நெசமாலும் நாடகமுங்கோ

இரவிச்சந்திரன்

நவீன நாடக இயக்கம் துவங்கி ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. அண்மைக்காலத்தில் நிஜ நாடகக் குழுக்கள், ஆங்காங்கே மண்ணுக்குள் தலை புதைத்த நெருப்புக்கோழிகள் போல இருந்தவை, லேசாக தலை தூக்க ஆரம்பித்திருக்கின்றன. பரிக்ஷா ஞானி, குழு துவங்கி இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதை மகா சனங்களுக்கு நினைவுப் படுத்த, மீண்டும் தன் பழய்ய்ய நாடகங்களைப் போடத் தொடங்கியிருக்கிறார். வேறொரு பக்கம் பிரளயன் தன் உப கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். முக்கோணத்தின் மூன்றாவது பக்கமாக கூத்துப்பட்டறையின் சந்திரஹரி.

ஞானி, நாடகத்தைப் பற்றிய தெளிவைப் பொருத்தவரை அஞ்ஞானியாகவே இருக்கிறார் என்பதே உண்மை. இன்னமும் கதைத் தெளிவும், வசன நேர்த்தியும், அரங்க நிர்மாணமும், ஒப்பனை லாவண்யமும் அவருக்குக் கை வரவில்லை என்பதே இன்றைக்கும் தெளிவாகிறது. மார்ச் மாதம் நடைபெற்ற அவரது
‘ வட்டம் ‘ நாடகம் அமெச்சூர் தனமாக ஆரம்பித்து அரைவேக்காட்டுத் தனமாக முடிந்தது என்பதை நாடகம் பார்த்த 300 நபர்கள் ஒப்புக்கொள்வர்.

இருபத்திஐந்து ஆண்டுகள் கடந்த குழு பரிட்ஷா. ஞானிக்கு ஒளி வட்டம் ஏற்பட்டதே அதனால்தான். சிறிது காலம் தேய்பிறை. மீண்டும் பவுர்ணமியாக பரிட்ஷா வெளிவந்திருக்கிறது. பிறையைப் பார்த்த முகமதியர்போல் நோன்பு முடித்தவர் கூட்டம் அலைமோதியது. சபா நாடகங்களில் கூட காணமுடியாத கூட்டம். ரஜினி படம் போல் விசில்கள் பறக்கின்றன. அரையிருட்டில் அரங்கம் நாடகம் ஆரம்பிப்பதற்குமுன். மங்கிய ஒளியில் முன்னெப்போதோ பார்த்த முகங்களைத் தேடி அலைகின்றன வந்தவர் கண்கள்.
வெள்ளி விழாவைத் துவக்கி வைத்த எழுத்தாளர் அசோகமித்திரன் பரிட்ஷாவின் முதல் நாடகமான இந்திரா பார்த்தசாரதியின் ” போர்வை போர்த்திய உடல்கள்” நாடக வடிவத்தில் நடித்தவர். அதற்கப்புறம் நடந்த ” நாற்காலிக்காரர் ” , வேறொரு நாடகத்தில் ஆச்சார பிராம்மண வேடம் என்று பல பரிட்ஷா நாடகங்களில் நடித்தவர் என்பது ஒரு புதிய தகவல். ஞானியின் நாடகங்கள் அரசு செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்பவை. அதனால் நாடகம் போடுவதற்கு காவல் துறையின் அனுமதிக்காக 6.30 மணிக்கு ஆரம்பிக்கவேண்டிய நாடகத்திற்கு மாலை 7 மணிக்கு அனுமதி கொடுத்த தகவலையும் அசோகமித்திரன் தன் உரையில் குறிப்பிட்டார். மாதம் ஒரு நாடகம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஜானகி – எம்.ஜி.ஆர் கல்லூரி அரங்கத்தில் நடைபெறும் என்ற தகவலை ஞானி அறிவித்தார். அடுத்தது ஜெர்மன் எழுத்தாளர் பெட்ரோ பெர்த் எழுதிய நாடகத்தின் தமிழாக்கம்.

