நிர்வகிக்கப்பட்ட​ கர்வம்

 

 

பழுது பார்ப்பவரது

வருமானம் நிறம்

வேறுபடலாம்

ஆனால் பழுதுகளுக்காக​

யாரையேனும் கட்டாயக்

கூட்டாளியாக்க​ வேண்டியிருக்கிறது

அடிக்கடி

 

சாதனங்கள் தானியங்குவதும்

என் கர்வமும்

சார்புடையவை

கர்வ​ பங்கம் நேரும் போது

பழுது பார்ப்பவர்

மையமாகிறார்

 

என் தேவைகளை முடிவு

செய்யும் நிறுவனங்கள்

என்னையும் அவரையும்

சேர்த்தே

நிர்வகிக்கிறார்கள்

அவ்வழியாய்

என் கர்வங்களையும்

 

சுதந்திரமான​ கர்வம்

சாதனங்களுக்கு

அப்பாலிருக்கிறது

தனித்திருக்கிறது

அசலாயிருக்கிறது

 

கையால் கடற்கரை

மணலைத் தோண்டி

ஊறும் சுவை நீரை

சிறு விலைக்கு

மெரினாவில் விற்றவளிடம்

வெகுநாள் முன்பு

அதைக்

கண்டிருக்கிறேன்

 

சத்யானந்தன்

 

 

Series Navigationதிருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)(20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு