பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்

ஒரு ஊரில் மித்ரசர்மா என்றொரு பிராம்மணன் இருந்தான். அவன் விடாமுயற்சியோடு அக்கினிஹோத்திரங்களைச் செய்துகொண்டு இருந்துவந்தான். தை மாதத்தில் ஒரு நாள். இளங்காற்று வீசியது. வானத்தை மேகங்கள் மறைத்தன. மழை சிறு தூறலாகப் பெய்தது. அந்த வேளையில் பசுதானம் கேட்பதற்காக அந்தப் பிராம்மணன் வேறொரு கிராமத்துக்குச் சென்றான். அங்கே வேறு ஒரு பிராம்மணனிடம், ‘’பிராம்மணா! வரும் அமாவாசையன்றைக்கு நான் யாகம் செய்யப் போகிறேன். அதற்கு ஒரு பசுவை எனக்குக் கொடு!’’ என்றான்.

சாஸ்திரம் சொல்லியபடி அவன் மித்ரசர்மாவுக்கு ஒரு கொழுத்த ஆட்டைக் கொடுத்தான். அதை ஓட்டிப் பார்த்து நல்ல ஆடுதான் என்று கண்டுகொண்டு, மித்ரசர்மா அதைத் தோளில் சுமந்தபடியே தன் ஊருக்குத் திரும்ப அவசரமாகக் கிளம்பினான்.

திரும்பி வரும் வழியில், அவன் மூன்று போக்கிரிகளைச் சந்தித்தான். மூவரும் பசியால் தொண்டை வறண்டு போயிருந்தனர். மித்ரசர்மாவின் தோள்மேல் இருந்த கொழுத்த ஆட்டைக் கண்டனர். ‘’இந்த ஆட்டைத் தின்றால் இன்றைக்குக் குளிரும் பனியும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. இவனை ஏமாற்றி ஆட்டைத் திருட வேண்டும்.’’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பிறகு அவர்களில் ஒருவன் தன் வேஷத்தை மாற்றிக்கொண்டு வேறு வழியாக வந்து மித்ர சர்மாவைப் பார்த்து, ‘’பிராம்மணனே, ஒழுக்கத்துக்கு விரோதமான, கேலிக்கிடமளிக்கும் செய்கையை நீ ஏன் செய்கிறாய்? அழுக்குப்பிடித்த நாயைத் தோளில் சுமந்து செல்கிறாயே!

நாய், கோழி, சண்டாளன், கழுதை, ஒட்டகம் — இவையெல்லாம் தொட்டாலே தோஷம், அவற்றைத் தொடாதே!

என்ற செய்யுளை நீ கேட்டதில்லையா?’’ என்று கேட்டான்.

பிராம்மணனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘’நீ என்ன குருடனா? ஆட்டை நாயாக்குகிறாயே!’’ என்று சொன்னான். ‘’பிராம்மணனே, கோபிக்காதே? உன் இஷ்டம்போல் நட!’’ என்று அந்தப் போக்கிரி சொல்லிவிட்டுச் சென்றான்.

மித்ரசர்மா கொஞ்சதூரம் நடந்தவுடனே இரண்டாவது போக்கிரி அருகே வந்து, ‘’அட, கஷ்டகாலமே! ஏ சாதுவே, செத்துப்போன இந்தக் கன்றுக்குட்டி உனக்கு எவ்வளவு தான்பிரியமானதாயிருந்தாலும் அதைத் தோளில் சுமந்து செல்லலாமா? தகுமா?

செத்த மிருகத்தையும் மனிதனையும் தொடுகிறவன் முட்டாள். சந்திராயணமும், பஞ்சகவ்யமும்தான் அவனைச் சுத்தப்படுத்தக் கூடியவை.

என்றொரு பழமொழி உண்டு’’ என்று சொன்னான். மித்ரசர்மா கோபமடைந்து, ‘’நீ என்ன குருடனா? ஆட்டை ஏன் கன்றுக்குட்டி என்கிறாய்?’’ என்றான். “சுவாமி, கோபிக்காதீர்கள். தெரியாத்தனமாகச் சொல்லி விட்டேன். உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்’’ என்று அவனும் சொல்லிவிட்டுப் போனான்.

மறுபடியும் பிராம்மணன் காட்டில் கொஞ்சதூரம் போவதற்குள் மூன்றாவது போக்கிரியும் வேஷத்தை மாற்றிக்காண்டு எதிரே வந்தான். ‘’ஏய், நீ செய்வது சரியல்ல. கழுதையைச் சுமந்துகொண்டு நடக்கிறாயே!

தெரிந்தோ தெரியாமலோ கழுதையைத் தொட்டாலும் அந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்வதற்குத் துணிமணிகளைத் துவைத்துப் போட்டுக் குளிக்க வேண்டும்.

என்றொரு பழமொழி உண்டு. வேறு யாராவது பார்ப்பதற்குள் கழுதையை இறக்கிவிடு’’ என்றான் அவன்.

ஆட்டின் உருவத்தில் உள்ளது ஒரு அரக்கனே என்று பிராம்மணன் நினைத்து விட்டான். அதைத் தரையில் போட்டுவிட்டு, பயந்துபோய் வீட்டுக்கு ஓட்டம் பிடித்தான். மூன்று போக்கிரிகளும் மறுபடியும் ஒன்று கூடினார்கள். ஆட்டை எடுத்துச் சென்று திட்டமிட்டபடி கொன்று தின்றார்கள். அதனால்தான் ‘அதிக அறிவும், ஞானமும், பலமும் இருந்தாலும்…’ என்ற செய்யுளைச் சொன்னேன்’’ என்றது ஸ்திரஜீவி. அது மேலும் பேசுகையில், ‘’இப்படிச் சொல்வதிலும் நியாயமுண்டு:

புதிதாக வேலைக்கு வந்த வேலைக்காரனின் அடக்க ஒடுக்கம், விருந்தாளியின் புகழ்ச்சி, பெண்களின் கண்ணீர், போக்கிரிகளின் பேச்சுத் திறமை –இவற்றால் வஞ்சிக்கப்படாதவன் யாராவது உண்டா?

பலவீனர்கள்தானே என்று எண்ணி பலபேர்களை ஒருவர் பகைத்துக் கொள்ளக்கூடாது.

பல பேர்களைப பகைத்துக் கொள்ளாதே! ஒரு கூட்டத்தையும் ஜெயிக்க முடியாது. பாம்பு எவ்வளவவோ துடித்துப் பார்த்ததும் எறும்புகள் அதைத் தின்றன.

என்றது ஸ்திரஜீவி. ‘’அது எப்படி?’’ என்று மேகவர்ணன் கேட்க, ஸ்திரஜீவி சொல்லத் தொடங்கியது:

பாம்பும் எறும்புகளும்

ஒரு எறும்புப் புற்றில் ஒரு பெரிய பாம்பு இருந்தது. அதன் பெயர் அதி தர்ப்பன். ஒருநாள் அது வழக்கமாப் போகிற பாதையில் போகாமல் வேறு ஒரு துவாரத்தின் வழியாக வெளியேவரத் தொடங்கியது. அந்தத் துவாரம் சிறியது. அந்தப் பெரிய பாம்பு சிறிய துவாரத்தின் வழியே வெளியேற முயற்சித்தபோது விதிவசமாக அதற்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. காயத்தில் உண்டான ரத்தத்தின் வாடையைக் கொண்டு எறும்புகள் வந்து அதைச் சூழ்ந்து கொண்டு துன்புறுத்தலாயின. பாம்பால் எத்தனையோ எறும்புகள் செத்தன. எத்தனையோ எறும்புகள் அடிபட்டன. இருந்தாலும், எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததால், பாம்புக்கு ஒரு காயத்துக்குப் பதிலாக பல காயங்கள் ஏற்பட்டன. உடம்பெல்லாம் ரணமாகி அந்தப் பாம்பு செத்தது. அதனால்தான் பலபேர்களைப் பகைத்துக்கொள்ளாதே’ என்றெல்லாம் சொல்கிறேன்’’ என்றது ஸ்திரஜீவி. மேலும் அது பேசுகையில் ‘’குழந்தாய், மேலும் சில விஷயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. அவற்றையும் ஆராய்ந்து காரியத்தில் இறங்க வேண்டும்’’ என்றது.

‘’பெரியவரே உங்கள் மனதில் உள்ளதைச் சொல்லுங்கள்’’ என்றது மேகவர்ணன். ‘’குழந்தாய், சொல்கிறேன். கேள், ஸாமம் முதலிய நான்கு உபாயங்களைத் தவிர ஐந்தாவது உபாயம் ஒன்றை நான் கண்டுபிடித்திருக்கிறேன். அது என்னவென்றால், என்னை விரோதியாகப் பாவிக்கிற மாதிரி நடித்து, நிஷ்டூரமான சொற்களால் நிந்தியுங்கள். எதிரி தரப்பில் வேலைசெய்யும் ஒற்றர்கள் நம்புவதற்காக என் உடம்பில் ரத்தத்தைப் பூசி இந்தத ஆலமரத்தடியிலேயே என்னைப் போட்டுவிட்டு, நீ ரிஷ்யமூக மலைக்குப் பரிவாரங்களுடன் போய் இருந்துகொள். எனது சாதுரியமான உபாயத்தால் எதிரிகள் எல்லோரையும் நம்பவைத்து, அவர்களின் கோட்டையின் நடுபாகத்தைத் தெரிந்துகொண்டு அந்தப் பகல்குருடர்களைக் கொன்று விடுகிறேன். கோட்டையிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்குத் தனி வழி இருக்காது என்று ஊகித்தே இந்த உபாயத்தை யோசித்து வைத்தேன்.

தப்பித்துக் கொள்வதற்குத் தனிவழி இருக்கிறதைத் தான் அறிவாளிகள் கோட்டை என்கின்றனர். அப்படி இல்லாமற்போகிற கோட்டை உண்மையில் ஒருபொறியேயாகும்.

என்றொரு பழமொழி உண்டு. நீ என்மேல் இரக்கங்காட்டாதே.

தனக்கு வேண்டியவர்களை உயிருக்குச் சமானமாக மதித்துக் காப்பாற்றிப் பேணினாலும், யுத்தம் வரும் காலத்தில் அவர்களைக் காய்ந்த விறகு என்று நினை.

என்றொரு பழமொழி உண்டு. இந்த விஷயத்தில் நீ என்னைத் தடுக்காதே.

எதிரியைத் போரில் எதிர்கொள்ள நேருகிற நாளை எதிர்பார்த்து, எப்போதும் வேலையாட்களை உன் உயிரே போல் காப்பாற்றி வா! உன் உடலைப்போல் அவர்களைப் போஷித்து வா!

என்றது ஸ்திரஜீவி.

இப்படிச் சொன்னபிறகு, ஸ்திரஜீவி மேகவர்ணனுடன் சண்டை செய்வதுபோல் பாசாங்கு செய்தது. அது அலகைத் தூக்கிக் கொண்டு அரசனோடு சண்டை செய்வதைக் கண்ட காக்கைப் பரிவாரஙக்ள் ஸ்திரஜீவியைக் கொல்ல விரைந்தன. அவற்றைப் பார்த்து மேகவர்ணன், ‘’நீங்கள் எல்லோரும் ஒதுங்கி நில்லுங்கள். இந்த வஞ்சகத் துரோகியோடு நானே சண்டை போடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டு, ஸ்திரஜீவியின்மேல் ஏறித் தன் அலகால் மெல்லக் கொத்திற்கு. ரத்தம் வெளிவந்தது. அந்த ரத்தத்தை ஸ்திர ஜீவியின் உடம்பில் பூசிவிட்டு, அது சொன்னபடியே ரிஷயமூக மலைக்குத் தன் பரிவாரங்களோடு போய்விட்டது.

அந்தச் சமயத்தில் எதிரி தரப்பில் உளவுவேலை செய்யும் ஒரு பெண் ஆந்தை, ஆந்தை அரசனிடம் போயிற்று. மேகவர்ணனின் மந்திரிக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தெரிவித்தது. அதைக் கேட்ட ஆந்தை அரசன் அந்திப்பொழுதில் காக்கைகளைக் கொல்வதற்காகத் தன் பரிவாரங்களோடு புறப்பட்டுச் சென்றது. போகையில், ‘’சீக்கிரம், சீக்கிரமாக வாருங்கள், எதிரி பயந்து ஓடிக்கொண்டிருக்கிறான். சுலபமாகப் பிடித்துவிடலாம்.

எதிரிகள் வேறிடம் தேடி ஓடும்போது அவர்களுடைய கோட்டை எதிர்ப்பின்றி சீக்கிரமாகப் பிடிபட்டுப் போகும். அரசனின் ஆட்கள் மூட்டை கட்டிக்கொண்டிருப்பார்கள். எனவே அவர்களைச் சீக்கிரத்தில் ஜெயிக்க முடியும்.

என்றொரு பழமொழி உண்டு’’ என்று ஆந்தை அரசன் சொல்லியது.

எல்லா ஆந்தைகளும் ஆலமரத்துக்குப் போயின. ஆனால் அங்கே ஒரு காக்கையாவது காணப்படவில்லை. அதைக் கண்டு ஆந்தை அரசன் சந்தோஷத்தோடு ஒரு மரக்கிளையில் உட்கார்ந்தது. பாணர்கள் அரசனைப் புகழ்ந்து பாடினர். அப்போது ஆந்தை அரசன் அரிமர்த்தனன், ‘’அவர்கள் சென்ற வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். தங்களுடைய கோட்டையை அவர்கள் எட்டுவதற்கு முன் அவர்களைத் துரத்திப் பிடித்துக் கொல்லவேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

அதேசமயத்தில் ஸ்திரஜீவி யோசித்தது. ‘’நாம் செய்ததைத் தெரிந்துகொண்டு எதிரிகள் திரும்பிப் போனால் எனக்கு ஒரு லாபமும் கிடைக்காது.

காரியத்தைத் துவக்காமலிருப்பது அறிவுக்கு முதல் அடையாளம். எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிப்பது அறிவுக்கு இரண்டாவது அடையாளம்.

என்றொரு பழமொழி உண்டு. காரியத்தை ஆரம்பித்துத் தோல்வி காண்பதைவிட ஆரம்பிக்காமலிருப்பதே மேல். ஆகவே, நான் சத்தம் செய்து நான் இங்கு இருப்பதைத் தெரிவிக்கிறேன்’’ என்று எண்ணியது.

அதன்படியே ஈனகரத்தில் கா கா என்று ஸ்திரஜீவி கத்தியது. அதைக் கேட்டதும், ஆந்தைகள் அதைக் கொல்ல விரைந்தன. அப்போது ஸ்திரஜீவி, “மேகவர்ணனே என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவன். இதை உங்களுடைய அரசனிடம் தெரிவியுங்கள். அவரோடு நான் நிறையப் பேசவேண்டியிருக்கிறது’’ என்று சொல்லிற்று.

பரிவாரங்களிடமிருந்து செய்தியையறிந்த அரிமர்த்தனன் ஆச்சரியமடைந்தது. தேகம் பூராவும் காயங்களின் வடுக்கள் காணப்பட்ட ஸ்திரஜீவியை அது நெருங்கியது. ‘’நீ எப்படி இந்த நிலைக்கு வந்தாய்? சொல்?’’ என்று கேட்டது.

‘’அரசே, கேளுங்கள், நேற்று நீங்கள் பல காக்கைகளைக் கொன்றீர்கள் அல்லவா? அதைக்கண்டு மேகவர்ணன் கோபமும், துயரமும் அடைந்து, மனங்கலங்கிப் போனான். அந்தக் கெட்ட அரசன் உங்கள் கோட்டையை நோக்கிப் புறப்பட்டான். அப்போது நான், ‘’நீங்கள் அங்கு போவது சரியல்ல. காரணம் அவர்கள் பலசாலிகள், நாமோ பலமற்றவர்கள்.

வலியவனிடம் மெலியவன் நன்மைபெற விரும்பினால் அவனை மனத்தாலும் விரோதித்துக் கொள்ளக்கூடாது. விரோதித்துக்கொள்வதால் வலியவனுக்கு நஷ்டமோ அவமானமோ கிடையாது. அவன்தான் வீட்டில் பூச்சிபோல் மடிகிறான்.

என்று ஒரு பழமொழி கூறுகிறது. ஆகவே, அவனைக் கௌரவித்துச் சமாதானம் செய்துகொள்வதே சரி’’ என்று சொன்னேன். இந்தச் சொற்களைக் கேட்ட மேகவர்ணன் துர்போதனையாளர்களின் பேச்சை நம்பி, நான் உங்களுடைய கட்சியைச் சேர்ந்தவன் என்று சந்தேகப்பட்டு, என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கினான். ஆகவே இப்போது உங்கள் காலடிகளே எனக்குச் சரணம். அதிகமாகப் போசுவானேன்? என்னால் நகர முடிந்த அளவுக்குச் சக்தியிருக்கிறவரை மேகவர்ணனின் ஜாகைக்கு உங்களை அழைத்துப்போய், காக்கைக் கூட்டத்தை நாசமடையச் செய்வேன்’’ என்றது.

இதைக்கேட்டபிறகு, அரிமர்த்தனன் தன் தாத்தாவுக்கும் தகப்பனாருக்கும் மந்திரிகளாயிருந்த பரம்பரை மந்திரிகளோடு ஆலோசனை நடத்திற்று. அதற்கு ரக்தாட்சன், குரூராட்சன், தீப்தாட்சன், விக்கிரநாசன், பிராகாரகர்ணன் என்று ஐந்து மந்திரிகள் உண்டு.

முதலில் ரக்தாட்சனைப் பார்த்து, ‘’நண்பனே, இந்நிலைமையில் நாம் என்ன செய்வது?’’ என்று கேட்டது. ‘’அரசே, இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? யோசிக்காமல் இவனைக் கொல்லுங்கள்.

இளைத்தவன் பலம் பெறுவதற்குள் கொன்றுவிட வேண்டும். அவன் அதிக பலம் பெற்ற பிறகு ஜெயிக்க முடியாமற்போய்விடும்.

என்று ஒரு பழமொழி உண்டு. மேலும், ‘வலுவில் வந்த சீதேவியைக் காலால் உதைத்தால் சாபம் கிடைக்கும் ‘ என்பது உலகவாக்கு.

காலத்தையும் காரியத்தையும் விரும்பியிருக்கிறவனுக்கு சந்தர்ப்பம் ஒரு முறைதான் வரும். அதைப் பயன்படுத்திக்கொள்ளா விட்டாலும் மறுபடியும் வராது.

தீ மூட்டிய ஈமச் சிதையை வேண்டுமானால் சிதைத்து எறிந்து விடலாம். ஆனால் சிதைந்த பிறகு மீண்டும் சேர்ந்த அன்பு வளர்வதில்லை.

என்றும் ஒரு பழமொழி உண்டு’’ என்றது. ‘’அது எப்படி?’’ என்று அரிமர்த்தனன் கேட்கவே, ரக்தாட்சன் சொல்லத் தொடங்கியது:

Series Navigationகருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டனக் கருத்தரங்கம்மலைப்பேச்சு -செஞ்சி சொல்லும் கதை-26