தேவ‌னும் சாத்தானும்

குருதி குடித்து
பசி போக்கும்
மானிட மந்தைக்கு
போதனை செய்ய
மனமிறங்கி
தூதனான் தேவன்.

மந்தைக்கு ஏற்ற
முகமூடி பொருத்தி
சாயத் தொட்டியில்
மூழ்கி எழுந்து
நிர்வாண‌ம்
தொலைத்த‌வ‌னென
வீதியில் உலா வ‌ந்தான்.

சிலவீதியில் இராமனாக
அடுத்தவீதியில் முல்லாவாக
மறுவீதியில் க‌ர்த்த‌னாக‌
இந்த‌வீதியில் புத்த‌னாக‌-
போதித்த‌ வார்த்தைக‌ளை
சாய‌ச்சாத்தான்
தின்று விழுங்குய‌து.

சாய‌த்தைத் துடைத்தெறிந்து
மலரொன்றை கையிலேந்தி
சிறுமி வேடம் தறித்து
தூத‌னாகப் புறப்பட்டான்
சாத்தானின் கோட்டைக்கு.

-சோமா

Series Navigationஆணவம்சொல்லாமல் போனது