தொடுவானம் 192. திருப்பத்தூர்

This entry is part 4 of 5 in the series 22 அக்டோபர் 2017
Swedish Mission Hospital
(சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை)
          மகப்பேறும் மகளிர் இயல் நோயும் பிரிவில் நான் சேர்ந்துவிட்டேன். அங்கு வெளிநோயாளிப் பிரிவு, பிரசவ அஅறை, அறுவை மருத்துவக் கூடம், வார்டு என்று மாறி மாறி சென்றுகொண்டிருந்தேன். பிரசவ அறையில் இருந்தபோதெல்லாம் மேரியின் நினைவு வரும். அதை கலைந்துபோன கனவாக எண்ணி மறக்க முயன்றேன்.
          பிரசவ அறையில் பயிற்சி மருத்துவர்கள் பிரசவத்துக்காக ஏற்பாடுகளை செய்துவிட்டு என்னை அழைப்பார்கள். நான் அங்கு சென்று அங்கு படுத்திருக்கும் பெண்களின் பிறப்புறுப்பில் விரல்கள் விட்டு கருப்பைக் கழுத்து எவ்வளவு அகலம் விரிந்துள்ளது என்பதை மட்டும் நிர்ணயம் செய்து குறித்துவிட்டு செல்வதுதான் என்னுடைய வேலை. இதை இரவு பகலாக எந்த நேரத்திலும் செய்யவேண்டிவரும். அறுவை மருத்துவக் கூடத்தில் சிசேரியன் அறுவையின்போது உதவ வேண்டும். கருப்பை சினைப்பை அகற்றும் அறுவை மருத்துவத்தின் போதும் உதவுவேன். கருத்தடை அறுவையை நானே செய்வேன். வார்டுகளில் வழக்கம்போல் உள்நோயாளிகளைப் பார்ப்பேன். வெளிநோயாளிகள் பிரிவிலும் கருவுற்ற பெண்களையும், மகளிர் இயல் நோயாளிகளையும் கண்டு சிகிச்சை தருவேன். இதுபோன்று பணி சுமுகமாகச் சென்றது.
          அவள் பெரும்பாலான நேரங்களில் அறையிலேயே தஞ்சம் கொண்டாள். பெஞ்சமின் தன்னுடைய பயிற்சியில் இரவு பகலாக மும்முரமானான். அவ்வாறு வாழ நாங்கள் மூவரும் பழகிக்கொண்டோம். ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் சி.எஸ்.ஐ. ஆலய தமிழ் ஆராதனைக்குச் சென்று வருவோம். அது பெரிய சபையாகும். ஆலய இருக்கைகள் நிறைந்துவிடும். அப்போது எஸ்தர் குடுமபத்தினரைக் காண்போம். சில வேளைகளில் அவர்களுடைய வீடு சென்றும் திரும்புவோம். அதுபோன்று மூன்று மாதங்கள் கழிந்தன. கிடைத்த சொற்ப சம்பளத்தில் சமாளித்துக்கொண்டோம். தேவையற்ற ஆடம்பரத்தைத் தவிர்த்தித்தோம். வெளியில் சேலை பேருந்தையே பயன்படுத்தினோம். வார இறுதியில் மட்டுமே வெளியில் சாப்பிடச் செல்வோம்.
          ஒரு நாள் திருச்சியிலிரிருந்து ஒரு கடிதம் வந்தது. அதை டாக்டர் பிச்சை ராபர்ட் எழுதியிருந்தார். தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையைச் சேர்ந்த சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் என்னை சேரும்படி எழுதியிருந்தார். அது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் உள்ளது. எனக்கு மாதச் சம்பளம் 4500 .ரூபாய் சம்பளம்! இது அப்போது பெரிய தொகையாகும். தற்போது இங்கே நான் 1500 ரூபாய்தான் பெற்றேன். இங்கேயே தொடர்ந்து இருந்தால் அடுத்த வருடம் நிபுணத்துவம் பயிலும் வாய்ப்புள்ளது. ஆனால் குறைந்த சம்பளத்தில் சமாளிக்கவேண்டியுள்ளது. முதலில் அங்கு சென்று பணியில் சேர்ந்துகொண்டு இரண்டு வருடங்கள் கழித்து நிபுணத்துவம் பற்றி யோசிக்கலாம். நானும் திருச்சபையில் பணியாற்ற சம்மதம் தெரிவித்த இரண்டு வருட சேவையை செய்து முடிக்கவில்லை. அதற்கான தருணம் இது.நான் பெஞ்சமனிடம் இது பற்றி கூறினேன்.அவனும் அதுதான் நல்லது என்றான்.
           நான் கடிதத்துடன் டாக்டர் ஜோசப் அறைக்குச் சென்றேன். கடிதத்தைப் படித்த அவரும் சம்மதம் தந்தார். திருச்சபையின் சேவையை பூர்த்தி செய்யுமாறு கூறினார். நிபுணத்துவம் அதன்பின்பு செய்யலாம் என்றார்.
          நாங்கள் இருவரும் அறையை காலிசெய்துவிட்டு சிதம்பரம் புறப்பட்டோம். ரேணிகுண்டா துரித பயணியர் தொடர் வண்டியில்தான் பிரயாணம் செய்தோம். திருப்பத்தூரில் சேர்வதற்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. அதுவரை தெம்முயிரிலேயே இருக்க முடிவு செய்தேன். அண்ணனுக்கு கடிதம் எழுதினேன். வழக்கம்போல் பால்பிள்ளையுடன் ஆற்றில் தூண்டில் போடுவதில் கழித்தேன்.
          திருப்பத்தூருக்கு நான் சென்றதில்லை. நான் மட்டும் முதலில் சென்று வேளையில் சேர்த்துவிட்டு பின்பு வார இறுதியில் தெம்மூர் வந்து அவளை அழைத்துச் செல்லத் தீர்மானித்தேன்.
          என்னுடைய பேட்டி படுக்கையுடன் திருவள்ளுவர் மதுரை செல்லும் பேருந்தில் புறப்பட்டேன். சீர்காழி, மயிலாடுதுறை, ,கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை வழியாக திருப்பத்தூர் சென்றடையும்.. சுமார் ஆறு மனை நேர நீண்ட பிரயாணம்.
          நான் திருப்பத்தூர் அடைந்தபோது மாலையாகிவிட்டது.அது சிறிய பேருந்து நிலையம். மதுரை,காரைக்குடி, தேவகோட்டை, ஆகிய சில ஊர்களுக்கு பேருந்துகள்  நின்றன. சில பழக்கடைகளும்,பூ கடைகளும், ஓர் உணவகமும் இருந்தன. நான் அங்கு சென்று இரவு உணவை முடித்துக்கொண்டேன். பேருந்துக்கு வெளியில் வரிசையாக ஆட்டோ ரிக்ஷாக்கள் நின்றன. எதிரில் காவல் நிலையம் இருந்தது.
          நான் ஒரு ஆட்டோ மூலம் மருத்துவமனைக்குச் சென்றேன். அது மதுரை ரோட்டில் கொஞ்ச தூரம் சென்றபின்பு அண்ணா சிலை வந்ததும் வலது பக்கம் திரும்பி சென்றது. சற்று தொலைவில் ஒரு நுழைவாயிலை அடைந்தது. அதன் வெளியே ” சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை ” என்று பெரிய பெரியப்பலகை காணப்பட்டது. நுழைவாயிலில் ஒரு காவலர் நின்று விசாரித்தார். நான் புதிதாக வேலைக்கு வந்துள்ள மருத்துவர் என்று .சொன்னேன். அவர் நேராகச் சென்றால் பெரிய டாக்டரின் பங்களா அடையலாம் என்று வழி காட்டினார். ஆட்டோ நேராகச் சென்று ஒரு பெரிய பங்களாவின் வாசலில் நின்றது. ஒரு மாடி கொண்ட அந்த பங்களா உயரமாக காட்சி தந்தது. சற்று தொலைவில் இடது பக்கத்திலும் பின்பக்கத்திலும் அதுபோன்றே இன்னும் இரண்டு பங்களாக்கள் தென்பட்டன. நான் அதுவரை அவ்வளவு பெரிய பங்களாக்களைக் கண்டதில்லை. நிச்சயமாக இந்த மருத்துவமனை பணம் படைத்ததாகவே இருக்கவேண்டும்.
          பங்களா படிக்கட்டில் ஏறி அழைப்பு மணியை அழுத்தினேன்.கதவைத் திறந்துகொண்டு வாட்டசாட்டமான ஒருவர் நின்றார். கரு நிற உருவமாக இருந்தாலும் அவரிடம் ஓர் அழகு இருந்தது. வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். என்னைக் கண்டு புன்முறுவலுடன், ” நீங்கள் டாக்டர் ஜான்சன்? ” என்று கேட்டார் கை குலுக்கியபடி.
          ” ஆம். ” என்றேன்.
          ” நான் டாக்டர் செல்லையா. மெடிக்கல் சூப்பரின்டெண்டென் . உள்ளே வாங்க. ” தன்னை அறிமுகம் செய்துகொண்டு வரவேற்றார்.”
          ” நன்றி. ” என்றவாறு அவரைப் பின்தொடர்ந்தேன்.
          ”  சோபாவில் “அமர்ந்தேன்.
          அப்போது தங்க நிறத்தில் ஒரு பெண்மணி பக்கத்து அறையிலிருந்தது வந்தார்.
          ” காந்தாமணி. என் மனைவி.” அவரை அறிமுகம் செய்தார்.
          ” வணக்கம். உங்களை எனக்குத் தெரியுமே! ” நான் வியப்புடன் கூறினேன்.
          ” ஆம். ஜி.ஜான்சன் .” என்றார் மலர்ந்த முகத்துடன்.
