தொடுவானம் 201. நல்ல செய்தி

This entry is part 7 of 10 in the series 24 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

201. நல்ல செய்தி

நாடகத்தை எழுதி, அதை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்தபின்பு மருத்துவமனை ஊழியர்களிடையே எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதிலும் தாதியர் பயிற்சி மாணவியர்கள் என்னை ஒரு கதாநாயகனாகவே பார்க்கலாயினர்.
பால்ராஜ் , கிறிஸ்டோபர் ஆகியோருடன் சேர்ந்தபின்பு நான் மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்களின் மீது இரக்கமும் அன்பும் கொண்டு பழகலானேன். ஒரு மருத்துவர் அவர்களின்மேல் பரிவுடன் இருப்பது அவர்களுக்கு உற்சாகத்தையே தந்தது. அவர்களில் சிலர் தங்களுக்கு உள்ள குறைகளை என்னிடம் சொல்லத் தொடங்கினர். நான் அவற்றை காலையில் டாக்டர்கள் ஒன்றுகூடும் நேரத்தில் எடுத்துச் சொல்லி பரிகாரம் காண முயல்வேன். அவ்வாறு காலப்போக்கில் கடைநிலை ஊழியர்களின் குரலாக நான் செயல்படலானேன். அது எனக்கு பிடித்திருந்தது. எனக்கு பக்கபலமாக அப்போது பால்ராஜும் கிறிஸ்டோபரும் விளங்கினார்கள்.
வேலை நேரம் போக மாலயில் பால்ராஜும் கிறிஸ்டோபரும் என்னைத் தேடி வந்துவிடுவார்கள். வீட்டில் தேநீர் அருந்திவிட்டு நாங்கள் மூவரும் சமாதானபுரம் வழியாக காடு நிறைந்த ஒரு மேட்டுக்குச் சென்று அங்குள்ள பாறைகள் மீது அமர்ந்து குளிர் தென்றல் வீசும் சூழலில் திருச்சபை பற்றியும் மருத்துவமனை பற்றியும் இருட்டும் வரை பேசிக்கொண்டிருப்போம். இந்த இரண்டு நிறுவனங்களிலும் நிறைய மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்தோம். அனால் அப்போது ஏதும் செய்ய இயலாத நிலையில்தான் இருந்தோம். மாற்றங்கள் கொண்டுவர நாங்கள் திருச்சபை அரசியலில் குதித்தாக வேண்டும். அதற்கு நிறைய நேரமும் பொருளாதாரமும் தேவைப்படும். அவை இரண்டுமே எங்களிடம் அப்போது இல்லை.
டாக்டர் செல்லையாவின் தலைமையில் மருத்துவமனை நிர்வாகம் எவ்விதமான குறைபாடும் இல்லாமல் சிறப்புடன் இயங்கியது. ஏழை எளியோருக்கு இலவச சிகிச்சைக்கென சுவீடன் தேசத்திலிருந்தும், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்த ஜெர்மனி நாட்டிலிருந்தும் தங்கு தடையின்றி நிதி வந்துகொண்டிருந்தது.
தொழுநோயாளிகளுக்கு மத்திய அரசும் சுவீடன் திருச்சபையும் அனுப்பும் நிதியால் சிறப்பான சேவை தொடர்ந்தது. அதில் குறிப்பாக கைகள் முடங்கிய அங்ககீனம் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக விரல்களை நீட்டி மடக்கும் சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் ( Reconstructive Surgery ) செய்யப்பட்டன. இதை டாக்டர் செல்லையா செய்தார்.இதற்கான சிறப்புப் பயிற்சியை அவர் பெற்றிருந்தார். நான் தொடர்ந்து தொழுநோய் வெளிநோயாளிகள் பிரிவிலும் தொழுநோய் வார்டிலும் பணியாற்றினேன். மருத்துவ வார்டுகளையும் வெளிநோயாளிப் பிரிவையும் டாக்டர் மூர்த்தியும் நானும் பார்த்துக்கொண்டோம். டாக்டர் மூர்த்தி சோழவந்தானிலிருந்து வந்த ஓர் பிராமணர். பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் மாதிரி இருப்பார். நல்ல நிறம். எப்போதும் டை அணிந்து அழகாக உடை அணிந்திருப்பார். ஆங்கிலத்தில்தான் என்னிடம் பேசுவார். வார்டு ரவுண்ட்ஸ் நேரத்தில் மருத்துவம் பற்றி நிறைய தெரிந்துள்ளதுபோல் பேசுவார். நோயாளிகளிடம் அன்பாகவே பழகினார். நாங்கள் இருவரும் சேர்ந்து மருத்துவப் பிரிவை திறம்படவே நடத்தினோம். வெளிநோயாளிகள் பிரிவில் எங்களிடம் சிகிச்சை பெற ஏராளமானவர்கள் வந்துகொண்டிருந்தனர்.
திருப்பத்தூர் வந்த சில மாதங்களில் என் மனைவி வாந்தி எடுக்கலானாள். பரிசோதனை செய்து பார்த்தோம். அவள் கரு தரித்திருப்பது தெரிந்தது. எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி! டாக்டர்களும் ஊழியர்களும் எங்களை வாழ்த்தினர். நான் அப்பாவுக்கும் அவளுடைய பெற்றோருக்கும் அதைத் தெரிவித்து கடிதம் எழுதினேன். நாங்கள் ஒரு வார இறுதியில் தெம்மூர் செல்ல திட்டமிட்டோம்.
மலேசியாவிலிருந்து கடிதம் வந்தது. அதில் அவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தனர். அத்துடன் பிரசவத்தை மலேசியாவிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். அவள் மலேசியப் பிரஜை என்பதால் குழந்தையும் அங்கேயே பிறந்தால் மலேசியப் பிரஜையாக ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தனர். இந்தியாவில் பிறந்தால் இந்தியப் பிரஜையாக ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது. எனக்கும் அது சரி எனப்பட்டது. ஆனால் அவளை திரும்ப மலேசியாவுக்கு அனுப்புவது கவலையையும் உண்டுபண்ணியது. நாங்கள் இருவரும் இப்போதுதான் சில மாதங்களாக தனி வீட்டில் குடும்பம் நடத்துகிறோம். அவள் சென்றபின் வீடு வெறிச்சோடிபோகும்!
திருப்பத்தூரில் வேலு ஸ்டூடியோ உள்ளது. அங்கு வெளிநாடு செல்பவர்களுக்கு விமான பிரயாணச் சீட்டு விற்பனை செய்தனர். நான் அங்கு சென்று விசாரித்தேன். ஏழு மாதம் வரை கருவுற்றவர் பிரயாணம் செய்யலாம் என்றார். டிக்கட் வேண்டுமா என்று கேட்டார். நான் டிக்கட் மலேசியாவிலிருந்து வரும் என்றேன். அது வந்தபின்பு கொண்டுவரச் சொன்னார்.
அந்த ஏழாம் மாதமும் நெருங்கிவிட்டது. பிரயாண ஏற்பாடுகள் துரிதமாயின. மலேசியாவிலிருந்து ஏர் இந்தியா விமான டிக்கட் .வந்துவிட்டது.அதை திருப்பத்தூரிலேயே வேலு ஸ்டூடியோவில் தந்து பிரயாண தேதியை நிச்சயம் செய்துகொண்டேன்.ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு தெம்மூர் புறப்பட்டோம். டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸும் எங்களை வழியனுப்பி வைத்தனர்.பால்ராஜும் கிறிஸ்டோபரும் பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பினார்கள்.
ஊரில் அனைவரும் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.அண்ணனும் அண்ணியும் தரங்கம்பாடியிலிருந்து வந்திருந்தனர். வீட்டில் அன்றாடம் தடபுடலாக விருந்துதான். ஞாயிறுக்கிழமை ஆலய ஆராதனையில் பங்குகொண்டோம். அன்று மாலை தொடர்வண்டி மூலம் தாம்பரம் புறப்பட்டோம்.
அத்தை வீட்டில் மறுநாள் பகல் முழுதும் இருந்தோம்.மாலையில் வாடகை ஊர்தி மூலம் மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றோம். அத்தை மகன் பாஸ்கரன் எங்களுடன் வந்தான். இரவு பத்து மணிக்கு விமானம் புறப்படும். கொஞ்சம் கனத்த மனத்துடன்தான் அவளை வழியனுப்பி வைத்தேன்.
குழந்தை பிறந்ததும் உடன் திரும்பமுடியாது. எப்படியும் ஆறு மாதங்களாவது ஆகலாம்.பரவாயில்லை. தாய் வீட்டுக்குத்தானே போகிறாள். அங்கு கொஞ்ச காலம் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று நிம்மதி கொண்டேன்..
தனிமையில் காரைக்குடி வரை தொடர் வண்டியில் திரும்பியது சங்கடமாகவே இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கினேன். விடியற்காலையில் காரைக்குடி வந்தடைந்தேன். அங்கிருந்து வாடகை ஊர்தியில் திருப்பத்தூர் வந்து சேர்ந்தேன்.
இனி வீட்டு சாப்பாடு இல்லை. மருத்துவமனை உணவகத்திலிருந்து அடுக்குச் சட்டியில் உணவு வந்துவிடும். மதிய உணவை அங்கேயே முடித்துக்கொள்வேன். காலையில் ஃப்லாஸ்க்கில் தேநீர் வந்துவிடும். பசியாற உணவகம் சென்றுவிடுவேன். இரவு உணவு மட்டும் வீட்டுக்கு வந்துவிடும். அவசர தேவைக்கு சில தின்பண்டங்களும் பழங்களும் வாங்கி வைத்துக்கொள்வேன்.
துணிமணிகளைத் துவைக்க நாகராஜன் வீட்டுக்கு வந்து எடுத்துச் செல்வான்.. அவன் மருத்துவமனை சலவைத் தொழிலாளியின் மகன். மாத இறுதியில் பணம் தந்துவிடலாம்
பக்கத்து வீட்டில் டாக்டர் ராமசாமி குடியிருந்தார். அவருக்கு இன்னும் மணமாகவில்லை. மருத்துவமனை உணவகத்தில்தான் உணவருந்தினார். அவருடைய வீட்டுக்கு மெய்யர் என்னும் சிறுவன் வந்து போவான். அவருக்கு எடுபிடி வேலைகள் செய்வான். கடைக்குச் சென்று தேநீர் வாங்கி வருவான். அவன் உயர்நிலைப் பள்ளி மாணவன். ராமசாமி அவனுக்கு பண உதவி செய்து வந்தார். நானும் அவனை கடைக்கு அனுப்பலாம். செலவுக்கு பணம் தந்துவிடலாம். அது அவனுடைய படிப்பு செலவுக்கு உதவியாக இருக்கும்.
ஞாயிறுக்கிழமைகளில் காலை ஒன்பது மணிக்கு ஆரோக்கியநாதர் ஆலயத்தில் ஆராதனை நடைபெறும். நான் தவறாமல் இறைவழிபாட்டுக்குச் சென்று வருவேன். அனைத்து டாக்டர்களும் அதில் பங்குபெறுவார்கள். மருத்துவமனை ஊழியர்கள், தாதியர் பயிற்சிப் பள்ளியின் மாணவிகள், விழியிழந்தோர் பள்ளியைச் சேர்ந்தவர்கள் வருவார்கள். டாக்டர் செல்லப்பா ஆலய பாடகர் குழுவில் வயலின் வாசிப்பார். அதோடு ஆலய இசைக் குழுவையும் இயக்கினார். மங்களராஜ் ஆர்கன் இசைப்பார். சபை போதகர் மறைத்திரு மாணிக்கம் அவருடைய தந்தைதான். அந்த ஆலயம் அத்தனை பெரிய சபைக்கு சிறியதுதான். ஆலயத்தின் எதிரில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கு போடப்பட்டுள்ள பெஞ்சுகளில் பலர் அமர்த்துக்கொள்வார்கள்.
ஆலய வழிபாடு முடித்து வீடு திரும்பியதும் டாக்டர் செல்லப்பாவின் வீட்டில் மதிய உணவுக்கு ராமசாமியையும் என்னையும் அழைப்பார்கள். அங்கு சுவையான கோழி பிரியாணி தயாராக இருக்கும்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationவெள்ளாங் குருகுப் பத்துஎஸ்.எல்.இ. நோய்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *