நான் அவன் தான்

சத்யானந்தன்

பொறுமையின்றி
அழுத்தும் ஒலிப்பானின்
பேரொலியில்
ஒரு ஓட்டுனர்
சுத்தியலாகிறார்

நச்சரிக்கும்
மேலதிகாரி
துளையிடும்
கூராணி

அண்டை அயலின்
அன்புத் தொல்லைகள்
அங்குசங்கள்

உறவுகளின்
சொல்லாடல்கள்
பின்னகரும்
கடிகார முட்கள்

ஒரு நாளின்
ஆரோகண
அவரோகணங்கள்
அனேகமாய்
அபசுரங்கள்

ஒரு கேலிச்சித்திரம்
வரைந்தால்
நானும்
இவற்றுள் ஒன்றாய்…

பசுமையும் நிழலுமான
ஒரு தருவே
மனிதர்களின் தேடல்

பறவைகளுக்கு
மட்டுமே அதன்
நிரந்தர
அரவணைப்பு

Series Navigationவிழிப்புயானையின் மீது சவாரி செய்யும் தேசம்