நிழல்களின் நீட்சி

சத்யானந்தன்

இயங்காத நிழல்கள்
போல் நாம்
விடுதலை வரம் கேட்காமல்
இருந்திருக்கலாம் என்றது
கால்பந்தின் நிழல்

வரம் கொடுத்தவர் இரவில்
நாம் இச்சைப்படித் திரிய
அனுமதி தந்தார்
கட்டிட நிழலும்
குப்பைத் தொட்டி நிழலும்
அதை வைத்துக் கொண்டு
என்ன செய்ய இயலும்?
பதிலளித்தது கங்காருவின் நிழல்

பகலில் நாளுக்கொரு வடிவம்
ஒரு நிலைப்பேயில்லை
இது பிச்சைக்காரன் நிழல்

கூர்மையான பல் இல்லை
ஸ்தூல வடிவமில்லை
எலியின் நிழல் என்னை எள்ளி
நகையாடுகிறது பொருமியது
பூனை நிழல்

நிஜத்தின் வெறியை சுமப்பதற்கா
வரம் கிடைத்தது? பதிலளித்தது
எலி நிழல்

என் முன்னே உயிர் விட்டவர்கள்
நிழல் எங்கே
தேடிக் கொண்டிருந்தது
கட்சிக் கொடியின் நிழல்

வரம் தந்தவர் நிழல்
எங்கே
வணங்கத் தேடியது
அணில் நிழல்

அவர் நிழலின்றி
எந்த வெளிச்சத்திலும்
நடமாடுவார்
என்றது கருடன் நிழல்

சாட்டையின் நிழல்
தென்பட்டதும்
பாய்ந்து மறைந்தது
குதிரை நிழல்

சாட்சியாய் நின்றிருந்தது
மௌனமாய்
அமரர் ஊர்தியின்
நிழல்

Series Navigationதிரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வுவரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை