பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்

ஏமாந்துபோன ஒட்டகம்

 

ரு ஊரில் சாகரதத்தன் என்றொரு வியாபாரி இருந்தான். நூறு ஒட்டகங்களின்மேல் விலையுயர்ந்த துணிமணிகளை ஏற்றுவித்து, அவன் எங்கோ பயணம் புறப்பட்டான். போகிற வழியில், விகடன் என்கிற ஒட்டகம் பாரம் தாங்க முடியாமல் துன்பப்பட்டு, உடல் தளர்ந்து போய்க் கீழே விழுந்தது. அதன்மேலிருந்த துணி மூட்டையை வியாபாரி கீழிறக்கிவைத்தான். மூட்டையிலிருக்கும் துணிகளைப் பாகம் பாகமாகப் பிரித்து மற்ற ஒட்டகங்கள் மீது சமபாரமாக ஏற்றினான். ‘இந்தக் காடு பயங்கரமாயிருக்கிறது, இங்கே தங்க முடியாது’ என்று முடிவு கட்டி, விகடனை அங்கேய விட்டுவிட்டு மேலே போனான். அவன் போனபிறகு, கொஞ்ச நேரத்தில் விகடன் மெல்ல மெல்ல எழுந்து நின்று, திரிந்தபடியே, புல்லைத் தின்னத் தொடங்கியது. இப்படியே கொஞ்ச நாள் ஆனவுடன் அதற்குப் பலம் வந்துவிட்டது.

 

இப்படியிருக்க, அந்தக் காட்டில் மதோத்கடன் என்றொரு சிங்கம் இருந்தது. அதனிடம் ஒரு சிறுத்தை, காக்கை, நரி மூன்றும் வேலை பார்த்து வந்தன. சிங்கமும் அவையும் காட்டில் சுற்றித் திரிந்து வருகிறபோது ஒட்டகத்தைப் பார்த்துவிட்டன. அதற்குமுன் இப்படிப்பட்ட மிருகத்தை அவை பார்த்ததே கிடையாது. அதன் உடம்பைப் பார்த்தாலே சிரிப்புத்தான் உண்டாகும். அவ்வளவு கோமாளித்தனமாக இருந்தது. அதைப் பார்த்த சிங்கம், ”இந்தக் காட்டில் அதிசயமாய்க் காணப்படுகிறதே இந்த மிருகம்! யார் என்று விசாரியுங்கள்” என்று சொல்லிற்று.

 

காக்கை போய் விவரத்தை அறிந்துவந்து, ‘ஜனங்கள் இதை ஒட்டகம் என்று சொல்கிறார்கள்’ என்று தெரிவித்தது.

 

”ஏய், நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று சிங்கம் ஒட்டகத்தைக் கேட்டது. வியாபாரியிடமிருந்து பிரிந்துபோன விஷயத்தை ஒன்று பாக்கி விடாமல் ஒட்டகம் சொல்லிற்று. அதைக்கேட்டு சிங்கத்திற்கு அதன்மேல் இரக்கம் ஏற்பட்டு அபயம் தந்தது.

 

இப்படி இருந்துவரும்போது, ஒரு நாள் சிங்கம் ஒரு யானையுடன் சண்டைபோட்டது. சண்டையிலே யானைத் தந்தங்கள் சிங்கத்தின் உடம்பைக் குத்திவிட்டதால், சிங்கம் குகையிலேயே படுத்துக்கிடக்க வேண்டியதாயிற்று. சிங்கம் வேட்டையாட முடியாமற்போனதால் ஐந்தாறு தினங்கள் ஆவதற்குள் சாப்பாடு பூராவும் தீர்ந்துபோய் விட்டது. சாப்பாடில்லாமல் எல்லோருக்கும் அவசரமான நெருக்கடி ஏற்பட்டது.  அவை பசியால் வாடுவதைச் சிங்கம் கவனித்து, ”முன்போல் உங்களுக்கு இதை தேடித்தர எனக்குச் சக்தி கிடையாது. ஆகையால் நீங்களே போய்ச் சாத்தியமானதைச் செய்யுங்கள்” என்றது.

 

”நீங்கள் இப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நாங்கள் மட்டும் தின்று கொழுப்பதா? வேண்டாம்” என்றன அவை.

 

”பேஷ் நல்ல வேலைக்காரனுக்குள்ள நடத்தையும் பக்தியும் உங்களிடம் இருக்கின்றன. கஷ்டப்படுகிற எனக்கும் சேர்த்து இரை கொண்டு வாருங்கள்” என்றது சிங்கம்.

இதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் அவை சும்மா இருக்கவே, ”வெட்கப்பட வேண்டாம் ஏதாவதொரு மிருகத்தை வேட்டையாடிக்கொண்டு வாருங்கள். எனக்கு என்ன கஷ்டமிருந்தபோதிலும் எல்லோருக்கும் சாப்பாடு தயார் செய்து தருகிறேன்” என்றது சிங்கம்.

 

பிறகு அவை நான்கும் காட்டைச் சுற்றி வந்தன. ஒரு மிருகம்கூடக் கண்ணில் படவில்லை. காக்கையும் நரியும் பேசிக்கொள்ளத் தொடங்கின.

 

”நண்பனே, மேலும் சுற்றித் திரிவதில் என்ன பிரயோஜனம்? நம் ராஜாவை நம்பி இருந்து வருகிறதே, இந்த ஒட்டகம்! இதைக் கொன்று வயிறு வளர்த்தால் என்ன?” என்றது நரி.

 

”நீ சொல்வது நல்ல யோசனைதான். ஆனால் ஒட்டகத்துக்கு அரசர் அபயம் தந்திருக்கிறார். நாம் அதைக் சொல்லக்கூடாதல்லவா?” என்றது காக்கை.

 

”நீ சொல்வது சரிதான். நான் போய் எஜமானரிடம் பேசி அதைக் கொல்ல எண்ணங்கொள்ளும்படி தூண்டிவிடுகிறேன். அவரிடம் பதில் வாங்கி வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு நரி சிங்கத்திடம் சென்றது.

 

சிங்கத்தை அணுகி, ”அரசே! காடு பூராவும் சுற்றிப் பார்த்துவிட்டோம். பசி வாட்டி வதைக்கிறது. இனி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. நீங்களோ பத்தியம் இருந்து வருகிறீர்கள். நீங்கள் மட்டும் கட்டளையிட்டால் விகடனைக் கொன்று எல்லாரும் பசியாற்றிக்கொள்ளலாம்” என்றது நரி.

 

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிங்கத்துக்குக் கோபம் வந்துவிட்டது. ”சீ, நீசப்பாவி! அதை இன்னொருதரம் சொன்னால் உடனே உன்னைக் கொன்று போடுவேன். அபயம் தந்தபிறகு அதை நான் எப்படிக் கொல்ல முடியும்?

 

கோதானத்தையும், பூமிதானத்தையும், அன்னதானத்தையும்கூட அறிஞர்கள் அவ்வளவு சிலாக்கியமாகக் கருதுவதில்லை. எல்லாவற்றிலும் அபயதானமே சிறந்தது

 

என்று சொல்லப்படுகிறதே!” என்று கூறியது.

 

”அரசே! அபய வாக்குத் தந்தபின் கொல்வது தோஷந்தான். ஆனால், ராஜபக்தி மேலிட்டு தன் உயிரைக் கொடுக்கத் தானாகவே முன் வந்தால் அதைக் கொல்வதில் தோஷமில்லை. தானாகவே சாவதற்கு அது ஒத்துக் கொண்டால் அதைக் கொல்லலாம். அப்படியில்லையென்றால், எங்களில் யாரையாவது கொன்று சாப்பிடுங்கள். பத்தியம் இருக்கிறீர்கள். பசியை அடக்கினால் உங்கள் நிலைமை மோசமாகிவிடும். அரசனுக்குப் பயன்படாத எங்கள் உடல் இருந்தென்ன பிரயோஜனம்? உங்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் உடனே நாங்களும் தீயில் பாய்வோம்.

 

அந்தக் குலத்தின் முக்கிய புருஷனை அவரவர்கள் சிரமப்பட்டு காக்க வேண்டும். அவன் இறந்தால் குலமே நாசமாகிவிடும். அச்சு முறிந்தபின் சக்கரக் கால்கள் எப்படி நிற்க முடியும்?

 

என்று ஒரு பழமொழி உண்டு” என்றது நரி.

 

”சரி, நீ விரும்பியபடியே செய்” என்றது சிங்கம்.

 

நரி உடனே வேகமாகத் திரும்பிச் சென்றது. மற்ற மிருகங்களைப் பார்த்து, ”ஐயையோ, அரசர் ரொம்பக் கஷ்டப்படுகிறார். மூக்கு நுனியில் உயிர் ஊசலாடுகிறது. அவர் இறந்தால் பிறகு, யார் இந்தக் காட்டில் நம்மைக் காப்பற்றப்போகிறார்கள்? நாம் போய் பசியோடு இருக்கும் அவருக்கு நமது உடலைத் தானம் செய்யலாம், வாருங்கள். அதனால் அரசனுக்குச் செலுத்த வேண்டிய ஜன்மக் கடனைத் தீர்த்தவர்களாவோம்.

 

எஜமானன் விபத்துக்குள்ளான பிறகு அதைச் சும்மா பார்த்துக் கொண்டு உயிரோடிருக்கும் வேலைக்காரன் நரகத்தைத்தான் அடைகிறான்.

 

என்று பழமொழி உண்டு” என்றது நரி.

 

அவை கண்ணீர் விட்டபடியே திரும்பிப்போய் சிங்கத்தை வணங்கிவிட்டு உட்கார்ந்தன.

 

சிங்கம் அவற்றைப் பார்த்து, ”ஏதாவது மிருகம் மிருகம் கிடைத்ததா? கண்டீர்களா?” என்று கேட்டது.

 

”எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டோம். ஒரு மிருகத்தையும் பிடிக்கவுமில்லை. பார்க்கவுமில்லை என்றது காக்கை. ”ஆகையால் இன்றைக்கு என்னையே கொன்று தின்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கும் திருப்தி ஏற்படும், எனக்கும் சுவர்க்கம் கிடைக்கும்.

 

பக்தி விசுவாசத்துடன் எஜமானுக்காக உயிர்த்தியாகம் செய்கிறவன், நரையும் மூப்புமற்ற பெரும் பதவி பெறுகிறான்.

 

என்று ஒரு பழமொழி உண்டு” என்று காக்கை தெரிவித்துக் கொண்டது.

 

அதைக் கேட்டதும், நரி ”உன் உடம்பு சிறியது. உன்னைத் தின்று அரசர் உயிர்வாழ்வது கஷ்டம். மேலும், உன்னைக் கொன்று தின்றால் வேறொரு தோஷமும் உண்டாகும். எப்படி என்று கேட்டால்,

 

காக்கை மாமிசம் போன்ற அற்ப சொற்பமான உணவுகளை ஏற்கலாகாது. அவற்றைத் தின்பதால் பலனுமில்லை, திருப்தியுமில்லை.

நீ எஜமான விசுவாசத்தைக் காட்டி நல்லவன் என்று இரு உலகங்களிலும் பெயர் எடுத்துவிட்டாய். கொஞ்சம் விலகி நில். நானும் எஜமானரிடம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றது.

 

காக்கை நகர்ந்து கொடுத்ததும், நரி மரியாதையோடு சிங்கத்தை வணங்கிவிட்டு, ”அரசே! இன்றைக்கு என்னைத் தின்று தங்கள் உயிரைக் காத்துக்கொண்டு, எனக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையுண்டாகும்படி செய்யுங்கள்.

 

சம்பளத்துக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களின் உயிர் எஜமானனிடம் பணயம் வைக்கப்படுகிறது. அந்த உயிரை எஜமானன் பெற்றுக்கொள்வதில் ஒரு விதமான தவறுமில்லை.

 

என்றொரு பழமொழி உண்டு” என்றது நரி.

 

இந்தச் சொற்களைக் கேட்டதும் சிறுத்தை நரியைப் பார்த்து, ”நரியே! நீ சொன்னது சரி. ஆனால் உன் உடம்பும் சிறியதுதான். மேலும், நீ நகங்களோடு சண்டை செய்பவன், நீங்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீ சாப்பிடத்தகாதவள். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

உயிர் போகிற நிலைமை ஏற்பட்டாலும், சாப்பிடத் தகாததை அறிவாளி சாப்பிடுவதில்லை. அப்படிச் சாப்பிட்டால் இமையும் மறுமையும் கிட்டாமல் போய்விடும். எனவே அதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

 

சரி. நீ உன் எஜமான விசுவாத்தைக் காட்டிக்கொண்டு விட்டாய்.

 

நல்லகுடியில் பிறந்தவர்கள் அரசனை மகிழ்விப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை.  முதலிலிருந்து கடைசிவரை என்றைக்கும் அவர்களின் கண்ணிம் மாறுவதில்லை.

 

என்கிற ஜனவாக்கு ரொம்பச்சரி. நீ அப்பால்போ. நானும் எஜமானரைத் திருப்தி செய்கிறேன்” என்றது.

 

நரி நகர்ந்து உட்கார்ந்ததும், சிறுத்தை சிங்கத்தை வணங்கிவிட்டு, ”அரசே! இன்றைக்கு என்னைத் தின்று உயிர் வாழுங்கள். சுவர்க்கலோகத்தில் எனக்கு அமர வாழ்வு கிடைக்கச் செய்யுங்கள், பூமியில் என் புகழ்  ஓங்கச் செய்யுங்கள். கொஞ்சமும் தயங்க வேண்டாம்.

 

எஜமானரின் காரியத்தில் வேலைக்காரர்கள் தமது தகுதியைக் காட்டினால் அவர்களுக்குச் சுவர்க்கத்தில் அமர நிலையும் பூமியில் புகழும் கிடைக்கும்.

 

என்றொரு பழமொழி உண்டு” என்றது.

 

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஒட்டகம், ”இவர்கள் எல்லோரு எவ்வளவோ அழகாகப் பேசியிருக்கிறார்கள். ஆனபோதிலும் அரசர் இவர்களைக் கொல்லவில்லை. நானும் இந்தச் சமயத்துக்குத் தக்கபடி பேசுகிறேன். என் வார்த்தையையும் இவர்கள் எல்லோரும் ஆட்சேபித்துப் பேசுவார்கள்’ என்று எண்ணமிட்டது. பிறகு தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தது. ”சிறுத்தைப் புலியே! நீ சொன்னதும் சரிதான். ஆனால் நீயும் நகங்களை உபயோகிக்கிறவன்தான். ஆகவே, உன்னை எப்படி எஜமானர் கொன்று தின்ன முடியும்! ஒரு பொருத்தமான பழமொழியைக் கேள்!

 

தன் இனத்தாருக்கு மனத்தாலும் தீங்கு நினைப்பவனுக்கு இரு உலகிலும் இடம் கிடையாது. அவன் அசிங்கமான புழுவாக ஜன்ம மெடுக்கிறான்.

 

ஆகையால் நீ விலகி நில். நானும் அரசரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றது.

 

சிறுத்தை அவ்விதமே நகர்ந்த பிறகு ஒட்டகம் சிங்கத்தின் முன் வணங்கி நின்று, ”அரசே! இவர்கள் எல்லோரும் சாப்பிடத் தகாதவர்கள். ஆகவே என்னைத் தின்று தாங்கள் உயிர் வாழுங்கள். எனக்கு இரு உலகங்களும் கிடைக்கும்.

 

எஜமானனுக்காக உயிரைக் கொடுக்கும் வேலைக்காரனுக்குக் கிடைக்கிற நற்கதி யோகிகளுக்கும் யாகம் செய்பவர்களுக்கும் கூடக் கிடைப்பதில்லை.

 

என்று ஒரு பழமொழி உண்டு” என்றது.

 

ஒட்டகம் இப்படிச் சொன்னதுதான் தாமதம், உடனே சிங்கத்தின் கட்டளைப்படி சிறுத்தையும் நரியும் பாய்ந்து ஒட்டகத்தின் வயிற்றைக் கிழித்தன. காக்கை அதன் கண்களைப் பிடுங்கியது. ஒட்டகம் உயிரை விட்டது. பசியால் வாடிப் போயிருந்த அவை, ஒன்றையும் மிச்சம் வைக்காமல் அதை விழுங்கித் தீர்த்தன.

 

ஆகையால்தான் ‘மெத்தப் படித்தவர்களில் கூடப் பலர் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்..’ என்றெல்லாம் சொல்லி வந்தேன்” என்று கதையை முடித்தது சஞ்சீவகன். பிறகு, மேலும் தொடர்ந்து தமனகனிடம் பேசுகையில், ”நண்பனே!

 

நீசர்கள் ஆழ்ந்து நிற்கும் இந்த அரசன் அண்டினவர்களுக்கு நன்மை செய்வதில்லை. கழுகுகளை மந்திரிகளாகக் கொண்டு அன்னப்பறவை அரசாட்சி செய்வதைவிட, அன்னப்பறவைகளை மந்திரிகளாகக் கொண்டு கழுகு ஆட்சி செய்வதே மேல். ஏனென்றால் கழுகுகளின் சகவாசத்தால் பல தோஷங்கள்  உண்டாகின்றன. வினாசமடைவதற்கு அவையே போதும். ஆகவே மேலே சொன்ன கழுகைத்தான் அரசனாக்க விரும்ப வேண்டும். கெட்டவர்களின் போதனைகளால் அரசன் சுயமாக யோசித்துத் தீர விசாரித்து நடப்பதற்குச் சக்தியற்றுப் போகிறான்.

 

‘உன் அருகில் நரி இருக்கிறது; அந்த காக்கைக்கும் கூரிய அலகு இருக்கிறது; உன் நண்பர்கள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே மரத்தின்மேல் ஏறிக்கொண்டேன்.’

 

என்று தச்சன் ஒரு கதையில் சொல்லக் கேட்டதில்லையா?” என்றது சஞ்சீவகன். ‘

‘அது எப்படி” என்று தமனகன் கேட்கவே, சஞ்சீவகன் சொல்லத் தொடங்கியது.

Series Navigationஇந்தியா – குறைந்த விலை பூகோளம்முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்