பாபநாசம்

Spread the love

சிறகு இரவிச்சந்திரன்
0
நெல்லை மண்ணில் கமலாதிக்கத்துடன் மலையாள த்ரிஷ்யம்!
0
Papanasam_posterபெண்டாள வந்த கயவனைப் போட்டுத் தள்ளிய தன் குடும்பத்தைக் காப்பாற்ற சுயம்புலிங்கம் போடும் நாடகமும், அதை முறியடிக்க காவல் அதிகாரி கீதா தீட்டும் திட்டங்களுமே இந்த திரில்லரின் மூன்று மணி நேரக் கதை.
மூன்று மொழிகளில் வெற்றி வாகை சூடிய கதையைப் பற்றி சொல்ல ஏதுமில்லை. ஆனால் உலக நாயகனின் நடிப்பைப் பற்றி சொல்ல ஒரு அத்தியாயம் போதாது. பூவோடு சேரும் நாரும் மணம் பெறுவது போல, கமலின் மனைவி ராணியாக வரும் கௌதமிக்கு இந்தப் படம், நடிப்பில் ஒரு மைல்கல். மகனை இழந்து, அதற்குக் காரணமான சுயம்புலிங்கத்தை ஆதாரத்துடன் பிடிக்க நினைக்கும் ஐஜி கீதா பாத்திரம் ஒரு சவால். அதை திறம்பட செய்திருக்கும் ஆஷா சரத், பாராட்டுக்குரியவர். கமலை முன்பகை காரணமாக மாட்டி விட நினைக்கும் காவலர் பெருமாள் பாத்திரத்தில் கலாபவன் மணி அசத்துகிறார். மலையாள வாடை இல்லாமல் அவர் நெல்லைத் தமிழ் பேசுவது வசன பயிற்சியாளர் சுகாவுக்குக் கிடைத்த பெருமை.
தப்பான எண்ணத்தில் நெருங்கும் ஐஜி மகனை சாகடித்து, பின் நடுங்கும் சுயம்புவின் மகள் செல்வி பாத்திரத்தில் நிவேதா தாமஸ் இயல்பாக நடித்திருக்கிறார். ‘கோலி சோடா’ ஶ்ரீராம், சுயம்புவின் உதவியாளன் சேர்மதுரையாக, வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண் டிருக்கிறார்.
“ பொண்ணூ சயின்ஸ் படிக்கிறா! நான் கொஞ்சம் கணக்கு பண்ணலாம்னு வந்தேன்” கமலின் குறும்பு தெறிக்கும் ஜெயமோகன் வசனங்கள், புன்னகை கோலங்கள்!
ஜிப்ரானின் இசையில் இரண்டே பாடல்கள். அதிலும் “ ஏ ஏ என் கொட்டிக்காரா” மெலடி தாலாட்டு. ஹரிஹரனின் குரலில் ஒலிக்கும் “ வினா வினா “ ஜேசுதாஸின் குரலை ஒத்து, மனதைப் பிழிகிறது. பின்னணி இசையில் ஜிப்ரானின் உழைப்பு சபாஷ் போட வைக்கிறது.
சுஜித்தின் ஒளீப்பதிவும், ஜீத்து ஜோசப்பின் திரைக்கதை இயக்கமும் தமிழுக்காக அதிக மாற்றமில்லாமல் மூலக்கதையை பழுதின்றி படமாக்கியிருக்கிறது.
தெரிந்த கதைதான் என்றாலும் கமலின் முத்திரை நடிப்பிற்காக தமிழ் ரசிகன் தவற விடக் கூடாத படம் ‘ பாபநாசம் ‘.
0
சினிமா பார்வை : அட்டகாசம்
ரசனை மொழி : கமல் அங்கிளுக்கு, கௌதமி, ஆன்டி மாதிரி இருக்காங்க இல்லே டாடி!
0

Series Navigationசண்டைமண்தான் மாணிக்கமாகிறது