தொடுவானம் 90. அன்பு தரும் துன்பம்

Spread the love
          ஆற்றங்கரையில் நான் சொன்னது கேட்டு கோகிலம் அழுதாள். அவளை என்னால் சாமாதானம் செய்யமுடியவில்லை. வாழ வேண்டிய இளம் வயதில் சாவது தவறு என்றேன். அவள் கேட்கவில்லை. ஒரு உயிரை அழிப்பது சுலபம், ஆனால் அதை உருவாக்குவது சிரமம் என்றேன். அவள் காதில் விழவில்லை. கடவுளால் தரப்பட்டது உயிர், அதை அழிக்க நமக்கு உரிமையில்லை என்றேன்.பயனில்லை. அதற்குமேல் அவளிடம் என்னதான் சொல்வது?
          சரி பார்ப்போம் என்று சொன்னேன்.
” அது என்ன பார்ப்போம்?  நீங்க இப்படி சொல்லிட்டு படிக்க போய்விடுவீங்க .எப்படி பார்ப்பது? அங்க என்னை நினைக்கவும் மாட்டீங்க  ” என்று முறையிட்டாள். இறுதியாக என்னதான் சொல்கிறாய் என்று கேட்டேன். இரவு வருவதாகச் சொன்னாள். நான் வேண்டாம் என்றேன். அவள் அதெல்லாம் முடியாது நிச்சயம் வரப்போவதாகச் சொன்னாள்.
          அவள் பேசிக்கொண்டே கூடை நிறைய புல் நிரப்பிவிட்டாள்.  அதை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு கை காட்டி விடைபெற்றாள். பால்பிள்ளையும் கையில் கோரை நிறைய மீன்களுடன் என்னிடம் வந்தான்.
         ” அண்ணே… போகலாம். ” என்றான்.
          ஆற்று நீரில் கைகளைக் கழுவிக்கொண்டு அவனுடன் புறப்பட்டேன்.
          ” என்ன அண்ணே கோகிலத்திடம் சொன்னீங்க? இப்படி தேம்பித்தேம்பி அழுவுதே! “
          ” நான் விட்டுட்டு போய்விடுவேன்னு அழுவுது. ”  அவனிடம் வேறு என்ன சொல்வது?
         ” நீ போனபின்பு நாந்தாம் மாட்டிட்டு முழிப்பேன். ” தலையைச் சொரிந்தான்
          ” பரவாயில்லை. நான் வரும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்.அவசரப்பட்டு எதாவது செய்துகொள்ளப்போவுது. ”
இது விளையாட்டான காரியம் இல்லையென்றாலும் ஒருவகையில் வேடிக்கையாகவும் இருந்தது. அடுத்தவன் மனைவியை எப்படிக் காப்பது என்று நாங்கள் இப்படி பேசிக்கொண்டது. மருத்துவம் பயின்றால் ஓர் உயிரைக் காக்க இப்படிக்கூட செய்யவேண்டுமோ?
          இரவு வரப்போவதாக கூறியுள்ளாள்.. என்ன ஆகும் என்று தெரியவில்லை. பேசாமல் இறுக்க போர்வையால் போர்த்திக்கொண்டு தூங்கவேண்டியதுதான். தூக்கம் கலையாததுபோல் நடிக்கவேண்டும்தான். காலையில் ஏதாவது சொல்லி சமாளித்துவிடலாம்.
          மீன் குழம்பு கமகமத்தது. அளவுக்கு அதிகமாகவே வயிறு நிறைய சோறு சாப்பிட்டேன். பால்பிள்ளைக்கும் என்னோடுதான் சாப்பாடு. இரவு வெகு நேரம் வாசலில் உலாத்தியவண்ணம் பேசிக்கொண்டிருந்தோம்.
         நன்றாக தூக்கம் வந்தது. திண்ணையில் படுத்ததுதான். விடிந்ததும்  கண் விழித்தேன். கோகிலம் வந்தாளா என்பதுகூடத் தெரியவில்லை.
         தோட்டத்தில் பல் விளக்கியபோது மாட்டுகொட்டகை பக்கம் வந்தாள்
          ” காத்திருந்தீங்களா? வயித்து வலி. அதான் வரல.” என்றுமட்டும் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
         நான் புரிந்துகொண்டேன். நல்ல வேளை நான் தப்பித்தேன்,இனி ஐந்து நாட்கள் அவள் வரமாட்டாள். நான் ஊர் சென்றுவிடலாம்!
         விடுமுறை முடிந்து கல்லூரி புறப்பட்டேன். கிராமத்தில் குடும்பத்தினருடனும், .உறவினரோடும், ஊராரோடும் அந்த ஒரு வாரத்தைக் கழித்தது பிடித்திருந்தது. இன்னும் சில நாட்கள் கூட இருந்தால் பரவாயிலைதான்.அதற்கென்று பிரயாணத்தைத் தள்ளிப்போட .முடியாது. எனக்கும் கல்லூரிக்குத் திரும்பவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. மீண்டும் பாடங்களில் கவனம் செலுத்தவேண்டும். கையில் கொண்டுவந்த சில பாட நூல்களைப் படிக்கும் சூழல் கிட்டவில்லை – ஒன்றைத் தவிர. அது ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்ப்ரிட்ஜ் “. அது நாவல் என்பதால் நேரம் கிடைத்தபோதும், பிரயாணங்களின்போதும் எளிதாக படிக்க முடிந்தது. நூல் முழுவதையும் படித்து முடித்துவிட்டதால் இனிமேல் ஆங்கில வகுப்புகளில் நிம்மதியாகத் தூங்கலாம். ஆசிரியர் குண்டர்ஸ் அதைக் கண்டுகொள்ளமாட்டார்.
          குடி போதையில் மனைவியையும் குழந்தையான மகளையும் ஒரு மாலுமியிடம் விற்றுவிடுகிறான் ஹென்சார்ட். பதினெட்டு ஆண்டுகள் கழித்து அந்த மாலுமி கடல் பிரயாணத்தில் காணாமல் போய்விடுகிறான். அவனைத் தேடிக்கொண்டு மனைவியும் மகளும் கேஸ்ட்டர்பிரிட்ஜ் நகருக்கு வருகின்றனர். அவனை தூரத்து உறவு என்றும் உதவி கேட்கலாம் என்றும் மகளிடம் சொல்லி வைத்துள்ளாள்.
         மேயர் ஆகிவிட்ட ஹென்சார்ட் தன்னுடைய மனைவி சூசனை பார்த்தபின் அவர்கள் இருவரும் கடந்துபோன சோகக் கதையை மகள் எலிசபெத் ஜெனுக்குத் தெரியாமல் மறைக்க முடிவு செய்கின்றனர். அனால் அவளுக்குத் தெரியும்படி இருவரும் பழகி மீண்டும் திருமணம் செய்துகொள்கின்றனர். ஊர் மக்களுக்கும் அவர்களுடைய கடந்தகால வாழ்க்கைத் தெரியாது. தெரிந்தால் அவனுடைய மதிப்பும் மரியாதையும் என்னாவது?  பார்ப்ரே என்னும் ஸ்காட்லாந்து இளைஞனை தனது கோதுமை வியாபாரத்துக்கு நிர்வாகியாக சேர்த்துக்கொள்கிறான். கொஞ்ச நாட்களில் சூசன் இறந்துவிடுகிறாள். அப்போதுதான் அவனுக்கு ஓர் உண்மை தெரியவருகிறது. தனக்குப் பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டது என்பதும், எலிசபெத் ஜேன், மனைவியை வாங்கிய நியூசன் என்ற அந்த மாலுமிக்குப் பிறந்தவள் என்பதே அந்த உண்மை!
           இதற்கிடையில் ஹென்சார்ட் தனியாக இருந்தபோது லூசெட்டா என்ற இளம் பெண்ணுடன் நெருக்கமான உறவு ( காதல் ) இருந்துள்ளது. அவள் ஜெர்சியைச் சேர்ந்தவள். அவனை மணந்துகொள்ளலாம் என்ற முடிவுடன் அவள் வருகிறாள். ஆனால் அவள் இளைஞனான பார்ப்ரேயைப் பார்த்ததும் அவன்மேல் மையல் கொள்கிறாள். அவனுக்கும் அவள்மீது கவர்ச்சி உண்டாகிறது. பாப்ரேயின் புகழ் மக்களிடையே பரவியதை ஹென்சார்டினால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ( தன்னுடைய முன்னாள் காதலியை அவன் வைத்திருப்பதும் ஒரு காரணம் ) அவனை வேலையிலிருந்து நீக்கிவிடுகிறேன்.ஆனால் அவனோ போட்டியாக கோதுமை வியாபாரத்தை தொடங்கியதோடு லூசெட்டாவை மணந்துகொள்கிறான்!
          பார்ப்ரேயின் செல்வாக்கு உயர்கிறது. ஹென்சார்ட்டின் புகழ் சரிகிறது. அவனுக்குப்பின்பு மேயர் பதவிக்கு வந்தவன் திடீரெண்டு இறந்து விடுகிறான். பார்ப்ரே மேயர் ஆகிறான். ஹென்சார்ட் இன்னும் வேகமாக சரிகிறான். இருபது வருடங்களுக்கு முன் அவனுக்கு மது விற்ற அந்த மூதாட்டி தெருச்சுற்றியானதால்  கைது செய்யப்படுகிறாள்.அவள் ஹென்சார்ட் குடிபோதையில் தன்னுடைய மனைவியையும் மகளையும் ஒரு மாலுமியிடம் விற்றவன்தான் என்பதை அம்பலப்படுத்தி அவனை மேலும் இழிவு படுத்துகிறாள்! நிர்வாகச் சீர்கேடும் கெட்ட நேரமும் அவனுடைய கோதுமை வியாபாரம் படு வீழ்ச்சியடைந்து இறுதியில் அவன் திவால்  ஆகிறான். நொடிந்துபோன நிலையில் வேறு வழியின்றி அவன் பார்ப்ரேயிடம் ஊழியனாகிறான்.
          பார்ப்ரெயின் மனைவியாகிவிட்ட  லூசெட்டா செல்வத்திலும் செல்வாக்கிலும் உன்னதமான இடத்தைப் பெறுகிறாள். ஆனால் ஹென்சார்ட்டிடம் தான் கொண்டிருந்த காதல் அம்பலமாகிவிடுமோவென்று அஞ்சுகிறாள். அவனுக்கு எழுதியிருந்த காதல் கடிதங்கள் ஹென்சார்டின் எதிரியான அவனுடைய முன்னாள் ஊழியன் ஜோப் என்பவனின் கைகளில் சிக்குகின்றன. அவன் அதை தகாதவரிடம் அம்பலப்படுத்திவிடுகிறான். அவர்கள் ஹென்சார்ட்  லூசெட்டா இருவரின் கொடும்பாவிகளை ஊர்வலமாக நகர வீதிகளில் கொண்டுசென்று அவர்களை இழிவுபடுத்துகின்றனர். இதனால் மனமுடைந்துப்போன லூசெட்டா மரணமடைகிறாள்.
          நடைபிணமான ஹென்சார்ட் குடிசைவாசிகள் பகுதியில்  நாட்களைக் கழிக்கிறான். அவன் மீது அன்பு செலுத்த எலிசபெத் ஜேன் மட்டுமே உள்ளாள். ஆனால்   மகளைத் தேடிக்கொண்டு மாலுமி நியூசன் வருகிறான். அவனிடம் அவள் இறந்துவிட்டதாகக் கூறிவிடுகிறான். இதை அறிந்த எலிசபெத் ஜேன் அவனை வெறுக்கிறாள்.அவனுக்கிருந்த ஒரே ஆதரவையும் அவன் இழந்துபோகிறான்.
