நான்காம் வருடத்தில் கண்ணியல் ( Ophthalmology ) பயிலவேண்டும். இது ஒரு வருட பாடம். இதை மேரி டேபர் ஷெல் கண் மருத்துவமனையில் ( Mary Taber Schell Eye Hospital ) பயின்றோம். இது வேலூர் ஊரீஸ் கலைக் கல்லூரியின் பின்புறம் உள்ளது.
இந்த மருத்துவமனைதான் டாக்டர் ஐடா ஸ்கடர் தமது இளம் வயதில் உருவாக்கிய முதல் மருத்துவமனை. இது அவர் வாழ்ந்த எளிய வீட்டில் உருவாகியது. ஒரு படுக்கையடன் துவங்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் மருத்துவமனை. இது உருவானது 1900 வருடம். அமெரிக்காவில் மருத்துவப் படிப்பை முடித்த ஐடா தான் இந்தியா திரும்பி இந்தியப் பெண்களுக்கு தேவையான மருத்துவச் சேவை புரியப் போவதாக தமது ஆசையை வெளியிட்டார்.அதை கேள்விப்பட்ட ஓர் அமெரிக்கர் இளம் மருத்துவ பட்டதாரியான ஐடாவுக்கு 1000 அமெரிக்க டாலர் நன்கொடை தந்தார். அக்காலத்தில் அது மிகப் பெரிய தொகையாகும்! அதை வைத்து ஒரு படுக்கையை 40 படுக்கைகள் கொண்ட ஒரு சிறிய மருத்துவமனையாக மாற்றி அதற்கு நன்கொடை தந்த அந்த அமெரிக்கரின் மனைவியின் பெயரைச் சூட்டினார். அப்போது அது வேலூரில் பெண்கள் குழந்தைகளுக்கான மருத்துவமனையாக செயல்பட்டது. அதில் ஐடா பணியாற்றினார். அந்த 40 படுக்கைகள் கொண்ட முதல் மருத்துவமனைதான் இன்றைய சி. எம். சி. மருத்துவமனையின் முன்னோடி.இன்று சி.எம்.சி. மருத்துவமணையில் 2000 படுக்கைகள் உள்ளன. பல்வேறு நவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனை இன்று உலகப்புகழ் பெற்று விளங்குகிறது!
புதிய மருத்துவமனை வேலூர் நகரில் உருவானதும், இந்த பழைய மேரி டேபர் ஷெல் மருத்துவமனை கண் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இங்குதான் நாங்கள் கண்ணியல் பாடம் பயில்வோம்.
இங்கேயே வகுப்பறையும் உள்ளது. கண்ணியல் பாடத்தை சொல்லித் தந்தவர் டாக்டர் ராய் எபனேசர். தமிழர்.நடுத்தர வயதினர். தலையில் லேசான வழுக்கை. மிகவும் உற்சாகமானவர். இவரின் பாடங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளை பாடத்தின் நடுவே சொல்லி சிரிக்கவிப்பார். அதோடு பாடல்களும் பாடி மகிழவைப்பார்.
கண் ஓர் சிறிய உறுப்புதான். ஆனால் அதன் பயனோ இன்றியமையாதது. இந்த சிறிய கண்ணைப் பயில ஓர் ஆண்டுகள்!
கண்ணியலில் கண்ணின் உடற்கூறு , உடலியல் , கண்களில் உண்டாகும் நோய்களைப் பயிலவேண்டும்.
கண்ணியலுக்கு உலகின் முன்னோடியாகத் திகழ்ந்தது இந்தியாதான்! அறுவை மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் சுஸ்ருத்தா என்னும் அறுவை மருத்துவ நிபுணராவர். இவர் கி.மு. 800 ஆம் ஆண்டில் சுஷ்ருத்தா சம்ஹிதா என்னும் அறுவை மருத்துவ நூலை சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார். அதில் கண் பற்றியும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் 76 வகையான கண் நோய்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் கண்களில் மட்டும் 51 விதமான அறுவை மருத்துவம் பற்றியும் சொல்லியுள்ளார். கண்ணில் அறுவைசெய்யும் விதங்களும், அதற்கு பயன்படுத்தும் கருவிகள் பற்றியும் கூறியுள்ளார். கண்ணில் புரைக்கு அறுவை மருத்துவம் செய்த முதல் மருத்துவரும் அவரே. ஒரு இந்தியர் இவ்வாறு மருத்துவ உலகில் பெயர் பெற்றிருப்பது போற்றத்தக்கது.
பார்வையை இழந்துபோனால் உலகம் இருண்டுவிடும்! கண்ணியலில் கண்ணில் உண்டாகக்கூடிய நோய்கள், வயது காரணமாக உண்டாகும் இயற்கையான மாற்றங்கள் முதலியவற்றைப் பயில்வோம். வயது காரணமாக வருவது கண்ணில் உண்டாகும் புரை. இதனால் ஏராளமான வயதானவர்கள் பார்வை இழந்து போகின்றனர். ஒரு காலத்தில் வயதான காரணத்தால் பார்வை போய்விட்டது என்று வீட்டில் சுணங்கிக் கிடந்தவர்கள் ஏராளமாக இருந்தனர். அவர்களுக்கு அறுவை வைத்தியம் செய்து பார்வையை மீட்டுத்தர யாரும் முன்வரவில்லை. இப்போதெல்லாம் கண் புரையை எளிதில் அறுவை மருத்துவம் மூலமாக சரி செய்து பார்வையை மீட்டு தரமுடிகிறது. அரசும் தன்னார்வ நிறுவனங்களும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்கான வயதானவர்களுக்கு பார்வையை மீட்டுத் தந்துள்ளன.
நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பெருகிவரும் இக் கால கட்டத்தில் அவை கண்களைப் பாதித்து பார்வை இழக்கச் செய்கின்றன. இதற்கான விழிப்புணர்வையும், தடுப்பு முறைகளையும், சிகிச்சை முறைகளையும் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
கண்களில் உண்டாகும் நோய்கள்,உடலில் உண்டாகும் இதர நோய்களால் கண்களில் உண்டாகும் பாதிப்புகள் தவிர, கண்களில் பார்வை குறைவு பற்றியும் பயின்று அதை கண்ணாடி அணிந்து திருத்தும் முறையையும் பயில்வோம்.
கண் பரிசோதனையில் மிகவும் முக்கியமான ஒரு கருவி பயன்படுத்துவோம். அது ” ஆப்தால்மோஸ்கோப் ” ( Ophthalmoscope ) அல்லது கண்ணோக்கி என்பது. இதைப் பயன்படுத்தி கண்ணின் உள்ளே விழித்திரையைக் காணலாம். அதில் இரத்தவோட்டம், இரத்தக் கசிவு போன்றவற்றைக் காணலாம். இத்தகைய மாற்றங்கள் நீரிழிவு நோயிலும், உயர் இரத்த அழுத்தத்திலும், பக்க வாதத்திலும் உண்டாகும்.
கண்ணியல் பாடம் எளிமையாகவும், எளிதில் புரிந்து கொள்வதாகவும், படிப்பதற்கு சுவையானதாகவும் இருந்தது. அதிலும் டாக்டர் ராய் எபனேசர் நடத்தும் வகுப்புகள் கலகலப்பாகவே இருந்தன.
வகுப்பில் பாடங்கள் ஒரு மணி நேரம் நடக்கும். டாக்டர் ராய் ஒவ்வொரு நோயாக பாடங்கள் எடுப்பார். நான் குறிப்பு எடுத்துக்கொள்வேன்.படங்கள் வரைந்து கொள்வேன். பாடம் முடிந்ததும் நாங்கள் பேருந்து ஏறி மருத்துவமனை செல்வோம். அங்கு மதிய உணவு அருந்திவிட்டு இரண்டு மணிக்கு வேறு பாட வகுப்புகளுக்கும் வார்டுகளுக்கும் செல்வோம். மாலை ஐந்து மணிக்கு கல்லூரி பேருந்து மூலம் விடுதி திரும்புவோம்.
இப்போதெல்லாம் என் அறையில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்கும். குளித்து உடை மாற்றியபின் சம்ருதியும் நானும் ஆரணி ரோட்டில் நடந்து சென்று இருட்டுவதற்குள் திரும்புவோம். இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குச் செல்வோம்.
நான் அன்று நடந்த பாடங்களை ஒருமுறை புரட்டிப்பார்ப்பேன்.