தேனும் திணை மாவும்

ஆடு மேய்க்கிற ஆத்தா

போயி அர நாழி ஆயிருச்சு

சில்லுவண்டும் கூட்டுசேந்து

சத்தம் போடக் கெளம்பிருச்சி

கோழிகளும் பத்திரமா தன்

கொடப்புக்குள்ள பதுங்கிருச்சி

செனை மாட்டத் தேடி வந்த

சின்னய்யாவும் போய்த்தாரு

மோட்டிலேறிப் பாக்கையில

கண்ணுக் கெட்டுன தொலைவுவர

மனுச நடமாட்டம்னு எதுவுமில்ல

கூத்துப் பாக்க கூட்டம் ஒன்னு

பந்தம் கொளுத்தி நவந்து போவுது

சுள்ளி பொறக்கி சுடவச்ச

கஞ்சிப் பான காஞ்சுக் கெடக்கு

கறிக்கி கொண்டாரப் போன அத்தான்

பொழுதாயும் குடுசை திரும்பல-காளியாத்தா!

எங்கத்தானுக் கொன்னும் ஆவப் புடாது

புது நெல்லு வாங்கியாந்து

பொங்கலொன்னு வச்சிப்புடுறேன்!

கலந் தெனையக் கொண்டாந்து

உங் காமாட்டுல கொட்டிப் புடுறேன்!

உடும்பு புடிக்க போன மச்சான்

வூடு திரும்பி வர்ற வரைக்கும் பஞ்சவண்ணம்

உசுரப் புடிச்சு காத்துக் கெடந்தா…

வீட்டுச் சாமியத்தான் பாத்துக்கிட்டே அவ

காலை மடக்கி உக்காந்துட்டா…

மனம் புழுங்கிப் போக-ஆத்தாம

சாமிக்கி வெளக்கயுந்தான் யேத்திப்புட்டா!

யேங்குறேன் …ஓடியாவேன்…! ஓடியாவேன்…!

உறங்கிப் போயி உக்காந்தவ

கொலையொன்னு விழுந்த போல

வெளிய தலை தெறிக்க ஓடியாந்தா!

விருமன் கைல இருந்த

வேட்டியெல்லாம் ரெத்தம் வழிய

முகம் சோந்து நின்னிருந்தான்

அடியாத்தி! யென்னதான் உன்

வேட்டியெல்லாம் ரெத்தக் கறை?

சிங்கமுந் தான் சீண்டிடுச்சோ-இல்லை

புலியுந்தான் பிராண்டிடுச்சோ?

நொடியில அவ தன் உசுரத்தான் விட்டுப்புட்டா.

உடும் பொன்னும் ஆப்புடல

போன எடம் எதுவும் சரிப் படல

அலஞ்சு திரிஞ்சு பாத்துப்புட்டு

வெறுங் கையோட திரும்பி வந்தேன்

சுருக்குனு பொழுதுந்தான் இருட்டயில

அந்தக் கார ஓடை ஓரத்துல-அழகா

கெண்டை ரெண்டு மின்னுனுச்சி

நெருங்கி வேட்டி யவுத்து வீசயில

பெருசா விலாங் கொன்னு மாட்டிக்கிச்சு!

அந்த விலாங்கப் போயி அமுக்கயிலே

அங்கிட்டு வாழயோன்னு பெரண்டு போச்சு

அடி மனுச ஆசயிந்தா அடங்குமா?

அந்த வாழயோட மல்லுக்கட்ட

அங்குன கெழுத்தி யொன்னு குத்திப் புடிச்சி!

“இந்தா ராவுக்கு இத வச்சுப்புடுன்னு” நீட்டினான் விருமன்

போன உசுரு வந்துட்டதா

அவ பெருமூச்ச விட்டுப்புட்டா…!

மீனத் தூக்கி தொலவாப் போட்டு

விருமண மனசார திட்டிப் புட்டா!

அத்தான அவ தன் மாரோட கட்டிக்கிட்டா…!

-அருண் காந்தி.

Series Navigationப்ளாட் துளசி – 1பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி