நிழல் வேர்கள்

வரும் மனிதருக்கு
வழி சொல்ல
சிதற விட்டுச் செல்லும்
நம்பிக்கை கற்களில்
மூதாதையரின் பல்வேறு முகங்கள்.

பிரமாண்ட பிரமிட்டின் முனை சிதைந்து
காலமா யுருண்டு
தரைக்கு வரும் கல்.
அதை உற்று நோக்கும்
ஆய்வின் கண்களில்,
மேலே சிதைந்த பகுதியில் பட்டுச் சிதறும்
கதிரொளி.
காலத்தை குத்தி நிறுத்த
ஒரு மனிதன் எழுப்பிய
பிரமிட்டின் முனையில்
அவன் மூக்கு மழுங்கியதாய்
எண்ணி வருகிற சிரிப்பு
பாலைவனத்தில் எதிரொலிக்கும்.

குளிரூட்டப்பட்ட
பெரிய அறையில்
உலகப் பொருளாதாரத்தை
ஒரு நொடியில்
ஏற்றயும் இறக்கவும்
வலிமை கொண்ட கரங்கள் தொட வரம் பெற்ற
லேப் டாப்புகளின்
அணிவகுப்பு.
சொர்க்கத்தைக் காட்ட முனைந்த
பிரமிட்டின் முனையைத்
தோற்கடிக்கும் விரல்முனை கட்டும் திசையில்
உலகம் திரும்புகிறது.

மேசையின் மேல் ஒளிரும்
சிறு கண்ணாடிப் பிரமிட்
கூட்டத்தின் நிறைவில்
குடித்த நீரோடு சென்று
தொண்டையில் லேசாக
அடைத்து மறையும்.

வானுயர்ந்த பிரமிட்டின் பிரதிபலிப்பாய்
மண்ணில் புதைந்திருக்கு மெப்போதும்
மனிதகுல நம்பிக்கைகளின்
ஆணிவேர்.

– துவாரகை தலைவன்

Series Navigationசலனப் பாசியின் பசலை.நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….