நட்பு என்றால்?

This entry is part 8 of 10 in the series 22 நவம்பர் 2020

பிரியா. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வந்த முதல் நாள். சேலை அவளுக்கு கொஞ்சம் அந்நியமானாலும், காஞ்சிபுரப் பட்டில் நுழைந்து கொண்டு திராட்சை விழிகள் உருள ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறாள். பட்டு அங்கங்கே லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுகிறது. பாதங்களில் மருதாணி ஓவியம். தங்கக் கொலுசு தெரிந்தது. ஊஞ்சல் லேசாக ஆடுகிறது. பெண் பார்க்க அக்கம் பக்கத்தினர் வந்துகொண்டிருந்தனர். தட்டில் சீனியும் பூவும் கொண்டு வந்தார்கள். தரையில் விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில் அமர்ந்து விழிகளை மட்டும் உருட்டி பிரியாவை பார்ப்பது பிறகு பார்த்ததைச் சொல்லி ரசிப்பது, இப்படியாக காட்சி நகர்கிறது. புதிதாக தாவணிக்கு அறிமுகமான வேலைக்காரப் பெண் பார்வதி எல்லாருக்கும் காப்பி தருகிறார். பிரியாவின் மாமியார் பானுமதி அடுப்படியில் பெரிய அலுமினியச் சட்டியில் காப்பி கலக்குகிறார்.  பெரிய தாம்பாளத்தில் மெதுவடை. பக்கத்திலேயே கண்ணாடிக் கோப்பை ‘நான்தான் சட்னி வைத்திருக்கிறேன்’ என்றது. முதல் வடை எடுத்ததை கவனித்திருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்  சிலர் இரண்டாம் வடையை லவட்டினார்கள். அதோ அந்த மூலையில் கே.பி சுந்தராம்பாள் மாதிரி உட்கார்ந்திருக்கிறாரே அவர்தான் பாக்கியத்தம்மாள். கணவர், மகன், மருமகள், எல்லாரும் எங்கே என்று தெரியவில்லை. ஒரு பேரப் பிள்ளையோடு வாழ்கிறார். அந்தக் கால கே. எஸ் கோபாலகிருஷ்ணன் பட வில்லி மாதிரி வாயைத் திறந்தால் ‘ஒரு நாசம் உதயம்’ என்று அர்த்தம். அந்த ஊரில் சித்ரா என்ற பெண்மணி ‘எம் புருஷன் நா சொன்னா கேக்கிறதேயில்ல’ என்று பாக்கியத்தம்மாவிடம் சொல்லப்போக அவர் கணவரிடம் போய் ‘ஒனக்கு சொல் புத்தியும் இல்ல சுயபுத்தியும் இல்லேன்னு ஒன் பொண்டாட்டி சொல்றாப்பா’ ன்னு சொல்ல அவர்கள் இருவரும் சில மாதங்களாக பேசிக் கொள்வதில்லை.

பிரியாவின் மாமனார் மாரியப்பா எல்லாருக்கும் உதவி செய்வார். சமீபத்தில் அவர் செய்த உதவி ஒரு 15 வயதுப் பையனின் மதிப்பெண் அட்டையில் அவன் அப்பா மாதிரியே கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததுதான். பானுமதியிடம் ‘டா’ மட்டும் இல்லாமல் வாங்கிக் கட்டிக் கொள்வார். கொஞ்சம் சொரணை மைனஸ் ஆகியிருக்கலாம். இந்த கையெழுத்து விவகாரம் பானுமதிக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் ‘இந்த ஜென்மத்தைத் திருத்தமுடியாது’ என்று விட்டுவிட்டாரா என்பது தெரியாது. மாரியப்பாவின் தொழில் மளிகை. ‘மாரியப்பா மளிகை’ என்றால் பேராவூரணியில் ஆனா ஆவன்னா மாதிரி எல்லாருக்கும் தெரியும். அட! பிரியாவின் கணவனைப் பற்றிச் சொல்லவில்லையே. பெயர் உமாபதி. செம்பட்டை மீசை. மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி  கலந்த மசாலா நிறம். சிரிக்கும்போது மீசை பல் வரிசையை கைகுலுக்கி நலம் விசாரிக்கும். கப்பல்துறையில் பொறியியல் பட்டம். பிரியாவுக்கு ஏற்ற ஜோடி என்று பேசிக்கொண்டார்கள். பிரியா படிக்கும் போதே பலராலும் காதல் கடிதம் எழுதப்பட்டுக் கொடுக்கப்படாதவள். பிறகு அவள் திருச்சி ஹோலிக்ராஸில் இளநிலை வேதியியல் படித்தாள். சக மாணவர்கள் திருச்சி சென்றால் அந்தக் கல்லூரியைப் பார்த்து ‘இதுதான் பிரியா படிக்கும் காலேஜ்’ என்று ஏதோ சுற்றுப்பயணத் தளத்தைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு வருவார்கள். அழகு விஷயத்தில் பிரியா பல நிக்கல் காசுகளுக் கிடையே ஒரு தங்கக் காசு. பிரியா அப்பாவுக்கு புதுக்கோட்டையில் இரும்பு வியாபாரம்.

மாரியப்பாவுக்கு நிறைய பங்காளி உறவுகள். எல்லாம் தனித்தனியாக பர்லாங் இடைவெளியில் நட்ட நாற்றுக்கள். ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதில்லை. என்ன? சொத்துச் சண்டைதான். வீட்டை ஒருவன் கேட்டால் மனையை இன்னொருவன் கேட்கிறான். தோட்டத்தை ஒருவன் கேட்டால் அதிலுள்ள தென்னை மரங்களை இன்னொருவன் கேட்கிறான். அடப்போங்கப்பா! எல்லாச் சொத்துக்களும் கட்டுக் கட்டாய் பட்டுக்கோட்டை நீதிமன்ற அலமாரிகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. மாரியப்பாவுக்கு மளிகைக் கடை போதும்.

நட்பு என்று சொல்ல ஒரே ஒரு குடும்பம்தான் மாரியப்பாவுக்கு. அதுதான்  முருகானந்தம் குடும்பம். முருகானந்தம் மனைவி சாவித்திரி, மகள் ராகினி அதில் அடக்கம். கலப்படத் தடுப்புத் துறையில் அவர் ஓர் அதிகாரி. மாரியப்பா முருகானந்தம் நட்பு, உறவுகளைவிட மேலான நட்பு. சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் சுமைதாங்கி நட்பு. காரணம் பல. முதலாவதாக இருவரும் பேராவூரணி உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தது. இரண்டாவதாக தன் கடையில் கலப்படம் இருக்கிறதா என்று எடுக்கப்பட்ட மஞ்சள் தூள் மாதிரியிலிருந்து மாரியப்பாவை தப்ப வைத்தது. ஏதோ ‘ மஞ்சு மஞ்சள் தூள்’ என்று ஒரு வியாபாரி அனுப்பியது.  அதே தூள் இரண்டு கடைகளில் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருவரும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். மாரியப்பா கடையில் எடுத்த மாதிரியை முருகானந்தம் மாற்றி வேறு நல்ல தூளை வைத்துவிட்டார். இந்த இரண்டு காரணங்கள் மட்டுமல்ல. முருகானந்தம் அடிக்கடி வெளியூர் போய்விடுவார். அவசரத் தேவைக்கு உதவுவது மாரியப்பாதான். சில  சமயம் முருகானந்தன் மனைவி சாவித்திரி  புதுக்கோட்டைக்கு போவார். அப்போது மகள் ராகினிக்குத் துணையாக பானுமதி வந்துவிடுவார். பானுமதி வந்தால் உமாபதியும் வந்துவிடுவான். ராகினி மருத்துவக் கல்லூரிக் கனவில் ப்ளஸ் 1ல் உருண்டு உருண்டு படித்து தன்னையே உடைத்து உடைத்து ஒட்டிக் கொண்டிருக்கிறாள். செழித்த வாழைக்கன்று வனப்பு. உமாபதிக்கும் ராகினிக்கும் கிச்சுக் கிச்சுத் தாம்பாள உறவு.  உமாபதி செய்தித்தாள் படித்தால் ராகினி உமாபதி தோளில் சாய்ந்துகொண்டு அவளும் படிப்பாள்.

முருகானந்தம் வெளியூர் சென்றிருந்த ஒரு  நாள் அவர் மனைவி சாவித்திரியும் ஏதோ வேலையாக புதுக்கோட்டை செல்ல ராகினிக்குத் துணையாக பானுமதி வந்திருந்தார் உமாபதியும் அங்குதான். ராகினி பள்ளிக்கூடம் புறப்படுகிறாள். தாவணியை மேலே போட்டுக்கொண்டு ஒரு கையில் ஊக்கோடு வந்தாள்.

‘உமா இந்த ஊக்கைக் கொஞ்சம் போட்டுவிடேன்’

உமாபதிக்கு முன்னால் திரும்பி நிற்கிறாள் ராகினி. ஊக்கை மாட்டிக் கொண்டிருக்கும்போதுதான் அங்கே பாக்கியத்தம்மா வந்தாள். அந்தக் காட்சியை தன் ‘70 எம்மெம்  காமிராவில்’  கிளிக் செய்து தன் ‘ஹார்ட் டிஸ்கில்’ சேமித்துவிட்டாள். அவளுக்குத் தெரியும் ‘அதை யாருக்கு எப்போது எப்படி போட்டுக் காட்ட வேண்டும்’ என்று

*****

ஊஞ்சலில் பிரியா சுஜாதாவின் ‘வெள்ளைக் கப்பல்’ படித்துக் கொண்டிருந்தாள். பாக்கியத்தம்மா வந்து பக்கத்தில் உட்கார்ந்தாள். பானுமதி வேறு வேலையாக அடுப்படியில். ஒரு நாசம் பிறக்கப் போகிறதோ?

‘ஒம் புருஷன் உமாபதி அந்த ராகினிக்கு சேலெ கட்டிவிர்றாம்மா. எதுக்கும் உஷாரா இருந்துக்க.’

பிரியா ஏதோ கேட்கப்போக பானுமதி அங்கே வந்துவிட்டார்.

‘அப்புடியே லட்சுமிக் கலெ. மருமகள்னா இப்புடில்ல இருக்கணும். பானுமதி நீ குடுத்துவச்சவடீ’

சொல்லிக்கொண்டே அடுப்படிக்குப் போனார்.

‘இன்னிக்கு என்ன சமெச்சே பானுமதி?’  பாக்கியத்தம்மா வந்ததே அந்த மதியம் கிடைப்பதைச் சாப்பிடத்தான்.

அன்று இரவு பிரியாவுக்கும் உமாபதிக்கும் யுத்தகாண்டம். முடிவாக இருவரும் முதுகைத் திருப்பிக் கொண்டு தூங்கினர். அல்லது தூங்குவது போல் நடித்தனர். எங்கே தூங்குவது?  உமாபதிக்குள்ள ஒரே ஆதரவு சிங்கப்பூரில் ஒரு கப்பல் கம்பெனியில் வேலை கிடைத்ததுதான். இந்தப் பிரச்சினையெல்லாம் சிங்கப்பூர் சென்றுவிட்டால் தொடராது என்று நம்பினான்.

*****

சிங்கப்பூரில் உமாபதி, பிரியா. புக்கிட் பாத்தோக்கில் வீடு. ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மா தொலை பேசுவார். ஒரு மணி நேரம் ஒரு தும்மல் போடும் நேரத்தில் முடிந்துவிடும். பேசும்போது முரு அங்கிள், சாவித்திரி மாமி, ராகினி என்ற பெயர்கள் வராமல் பார்த்துக் கொள்வான். அப்பாவுக்குத்தான் சர்க்கரை அதிகமாகிவிட்டதாம். இன்சுலின் எடுத்துக் கொள்கிறாராம். பேசுவதே அப்பாவை விசாரிக்கத்தான். மற்றதெல்லாம் கொசுறு.

*****

ஒரு முக்கியமான வேலையாக உமாபதி பிரியாவுடன் வீட்டு வசதிக் கழக அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அன்று சென்றார்கள். அந்த அதிகாரி தன் மடிகணினியைத் திறந்து உமாவின் கணக்கைத் திறக்க முயன்றார். மடிகணினியைத் திருப்பி ‘சிங்பாஸ்’ பதிக்கச் சொன்னார். உமா பதித்தான். இன்னொரு யுத்தகாண்டம் தொடரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. உமாவின் விரல் ஓடிய பாதையில் அந்த சிங்பாஸைக் கணித்துவிட்டாள் பிரியா. Rahi1985ni. ராகினியை உடைத்து இடையே தன் பிறந்த ஆண்டைச் சொருகியிருந்தான். வீட்டுக்கு வந்ததும் உதறிய செருப்பு 6வது மாடியிலிருந்து தரையில் விழுந்தது. முதலில் உள்ளே போய் கதவை அவள் மோதிய வேகத்தில் விட்டிருந்தால் உடைந்திருக்கலாம். உமா கதவைப் பிடித்து பிறகு மெதுவாக சாத்தினான். சூறாவளி மையங்கொண்டு விட்டது. உமா சமாளித்தான்

‘என் எல்லா ஈ மெயிலிலும் ஒம் பேருதான். ஒரு மாத்தமா இருக்கட்டுமேன்னுதான்.’ வழிந்தான்.

ஒற்றை மெத்தையை கூடத்தில் விரித்துக் கொண்டு தனியாகப் படுத்தாள். சிங்கப்பூரில் சண்டை வரும் வேகத்தில் சமாதானமும் ஆகிவிடும். கேட்பதற்கோ சொல்வதற்கோ யாருமில்லையே? கண்ணாடிப் பாத்திரத்தை உடைப்பதென்றாலும் அவர்கள்தான். அதை ஆபத்தின்றி அள்ளிக் கொட்ட வேண்டியதும் அவர்கள்தான்.

*****

அடுத்து ஒரு ஞாயிறு. தொலைபேசியில் அம்மா. ‘ம்..ம் என்று கேட்டுக் கொண்டே இருந்தான். உமா. அப்படிக் கேட்டால் அது பிரியாவுக்கு தெரியக்கூடாத விஷயம் என்பது பிரியாவுக்கே தெரியும். அம்மா சொன்னது என்ன? ‘ராகினிக்கு மருத்துவக் கல்லூரி கிடைத்துவிட்டது. ஏகப்பட்ட காசு தேவைப்படுகிறது. முடிந்தால் ஒரு லட்சம் அனுப்பு.’ என்பதுதான்.

‘சரி அனுப்பிர்றேன்’ அவன்.

‘என்ன அனுப்பப் போறீங்க’  இது  பிரியா.

‘அம்மா அடுப்படிய இடிச்சுட்டுக் கட்டப் போறாங்களாம். அதான்’ என்றான் அவன். இந்த மாதிரிப் பொய்யெல்லாம் ஏற்கனவே யோசித்து வைத்துக் கொண்டுதான் தொலைபேசியையே தொடுவான்.

*****

உமாபதி குளித்துக் கொண்டிருந்தான். குளிக்கப் போகும்போது தன் தொலைபேசியை அமைதிப் படுத்திவிடுவான். அன்றுதானா அவன் மறக்க வேண்டும். அவன் தொலைபேசியில் ‘டப்’ என்று ஒரு சப்தம். ஒரு செய்தி வரும் அறிவிப்பு. பிரியா பக்கத்தில்தான். உடனே தொலைபேசியை பார்வையால் எரித்தாள். அந்த செய்தி அப்படியே இருந்தது. அது அவன் வங்கி அனுப்பிய செய்தி.  ‘நீங்கள் முருகானந்தம் பெயருக்கு அனுப்பிய ஒரு லட்சம் வெற்றிகரமாக அவர் கணக்கில் செலுத்தப்பட்டு விட்ட.து’ பிரியா படித்து முடிக்கிறாள். உமா குளித்துவிட்டு திரும்பிவிட்டான். யுத்த காண்டம். கதவைத் திறந்துகொண்டு பிரியா ஓடுகிறாள். கருவேப்பிலைத் தொட்டியை மேலேயிருந்து கீழே வீசப்பார்க்கிறாள். உமா பறித்துக் கொண்டான்

‘ஜெயிலு தெரியுமா? எவனாவது செத்தான்னா? நாம தொலஞ்சோம். என்ன செய்றே? ஃபைன் எவ்வளவு தெரியுமா?’

‘எவ்வளவா இருந்தா என்ன? கட்டு. அந்த முருவுக்கும் ராகினிக்கும் அழுவுறியல்ல. அதுமாரித்தான். ஜெயிலுதானே. ஒன்னோட இருக்கதுக்கு ஜெயிலு தேவலாம்’

இந்த யுத்த காண்டமும் எப்படியோ முடிந்துவிட்டது. அது கண்ணாடித் தட்டு என்றால் இது பெரிய கண்ணாடி ஜாடி. அள்ளிப்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான். இதெல்லாம் ஊரிலிருக்கும் உமாபதியின் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ தெரியாதே. அவர்களைப் பொருத்தவரை இவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள்.

******

அம்மாவிடமிருந்து மீண்டும் பேசி. ‘அப்பாவுக்கு டயாலிசிஸ் செய்றாங்கப்பா. கிட்னி டாமேஜாம். உடனே பொறப்புட்டு வா. அதிகமா எவ்வளவு  நாள் லீவு கெடெக்கிதோ எடுத்துரு. பிரியாவையும் ஒன்னையும் ஒடனே பாக்கணும்னு ஆசைப்பட்றார். எதிர்பாக்கிறோம்’

*****

உமாபதியும் பிரியாவும் திருச்சிக்கு பறந்து கொண்டிருக்கிறார்கள். வலியோடு பயணிக்கும் உமாபதிக்கு  நெருப்பாக இருக்கிறது பிரியாவின் பேச்சு.

‘அந்த முரு வீட்டுக்கு நீங்க போகக்கூடாது. அந்த ராகினிக்கிட்ட பேசுறதெ பாத்தேன், அப்பொறம் நீங்க மட்டும்தான் சிங்கப்பூருக்கு திரும்பி வரணும். சிங்கப்பூருக்கு வரலேனாலும் ஊர்லயும் நீங்க ஒங்க வீட்ல. நா எங்க வீட்ல.’

உமாபதிக்கு இதெல்லாம் காதில் விழவே இல்லை. அவன் அப்பா அவனை ஆக்ர மித்திருந்தார். அவர் நினைவுகளை அவன் கண்ணீரால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். விமானம் திருச்சி விமான நிலையத்தின் தரையைத் தொட்டு உருண்டது. விமான நிலைய சடங்குகள் அடுத்தடுத்து முடிந்தன. வெளியேறினார்கள். அழைப்பதற்கு பிரியாவின் அம்மா அப்பா மட்டும்தான். பிரியா அம்மாவின் புடவையை நனைத்தாள். அப்பாவை அழ வைத்தாள். கார் திருச்சி காவேரி மருத்துவமனை நோக்கி பறந்தது. சாலைத்தடுப்புகள் உமாபதியை சல்லடையாக்கியது. பிரியாவின் அப்பா சொன்னார்.

‘சம்பந்தியெ காவேரிலதான் சேத்துருக்கோம் மாப்ளே. இப்ப நல்லா இருக்கார். தைரியமா இருங்க. பதறாதீங்க மாப்ளே….’

****

காவேரி மருத்துவமனை. அம்மா பானுமதி உமாபதியைப் பார்த்து சத்தமில்லாமல் உடைந்தார். அமைதி..அமைதி …. என்று சைகை காட்டிவிட்டு ராகினி இங்கும் அங்குமாக பறக்கிறாள். பானுமதியும் உமாபதியும் அப்பா படுத்திருந்த அறைக்குள் நகர்கிறார்கள். மௌனமாகக் குலுங்கினான் உமாபதி. மாரியப்பாவுக்கு மயக்கநிலையாம்.

‘வா உமா. நல்லா யிருக்கியா? பிரியா அண்ணி நல்லாயிருக்கீங்களா?’

கேட்டுக்கொண்டே ராகினி ஓடுகிறாள் இன்னொரு அறைக்கு. மீண்டும் மாரியப்பா அறைக்கு வந்தாள். அங்கிருந்த மருத்துவரிடன் ஏதோ சொல்லிவிட்டு  மீண்டும் அடுத்த அறைக்கு ஓடுகிறாள். என்னதான் நடக்கிறது.

மாரியப்பாவுக்கு கிட்னி ட்ரானைஸ்ப்ளான்ட். கிட்னி நன்கொடை முருகானந்தம். ஏற்பாடு ராகினி.

நட்பு என்றால்?

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationகவரிமான் கணவரே !‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *