தொடுவானம் 189. திருமணம்

This entry is part 8 of 10 in the series 1 அக்டோபர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

1
31. 8. 1973. என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் என் திருமணம் நடந்தது. அது ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் எளிமையாகவே நடந்தேறியது. நான் பிறந்து சிறு வயதில் வளர்ந்த தெம்மூர் கிராமத்தில் அற்புதநாதர் ஆலயத்தில் திருமணம் நடந்தது. கிராமச் சூழலுக்கேற்ப எங்கள் வீட்டுமுன் போடப்பட்டிருந்த பந்தலில்தான் வரவேற்பும் நடந்தது. ஒரு டாக்டருக்கும் மலேசிய மணப்பெண்ணுக்கும் நடக்கும் ஒரு திருமணத்துக்கான ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் எளிமையான முறையிலேயே எங்களில் திருமணம் நடந்தேறியது.
திருமணத்தின் முதல் நாள் அண்ணன, அண்ணி, மணப்பெண், நான் ஆகியோர் வாடகை ஊர்தியில் சிதம்பரம் வந்துவிட்டோம். அங்கு ‘ கல்யாணம் ‘ தங்கும் விடுதியில் இரண்டு அறைகள் எடுத்துக்கொண்டோம். மாலைகள், பூக்கள், பழங்கள், பன்னீர், வெற்றிலைப் பாக்கு, தேவையான இதர சாமான்கள் வாங்கினோம். .
தெம்மூரிலிருந்து பால்பிள்ளையும், வந்திருந்து மாலையில் நாங்கள் வரும் நேரத்தைக் கேட்டுக்கொண்டு திரும்பினான். எங்களை தவர்த்தாம்பட்டிலிருந்து தெம்மூர் வரை நாதஸ்வரம், மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்ல திட்டமாம். அந்த ஊர்வலம் மெய்யாத்தூர் கிராமம் வழியாக தெம்மூர் சென்றடையும். கிராம மக்கள் அனைவரும் காண்பார்கள். இதற்கு பெண் அழைப்பு என்று பெயராம். மணப்பெண்ணை முறைப்படி மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து வரும் முறையாம். அன்று இரவே ஊர் மக்கள் மணப்பெண்ணை பார்த்துவிடுவார்கள்.
மணப்பெண் பட்டு சேலை கட்டுவது, கொண்டை போடுவது, போன்றவற்றுக்கு அண்ணிதான் உதவினார். மலேசியாவிலிருந்து கொண்டுவந்த நகைகளை அணிந்துகொண்டாள். அப்போதெல்லாம் ” பிரைடல் ” என்னும் அலங்காரம் செய்வது வழக்கில் இல்லை.
பெண் அலங்காரம் தயார் ஆனதும் சாமான்களை வாகனத்தில் ஏற்றினோம். அறைகளைக் காலி செய்துவிட்டுப் புறப்பட்டோம். அரை மணி நேரத்தில் தவர்த்தாம்பட்டு சேர்ந்துவிட்டோம்.
அங்கு பேருந்துக்காக பலர் காத்திருந்தனர். நாதஸ்வர ஓசை அந்த அந்தி வேளையில் ரீங்காரமிட்டது கூடவே மேளதாளமும் சேர்ந்துகொண்டு இனிய இசையைப் பரப்பியது. நாலைந்து பேர்கள் தலையில் ” பெட்ரோமாக்ஸ் ” விளக்குகளை தூக்கிக்கொண்டு படரும் இருளில் ஒளி தந்தனர். மேளதாள வாத்தியக் கலைஞர்கள் அவ்வாறு இன்னிசை வழங்கியவண்ணம் மெல்ல வாகனத்தின் முன்பு நடந்து சென்றனர். வாகனம் மெதுவாகப் பின்தொடர்ந்து. மெய்யாத்தூர் கிராம மக்கள் வீதியின் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்தனர். நாங்கள் கார் ஜன்னலைத் திறந்து வைத்திருந்தோம்.
இராஜன் வாய்க்கால் தாண்டி தெம்மூருக்குள் நுழைந்தபோது ஊர் மக்கள் காரைப் பின்தொடர்ந்து வந்தனர்.அற்புதநாதர் ஆலயத்தின் முன்பு சிறிது நேரம் நின்று கிறிஸ்துவப் பாடல் ஒன்றையும் இசைத்தனர். நான் கண்களை மூடி பிரார்த்தித்தேன். இந்தத் திருமணத்தை ஆசிர்வதிக்கும்படி ஆண்டவரிடம் வேண்டினேன். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது உண்மையெனில் இந்தத் திருமணத்தையும் கடவுள்தான் நிச்சயத்தார் என்று நம்பினேன். இந்தப் பெண்ணை கடவுள்தான் எனக்குத் தந்துள்ளார் என்றும் அப்போது எண்ணி அவருக்கு நன்றி சொன்னேன்.
வீட்டை அடைந்தபோது ஊர் மக்கள் அனைவரும் பந்தலில் கூடியிருந்தனர். .அனைவரும் புதுப் பெண்ணைப் பார்த்து மகிழ்ந்தனர். இராஜக்கிளி ஆரத்தி எடுத்தார்.நாங்கள் அருந்த பசும்பால் தந்தார்கள். அம்மாவுக்கு மிகுந்த ஆனந்தம். அப்பா மிகவும் பெருமை பட்டார். தங்கைகள் கலைமகளும் கலைசுந்தரியும் பெண் அருகிலேயே இருந்தனர். தாம்பரத்திலிருந்து அத்தை வீட்டார் வந்திருந்தனர். அத்தை மகள் நேசமணி அவளுடைய கணவருடன் வந்திருந்தாள். உற்றார் உறவினர் நள்ளிரவு வரை எங்களுடன் இருந்தனர். அவர்களில் சாமிப்பிள்ளை தாத்தா தன்னுடைய தம்பி மகளான மணப்பெண்ணை பார்த்து பார்த்து மகிழ்ந்தார். அவளின் இன்னொரு பெரியப்பாவான தாவீது தாத்தாவின் மகள் ஜெயாவும் மணப்பெண்ணுடன் பேசி மகிழ்ந்தாள். அவளுடைய முகம் கூட மணப்பெண்ணை ஒத்திருந்தது.
அன்று இரவு ஓய்வெடுத்தபின்பு விடியலில் எழுந்து ஆலயம் செல்ல தயார் ஆனோம். பெண் கல்யாணப் பட்டு சேலையில் அழகாக இருந்தாள். நான் ” சூட் ” அணிந்த்துகொண்டேன். நாங்கள் இருவரும் காரில் ஆலயம் சென்றோம்.
காலை ஒன்பது மணிக்கு திருமண ஆராதனை தொடங்கியது. ஆலயம் நிறைய மக்கள் .அமர்ந்திருந்தனர். இடம் இல்லாதவர்கள் வெளியில் பந்தலில் அமர்ந்திருந்தனர். ஆலயம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பீடத்தில் சிலுவை முன்பு இரண்டு பெரிய மெழுகுவர்த்திகள் எரிந்தன. நாங்கள் இருவரும் பீடத்தின் எதிரே அமர்ந்தோம். எங்கள் இருவரின் கழுத்தில் மாலைகள் அணிந்திருந்தோம். அண்ணியின் தம்பி தாஸ் மாப்பிள்ளைத் தோழன். அவர் என் அருகில் அமர்ந்தார். அவருடைய மனைவியும் பெரியப்பாவின் மகளுமான லில்லி பெண் தோழி. அவர் மணப்பெண்ணின் அருகில் அமர்ந்துகொண்டார்.
இஸ்ரவேல் உபதேசியார் ஆராதனையை வழிநடத்தினார். ஜெபத்துடன் தொடங்கிய ஆராதனையில் பாமாலைகளும் கீர்த்தனைகளும் பாடினோம். சபைகுரு துரைராஜ் திருமண வைபத்துக்கான பகுதிகளை வேதாகமத்திலிருந்து வாசித்தபின்பு அருளுரை ஆற்றினார். அதன்பின்பு நான் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தேன். ஆசிர்வாதத்துடன் விவாகம் நடந்தேறியது. ஆராதனை முடிந்ததும் அங்கேயே புகைப்படம் எடுத்துக்கொண்டோம். சிதம்பரம் வேலு ஸ்டூடியோவிலிருந்து புகைப்படம் எடுப்பவர் வந்திருந்தார்.வேறு யாரிடமும் புகைப்படக் கருவி இல்லை. வந்திருந்தவர்கள் கைகுலுக்கி வாழ்த்தினர். ஆலய நுழைவாயிலில் இனிப்பு வழங்கப்பட்டது. திருமண ஆராதனை ஒரு மணி நேரத்தில் முடிந்தது.
ஆலயத்திலிருந்து வெளியேறியதும் நாங்கள் இருவரும் காரில் அமந்துகொண்டோம். மேளதாள நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக வீடு புறப்பட்டோம். அப்போது ஊர் மக்கள் அங்கு கூடிவிட்டனர். அப்பா எங்களை காரிலிருந்து இறங்கி நடக்கச் சொன்னார். ஊர் மக்கள் நன்றாகக் பார்க்கவேண்டும் என்றார். நாங்கள் இறங்கி நடந்தோம். அப்போது பெண்ணின் தாயார் கிரேஸ் கமலாவுக்கும் அப்பா சாமுவேலுவுக்கும் இதே போன்று தெம்மூரில் திருமணம் நடந்து அவர்களும் இப்படி ஊர்வலம் சென்றது என் நினைவுக்கு வந்தது. அப்போது நான் சிறுவனாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அவர்கள் பின்னால் ஓடியவன்.
ஆலயத்திலிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்று வலது பக்கம் திரும்பினால் வீடு. பந்தலில் கூட்டம் அதிகம்.
வீட்டினுள் நுழைந்து சற்று இளைப்பாறினோம். வரவேற்பு விழாவுக்குத் தயாரானோம். நான் தோட்டம் வரை சென்றுவந்தேன். அங்கு நான்கு சமையல்காரர்கள் சமையலில் ஈடுபட்டிருந்தனர். விடியலிலேயே ஆடுகள் வெட்டப்பட்டிருந்தன.
.பாராளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் காரில் வந்திறங்கினார். பந்தலில் அமைத்திருந்த மேடையில் அவரை அழைத்துச்சென்று அமரவைத்தனர். வாழ்த்துரை வழங்கவுள்ள அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை, மறைத்திரு தேவராஜ் ஆகியோரும் வந்துவிட்டனர். அண்ணன் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதில் மும்முரமாக இருந்தார்.
நாங்கள் இருவரும் மேடையில் அமர்ந்தோம். வாழ்த்துரை வழங்குவோரும் மேடையில் அமர்ந்துகொண்டனர். மற்றவர்கள் பந்தலில் போடப்பட்டிருந்த நீளமான பாய்களில் அமர்ந்துகொண்டனர்.
மறைத்திரு துரைராஜ் ஜெபம் செய்தார், அண்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பாராளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் தலைமை தாங்கி எங்களை வாழ்த்தினார். அவர் பேசும்போது தெம்மூர் கிராமத்தில் ஒரு டாக்டர் உருவாகியுள்ளதால் அது தெம்மூருக்குப் பெருமை என்றார். அதோடு என்னுடைய மருத்துவக் கல்வி ஏழை எளிய கிராம மக்களுக்கு பயனுள்ளதாக அமையவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை அண்ணனுடனான நீண்ட நட்பு பற்றி கூறி என்னுடைய சேவை திருச்சபைக்குத் தேவை என்றார். மற்றவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். அதன்பின்பு அன்பளிப்பு தருபவர்கள் எங்களிடம் வந்து பரிசுப் பொருட்களைத் தந்தனர். பந்தலின் ஒருபுறத்தில் சிலர் மொய் எழுதினர். அதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொண்டனர். பின் நாளில் அவர்கள் வீட்டு வைபவங்களின்போது அவர்களுக்கு திருப்பி செய்யவேண்டும். அதற்காக அந்த நோட்டுப் புத்தகத்தை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். சுமார் ஒரு மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி முடியும் தருவாயில் தோட்டத்திலிருந்து வீசிய வேப்பமரத்துத் தென்றலில் அங்கு கொதித்திருக்கொண்டிருந்த ஆட்டுக்கறிக் குழம்பின் மணத்தைக் கொண்டுவந்தது.
திருமண விருந்து பந்தலில் விரித்திருந்த பாயில் வாழை இலையில் பரிமாறப்பட்டது. ஆட்டுக் கறி, வடை பாயாசத்துடன் விருந்து சுவையாக இருந்தது. அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். வெற்றிலைப் பாக்கு சுண்ணாம்பும் வைக்கப்பட்டிருந்தன. திருப்தியுடன் திருமண விருந்தில் பங்குகொண்ட உறவினர்களும், ஊர் மக்களும் கலைந்து சென்றனர். திண்ணையில் வைக்கப்பட்டிருந்த ” கிராமபோனில் ” இருந்து இசைத்தட்டுப் பாடல்கள் ஊரெங்கும் கேட்கும்வண்ணமாக உரக்க ஒலித்தன. எங்களுடைய திருமணம் மிகவும் எளிய முறையில் கிராமச் சூழலுக்கு ஏற்ற வகையில் சிறப்பாகவே நடந்தேறியது.
பக்கத்துக்கு ஊர்களிலிருந்து வந்திருந்த உறவினர்கள் ஊர் திரும்பினர். தொலைவிலிருந்து வந்திருந்த அத்தை , அண்ணி குடும்பத்தினர் இரவு தங்கினர். அன்று இரவும் அவர்களுக்கு விருந்து ஏற்பாடாகியிருந்தது.
பால்பிள்ளையும் நானும் மாலையில் வயல்வெளிக்குச் சென்று வந்தோம். அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவன் செலவுக்கு பணம் தந்தேன். அப்போது அத்தை மகன் பாஸ்கரனும் எங்களுடன் சேர்ந்து கொண்டான்.அவன் தாம்பரத்திலிருந்து வந்திருந்தான். இரவு விருந்துக்குப்பின்பு நாங்கள் மூவரும் தோட்டத்தில் அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
வீட்டில்தான் முதல் இரவு. எங்களுக்கு. வீட்டின் வலது பக்க அறைதான் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் தரையில் மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் பக்கத்துக்கு நடு அறையில் அண்ணணும் அண்ணியும் படுத்திருந்தனர். நான் படுக்க வந்தபோது நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவள் உறங்கிவிட்டாள் . இரண்டு அறைக்கும் நடுவில்தான் பாலும் பழமும் வைத்திருந்தனர். நான் அவளை எழுப்பாமல் அருகில் படுத்தேன். அவளவுதான். நன்றாக உறங்கிவிட்டேன்! அவ்வளவு களைப்பு!
காலையில் விடிந்ததும் அண்ணி என்னிடம் , ” உனக்கு என்ன அப்படி தூக்கம்? உங்களுக்கு வைத்திருந்த பாலையும் பழத்தையும் அண்ணனும் நானும் முடித்துவிட்டோம். ” என்று சொல்லி சிரித்தார்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationநெய்தல்மஹால்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *