நானும் வல்லிக்கண்ணனும்

ஒரு இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் தான் சொன்னார்.
‘ வல்லிக்கண்ணனை ஒல்லிக்கண்ணன் என்றே சொல்லலாம்.. அவ்வளவு மெலிசாக இருப்பார். ‘
பல கூட்டங்களில் வல்லிக்கண்ணனைப் பற்றித் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. மணிக்கொடி காலத்து எழுத்தாளர், சிற்றிதழ்களின் பேராதரவாளர் என்றெல்லாம்.
ராயப்பேட்டை பகுதியில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இலக்கிய ஆர்வலர், எனது மேலதிகாரி என்னிடம் சொன்னார்.. ‘ வல்லிக்கண்ணன் இங்கேதான் இருக்கார்.. லாயிட்ஸ் சாலை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எண் 10ன்னு ஞாபகம், இடது பக்கம், தெருக்கோடியில ஒரு சந்து மாதிரி போகும், அதன் மாடியில..’
ஒரு நாள் போய் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை கையில் ஒயர் கூடையை எடுத்துக் கொண்டு ‘ தண்ணித்தொறை ‘ மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வரும்போது வாகனத்தை ராயப்பேட்டைக்கு செலுத்தினேன்.
வீட்டை சுலபமாகக் கண்டுபிடித்து விட்டேன். நண்பர் சொன்னது போலவே தெருக் கோடியில் வாரிய குடியிருப்பு மாடியில்.
அழைப்பு மணி எல்லாம் இருந்ததாக ஞாபகமில்லை.. கதவைத் தட்டியதாகத்தான் ஞாபகம். ஒரு நடுத்தர வயது பெண்மணி கதவைத் திறந்தார்.
‘ வல்லிக்கண்ணன்? ‘
‘ வாங்க ‘ குரல் பின்னாலிருந்து கேட்டது. பெண்மணி நகர்ந்தவுடன் குள்ளமான உருவம் வெளிப்பட்டது. என் பிம்பங்கள் உடைந்தன.
பெரிய தலை, நொறுங்கிய உடம்பு.. கிட்டத்தட்ட சோமாலியப் பிரஜை போல் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
‘ நான் தான் வல்லிக்கண்ணன்.. உள்ளே வாங்க ‘ அவரே சொல்லவில்லையென்றால் நம்பியிருக்க மாட்டேன்.
ஒரு கூடம், ஒற்றை படுக்கையறை, ஒரு சமையலறை.. என்னை இருந்த ஒரே அறைக்குள் அழைத்துப் போனார். அறையில் எதுவும் இல்லை, ஒரு சிறிய மர மேசையும் இரண்டு நாற்காலிகளையும் தவிர.. அதுவும் வருபவர்களுக்குத்தான் நாற்காலி, வ.க.வுக்கு சாய்மானம் இல்லாத இருக்கை. ஒரு சாளரத்திலிருந்து வெளிச்சம் வந்து கொண்டிருந்தது.
‘ என் பெயர் இரவிச்சந்திரன், சிறகுன்னு ஒரு சிற்றிதழ் நடத்திகிட்டிருக்கேன் ‘
‘ நல்லது.. அனுப்புங்க படிக்கிறேன் ‘ குரல் சன்னமாக பெண்மை கலந்து இருந்தது. வாசலில் ‘ வாங்க ‘ என்று அழைத்தது இவர்தான் என்று புரிந்து கொண்டேன்.
‘ இப்போ எழுதறதில்லையா.. சிறகுக்கு ஏதாவது.. ‘
‘ நெறைய பேர் கேட்கறாங்க.. முடியறபோது எழுதறேன்.. ஒங்களுக்கு அனுப்பறேன்..’
பல கேள்விகள் இருந்தன கேட்க வேண்டும் என்று. ஆனால் அவரைப் பார்த்தவுடன் அத்தனையும் மறந்து விட்டன.
லௌகீகமாக ஆரம்பித்தேன்.
‘ நான் என் சகோதரர் குடும்பத்தோட இருக்கேன். நான் கலியாணம் செஞ்சுக்கல.’
தொடர்ந்த பேச்சில் அவர் காரைக்குடி பக்கம் என்றும், ப.சிதம்பரம் வகையறா என்றும் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவர் அப்படி.. இன்னொருவர் இப்படி.
விடை பெறும்போதுதான் மொத்த அறையையும் நோட்டம் விட்டேன். வெறுமையாக இருந்த அறையில் சுவரோரமாக வரிசையாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன சயன வரிசையில்.
‘ ஒங்க கதைத் தொகுப்பு ஏதாவது கிடைக்குமா.. ‘
‘ இல்லீங்களே.. இதெல்லாம் என் அணிந்துரைக்கும் மதிப்புரைக்கும் வந்த புத்தகங்க ‘
வல்லிக்கண்ணனின் கட்டுரைகளைச் சில பத்திரிக்கைகளில் படித்து இருக்கிறேன். ஒரு சில கூட்டங்களில் பாராட்டு என்ற பெயரில் முடியாத அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து உட்கார வைத்தபோது பார்த்திருக்கிறேன். கூட்ட முடிவில் கூட்டம் அவரை மொய்க்கும். நான் ஓரமாக நின்றிருப்பேன். லேசாக தலை திருப்பி அடையாளம் கண்டு சிநேகமாக சிரிப்பார்.
ஒரு கடைமையாக ஒவ்வொரு சிறகு இதழையும் அவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன் அவரது கடைசி காலம் வரை. ஒரு அஞ்சலட்டையில் தன் கருத்தைக்களை சுருக்கமாக எனக்கு உடனே எழுதி அனுப்பிவிடுவார். ஆனால் அதில் நிறைகளே பாராட்டப்படும். குறைகள் அவரால் சுட்டிக் காட்டப்பட மாட்டாது.
கடைசிவரை நான் வல்லிக்கண்ணனின் சிறுகதைகளைப் படிக்கவேயில்லை. எங்கே படித்தால் அவரைப் பற்றிய உயர்ந்த எண்ணம் எனது தர்க்க மனதால் கிழித்தெறியப் படுமே என்கிற அச்சம் தான் காரணம்.
வல்லிக்கண்ணனின் அணிந்துரைகள், மதிப்புரைகள் காரம், கசப்பு என்று எதுவுமில்லாமல் சப்பென்று இருக்கும். யாரையும் காயப்படுத்த விரும்பாதவர் என்று புரிந்தது. ஆனால் அது கறிக்குதவுமோ?

Series Navigationபுதுவைத் தமிழ் சங்கம்காலெட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள்