பிஏகிருஷ்ணனின் ”மேற்கத்தியஓவியங்கள்”- புத்தகமதிப்புரை

 

                                                                                                – அருணகிரி

பி ஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்”- புத்தக மதிப்புரை
– அருணகிரி
pakbook3_n(கலிபோர்னியா வந்திருந்த எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனின் ”மேற்கத்திய ஓவியங்கள்” புத்தகம் குறித்த மதிப்புரை மற்றும் கலந்துரையாடல் சிலிகான் ஷெல்ஃப் வாசகர் குழு சார்பாக நடத்தப்பட்டது. அதில் நான் பேசியதன் சுருக்கம்)
கோம்பிரிட்ஜ் ஓவிய ரசனை பற்றிக் கூறுவதை ஆசிரியர் மேற்கோளாக்கிச் சொல்வது இந்த புத்தக வாசிப்பிற்கு அருமையான தொடக்கம்- அதைச்சொல்லியே இந்த மதிப்புரையைத்தொடங்கலாம். “கலையைப்பற்றி கெட்டிக்காரத்தனமாய் பேசுவது அவ்வளவு கடினம் அல்ல” என் று சொல்லும் கோம்பிரிட்ஜ் அப்படி பண்டிதத்தனத்துடனும் கலைச்சொற்கள் வழியாகவும் ஓவியத்தை அணுக முயல்வது அத்தனை துல்லியமான ரசனைக்கு இட்டுச்செல்லாது என்கிறார். கலையை ரசிப்பது பற்றி ஒரு குறிப்பு தருகிறார். அது: “ஓர் ஓவியத்தைக்களங்கமற்ற கண்களால் பார்த்து ஒரு கலைப்பயணத்தைத்துவங்குவது- கெட்டிக்காரத்தனமாகப் பேசுவதை விட – கடினம் மட்டுமன்று, பயன் அளிப்பதும் கூட. பயணம் முடிந்து திரும்பி வரும்போது எந்தப்புதையலைக்கொண்டு வருவோம் என்று சொல்ல முடியாது”.
என் பயணங்களில் பல இடங்களில் மேற்கத்திய ஓவியங்களைத் தொடர்ந்து பார்த்து வந்திருப்பவன் என்றாலும் அவற்றை வரைந்த ஓவியர்களின் பின்புலத்தையோ ஓவியங்களின் வரலாற்றையோ அறியாதவன் என்கிற வகையில் இந்த கூற்று எனக்கு மிகவும் ஏற்புடையதாகவும் ஓவியங்களை அணுகும் விதத்தை துல்லியப்படுத்துவதாக இருக்கிறது.
ஒரு செவ்வியல் ஓவியத்தில் மூன்று அம்சங்கள் இருப்பதாகக் காண்கிறேன்,
1. ஓவியம் – அதன் தொழில்நுட்பம், வரையப்பட்ட காலம், அதன் பின்புலம், காரணம் ஆகியவை.  2. ஓவியன்- அவனது வாழ்க்கை, அவனது சமூக நிலை, ஓவியங்களில் அவன் அதை பிரதிபலித்த விதம், 3. இந்த  இரண்டு அம்சங்களுக்கும் வெளியே நின்று ஓவியத்தைப் பார்க்கும் ஓர் ஓவிய ரசிகன் – மேற்சொன்ன சமூக, வரலாற்று, தொழில்நுட்ப எல்லைகளைத்தாண்டிய ஒரு இடத்தில் நின்றுகொண்டு ஓவியத்தை அவன் பார்க்கிறான். அது அவனிடம் தனியாக ஏதோ சொல்கிறது, அந்த உரையாடல் ஓவியத்தை அதைப்பார்ப்பவனுக்கு அந்தரங்கமாக்குகிறது, அர்த்தமுள்ளதாக்குகிறது. இந்த ஈர்ப்பு ஏற்பட அவன் ஓவியனையோ அல்லது ஓவிய வரலாறு குறித்தோ அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அறியும்போது அவனுக்கு ஏற்படுவது ஓவியத்தின் பின்புலம் குறித்த அறிவுபூர்வமான புரிதல் மட்டுமே. ஆனால் முதல் பார்வையில் உணர்வுபூர்வமாக அவனது அகத்தைத்தொடும் ஓவியம் அவனது அந்தரங்க அனுபவமாகிறது. இந்த அந்தரங்க அனுபவத்தை ஓர் இலக்கியவாதி அழகாக வெளிக்கொண்டு வர முடியும்.
அந்த வகையில் இந்த நூல் பிஏ கிருஷ்ணன் என்கிற இலக்கியவாதி எழுதியது என்றாலும் மிகத்திறமையாக அவர் தன்னை ஒளித்துக் கொண்டு விட்டார் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. நூலின் பக்கங்களில் அவர் குரல் அங்கங்கே கேட்கிறதுதான், ஆனால் அதைக்கேட்டு பிஏகேயைப் பார்த்து விடலாம் என்று நாம் தேடிப்போனால் அவரை அங்கே கண்டு பிடிக்க முடியாது.
மேற்கத்திய ஓவியங்களைப்பற்றிய ஒரு எளிய அறிமுகத்தை சாதாரண வாசகனுக்கும் அளிக்க வல்லதாய் எழுதப்பட்டிருப்பதே இந்த நூலின் சிறப்பு. ஓவியர்களின்  வரலாற்றுப்பின்புலம், ஓவியங்கள் வரையப்பட்ட சமூகச்சூழல், மேற்கத்திய ஓவியங்களின் காலப்பரிணாமம் ஆகியவை மிகச்சிறப்பாக சித்தரிக்கப்ப்ட்டிருக்கின்றன. இதுபோன்ற ஒரு புத்தகம் தமிழில் இதுவரை வந்ததில்லை என்பதால் அறிமுக நூல் என்கிற அளவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டதாகவும் ஆகிறது.
இதுபோன்ற செவ்வியல் ஓவியங்களைப் புத்தகத்தின் பக்க அளவுக்குள் கொண்டு வருவது பதிப்பாளர்களுக்கு பெரிய சவால். ஓவியம் குறித்த செய்தியும் அவற்றில் பேசப்படும் படங்கள் இடம்பெறும் பக்கங்களும் வெவ்வேறு இடங்களில் இருப்பதுபோன்ற ஒரு சில குறைகளைத்தவிர்த்துப்பார்த்தால்,  இந்த சவால் பெருமளவில் வெற்றிகரமாகவே கையாளப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
என்னை மிகவும் கவர்ந்த மூன்று ஓவியங்கள் என்று படங்கள் 90, 96, 103 ஆகியவற்றைச் சொல்வேன். படம் 90-இல் பீட்டரின் இறைஞ்சும் கண்களில் உள்ள உயிரோட்டம் அதைக் காலம் கடந்த ஒன்றாக்குகிறது, படம் 96-இல் பனியில் வேட்டையாடி பெரிதாக ஒன்றும் கிட்டாமல் திரும்பி வருபவர்களுடைய ஏமாற்றமும், உடல் களைப்பும், தளர்ச்சியும் ஒருவரது முகமும் தெரியாவிட்டாலும் உடல் மொழியாலேயே தெளிவுபடுத்தப்படும் சிறப்பு, அதன் தனி அம்சம் ஆகிறது, படம் 103-இல் (அட்டைப்படம்) கழுத்தை அறுக்கும் பெண்ணின் முகத்தில் தோன்றும் ஐயமும் அறுவெறுப்பும் கலந்த விலக்கம்  (இதை ஆசிரியர்  உறுதி என்கிறார்- எனக்கு அப்படித்தெரியவில்லை), வயதான பெண்மணியின் கண்களில் உள்ள குரோதம், உறுதி ஆகிய அழுத்தமான உணர்வுகளின் வெளிப்பாடு இந்த ஓவியத்தை உயிருள்ளதாக்குகிறது.   படம் 107, 119 ஆகியவை குறிப்பிடத்தக்க அழகம்சம் நிறைந்தவை.
கிறித்துவ நரகத்தின் பயங்கரத்தைக்காட்ட  வரையப்பட்ட படங்கள் என்னைக் கவர்வதே இல்லை. அதீதத்திற்கும் , அறுவெறுப்புக்கும் முக்கியத்துவம் தந்து வரையப்பட்டிருக்கும் அப்படங்கள் எனக்கு மன விலக்கத்தையே தருகின்றன.
ஓவியம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாகபேசலாம். சில இடங்களில் ஆசிரியருக்கு  ஒரு விதமாகத்தோன்றிய ஓவியம் எனக்கு வேறு விதமாகப்பட்டது. சில உதாரணங்கள்:
– படம் 25: இந்த வண்ணக்கண்ணாடி ஓவியத்தில் ”விழிப்பவர்களின்  தடுமாற்றம்” என்று கல்லறையில் இருந்து எழும் இறந்தவர்களைக் குறிப்பிடுகிறார். எனக்கு அந்த ஓவியத்தில் யாரிடமும்  தடுமாற்றம் தெரியவில்லை.
– படம் 34: கிரீடம் குழந்தை ஏசு தலைக்குப் பெரிதாக இருக்கும் என்று ஆசிரியர் சொன்னாலும், அது மேரிக்கான கிரீடம் என்றே எனக்குப்பட்டது. மேரியின் தலை அளவுக்கு சரியாகத்தான் அந்த கிரீடத்தின் அளவு இருக்கும். குழந்தை ஏசுவை தூக்கி நிற்கும் கிரீடம் அணிந்த மேரி நாம் பல இடங்களில் பார்க்கும் ஒன்றுதான்.
– படம் 37: சவப்பெட்டியில் பிணமாய்க்கிடப்பவரும் குதிரையில் இருப்பவரும் ஒன்றே என்கிறார், என் கண்களுக்கு அப்படித்தோன்றவில்லை.
– படம் 42: டூரரின் தாய் என்கிற இந்த படத்தில் தாயின் முகத்தில் கனிவோ கருணையோ இல்லை. அந்த முகம் சாரப்படுத்திக் காட்டுவது அதன் உறுதியை. காலம் அவள் மனதை இறுக்கிப்போட்டிருக்கலாம். டூரரின் தாயின் கண்களில் உள்ள உறுதியும், முகத்தில் அவளது முதுமையைத்தாண்டித் தெரியும் கண்டிப்பும் இந்த எளிய கறுப்பு வெள்ளைப்படத்தை உன்னதமாக்குகின்றன.  ”ஆனால் முதுமையும் அழகின்மையும் உன்னதத்தை அடையலாம் என்பதற்கு இந்த ஓவியம் ஒரு சாட்சி” என்கிறார் ஆசிரியர்.
– படம் 105- இருட்டில் பாதி மறைந்து இருக்கும் ஏசு கைநீட்டி யாரையோ சுட்டுவதுபோல் இருக்கிறது, ஏசுவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. ஆனால் ஆசிரியருக்கோ ஏசுவின் ”கண்களில் உறுதியோடு கருணை” தெரிகிறது; ”ஏசுவின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்கிறார்.
