திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது அண்ணி குழந்தை சில்வியாவுடன் உடன் இருந்தார். எனக்கு தாஸ் நல்ல துணையாக இருந்தார். அப்போது ” காதலிக்க நேரமில்லை ” படம் வெளியாகியிருந்தது. அதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் மலேசியா ரவிச்சந்திரன் கதாநாயகனாக ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததால் திருச்சியில் பரவலாகப் பேசப்பட்டது. அதற்குக் காரணம் ரவிச்சந்திரன் அப்போது திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த மாணவர்.
திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து அண்ணியும் நானும் வேப்பூர் புறப்பட்டோம். அங்கிருந்து முடியனூர் வந்து சேர இரவாகிவிட்டது.
நான் ஒரு வாரம் அங்கு தங்கியபின் மீண்டும் ஊர் திரும்பினேன். என்னைக் கண்டதும் கோகிலம் குதூகலித்தது நன்கு தெரிந்தது.
நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. ஒருவேளை நான் தேர்வில் சரியாகச் செய்யவில்லையா என்ற அச்சம் உண்டானது. நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு இல்லையென்றால் மருத்துவம் கிடையாது என்று பொருள். இலக்கியம்தான் பயிலவேண்டும். வெரோனிக்காவின் ஜெபம் கேட்கப்பட்டதோ? ஒருவேளை இருக்கலாம். அவள் பக்திமிக்கவள் என்பதில் சந்தேகம் இல்லைதான். அவள் போன்ற பக்தியான பெண்ணின் ஜெபம் நிச்சயமாக கேட்கப்படும்.
இந்த விடுமுறையை வீணடிக்காமல் திடப்படுத்தல் எடுத்துக்கொள்ள முடிவு செய்தேன். அதற்கான ஆயத்தங்களை இஸ்ரவேல் உபதேசியார் செய்யலானார். ஒருவேளை நேர்முகத் தேர்வுக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவானால் இது உதவியாக இருக்கும் என்று கருதலானேன்.
கடவுள் மீது நம்பிக்கை இல்லாத நான் வெரோனிக்காவுடன் சேர்ந்து ஓய்வு நாள் பள்ளிக்குச் சென்றதால் வேதாகமத்தை அன்றாடம் படிக்கத் துவங்கி, இப்போது மருத்துவக் கல்லூரிக்காக திடப்படுத்தல் எடுத்து திருச்சபையின் முழு உறுப்பினர் ஆகப்போகிறேன். இது தானாக வந்தது. இது இப்படிதான் நடக்க வேண்டும் என்பதுபோல் நடந்துகொண்டிருந்தது.
வேதாகமத்தை படிக்க படிக்க அதை முழுதும் தொடர்ந்து படித்து முடித்துவிடவேண்டும் எனும் ஆவல் மேலோங்கியது. அதில் கூறப்பட்டிருந்த பல பகுதிகள் எனக்கு சரிவர புரியவில்லை என்றாலும் திரும்பப் படித்தால் புரியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து படிக்கலானேன்.
பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்களைப பார்க்கும்போது இஸ்ரவேல் மக்களை வழி நடத்தும் கடவுள் மிகவும் கண்டிப்பானவர் போன்று காணப்பட்டார். அந்த மக்களும் சதா கடவுளுக்கு எதிராக முறுமுறுக்கிறவர்களாகதான் இருந்துள்ளனர். அவர்களை வழிநடத்தியக் கடவுளும் தவறு செய்பர்கள்களை உடனுக்குடன் தண்டித்துள்ளார். அவர் மோசே மூலம் தந்த பத்து கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் போனால் அதற்கான தண்டனை கொடூரமாகவே இருந்தது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று பழிக்குப் பழி என்ற நிலையும் வழக்கில் இருந்துள்ளது. கல்லெறிந்துக் கொல்வது சர்வ சாதாரணமாக இருந்துள்ளது. போர்களில் சில பட்டணங்களின் மக்களை முழுதுமாக அழிக்கும் அவலமும் நிகழ்ந்துள்ளது.
பழைய ஏற்பாட்டின் கடவுள் மிகவும் கோபக்காரராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். எகிப்து தேசத்தில் அடிமைகளாய் இருந்த இஸ்ரவேல் மக்களை மோசே மூலம் வனாந்தரத்தில் வழி நடத்தி விடுதலை தருகிறார் கடவுள். அவர்களின் பிரயாணத்தின்போது மூன்றாம் மாதம் சீனாய் மலையில் இரண்டு கல் பலகையில் பத்து கட்டளைகளை வழங்குகிறார் கடவுள். அவை கற்பனைகள் என்றும் கூறப்பட்டுள்ளன.அவை அனைத்தும் நல்வாழ்வுக்கான வழிகாட்டிகள். அவற்றைப் பின்பற்றச் சொல்கிறார். அவருடைய கட்டளைகளை கைகொள்ளாமல் போனால் அதை அவருக்கு எதிராகச் செய்ததாகவே கருதியுள்ளார். உதாரணமாக அவர் சிலைவழிபாட்டை அடியோடு வெறுத்தார். அதை செய்ய வேண்டாம் என்றார். அதுவே அந்த பத்து கட்டளைகளில் முதலாம் கட்டளை.
” உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைப் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். ” என்பதே அந்த முதலாம் கட்டளை.
ஆனால் இஸ்ரவேல் மக்களோ வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் பயணம் செய்தபோது மீண்டும் மீண்டும் கடவுளுக்கு விரோதமாக செயல்பட்டனர். அதற்காகா கடவுள் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார்.
மோசே சீனாய் மலையில் ஏறி கடவுளிடம் பேசி அந்த பத்து கட்டளைகளை எடுத்து வருவதற்குள் அந்த மக்கள் தங்கத்தால் ஒரு கன்றுக்குட்டி சிலையை வார்த்து அதை வழிபடத் தொடங்கினர்.மோசே அவர்களைக் கடிந்துகொண்டதோடு தான் கொண்டுவந்த அந்த கல் பலகைகளை கீழே போட்டு உடைத்தான். அவர்கள் உண்டாக்கிய கன்றுக்குட்டி சிலையை எடுத்து தீயில் சுட்டெரித்து அதைப் பொடியாக அரைத்து தண்ணீரின்மேல் தூவி அதை அந்த மக்களைக் குடிக்கும்படிச் செய்தான்.அதன் பின்பு கடவுளிடம் மன்றாடி அவருடைய கோபத்தைத் தணித்து இரண்டாவது முறையாக பத்து கட்டளைகள் கொண்ட கல் பலகைகளைக் கொண்டு வருகிறான்.
நான் சிங்கப்பூரில் இருந்தபோது ” பத்து கட்டளைகள் ” படம் பார்த்தது நினைவுக்கு வந்தது. அதில் சார்ல்டன் ஹெஸ்டன் மோசேயாக நடித்தார். அது பிரமாண்டமான ஒரு திரைப்படம் எனலாம்.
நாத்திகனாக இருந்த நான் இப்போது வேதாகமத்தில் மூழ்கியது வியப்பை உண்டு பண்ணியது. கடவுள் மீதும் கொஞ்சங் கொஞ்சமாக நம்பிக்கை உண்டானது. அதன் பின்பு வேதாகமத்தை பயபக்தியுடன் படிக்கலானேன்.
எங்களுக்கு சிதம்பரம்தான் பெரிய பட்டணம். அங்குதான் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது. அதோடு அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் உள்ளது. அதனால் சிதம்பரத்தில் எப்போதும் யாத்திரிகர்கள் கூட்டமும் மாணவர்களின் கூட்டமும் காணலாம். கடைதேருக்களில் பரபரப்புடன் வியாபாரம் நடப்பதைக் காணலாம். அவர்களை ஏற்றிச் செல்ல ஏராளமான குதிரை வண்டிகள் காணப்பட்டன. நான் பால்பிள்ளையுடன் அவ்வப்போது சிதம்பரம் சென்று வருவேன். அங்கு சுவையான பிரியாணி உண்போம். திரும்பும்போது மாம்பழம், வாழைப்பழம், சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை,பூ, போன்றவற்றை நிறைய வாங்கி வருவேன்.
கோகிலத்தின் அன்புத் தொல்லை தொடர்ந்தது. அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அம்மாவுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு எங்கள் வீட்டிலேயே தஞ்சம் புகுந்துவிட்டாள். எனக்கு மதியம் இரவு உணவு பரிமாறுவதும் அவளுடைய வேலையாகிவிட்டது.அதில் அவள் மகிழ்ச்சி கொண்டாள். இரவில் அம்மாவுடன் ஊர்க் கதைகள் பேசிக்கொண்டு எங்கள் வீட்டிலேயே படுத்துவிடுவாள். கணவனும் அவளைத் தேடி வருவதில்லை.
காலையில் இராஜகிளி அது பற்றி அம்மாவிடம் கேட்பார். வீட்டில் சண்டையாம் என்று அம்மா கூறுவார்.இங்கே இரவு தங்கவேண்டும் என்பதற்காகவே கணவனுடன் சண்டை போட்டுவிட்டு கோபித்துக்கொண்டு வருவதைப்போல் வந்துள்ளது எனக்குத் தெரிந்தது. அதே வேளையில் இரவில் என்னிடம் வரவேண்டும் என்பதற்காகவும் அது இருக்கலாம் என்பதும் தெரிந்தது. அப்படி வந்தால் என்ன செய்வது என்ற பயமும் உண்டானது.
இஸ்ரவேல் உபதேசியாரின் அறிவுரைப்படி நான் கர்த்தரின் ஜெபம், விசுவாசப் பிரமாணம் , பத்து கட்டளைகள் முதலியவற்றை மனனம் செய்துவிட்டேன். ஒரு ஞாயிறு ஆராதனையில் எனக்கு திடப்படுத்தல் செய்து வைத்தார். இனி நான் முழுமையான ஆலய உறுப்பினன் ஆகிவிட்டேன். பரிசுத்த இராப்போஜனத்தில் இனிமேல் நான் பங்கு கொள்ளலாம்.இராப்போஜனம் என்பது அப்பமும் திராட்சை இரசமும் பெறுவது. அது பாவமன்னிப்புக்கென்று மாதம் ஒருமுறை வழங்கப்படும். அப்பம் இயேசுவின் உடலாகவும், திராட்சை ரசம் அவருடைய இரத்தமாகவும் கருதப்படுகிறது. அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில் தம்முடைய பனிரெண்டு சீடர்களுடன் இரவு உணவு உண்டபோது அவர் இவ்வாறு அவர்களுக்குப் பரிமாறி, இனிமேல் அவரை நினைவு கூறும் வகையில் இவ்வாறு செய்யக் கட்டளையிட்டார். அது முதல் இந்த இராப்போஜனம் பரிமாறும் பழக்கம் தொடர்ந்து வழக்கில் உள்ளது. ஒருவர் தன்னுடைய பாவங்களை நினைத்து வருந்தி, மனந்திரும்பி மன்னிப்புக்கு மன்றாடியபின் இராப்போஜனம் எடுத்தால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது கிறிஸ்துவர்களின் நம்பிக்கை.
அன்று மாலையில் வழக்கம்போல் ஆலய மணி அடித்து இஸ்ரவேல் உபதேசியார் ஜெபம் செய்துகொண்டிருந்தார். நான் அப்போது ஆலயம் சென்றேன். அவர் என்னை பீடத்தண்டை அழைத்து எனக்காக ஜெபம் செய்தார். பின்பு அவர் எனக்கு ஒரு தனிப்பட்ட ஜெபத்தைச் சொல்லித் தந்தார்.
” இயேசுவே, இரக்கமுள்ள இரட்சகரே. என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என்னை நீர் வழி நடத்தும். ” என்பதே அந்த சுருக்க ஜெபம். இதை எப்போதும் இன்பத்திலும் துன்பத்திலும் விடாமல் சொல்லச் சொன்னார்.
ஒரு வாரம் சென்றிருக்கும். அந்த அதிசயம் நடந்து! ஆம்! வேலூரிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது! என்னால் அதை நம்ப முடியவில்லை! அதைப் பிரிக்கும்போது உடல் நடுங்கியது! பிரித்துப் பார்த்தேன்! என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தார்கள்! அது கடவுளின் அழைப்பாகத் தோன்றியது! அது ஓர் இமாயலயச் சாதனை! எண்ணிப்பார்க்க முடியாத ஒன்று! அகில இந்திய அளவில் சுமார் ஐயாயிரம் பேர்கள் எழுதிய ஒரு தேர்வில் நூற்று இருபது பேர்களில் நானும் ஒருவன்!
கடவுளுக்கு நன்றி சொன்னேன்.கடிதத்துடன் இஸ்ரவேல் உப்தேசியாரிடம் உடன் சென்றேன். அவர் ஆலயத்தைத் திறந்து மெழுகுவர்த்திகள் கொளுத்தி எனக்காக ஜெபம் செய்து, நேர்முகத் தேர்வில் எனக்கு வெற்றி கிடைக்கவும் ஆண்டவரிடம் மன்றாடி ஜெபம் செய்தார். நான் அவருக்கு நன்றி கூறிவிட்டு வீடு திரும்பினேன்.