தொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி

         கலைமகள் வந்தபின்பு நான் மருத்துவமனை உணவகத்தில் உண்பதை நிறுத்திக்கொண்டேன். அம்மா கலைமகளுக்கும் கலைசுந்தரிக்கும் சமையல் கற்றுத் தந்திருந்தார். . அது இப்போது எனக்கு உதவியாக இருந்தது. கலைமகள் என்னுடன் இருக்கும்வரை இங்கே சமையல் செய்யலாம். உணவுப் பிரச்னை ஒரு வகையாகத் தீர்ந்தது.
          மனைவி இன்னும் மலேசியாவில்தான் .இருந்தாள். இரண்டு வாரத்துக்கு ஒரு கடிதம் வரும். அலெக்ஸ் நன்றாக இருப்பதாக எழுதுவாள்.
          சிங்கப்பூரிலிருந்து ஜெயப்பிரகாசம் கடிதம் எழுதியிருந்தான். அவனுக்கும் ஒரு மகன் கிடைத்துவிட்டான்! நாங்கள் முடிவெடுத்தபடி குழந்தைக்கு சில்வெஸ்டர் என்றே பெயரிட்டுவிட்டான். ஆக எங்களுடைய நட்பின் அடையாளமாக  மூத்த பையன்களுக்கு ஒரே பெயர் சூட்டிவிட்டோம்! இதுவும் ஒரு சாதனையே!
          நான் மருத்துவப் பிரிவிலும் தொழுநோய்ப் பிரிவிலும் முழு கவனம் செலுத்தினேன்.இரவில் மருத்துவ நூல்களில் மூழ்கினேன்.
           இருதய நோயாளிகளுக்கு ஈ.சி.ஜி. எடுத்து அதை வைத்து மாரடைப்பு என்பதை நிர்ணயம் செய்யலானேன்.நூலகத்தில் இருதயம் தொடர்புடைய நூல்களின் உதவியுடன் சிறப்பாக சிகிச்சை தரலானேன். அவர்களில் சிலர் நல்ல முறையில் குணமாகி இல்லம் திரும்பினர். அவர்கள் அது பற்றி அவர்களின் உறவினரிடம் சொல்லி பலரை என்னிடம் அனுப்பி வைத்தனர். அதோடு என்னை தங்கள் இல்லத்துக்கு அழைத்தனர். செட்டி நாட்டு உணவு தந்து மகிழ்ந்தனர்.
          ஒரு சிலருக்கு காசநோய் உண்டாகி நெஞ்சில் நீர் தேக்கமுற்று மூச்சு விடுவதில் சிரமத்துடன் வந்தார்கள். அவர்களுக்கு எக்ஸ்-ரே படம் எடுத்து எந்த பக்கத்தில் நீர்த்  தேக்கம் உள்ளது என்பதை அறிந்துகொண்டேன். அந்த நீரை வெளியேற்றும் முயற்சிலும் ஈடுபட்டேன். நீர் தேக்கமுற்றுள்ள நெஞ்சுப் பகுதியில் பெரிய ஊசியைப் புகுத்தி நீரை வெளியேற்றினேன். அதுபோன்றே கல்லிரல் சுருக்க நோயில் வயிற்றில் நீர்த்  தேக்கம் உண்டாகும். அவர்களுக்கு வயிற்றில் அதுபோன்ற ஊசியைப் புகுத்தி நீரை வெளியேற்றினேன். இந்த இரண்டு வகையான சிகிச்சையிலும் உடனடியாக நோயாளி குணமாகி நிவாரணம் பெறுவார்கள். ஆனால் சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே பிரச்ச்னையுடன் திரும்புவார்கள். அப்போது மீண்டும் நீரை வெளியேற்றுவேன்.இது போன்ற சிகிச்சைகள் செய்ததின் பயனாக எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதோடு மருத்துவமனைக்கும் நல்ல வருவாய் கிடைத்தது.
           நீண்ட நாட்கள் காய்ச்சலுடன் வார்டில் உள்ள நோயாளிகளுக்கு இரத்தப் பரிசோதனை தேவையெனில் பரிசோதனைக்கூடத்திலிருந்து பிச்சை,அல்லது மோகனதாஸ் போன்றவர்கள் வார்டுக்கு வந்து இரத்தமெடுத்துச் செல்வார்கள். அதன் மூலம்  காய்ச்சலின் காரணத்தை நிர்ணயம் செய்ய முடியாவிட்டால், ” லம்பார் பங்ச்சர் ” செய்து பார்க்க நேரிடும். இதில் நோயாளியை பக்க வாட்டில் படுக்கச் செய்து. முதுகை வளைத்து வைத்துக்கொள்ளச் செய்வேன். அப்போது முதுகுத் தண்டின்  அடிப்பகுதியில் இரண்டு எலும்புகளுக்கு இடையில் ஒரு நீண்ட ஊசி செலுத்தி அதன்  வழியாக ” சி.எஸ்.எப்.”  நீரை   வெளியேற்றுவேன்.அந்த நீரை பரிசோதனை செய்யும்போது நோயாளிக்கு உள்ளது காச நோயா, மெனிஞ்சைட்டீஸ் என்னும் மூளை அழற்சியா  என்பதை தெரிந்து கொள்வேன்.பின்பு அதற்கேற்ப  சிகிச்சை தருவேன்.
          இரத்த சோகையாலும் ஏராளமானோர் வருவதுண்டு. அவர்களில் பெண்கள் அதிகம். பெரும்பாலோர் கொக்கிப் புழுக்களால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு முதலில் பூச்சி மருத்து தருவேன். பின்பு சிவப்பு இரத்தத்தின்  அளவு அறிந்து இரத்தம் ஏற்றுவேன்.  உறவினர்களை இரத்ததானம் செய்ய ஊக்குவிப்பேன்.உறவினர்களும்  பெரும்பாலும் தயங்காமல் உடன் இரத்ததானம் செய்வார்கள். அவர்கள் தவிர ஒரு சிலர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யவும் வருவார்கள். அவர்களிடம் இரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக் கூடத்தில் சேமித்து வைக்கப்படும். அங்கு பணிபுரியும் பிச்சையம் அவ்வாறு தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார்.
          சில நாட்களில் நான் காலையிலேயே தொழுநோய் களப்பணிக்குச் செல்லும் குழுவினருடன் வாகனத்தில் கிளம்பிவிடுவேன். அப்போது மட்டும் டாக்டர் மூர்த்தி என்னுடைய வார்டையும் சேர்த்து பார்த்துக்கொள்வார். வெளிநோயாளிப் பிரிவில் அவருடைய மனைவி ரோகினி உதவுவார். நான் வி.புதூர், பொன்னமராவதி, கல்லல், திருக்கோஷ்டியூர், எரியூர், சிறுகூடல்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை, முறையூர், எஸ்.வி.மங்கலம், குன்றக்குடி ஆகிய ஊர்களுக்குச் சென்றதால்  அங்குள்ள கிராம மக்கள் எனக்கு பழக்கமானார்கள். அங்கெல்லாம் மரத்தடியில் நோயாளிகளை பரிசோதித்து மாத்திரைகள் தருவோம்.வேலை முடிந்த பின்பு  அங்குள்ள சந்தைகளில் காய்கறிகள்  வாங்கி வருவோம். அங்கெல்லாம் புதிய காய்கறிகள் விலை மலிவாகக் கிடைக்கும். மதிய உணவுக்கு வீடு திரும்பிவிடுவோம்.
           நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அங்குள்ள  கோவில்களையும் பார்த்து வருவேன். ஒவ்வொரு ஊரிலும் கோவில் ஒவ்வொரு விதமாகவும், வெவ்வேறு கடவுளுக்குக்  கட்டப்பட்டிருக்கும். அவற்றில் குன்றக்குடி முருகன் கோவில் பெரியது. அது உயரமான ஒரு மலை மீது அமைத்துள்ளது.அங்கு மருதுபாண்டியர் சகோதர்களின் சிலைகள் கூட வைக்கப்பட்டிருந்தன. அதுபோன்று பிள்ளையார்பட்டி கோவிலும் பெரியது. அது ஒரு கற் குன்றில் குடைந்து அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் கோவில். அந்த இரண்டு கோவில்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்துகொண்டிருந்தனர்.
          எங்களுடைய தொழுநோய் களப்பணிக் குழுவில் செக்கரியா என்பவர் இருந்தார். அவர் முன்னாள் தொழுநோயாளி. முழுதும் குணமானவர். அவர் ஒருவர்தான் மருத்துவமனையில் பணிபுரிந்த இஸ்லாமியர். நல்ல நிறத்தில் ஒல்லியாக உயரமாக இருப்பார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருந்தது. மிகவும் அன்பாகப் பழகுபவர். அவர் எனக்கு நெருங்கிய நண்பரானார். எனக்கு ஏதாவது சாமான்கள் தேவையெனில் சைக்கிளில் திருப்பத்தூர் டவுனுக்குச் சென்று வருவார். அவர் கரிகிரியில் சிகிச்சை பெற்றவர். டாக்டர் பால் பிராண்ட் என்பவர் அப்போது அங்கு பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர். அவர்தான் அவருக்கு முடங்கிய கை விரல்களை மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் நீட்டித் தந்தவர். அவரைப்பற்றி அடிக்கடி பெருமையாக நினைவு கூறுவார்.
          நான் கிராம களப்பணிக்கு சென்று வருகையில் எரியூரில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞனைக் கண்டேன்.அவனுக்கு தொற்றும் வகையான தொழுநோய். உடல்முதுதும் தோல் சிவந்து தடித்திருந்தது. கை விரல்கள் மடங்கினாலும் மண் வெட்டி பிடித்து வேலை செய்யும் நிலைமையில் இருந்தன. என்னையும் அறியாமல் அவனை எனக்குப் பிடித்துவிட்டது. அவுனுக்கு எப்படியாவது மறுவாழ்வு தர அப்போது முடிவு செய்தேன். அதற்கு  முதற்படியாக அவனை முற்றிலும் குணமாக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் கூட்டு மாத்திரைகள் சிகிச்சை தரவேண்டும். அவனிடம் பேசி அவனை தொடர்ந்து மருத்துவமனை தொழுநோய் வெளிநோயாளிப் பிரிவில் என்னுடைய நேரடிப் பார்வைக்கு வரவழைத்தேன்.சில நாட்கள் அவனை வார்டிலும் தங்க வைத்து பராமரித்து வந்தேன். எத்தனையோ தொழு நோயாளிகளைப் பார்க்கும் எனக்கு அவன் மீது மட்டும் தனிக் கவனம் சென்றது எனக்குப் புரியவில்லை. அவன் பெயர் பொசலான்.
           என்னுடைய வீட்டின் பின்புறம் மருத்துவமனை வாகனங்கள் நிறுத்தும் கூடத்தின் அருகில்தான் தங்கராஜ் குடும்பத்தினர் தனி வீட்டில் இருந்தனர். அவர்தான் தலைமை மருத்துவ அதிகாரியின் அம்பாசிடர் கார் ஓட்டுநர். . அவருக்கு சந்திரிகா, சரளா என்ற இரு மகள்கள் இருந்தனர். சரளாவும் கலைமகளும் தோழிகளானார்கள். சரளா மாலையில் திருப்பத்தூரில் தட்டச்சு பயின்று வந்தாள். அது பயில்வது நல்லது என்று எண்ணினேன். கலைமகளையும் தட்டச்சு பயில சரளாவுடன் அனுப்பினேன்.பின்னர் நேரம் வரும்போது உசிலம்பட்டிக்கு அழைத்துச் சென்று ஆசிரியை பயிற்சிப் பள்ளியில்  இடம் கேட்கலாம். அதன் தேர்வுக் குழுவில் திருச்சபையின் கல்விக்கழகத்தின் தலைவரும், சில ஆலோசனைச் சங்க உறுப்பினர்களும் இருப்பார்கள். அநேகமாக என்னை அவர்களுக்குத்  தெரிந்திருக்கும். இல்லையென்றாலும் நான் அறிமுகம் செய்துகொள்ளலாம். ஓர் மருத்துவ அதிகாரியின் தங்கை என்பதால் கலைமகளுக்கு நிச்சயாமாக இடம் கிடைத்துவிடும் என்றும் நம்பினேன்.
          திருப்பத்தூரில் இரண்டு திரைப்பட அரங்குகள் இருந்தன. அவை தங்கமணி தியேட்டர், மஞ்சுளா தியேட்டர் என்பவை. இரண்டும் சற்று தொலைவில்தான் உள்ளன.சில நாட்களில் பால்ராஜ், கிறிஸ்டோபர், தேவஇரக்கம் ஆகியோருடன் படம் பார்க்கச் சென்று வருவேன். அப்போதெல்லாம் தொலைக்காட்சி கிடையாது. எனக்கு திரைப்படம் பார்ப்பதில் அவ்வளவு விருப்பம் இல்லை. முன்பு எம்.ஜி.ஆர். படங்களை விரும்பிப் பார்ப்பேன். அவர் தி.மு.க. விலிருந்து விலகி அ.தி.மு. க. ஆரம்பித்ததிலிருந்து அதையும் விட்டுவிட்டேன்.
          சில மாலைகளில் காரைக்குடி சென்று வருவேன். அது திருப்பத்தூரைவிட பன்மடங்கு பெரிய டவுன். தொடர்வண்டி நிலையம் உள்ளது. அங்கு அதிகமான கடைத்தெருக்கள் இருந்தன. காரைக்குடியில் ஒரு கோடியில் அழகப்பா பல்கலைக்கழகம் இருந்தது. காரைக்குடி செட்டி நாட்டின் ஒரு பகுதியாகும். இங்கு நகரத்தாரும் செட்டியார்களும் அதிகம். இவர்கள் பலதரப்பட்ட வர்த்தகம் புரிபவர்கள்
          ஒரு நாள் மதுரைக்கும் சென்று வரவேண்டும். அங்கு செல்ல ஒரு மணி நேரமாகும். அங்கு மீனாட்சியம்மன் கோவிலைப் பார்த்து வரலாம்.
          திருப்பத்தூரில் மகிழ்வான மருத்துவப் பணி தொடர்ந்தது.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationகதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்கண்காட்சி