திரை விமர்சனம் விரட்டு

Spread the love

 

 

முழுக்க முழுக்க தாய்லாந்தில்,, ஓடும் ரயிலில், எடுக்கப்பட்ட தமிழ்படம். ஒரு நுனி சீட்டு திரில்லராக வந்திருக்க வேண்டியது.. திரைக்கதை எனும் சிக்னல் கோளாறால் கொஞ்சம் நொண்டுகிறது.

தாய்லாந்தின் அழகிய இயற்கை காட்சிகளையும், வானுயர பாரம்பரிய கட்டிடங்களையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது பிரசாத்தின் கேமரா. ஒரு திரில்லருக்கு வேண்டிய தடதடக்கும் இசையை தந்திருக்கிறார் தரன் குமார். பாடல்களும் பரவாயில்லை ரகம்.  ஆனால் அதிக திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, பட்த்தை காலை வாரி விட்டு விட்டது. ஆனாலும் இயக்குனர் குமார் தருனியின் வித்தியாச முயற்சியை பாராட்டலாம். அடுத்த படத்தில், தேர்ந்த இயக்குனர்களிடம் பயிற்சி எடுத்து கொண்டு அவர் களத்தில் இறங்கவேண்டும்.

கதை ரொம்ப சிம்பிள். சிறு வயதிலிருந்தே தாய்லாந்தில், ஒரு புத்தர் கோயிலின் குருமார்களிடம் வேலை செய்து வரும் தமிழ்நாட்டு சிறுவன் அம்மு, வாலிப வயதில் சொந்த மண்ணுக்குத் திரும்ப எண்ணுகிறான். அதுவரை அவனிடம், இதுவரை வேலை செய்ததற்கான  சேமிப்புப் பணம்ம் பல இலட்சங்களில் இருக்கிறது. உலகில் எல்லோரும் நல்லவர்களே என புத்த சிந்தனையுடன் வளர்க்கப்படும் அம்மு, வழியில் சந்திக்கும் பல நிற மனிதர்களும் அவர்களின் தீய எண்ணங்களுமே படம்.

சில்லறை திருட்டுகளில் ஈடுபடும் சுஜிவ் ( சுஜிவு ) ஒரு நாள் ஶ்ரீயைப் ( எரிக்கா பெர்னான்டஸ் ) பார்க்கிறான். அவள் மேல் காதலாகிவிடும் அவனுக்கு, அவளது காதல் மெல்ல மெல்ல கிடைக்கிறது. ஆனாலும் சுஜிவ் செய்யும் தொழில் திருட்டுத் தொழில் என்பதில் ஶ்ரீக்கு உடன்பாடில்லை. சுஜிவைத் திருட்டை விடச் சொல்லி வற்புறுத்துகிறாள் அவள். எல்லாவற்றையும் விட்டு விட்டு, தாய்லாந்திலிருந்து மலேசியா செல்லும் அதிவேக ரயிலில் அவர்கள் பயணிக்கிறார்கள், அதில் தான் அம்முவும் பணத்தோடு பயணப் படுகிறான். ஶ்ரீயின் மேல் பாசம் கொள்ளும் அம்மு, அவளைத் தன்  சகோதரியாகவே நினைக்கிறான். ஆனால் பெரும் பணத்தைப் பார்க்கும் சுஜிவ்வுக்கு அதன் மேல் ஒரு கண். அம்முவின் பணத்தைக் கொள்ளையடிக்க கல்கி ( சுமன் ஷெட்டி ) அவன் காதலி டாலியுடன் ( பிரக்யா ஜஸ்வால் ) அதே ரயிலில் வருகிறான். ரேபன் ( மனோபாலா ) எனும் துப்பறியும் நிபுணர், தாய்லாந்து இளவரசியின் காணாமல் போன கறுப்பு வைர நெக்லசைத் தேடி, அதே ரயிலில் வருகிறார். அம்முவின் பணம் காப்பாற்றப்பட்டதா? இளவரசியின் நெக்லஸ் என்ன ஆயிற்று என்று இரண்டு மணி நேரப் படமாகக் காட்டியிருக்கிறார்கள்.

தனுஷ் போல உடம்பை வைத்துக்கொண்டு, சுஜிவ் போடும் சண்டைகள் நம்பும்படி இல்லை. எரிக்கா பெர்னாண்டஸ் அழகிய முகத்துக்குள் கொஞ்சம் நடிப்பையும் வைத்திருக்கிறார். எதிர்காலம் அவருக்கு பிரகாசம். பிரக்யாவை இனி ஐட்டம் பாடல்களில் அதிகம் பார்க்கலாம். அபாய வளைவுகளூடன் அவர் ஆடும் ஆட்டம் சூப்பர்.

“ காதலெனும் தேசத்தில் மவுனம் தாய்மொழி “, “கண்ணாடி போல் இருந்தாளே” இரண்டு பாடல்களிலும்  நா. முத்துகுமாரும் தரன் குமாரும் கைகோர்த்து கை தட்ட வைக்கிறார்கள்.

வித்தியாசமான முயற்சி என்றாலும் நகைச்சுவை கொஞ்சம் கூட இல்லை. மனோபாலா வர வர அலுத்துக் கொண்டு வருகிறார். மறுபடி இயக்கத்திற்கு அவர் போனால், நல்ல படங்களாவது கிடைக்கும்.

விரட்டு கடைசியில் வறட்டு படமாக ஆகிவிட்டிருக்கிறது.

0

 

 

Series Navigation