          காந்தாமணி எனக்கு மருத்துவக் கல்லூரியில் இரண்டு வருடம் சீனியர்.
          காப்பி வேண்டுமா என்று காந்தாமணி கேட்டார். நான் வேண்டாம் என்றேன்.
          ” நீங்கள் நாளை சேர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு மணமாகிவிட்ட்தா? ” என்று கேட்டார் செல்லையா.
          ” ஆம். இப்போதுதான் ஒரு மாதம் ஆகிறது. இங்கு எனக்கு வீடு கிடைத்ததும் அவளைக் கூட்டி வருவேன். “
          ” உங்கள் வீடு இன்னும் ரெடி ஆகவில்லை. உங்களுக்கு டேவிட் ஜான் தெரியும்தானே.அவர் இரண்டொரு நாளில் மலேசிய செல்கிறார். அவர் சென்றதும் வீடு காலியாகிவிடும். அதுவரை நீங்கள் செல்லப்பாவுடன் தங்கலாம். ” என்றார். டேவிட் ஜான் எனக்கு சீனியர்.
          ” செல்லப்பாவும் இங்குதான் உள்ளாரா? ” நான் வியப்புடன் கேட்டேன். அவரையும் எனக்கு கல்லூரியில் நன்கு பழக்கம்.
          ” அவர் மனைவி ஆலீஸ் , பிரெடரிக் ஜான், இந்திரா ஜான் ஆகியோரும் இங்குதான் பணி புரிகிறார்கள். “
          ஆலிஸ் , பிரெடரிக் ஜான் இருவரும் வேலூரில் எனக்கு சீனியர். ஆக இந்த மருத்துவமனையில் வேலூர் மருத்துவ பட்டதாரிகள் ஐந்து பேர்கள் உள்ளனர். அவர்களுடன் ஆறாவதாக நான் வந்துள்ளேன்..இது சிறு வேலூர் குடும்பம்!
          செல்லப்பாவுக்கு போன் செய்தார். ” செல்லப்பா வந்துகொண்டிருக்கிறார். ” என்றவாறு அருகில் அமர்ந்துகொண்டார். அவர் ஒரு தலைமை மருத்துவ அதிகாரிக்கு உரிய கெளரவம் காட்டவில்லை. மிகவும் சர்வ சாதாரணமாக எளிமையுடன் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு இங்கு வேலை செய்வது நிச்சயமாக பிடித்துவிடும்!
          சிறிது நேரத்தில் செல்லப்பா வந்துவிட்டார். அவர் சிரித்த முகத்துடன் என் கையைப் பற்றிக் குலுக்கினார். திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். சிங்கப்பூர் சென்றாய என்றும் கேட்டார். அவர் வந்தபின்பு எங்களுடைய பேச்சு கலகல்ப்பானது.செல்லப்பா அன்பான சுபாவம் கொண்டவர். அவர் கல்லூரியில் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந்தவர். ஆலிஸ் அவருடைய வகுப்பு மாணவி. அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலுங்கு பெண். அழகாக இருப்பார். செல்லப்பா இராமநாதபுரம். அவருடைய ஆசிரியராக இருந்து தென்னிந்திய திருச்சபையில் பாதிரியார்.
          செல்லப்பா என்னை அழைத்துக்கொண்டு அவருடைய இல்லம் சென்றார். பங்களாவிலுந்து மண் பாதையில் எதிர்புறம் வந்த வழியாக இடதுபுறம் திரும்பினோம். அங்கு இன்னொரு மாடி வீடு தெரிந்தது. அங்கு ஆலிஸ் நின்றுகொண்டிருந்தார். என்னை கட்டி அணைத்து அவர் வரவேற்றார். அந்த வீட்டில் பெரிய ஹால் , ஒரு அறை கீழே இருந்தது. மாடியில் இரண்டு படுக்கை அறைகள் இருந்தன. அவற்றில் ஒன்றை எனக்கு தயார் செய்திருந்தனர். அதில் கட்டில், மேசை, நாற்காலி இருந்தன. இரவு உணவு உள்ளது என்றனர். நான் தோசை சாப்பிட்டுவிட்டேன் என்றேன். பூரி சாப்பிட அழைத்தனர். நான் அவர்களுடன் சேர்ந்துக்கண்டேன். பூரியும் உருளைக்கிழங்கும் சுவையாக இருந்தது. ஆலிஸ் நன்றாக உணவு தயாரிப்பார் என்பதை தெரிந்துகொண்டேன்,
          இரவு படுக்க செல்லும் வரை கல்லூரி வாழக்கை அதன்பின்பு நடந்தவை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு பிரயாணக் களைப்பு. காலையில் உற்சாகத்துடன் வேலைக்குப் புறப்படுவேன். படுத்ததுதான் தெரியும். அயர்ந்து உறங்கிவிட்டேன்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationகண்டேன் ஒரு புதுமுகம்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை நெருங்கும் போது, சுழலும் வால்மீன் சுழற்சி விரைவாய்த் தளர்கிறது !
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *