தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்

martinluther

          நான் என் ஆரம்பக் கல்வியை எங்கள் கிராமத்துப் பள்ளியில்தான் தொடங்கினேன். கிராமத்தில் அந்த ஒரு பள்ளிதான் இருந்தது. அதற்கென தனிக் கட்டிடம் இல்லை. அது ஆலயத்தில் இயங்கியது.
          அந்த ஆலயத்தை ஊர் மக்கள் மாதா கோவில் என்றே அழைப்பர். உண்மையில் அது மாதா கோவில் இல்லை. கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்தான் மாதாவை வழி படுவார்கள். அது சீர்திருத்தச் சபையைச் சேர்ந்த ஆலயம் – அற்புதநாதர் ஆலயம். செங்கற்கள் சுவர்களாலும் சீமை ஓடுகளாலும் கட்டப்பட்ட கிராமத்து சிற்றாலயம். கிராமத்திலேயே மிகவும் உயர்ந்த கட்டிடம் அதுதான். அதன் உச்சியில் சிலுவையை பக்கத்துக்கு ஊர்களிலிருந்தும் காணலாம்.
          அற்புதநாதர் ஆலயத்தைக் கட்டியவர்கள் தரங்கம்பாடியைச் சேர்ந்த ஜெர்மன் இறைத் தூதர்கள் ( மிஷனரிகள் ). ( எனக்கு பெயர் சூட்டியவர்களும் அவர்கள்தான் ) எங்கள் சபையின் பெயர் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.
          கத்தோலிக்க திருச்சபையில் புரட்சியை உண்டுபண்ணி அதிலிருந்து பிரிந்து வந்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டீன் லுத்தர். அவர்களை புரோட்டெஸ்டண்ட்  ( மறுதலித்தவர்  ) என்று அழைத்தனர். அவர்கள்தான் சீர்திருத்தச் சபையினர். உலகின் முதல் சீர்திருத்தச் சபையினர் லுத்தரன் சபையினர்.
          இந்தியாவின் முதல் சீர்திருத்தச் சபையின் இறைத் தூதராக வந்தவர் பார்தோலேமேயுஸ் சீகன்பால்க் எனும் இளம் ஜெர்மானியர். அவருக்கு அப்போது வயது இருபது மூன்றுதான். அவர் கப்பலிலிருந்து தரை இறங்கியது தரங்கம்பாடியில் அங்குதான் அவர் இறைப்பணியைத் துவங்கினார். இயேசுவின் நற்செய்தியை தமிழ் மக்களிடம் பயனுள்ள வகையில் கூறவேண்டுமெனில் முதலில் தாம் தமிழ் மொழியைப் படிக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். திண்ணைப்  பள்ளி ஆசிரியரிடம் தமிழ் கற்றார். தமிழ் அவரைக் கவர்ந்தது. தமிழ் மீது காதல் கொண்டார். இறைப் பணி புரிய வந்தவர் தமிழ்ப் பணியில் ஈடுபட்டார்.
         தமிழ் எழுத்து வடிவங்களை ஜெர்மனிக்குக் கொண்டு சென்று அவற்றை அச்சில் வார்த்தார். இங்கிலாந்து அரசியிடமிருந்து ஒரு அச்சு இயந்திரத்தை நன்கொடையாகப் பெற்று தரங்கம்பாடி திரும்பினார். கிறிஸ்துவக் கோவிலில் .அங்கு அச்சுச்சுகூடம் நிறுவி தமிழை அச்சில் ஏற்றி சாதனைப் படைத்தார். அதன்மூலம் அச்சில் ஏறிய முதல் இந்திய மொழி தமிழ் என்ற பெருமை சேர்த்தார். அவர் அச்சடித்த முதல் தமிழ் நூல் அவரே மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு!
          அவர் வழிவந்த இறைத் தூதர்கள் தெம்மூர் கிராமம் வந்து அற்புதநாதர் ஆலயத்தைக் கட்டியதோடு அதில்  இறை வழிபாடு செய்ததோடு ஆரம்பப் பள்ளியையும் நடத்தினர். ஞாயிறுகளில் மட்டும் அதில் ஆராதனை நடைபெறும்.  இதர நாட்களில் ஆரம்பப் பள்ளியாகச் செயல்படும்.
          நான் முதன் முதலாக பள்ளிக்குச் சென்றபோது தாத்தா எனக்கு சின்னதாக வேஷ்டி கட்டி, தகர சிலேட்டின் நான்கு மூலைகளிலும் சந்தனம் தடவி பள்ளிக்கு கூட்டிச் சென்றார்.
          பள்ளியில் மேசை நாற்காலிகள் இல்லை . சிமெண்ட் தரையில் நீண்ட கோரைப் பாய்களின் மேல் மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மூன்று வகுப்புகள் அங்கேயே நடந்ததால் சத்தம் அதிகமாகவே கேட்டது.
          முதல் வகுப்புக்கு உள்ளே இடம் இல்லை. பள்ளியின் வாசலில் மண் தரையில்தான் உட்கார வேண்டும். அங்கு மணல் பரப்பப்பட்டிருந்தது. அதில்தான் வலது கையின் ஆள்காட்டி விரலால் மணலில் அரிச்சுவடி எழுதி கற்றோம்.
          க, கா, கி, கீ, கு, கூ  என்பதையெல்லாம் பாடல் போன்றே பாடி மனனம் செய்தோம். அன்று பயின்றது இன்றும் மனதில் நிற்பது விந்தையே! அதன் பின்பு படித்த எத்தனையோ பாடங்களை மறந்து போன நிலையிலும் ஆத்திச்சூடி மட்டும் எப்படி நினைவில் அப்படியே உள்ளது?
          கிறிஸ்துவக் கோவிலில் பள்ளிக்கூடம் நடந்ததால், காலையில் ஜெபம் செய்யவும், கிறிஸ்துவ பாமாலைகளும் கீர்த்தனைகளும் பாடவும் கற்றுத் தந்தனர். வேதாகமக் கதைகளும் சொல்லித் தந்தனர். கிறிஸ்துவ மாணவர்களும், இந்து மாணவர்களும் இவற்றைக் கற்றனர்.
          நாங்கள் மணலில் எழத தெரிந்து கொண்ட பின்புதான் பள்ளியினுள் அமர்ந்தோம். அங்கு கரும்பலகையில் ஆசிரியர் பாடங்களை எழுதுவார். அதைப் பார்த்து நாங்கள் சிலேட்டுகளில் எழுதுவோம்.
          பள்ளி நேரத்தில் ஒரு சில மாணவர்கள் ஆசிரியரைப் பார்த்து ஒரு விரலை நீட்டுவார்கள். அவர் சரி என்பதுபோல் தலையை ஆட்டுவார். அவர்கள் வெளியேறி, சிறிது நேரம் கழித்து திரும்புவார்கள். சிலர் இரண்டு விரல்களை நீட்டுவார்கள். அவர்கள் அதிக நேரம் கழித்தே திரும்புவார்கள். அவர்கள வாய்க்கால் வரை  சென்று வர வேண்டும். பள்ளியின் அருகில் கழிப்பறைகள் இல்லை.
          இவற்றையெல்லாம் கவனித்த நான், நேராக வீட்டுக்கே ஓடி விடலாமே என்று எண்ணினேன். தகர சிலேட்டை வெளியே வீசினால் உடையாது.ஆகவே, யாரும் கவனிக்காத நேரம் பார்த்து அதை சன்னல் வழியாக வெளியே போட்டு விடுவேன்.ஆசிரியரிடம் சென்று இரண்டு விரலைக் காட்டுவேன்.அவர் சரி என்பார். நான் வேகமாக வெளியேறி தகர சிலேட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி விடுவேன். அதுபோன்று பல முறைகள் செய்துள்ளேன். நான் சிறுவன் என்பதால் யாரும் ஏதும் செய்யவில்லை.
          அனால் அதைவிட வேறொரு வேடிக்கையும் உள்ளது. அதுவும் பள்ளி தொர்புடையதுதான். அப்போது மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய் விட்டு மீண்டும் பள்ளிக்குத் திரும்ப வேண்டும்.
          நான் வீடு செல்லும்போது அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் வயலுக்குச் சென்றிருப்பார்கள்.
          எனக்கு சாப்பாடு உறியில் தொங்கும். நான் ஒரு சிறிய  நாற்காலி மீது ஏறி அதை எடுத்துக் கொள்வேன். அதில் ஒரு  பாத்திரத்தில் சோறும், இன்னொரு பாத்திரத்தில் குழம்பும் இருக்கும்.
         தரையில்  உட்கார்ந்து வயிறு புடைக்க முழுவதையும் உண்டபின் கை கூடக் கழுவாமல் அங்கேயே படுத்து  விடுவேன்.
         அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் என்னை, பள்ளியிலிருந்து வேறு பையன்கள் வந்து அப்படியே தூக்கிச் செல்வார்கள். நான் விழித்து கண்களைப் பிசைந்து பார்த்தால் வகுப்பில் இருப்பேன். அப்போது ஆசிரியர் மாணவர்கள் அனைவரும் கைகொட்டி நகைப்பார்கள்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationவாழ்க்கை ஒரு வானவில் – 20நொண்டி வாத்தியார்