக்குப் பிறகு, தமிழில் அசத்தலான விஞ்ஞானப் படம் விறுவிறுப்பான கதையுடன் வந்திருக்கிறது.
2065ல் ஒரு விஞ்ஞானியால் உருவாக்கப்படும் கால யந்திரம், இன்றைய நாளில் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கல்களை நகைச்சுவையாக சொல்கிறது படம்.
சுய தொழிலில் முன்னேற நினைத்து தோல்வியுறும் இளங்கோ. அவனது நண்பன் புலிச்சித்தர் ஜோதிடர் ஆறுமுகம். இளங்கோவின் காதலி அனு. இவர்களைத் துரத்தும் ரவுடி குழந்தைவேலு. காலயந்திரத்தில் கடந்த காலம் போய் சில மாறுதல்களை அவர்கள் அறியாமலேயே இளங்கோவும் ஆறுமுகமும் செய்து விட, அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்று சுவாரஸ்ய முடிச்சுகள் போட்டிருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.
அறிமுகக் காட்சியில் காலயந்திரத்தை அறிமுகப்படுத்தும் விஞ்ஞானியாக ஆர்யா வந்த நிமிடமே பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு முறையும் பயணப்பெட்டி போலிருக்கும் காலயந்திரம், அதன் ஆதார சிப்பைப் போட்டவுடன் முழு வடிவம் பெறுவது கண்களை விரிய வைக்கிறது.
காலயந்திரத்தை பயன்படுத்தி இழந்த பொருட்களை அந்த தொலைந்த நிமிடத்திற்கே போய் கண்டுபிடித்து சொல்லி காசு பார்க்கும் இளங்கோ, ஒரு கட்டத்தில் ரவுடி குழந்தைவேலுவின் பகைக்கு ஆளாவதில் இருந்து படம் ஒரு திரில்லர் வேகத்தில் ஓடுகிறது. முடிவை அழுத்தமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறது இந்த 146 நிமிடப் படம்.
இளங்கோவாக விஷ்ணு விஷால் தேறியிருக்கிறார் நடிப்பில். கருணாகரனின் ஆறுமுகம் வேடம் அதிக சலசலப்பை ஏற்படுத்தவில்லை. அனுவாக மியா ஜார்ஜ் மனதில் பதிகிறார்.
அதிக பாடல்கள் இல்லாமல் பின்னணி இசையில் கவனம் செலுத்தி பாஸ் மார்க் வாங்குகிறார் ஹிப்ஹாப் தமிழா.
அனுவின் அம்மாவுக்கு அவளே கடந்த காலத்திற்குப் போய் உதவுவது; அனுவின் குழந்தை பருவத்தில் அவளே அந்தக் குழந்தை அனுவிற்கு முத்தம் கொடுப்பது என சில சுவாரஸ்ய காட்சிகளைக் கொண்ட திரைக்கதை சபாஷ் போட வைக்கிறது.
வசந்தின் ஒளிப்பதிவில் நிழலும் ஒளியும் எதிர்கால உலகமும் அசத்துகின்றன.
ரவிக்குமாரின் அடுத்த படத்தை எதிர்பார்க்கும் நம்பிக்கையை தந்திருக்கிறது இந்தப் படம்.
0
டாட் : மா(ர்)ஸ்
0
டயலாக்: மியா ஜார்ஜ் நெத்தியை சுருக்கினா ஒரு வெட்டு தெரியுதே. அதன் பின்கதை என்ன?
0

Series Navigationசந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழாநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12