தொடுவானம் 85. புதிய பூம்புகார்

85. புதிய பூம்புகார்

தரங்கம்பாடியில் இருந்த நாட்கள் இனிமையானவை. சரித்திரப் புகழ்மிக்க பண்டைய தமிழகத்தின் துறைமுகப் பட்டினங்களைப் பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது இன்பமானது. நாம் என்னதான் சரித்திரத்தை நூல்களில் படித்திருந்தாலும்,அந்த இடங்களை நேரில் சென்று பார்க்கும்போது நம்மையும் அறியாமல் ஒருவித எழுச்சி மனதில் தோன்றுவது இயல்பு.
poom1 நான் பூம்புகார் கடற்கரையில் நின்றபோது என் கண்முன்னே சங்க காலத்தில் அங்கு இருந்த காவிரிப்பூம்பட்டினம் என் கண் முன்னே தோன்றியது. அது கடலுக்குள் மூழ்கி அழிந்து போயிருந்தாலும், இளங்கோ அடிகளின் கைவண்ணத்தில் உருவான சிலப்பதிகார காவியத்தின் மூலமாக அது இன்னும் அழியா ஓவியமாகத்தான் வாழ்ந்து வருகிறது. அன்று அவ்வளவு சீரும் சிறப்புமாகத் திகழ்ந்த பூம்புகார் கடற்கரை இன்று வெறிச்சோடிக் கிடப்பது வேதனையானதுதான்.
நான் சோழநாட்டில் நாட்டில் பிறந்தவன் என்பதால் ஏனோ என்னையுமறியாமல் பூம்புகார் மீது தனி ஆர்வம் கொண்டேன். அத்துடன் சிலப்பதிகாரமும் எனக்கு பிடித்திருந்தது. கலைஞரின் ” சிலப்பதிகார நாடக நூல் ” என்னைக் கவர்ந்தது. அவர் எழுதி உருவாக்கி இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி நடித்த ” பூம்புகார் ” திரைப்படமும் என்னை ஈர்த்தது..இதனால் பூம்புகார் என்னுடைய மனதில் நீங்காத இடம் பெற்றிருந்தது.
இந்த தொடுவானம் தொடரில் நான் பூம்புகார் சென்றது 1965 ஆம் வருடமாகும். அப்போது நான் முதல் ஆண்டு மருத்துவ மாணவன். அன்று பார்த்தபோது அங்கு பூம்புகார் கலைக்கூடம் எழுப்பப்படவில்லை. அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லை. அதன்பின்பு 1968 ஆம் ஆண்டில் தி.மு. க. ஆட்சி அமைத்ததும், அந்த கலைக்கூடம் அழுகுபட எழுப்பப்பட்டது. அதன் மூலம் பூம்புகாரின் வரலாற்றுச் சிறப்பு தமிழ் மக்களின் பார்வைக்குச் சென்று அது ஒரு சுற்றுலாத் தளமாகவும் மாறியது. மேல் நாட்டு சுற்றுப்பிரயாணிகள்கூட இப்போதெல்லாம் மகாபலிபுரம் செல்வதுபோன்று பூம்புகாருக்கும் செல்ல விரும்புகின்றனர்.
( இந்தத் தொடரில் நான் 1965 ல் கண்ட பூம்புகார் பற்றி எழுதிவிட்டு சென்ற வாரம் மீண்டும் அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியதால் அங்கு சென்று மனம் வெதும்பிய நிலையால் இன்றைய பூம்புகார் பற்றி தொடர்ந்து கூற ஆசைப்படுகிறேன். தமிழ் ஆர்வலர்கள் இதை நிச்சயம் படிக்கவேண்டும் என்பது என்னுடைய பேரவா!
தி. மு. க. ஆட்சிக்கு முன் இருந்தவர்கள் இந்த பூம்புகார் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபின்பு வள்ளுவரையும் இளங்கோவையும் சிறப்பு செய்தார்கள்.வள்ளுவர் கோட்டம் அமைத்ததுபோல் பூம்புகாருக்கும் புதுப் பொலிவு தரலாயினர். இதில் கலைஞரின் பங்கு அளப்பறியது. அவர் எழுதிய சிலப்பதிகார நாடக நூல் குறித்து அறிஞர் அண்ணா கலைஞரின் குறளோவிய நூலுக்கு 1968 ஆம் வருடம் எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
” என் தம்பி கருணாநிதியின் தமிழ் ஆளுந்திறன், பாத்திரங்களைப் படைக்கும் உயர்தனி ஆற்றல் ஊரும் உலகமும் அறிந்தது; அறிந்து மகிழ்ந்தது; மகிழ்ந்து பாராட்டியது! அவரது எழுத்தோவியத்தில் போற்றத்தகும் முறையில் நற்பணியைச் செய்தவர்.
சிலப்பதிகாரத்தில் தனது வாதங்களை முன்வைத்தாள் கண்ணகி! அவளது எழுச்சிமிகு பேச்சையும் எச்சரிக்கையையும் என் தம்பி எடுத்துரைக்கும்போது மயிர் கூச்செறிகிறது.
கண்ணகியின் ஆத்திரத்தை உணர்ச்சி உருவோடு அமைப்பது ஒரு எழுத்தாளனுக்கு எளிதான காரியமல்ல; ஆனால் கருணாநிதி யாரையும் விஞ்சுகின்ற அளவில் வெற்றி கொண்டுள்ளார். தான் ஒரு ஒப்புவமையற்ற நடையழகு காட்டும் எழுத்தாளர் என்பதால்!
நூல் முழுவதும் கருணாநிதி, ஒரு காவியப் படைப்பிற்குத் தேவையான செழுஞ்சொல்லோட்டத்தை சீரிய அழகு அமைப்பை உருவாக்கித் தருகிறார். ”

இவற்றையெல்லாம் தெரிந்தபின்பு கலைஞர் எழுப்பியுள்ள பூம்புகார் கலைக்கூடத்தைக் காண ஆவல் கொண்டு 1998 அங்கு சென்றேன். அப்போது தி.மு.க. ஆட்சி. கலைக்கூடம் மிகவும் தத்ரூபமாக வியக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. சிலப்பதிகார காவியத்தின் பகுதிகள் சிற்ப வடிவங்களில் மகாபலிபுரத்து சிற்பக் கல்லூரியின் சிற்ப வல்லுனர்களால் கவர்ச்சியான வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. காணும் இடமெல்லாம் அலங்கார வாயில்களும், மணிமண்டபங்களும், சிற்பங்களும்,கண்ணகி கோட்டம் போன்ற சிறப்பு அமைப்புகளும் காண முடிந்தது. ஏறக்குறைய சங்க காலத்து பூம்புகார் துறைமுகப் பட்டினத்தையே நம்முடைய கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார் நம் கலைஞர் மு. கருணாநிதி. இதை தமிழக மக்கள் அப்போது கண்டு களித்தனர். நம்முடைய பழம் பெருமைகளை அதுவரை உணராதவர்கள் கண்டு வியந்தனர். சிலப்பதிகாரம் கதை தெரியாதவர்களும் கண்டு தெரிந்துகொண்டனர். ஒரு சிலருக்கு இவையெல்லாம் தேவைதானா என்று தோன்றியிருக்கக்கூடும். அது அவர்களின் சொந்த கருத்தாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை பாமார மக்கள் சரித்திரம் படிக்கவோ அல்லது நம் முன்னோர்களின் சிறப்பான வாழ்க்கை முறையைப் பற்றியோ, அவர்கள் படைத்த இலக்கியங்கள் குறித்தோ தெரிந்துகொள்ளும் வாய்ப்பில்லை. அவர்களுக்கெல்லாம் இதுபோன்ற நினைவுச் சின்னங்களை எழுப்புவதில் தவறு .ஏதுமில்லை.
நாம் பார்த்திராத கடவுள்களுக்கு வானுயர்ந்த கோபுரங்கள் கட்டி மகிழ்கிறோம். தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரத்து சிவன் கோவில் இரண்டும் சோழ மன்னர்களான இராஜஇராஜ சோழனையும், இராஜேந்திர சோழனையும் நமக்கு இன்னும் நினைவூட்டியவண்ணம் அழியாக் கலைக்கூடங்களாகத் திகழ்கின்றன. அதுபோன்று நம் தமிழக மண்ணில் வாழ்ந்து மறைத்த மக்கள்., கலை, கலாசாரம், இலக்கியம், பட்டினங்கள் பற்றி நாம் இவ்வாறு நினைவுச் சின்னங்கள் எழுப்பி சிறப்பு செய்வதில் தவறு ஏதுமில்லை. உண்மையான தமிழ்ப் பற்றாளர்களுக்கே இத்தகைய எண்ணமும் ஆக்கமும் உருவாகும். அவர்களுக்கு தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை 4அன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை