பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )

grandmother_movie

சில சமயம் குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. பெரிய படங்களை எடுப்பவர்களுக்கு பாடமாகவும் அமைகின்றன.

‘மட்டில்டா’ தந்த இன்ப அதிர்ச்சியில் யூ ட்யூபில் நான் கண்டெடுத்த பொக்கிஷம் தான் தலைப்பில் உள்ள படம்.

மேரி கேட் ஓல்ஸன், ஆஷ்லி ஓல்ஸன் என்கிற இரட்டையர் சகோதரிகள் பிரதான பாத்திரம் ஏற்று இந்தப் படத்தைத் தங்கள் சின்னத் தோள்களில் தாங்கி இருக்கிறார்கள். அம்மா ரோண்டா தாம்ஸனாக சிந்தியா கியரி ஒரு விவாகரத்தான இளம் தாயைக் கண்முன்னே கொண்டு வருகிறார். எட்டி பெக் எட்டி பேக்கோவாக சூப்பர். காமெடியில் கலக்கும் ஜெர்ரி வான் டைக்கும், ரியா பெரிமேனும் கடத்தல் திருடர்கள் ஹார்வி, ஷெர்லியாக அசத்துகிறார்கள். காமெடி ரெக்கை கட்டிப் பறக்கிறது படம்.

ரோண்டா தாம்ஸன் ஒரு கணவனைப் பிரிந்த இளம் தாய். 24 மணி நேரம் திறந்திருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் சொந்தக்காரி. அவளுக்குப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சாரா, ஜூலி! இருவரும் ஆறு வயது ரெட்டை வால்கள். ஒரு கட்டத்தில் அவர்களது சேட்டைகள் தாங்க முடியாமல் ரோண்டா “எனக்கு இவர்களிடமிருந்து விடுமுறை கிடைக்காதா?” என்று புலம்புகிறாள்.

அம்மாவுக்கு விடுமறை அளிக்க சாராவும், ஜூலியும் எட்மண்டில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சில நாட்கள் போக எண்ணுகிறார்கள். எட்மண்ட் பல மைல்கள் தூரத்தில் இருக்கிற ஊர் என்பது அவர்களுக்குத் தெரியாத விசயம். சைக்கிளில் ஆரம்பித்து, சாலையைக் கடக்க முடியாமல், உள்ளூரிலேயே சுற்றி சுற்றி வரும் பேருந்தில் ஏறி அதுவும் தோல்வியாகி, கடைசியில் சூப்பர் மார்க்கெட்டின் டெலிவரி வண்டியில் ஏறி ஒளிந்து கொள்கிறார்கள் இருவரும். டெலிவரி ஆள் எட்டி, ரோண்டாவுக்கு அறிமுகமானவன். அவள் மீது ஒருதலைக் காதல் கொண்டவனும் கூட. ஆனால் அவனுக்கு சாரா, ஜீலியைப் பிடிக்காது.

சில்லறைத் திருடர்களான ஹார்வியும் ஷெர்லியும் தம்பதிகள். நல்ல வேட்டையை எதிர்பார்த்து ஒரு சொகுசு வேனில் அவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எட்டி கண்ணில் படும் சாராவும் ஜூலியும், தன் அம்மாவுக்காக, தாங்கள் எட்மண்டில் இருக்கும் பாட்டி வீட்டுக்குப் போவதாக சொல்ல, அவர்களை அங்கே கொண்டு விடுவதாக பொய் சொல்லும் எட்டி, ரோண்டாவுக்கு தொலைபேசி மூலம் அவளுடைய குழந்தைகள் தன்னிடம் இருப்பதைச் சொல்கிறான். டெலிவரி செய்யும் இடங்களில் எல்லாம் சாரா, ஜீலியின் சுட்டித்தனத்தைப் பார்த்து பார்சல்கள் பெறுபவர்கள் சின்ன அன்பளிப்புத் தொகைகளைக் கொடுக்க, எட்டி இவர்களே தனது அதிர்ஷ்ட தேவதைகள் என நம்புகிறான். கிடைத்த பணத்தில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கும் எட்டி, அவர்களது பிறந்த தினமான 6-13-1987 ஐ எண்களாகக் கொண்ட லாட்டரி சீட்டை வாங்குகிறான். அதன் பரிசுத் தொகை ஒரு மில்லியன் டாலர்களுக்கும் அதிகம்.

எட்டி தங்களை ஏமாற்றி மீண்டும் தங்கள் வீட்டிற்கே கொண்டு வருவதை உணரும் சாரா, ஜீலி வெளியேற, எட்டியை கண்காணித்துக் கொண்டிருந்த ஹார்வி, ஷெர்லி ஜோடி அவர்களைக் கடத்துகிறது. ஷெர்லி குழந்தைகளை ஒப்படைக்க பத்தாயிரம் டாலர் கேட்கிறாள். பணத்துடன் எட்மண்டின் பொருட்காட்சிக்கு வரச் சொல்கிறாள். இன்னொரு பக்கம் போலீஸ எட்டியே குழந்தையைக் கடத்தியவன் என்று விரட்டுகிறது. முடிவு என்ன? எட்டிக்கு பரிசுத் தொகை கிடைத்த்தா? என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெஃப் ஃபிராங்க்லின்.

ஓல்ஸன் இரட்டையர்களின் மற்ற படங்களையும் பார்க்க தூண்டுகிறது இந்த பாட்டி வீட்டுக்குப் போகும் பேத்திகளின் படம்!

0

Series Navigationகம்பன் திருநாள் – 4-4-2015ஞாழல் பத்து