இனி வட்டத்திற்குள்…

அங்கதப்பாணி நிஜ நாடகம் அல்லது நவீன நாடகக்காரர்களின் உத்தி. பாத்திரங்கள் மற்றும் காட்சிகளின் ஊடாத ஏதோவொரு செய்தி புதைந்திருக்கும். அதை கண்டுபிடிப்பவன் ஆழ சிந்திப்பவன். மற்றையோரெல்லாம் நுனிப்புல் மேய்பவர். நாடகம் காலம் உணர்த்தாது. எங்கோ ஆரம்பித்து எங்கோ பயணப்பட்டு எங்கோ முடியும். பாத்திரங்கள் தூய தமிழிலிருந்து சென்னைத் தமிழுக்குத் தாவுவார்கள். டப்பாங்குத்து கலந்த பாலே டான்ஸ் இருக்கும். கூடவே கொஞ்சம் உடான்ஸ¤ம்…. நாடக நடிகர்கள் பார்வையாளர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். தங்களைப் பார்த்துக்கொண்டே தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள். அரங்கை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்னும் அடிப்படை விதியை மீறாமல் வட்டம் சுற்றுவார்கள். தட்டாமாலை ஆடி தடுக்கி விழுவார்கள். இந்த லட்சணங்கள் அனைத்தும் பொருந்திய நாடகம் ” வட்டம்”

சொல்ல வந்ததை குறியீடாக சொல்ல வேண்டும் என்ற விதியை மீறி முதல் காட்சியிலேயே அமெச்சூர்தனமாக வட்டமாக பாத்திரங்கள் உட்கார்ந்து ஆரம்பிக்கிறது நாடகம். துரையாட்சி, சிப்பாய்கள், மலையாள வாடை வீசும் துரை மனைவி ( மன அழுத்தம் கொண்டவள் ), அழகான சேடி, அவளைக் காதலிக்கும் சிப்பாய், ஆண் வாரிசான சின்னக் குழந்தை, நயவஞ்சக துரையின் தம்பி என்று ஏகப்பட்ட பாத்திரங்கள். சொற்ப நடிகர்களே பல வேடங்களை ஏற்க வேண்டிய கட்டாயம். சில நடிக நடிகையர் மங்கிய ஒளியிலும் மின்னுகிறார்கள் சாணிக்குள் இருக்கும் வைரம் போல. குறிப்பிட்டுப் பாராட்டவேண்டியவர்கள் நடிகைகளில் விமலும் அகிலாவும். நடிகர்களில் ஒரே காட்சியில் வந்து போன ப்ரஸாத், ஆர்.கே. வீராச்சாமியாக வந்தவரின் புகழை அவர் தொழில்முறை நடிகர் என்ற தகவல் குறைத்துவிட்டது. பாயசத்தின் மேல் போட்ட குங்குமப்பூவாக பார்த்திப ராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள். வேறு பாத்திரங்கள் ஏற்கும்போது இவர்கள் நடிப்பின் ஆழமும் திறமையும் புரியலாம்.

வீர ஆட்சியோ வன்முறை சர்வாதிகார ஆட்சியோ குறியீடாக கத்தி சின்னத்தில் காட்டப்படுகிறது. கடைசி காட்சியில் அது மாறி இப்போது நடப்பது துடைப்பக்கட்டை ஆட்சிதான் என்பது மாதிரியான தோற்றமும் அளிக்கப்படுகிறது. அடுத்த நாடகத்திற்கு ஞானிக்கு காவல் துறை அனுமதி கிடைக்காமல் போகலாம்.

நினைவில் நின்ற ஒரு வசனம் ” வச்சிருக்கறவுங்க எல்லாம் வைக்கப்போரு நாயிதான்” புரிகிறதா தானும் திங்காமல் மாட்டையும் தின்ன விடாமல்… அரங்கில் ஒருவர் கேட்டார் ” ஒரு குறை தெரியுதுங்க. செந்தமிழ்ல பேசிட்டிருந்தவங்க லோக்கல் தமிழ்ல பேசறாங்களே? ” நான் சொன்னேன் ” அதில ஏதோ உள்ளர்த்தம் இருக்கு. இங்கே புரியாது வீட்டுக்கு போய் அசை போடுங்க மாடு மாதிரி. ஏதாவது புரியும்”.

ஞானி ஒரு விசயத்தில் தெளிவாக இருக்கிறார். நாடகம் பார்க்கவருபவர்களிடம் காசு வசூலித்து நாடகம் போடுவது. No sponsors. எனக்கு கவிஞர் ஞானக்கூத்தன் சொன்ன ஒரு தகவல் ஞாபகத்திற்கு வருகிறது. சிற்றிதழ் ஆரம்பக்கட்டங்களில் பிரபல ஓவியர்களிடம் சிற்றிதழுக்கு (கசடதபர) படம் போட்டுத் தரும்படிக் கேட்டார்களாம். அதற்கு அவர்கள் ஆறு மாதம் குமுதத்திற்கு ஒப்புக்கொண்டிருக்கிறேன், ஒரு வருடம் விகடனுக்கு ஒப்புக்கொண்டிருக்கிறேன் என்றார்களாம். அதனால் ஏற்பட்ட வெறுப்பில் இனி சிற்றிதழ்களில் நவீன ஓவியங்களே போடுவது என்று ஒரு முடிவு எடுத்தார்களாம். ஒரு வேளை ஞானி ஆரம்பக்கால கட்டங்களில் கேட்டுக் கிடைக்காததால் ஸ்பான்ஸர்ஸ் வேண்டாமென்கிறாரா? இந்த மாதிரி பிடிவாதங்களால் நிஜ நாடகம் வளரும் என்று எனக்கொன்றும் தோன்றவில்லை. அதை நிருபிக்கும் வகையில் அவரது இரண்டாவது நாடகமான பாதல் சர்க்காரின் “தேடுங்கள்” நாடகத்திற்கு வந்த பார்வையாளர் எண்ணிக்கை 180. இது அவரே எண்ணிச் சொன்ன தகவல்.

பிரளயனின் “உபகதை” வேறொரு வகை. சாதியக் கொடுமைகளைக் களைய முற்படும் முற்போக்கு எண்ணங்கள் நிறைந்தது. சாதி நாடகங்களை அம்பலப்படுத்தும் வீதி நாடகங்களின் முனைப்பாளர் ப்ரளயன். ஆனால் ‘ உபகதை’யை ஸ்பான்சர் செய்த FJL இன்னும் தன் முகவரித் தெருப்பெயரில் செட்டியைக் களையவில்லை.

பரிக்ஷாவின் நாடகத்தை விட ” உபகதை ” இன்னும் சில பரிமாணங்கள் மேலோங்கி நிற்கிறது. ஏகலைவன் எனும் சூத்திரன் வித்தை மறுக்கப்பட்டதிலிருந்து மேல்சாதியின் ஆதிக்கம் தொடங்குகிறது. ஏகலைவனிடம் பல கேள்விகள் கேட்கும் பாத்திரங்கள். அதற்கு பதிலாக ஏகலைவன் மேற்கோள் காட்டும் இராமர் கதை, பரசுராமர் கதை, சலீம் – அனார்க்கலி கதை எனத் தெரிந்த புராணங்களின் வழியாக சொல்ல வந்த சேதி அழுத்தமாக சொல்லப்படுகிறது. தாயின் தலையைத் துண்டித்த பரசுராமர், தந்தையான ஜமதக்னி முனிவரின் வரம் பெற்று துண்டிக்கப்பட்ட தலையுடன் தாயின் உடல் தேடி அலைகிறார். அவருக்கு கிடைப்பது ஒரு சூத்திரப் பெண்ணின் உடலே. வேறு வழியின்றி அதன் உடலின் தன் தாயின் தலையைப் பொருத்திவிடுகிறார். உயிர் பெற்ற பெண் மேல் சாதித் தலையும் கீழ் சாதி உடலுமாக… வித்தியாசமான கற்பனை. வேறு உடல் பெற்ற தலை முற்போக்கு சிந்தனையுடன் மூர்க்கமாக பேசுகிறது. ” எதற்காக எனக்கு உயிர் கொடுத்தாய்? உன் தந்தையின் குடிலைப் பெருக்கவா? சமைக்கவா? தண்ணீர் கொண்டுவரவா? உன் தந்தையின் சரீர இச்சைகளுக்கு ஈடு கொடுக்கவா? ” கணவனையும் மகனையும் மறுதலித்து அப்பெண் பாத்திரம் வெளியேறுகிறது.

பெண்ணடிமைக்கு எதிராக இதைவிட ஒரு வலுவான முழக்கம் தேவையில்லை. காட்சிப்படுத்துதலில் ப்ரளயன் கை தேர்ந்தவராயிருக்கிறார். ஏற்று நடித்த நடிக நடிகையர் அட்சர சுத்தமாக தமிழைப் பேசுகிறார்கள். முக்கியமாக அவர்களில் யாரும் ‘ புறம் ‘ பேசவில்லை. நம்மை நோக்கியே பேசுகிறார்கள். ஒப்பனையும் உடைகளும் மேடை உபகரணங்களும் அதிக சிரத்தையுடன் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. நடன அசைவுகளுடன் நளின அசைவுகளும் சேர்ந்து கண்ணுக்கு விருந்தாகின்றன. வசனங்கள் புரையோடியிருக்கும் புண்களுக்கு மருந்தாகின்றன.

முக்கோணத்தின் மூன்றாவது பக்கமாக இருப்பது கூத்துப்பட்டறை.

பம்மல் சம்பந்த முதலியாரின் ’சந்திரஹரி’ நாடகம் எந்தக் காலச் சூழலில் எழுதப்பட்டதோ? ஆனால் கூத்துப்பட்டறைக்காரர்களுக்கு சமய சஞ்சீவியாக அது பயன்பட்டிருக்கிறது.
முழுவதும் ஒரு satire பாணியில் எழுதப்பட்ட நாடகம். வசனங்களில் கேட்பதை விட உணர்வது அதிகம். பட்டறையில் சரியாக செப்பனிடப்பட்ட கருவிகளாக பாத்திரங்களை ஏற்கும் நடிக நடிகையர். பெரிதாக செட்டிங்குகள் இல்லாவிட்டாலும் ஒப்பனைகளிலும், உடைகளிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். துள்ளலும் நடையுமாக அனைத்துப் பாத்திரங்களும் தங்களைத் தாங்களே ரசித்துக்கொண்டு நடிக்கிறார்கள். அரங்கு காலியாக இருந்தாலும் இவர்கள் இதே வேகத்தோடு இந்த நாடகத்தை நடத்தியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அண்மைக்காலத்தில் தங்கர் பச்சானின் படங்களில் சில காட்சிகளில் தலை காட்டிய திரு ஜேம்ஸ் இதன் இயக்குனர். வேறொரு வியப்பான விசயம் என்னவென்றால் வசதி படைத்த செல்வ சீமான்களின் கொழுந்துகள் இங்கே கொழுந்து விட்டெரியும் வசனங்களைப் பேசுகிறார்கள். அனைவரும் படித்தவர்கள். முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்யும் மாணவர்களும் உண்டு. எது இவர்களை கூத்தின் பால் இழுக்கிறது? இல்லை சுய மன இறுக்கத்தின் வடிகாலாக இதை இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? சொல்லப்பட்ட கருத்துக்களில் உண்மையிலேயே இவர்களுக்கு சார்பு உண்டா? பல கேள்விகள் எழுகின்றன.

சிற்றிதழ்களைப் போல் நிஜ நாடகக் குழுக்களும் சிறு குழுக்களாகத்தான் செயல்படுகிறார்கள். ஒருவரை ஒருவர் ஒப்புக்கொள்வதில்லை. பாராட்டுவதில்லை.

எல்லாவற்றிற்கும் ஞானியிடம் ஒரு பதில் இருக்கிறது.

“ பிரளயனின் ‘ உபகதை ‘ அரங்க நிர்மாணம், ஒப்பனை, உடைகள், ஒலி, ஒளி எல்லாவற்றிலும் நேர்த்தியாக இருக்கிறதே? “

“ எங்கே போட்டாங்க? “ “ மியூஸிக் அகாடமி “ “ எவ்வளவு டிக்கெட்? “ “ 300 ரூபாய்லேர்ந்து 1000 ரூபாய் வரை “ “ ஏன் நல்லாயிருக்காது? “ “ நாங்க கூட போடலாம் சார். ஆனா நாங்க ஸ்பான்ஸர்ஸ் கிட்டே போகறதில்லேன்னு ஒரு கொள்கை வச்சிருக்கோம் “

கேள்வியும் நானே பதிலும் நானே என்பது போல் ஞானியே கேள்விகள் கேட்டு பதிலும் தந்துவிடுகிறார். பேட்டி எடுப்பவர்களுக்கு வேலை சுலபம்.

நிஜ நாடக இயக்கத்தின் முக்கோணத்தை ஆய்ந்து பார்த்தால் குடும்பக் கட்டுப்பாடு சின்னம் போல் இருக்கிறது.
பிரளய்ன் மேலே இருக்கிறார். பரிக்ஷாவும் கூத்துப்பட்டறையும் கீழ் நோக்கிப் பாயும் பக்கங்கள். இவர்கள் பாய்ச்சலில் பிரளயனையும் சேர்த்து இழுக்காமல் இருந்தால் சரி.

முடிவாக நாடக வெளி பத்திரிக்கை ஆசிரியரும், நிஜ நாடக வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வரும் திரு வெளி ரங்கராஜன் தன்னுடைய “ தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை “ நூலில் சொல்வது நிஜ நாடகப் பார்வையாளர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

“ சபா நாடகங்களால் சலிப்புற்ற மத்திய வர்க்கப் பார்வையாளர்களுக்கு மாற்று நாடகங்களை வழங்க முன் வந்த பரிக்ஷாவிற்கு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அந்த உத்வேகம் போதுமானதாக இல்லை.இதே சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீதி நாடகக் குழு பலப்படாமல் அரசியல் சூழ்நிலைகளின் ஏற்ற இறக்கங்களில் சிக்கித் தன்னுடைய சரளத் தன்மையை இழந்தது. முத்துசாமியின் கூத்துப்பட்டறை அமைப்பு கூத்துக்கும், நவீன நாடகத்துக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. தெளிவான நிர்ணயித்தலுக்கு இவை இடம் கொடுப்பத்தில்லை என்ற குற்றச்சாட்டிற்கும் இவர்களது நாடகங்கள் இலக்காகின்றன. “

Series Navigationசெர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா ?பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்