துளி விஷம்

சத்யானந்தன்

பரிமாற்றங்களின் தராசில்
ஏறுமாறாய் ஏதேனும் மீதம்
இருந்து விடுகிறது

நாட்காட்டியின் தாள்கள்
திரைகளாய்

அபூர்வமாய்
நினைவின் பனிப்
பெட்டகத்தில்
உறைந்து போயிருந்த முகம்
எப்போதோ எதிர்ப்படுகிறது
எந்தத் தழும்பில் அந்தப் பரிச்சயம்
இழையோடுகிறது என்றறிய
வெகுகாலம் பிடிக்கிறது

பகலின் பரிகாச முகங்கள்
இரவில் ரத்தக் காட்டேரிக்
கனவுகளாகின்றன

மீறல்கள்
வம்புச் சண்டைகள்
அதிர்வுகளாய் எடுத்து வைக்கும்
தப்படி ஒவ்வொன்றிலும்
இடறுகின்றன

கடந்து செல்ல
சட்டை நீக்கிய
பாம்பு போல்
ஊர்ந்து செல்ல வேண்டும்

பல்லில் துளி
விஷமும்

Series Navigationஐயம் தீர்த்த பெருமாள்1993 இல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் நேர்ந்த வெடி விபத்து