          லூசெட்டாவை இழந்த பார்ப்ரே எலிசபெத்திடம் சரண் அடைந்து அவளுடைய அன்பை வேண்டுகிறான்.அவளும் சம்மதிக்கிறாள். அவர்களுடைய திருமணத்தின்போது பரிசளிக்க ஹென்சார்ட் சென்றபோது, அங்கு அவளுடைய தந்தையாக நீயூசன் சிறப்பு செய்யப்பட்டதைக் கண்டு மனம் உடைந்துபோகிறான்.அங்கிருந்து வெளியேறிய ஹென்சார்ட் சில நாட்களில் காலியான ஒரு குடிசையில் இறந்துபோகிறான். அவனிடம் ஒரு காலத்தில் பணியாற்றிய மிகவும் சாமானிய தொழிலாளர்கள் அவனுக்கு இறுதிச் சடங்கு செய்கின்றனர்.
          அந்த குடிசையைத் தேடிவந்த பார்ப்ரேயும் எலிசபெத் ஜேனும் அவன்  விட்டுச்சென்ற கடைசி உயிலைக் கண்டு அதிர்ச்சி அடைவதுடன் நாவல் முடிகிறது.
          தான் எல்லாரையும் எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டதாக அதில் எழுதியிருந்தது.
          தாமஸ் ஹார்டி என்னும் இங்கிலாந்தின் நாவலாசிரியர் 1886 ஆம் வருடம் எழுதிய ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ்  ” நாவல் இன்றுவரை பல்வேறு விமர்சங்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டு பேசப்படுகிறது. உலக இலக்கிய அரங்கில் அது என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் கதையை பகுதி பகுதியாகக் கூறுவதைக் தவிர்க்கும் வகையில் முழுவதையும் இங்கே கூறிவிட்டேன்.
          நாவல் சோகமாகவே முடிந்ததுபோன்று, நான் விடைபெற்றதும் சோகமாகவே அமைந்தது. ஆம். கோகிலத்தின் மனம் என்ன பாடு படும் என்பதை நான் உணர்ந்தேன். அவளைப் பொருத்தவரை இந்த உலகிலும் தன்னுடைய வாழ்விலும் கிடைத்த ஒரே துணையாக என்னைக் கருதுகிறாள். எனக்காவவே வாழ்கிறாள். என்னைக் காணும்போதெல்லாம் மகிழ்கிறாள். நான் போகும்போது   வாடுகிறாள். வெறிச்சோடிய வாழ்வு அவளுக்கு. சூன்யமான சூழல். கணவன் இருந்தும் இல்லாத நிலை.
          வாசலில் கூண்டு வண்டி நின்றது. வழியனுப்ப கூடிவிட்டனர்.  வாடிய மலர்போல் அவள் வதங்கி நின்றாள். நான் வண்டிக்குள் ஏறிவிட்டேன். கலங்கிய கண்களால் விடை தந்தாள். அவள் கண்களில் ஏக்கம். என் மனதில் துக்கம்.
          அளவுக்கு அதிகமான அன்பு செலுத்தினாலே இந்த துன்பம்தான்.உற்சாகமாக ஊருக்கு வந்த நான் எதையோ இழந்துபோன நிலையில்தான் திரும்பினேன்.
           காளைகள் இரண்டும் சலங்கைகள் ஜல் ஜல்லென்று ஒலிக்க சிதம்பரம் நோக்கி சவாரி செய்தன. அரை மணி நேரத்தில் இரயிலடி சேர்ந்துவிட்டோம்.
          ரேணிகுண்டா துரித பயணியர்  புகைவண்டி மூலம் வேலூருக்குப் புறப்பட்டுவிட்டேன்.

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationசிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.நானும் என் ஈழத்து முருங்கையும்