திரை விமர்சனம் ஸ்பெக்டர்

– சிறகு இரவிச்சந்திரன்

0

உலக நாடுகளின் ரகசியத் தகவல்களைப் பெற, கணினி வலை பின்னும் சதிகார சிலந்தியை, பாண்ட் வளைத்துப் பிடிக்கும் படம்!

மெக்சிகோவில், இறந்தவர் தின விழாவில், சர்வதேச சதிகாரன் மார்க்கோஸ் ஸ்காராவை சுட்டுக் கொல்கிறார் பாண்ட். அத்து மீறிய செயல் என்று மிஸ்டர் எம் அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்கிறார். ஆனாலும் பாண்ட் ஓயவில்லை. அனுமதி இல்லாமல் சூத்திரதாரி பையோ ஃபோல்டை, தனி ஆளாக எதிர்கொண்டு வெல்கிறார்.

ஜேம்ஸ் பாண்ட் படமென்றாலே வியக்க வைக்கும் சாகசங்களுக்கு தயார் நிலையில், பார்க்க வருவான் அவரது ரசிகன். ஆனால் இதில் அவனை பாண்ட் ஏமாற்றி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

டேனியல் கிரெய்க், ஜேம்ஸ் 007 ஆக அசத்தல் சாகசங்கள் புரிகிறார். காரும் ஹெலிகாப்டரும், போர் ரக விமான்ங்களும் அவர் கையில் விளையாட்டு பொருட்காளாகி விடுகின்றன. ஆனாலும் எல்லாமும் பார்த்த மாதிரியே இருப்பது சலிப்பு. தணிக்கையில் சூடான காட்சிகள் வெட்டப்பட்டு விட, இருக்கையில் ரசிகன் சூடாகிறான்.

மெக்சிகோ, லண்டன், டேன் ஜியர்ஸ், வட ஆப்ரிக்கா, ஜப்பான் என தாவுகிறார் பாண்ட். எப்படி என்று எந்த கோனாராவது நோட்ஸ் போட்டால் தேவலை.

பையோ ஃபீல்டாக இடைவேளைக்கப்புறம் வரும் கிறிஸ்டோபர் வால்ட்ஸ், அதிக மெனக்கெடல் இல்லாமல் வன்மம் காட்டுகிறார். புதிய எம் ஆக,ரால்ஃப் ஃபீனஸ் கச்சிதம்.

ஹாலிவுட் படங்களின் ஒளிக்கலவைகள் பற்றி தனியாக சொல்ல வேண்டாம். எப்போதுமே அசத்தல் ரகம் தான். இதில் ஹோய்ட்டே வான் ஹோய்ட்டினா அக்மார்க் ரகம்.

தடதடக்கும் பின்னணி இசைக்குச் சொந்தக்காரர் தாமஸ் நியுமேன். லப்டப்பை எகிறச் செய்ய, அவரது பங்கும் கணிசம்.

வட ஆப்ரிக்க பாலைவனத்தில் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட தொலைதொடர்பு கட்டிடம் சரிந்து எரிவதும், க்ளைமேக்ஸில் வில்லன் இருக்கும் புராதன மாளிகை உடைந்து சிதறுவதும் பிரம்மாண்டத்தின் உச்சம்.

நடுவில் கொஞ்சம் டேனியல், சோனியாக தெரிகிறார்.

பாண்ட் படங்களை விறுவிறுப்பாக இயக்க தனித் திறமை வேண்டும். அது நிச்சயமாக இயக்குனர் சாம் மெண்டிஸிடம் இல்லை.

0

பார்வை : நமுத்த பொரி

0

குரல் : அல்வாவை எல்லாம் எடுத்திட்டு பேப்பரை மட்டும் கொடுத்தா, வாசனை எப்படிய்யா வயிற்றை நிரப்பும்!

0

Series Navigationதீ, பந்தம்மருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் ( Autism )