இவை தவிர மேலும் சில சமூக அம்சங்களைப்பேசாவிட்டால் என் கருத்து முழுமை பெறாது:
– கிமு, கிபி என்கிற ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை வைத்து வரலாற்றின் கால கட்டங்களை  சுட்டும் முறை வழக்கொழிந்து வருகிறது. மத அடிப்படைவாத கால மேற்குலகு உருவாக்கிப்பரப்பிய  கிமு, கிபி என்று வருடங்களை எழுதும் வழிமுறையை இன்றைய நவீன மேற்குலகு கைவிட்டு விட்டது. அதற்கு பதிலாக (Common era, Before Common era) பொது சகாப்தத்திற்கு முன், பொது சகாப்தம்  என்கிற உபயோகத்துக்கு வந்து விட்டன. ஆனால் நம்மூரில் கிமு கிபி என்று எழுதும் வழிமுறையை இன்னமும் விட்டபாடில்லை. நவீன அறிவியல் புரிதல் உள்ள இடதுசாரி ஒருவரால் எழுதப்பட்ட இந்தப்புத்தகமும் அதற்கு விதிவிலக்காக இல்லை என்பது ஏமாற்றம் தருகிறது.
– புத்தகத்தின் பாதிக்கும் மேற்பட்ட ஏறக்குறைய முக்கால்வாசி படங்கள்  கிறித்துவ மதப் பின்னணி கொண்டவை. இது தவிர்க்க முடியாத ஒன்று, ஏனென்றால் மேற்கின் ஓவியங்கள், கலைகள் எல்லாம் சர்ச்சால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அதன் காரணமாகவே இந்த ஓவியங்களை அதன் வரலாற்றுப்பின்னணியுடன் அறிய வேண்டிய ஒருவருக்கு கிறித்துவ இறையியல் பின்னணி தெரிந்திருப்பதும் அவசியமாகிறது.
– படம் 27-இல் உள்ள இலைகளற்ற மரம் அறிவு மரத்தின் உருவகம் என்றும் அறிவுமரம் ஆதாம்-ஏவாள் செய்த பாவத்தால் இலைகளை இழந்த மரம், ”ஏசுவின் இணையற்ற தியாகத்தால் பசுமை பெறப்போகிறது” என்கிறார். இந்த வகை புரிதல் கிறித்துவ அடிப்படையில் பிழையானது. கிறித்துவ இறையியலில் ஆதி பாவத்தால் தண்டிக்கப்படுவது அறிவு மரம் கிடையாது, தன் சொல்லை மீறிய ஆதாமும் ஏவாளும் அவர்கள் வழியாக மனித குலமுமே தண்டிக்கப்படுகிறார்கள். சொர்க்க சுக வாழ்க்கை இழந்து உலகத்தில் உழல வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. பிறகு தன் மகனான ஏசுவை பலியிட்டு மானுடர்களுடன் புதிய ஏற்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்கிறார் என்பது கிறித்துவ மதநம்பிக்கை.  ஏசுவின் பலியால் கிறித்துவ கடவுளின் கோபம் மறைந்து மீண்டும்  மனிதர்கள் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.  இந்த பின்னணியில் இந்தப்படத்தைப்பார்க்கையில் ஏசுவின் இறப்பால்  அறிவு மரம் பசுமை அடையப்போவது கிடையாது என்பது தெளிவு. அங்கே இருப்பது அறிவுமரம் என்று குறியீட்டு ரீதியாகக்கொண்டாலும் ஏசுவின் இறப்பால் அது எந்த வகையிலும் பசுமை பெறப்போவதில்லை. ஏனெனில் கிறித்துவ இறையியலின்படி ஏசுவின் இறப்பு அறிவுமரம் உயிர் பெறுவதற்காக இல்லை. மனிதகுலம் சொர்க்கத்திற்குள் மீள்வதற்காக. அதுதான் மீண்ட சொர்க்கம்.
– இதே வகையில் “ஏசுபிரான் தனக்காக தன் தந்தையிடம் எந்த ஒரு பரிவையும் கேட்கவில்லை, எதிர்பார்க்கவில்லை” என்று ஆசிரியர் சொல்லியிருப்பதும் கேள்விக்குரியது. தன் தந்தையாக அவர் நம்பும் கடவுளிடம் ஏசு கடைசியாகச்சொல்லும் வார்த்தைகள் “தந்தையே, ஏன் என்னைக்கைவிட்டீர்” என்பதைத்தான். ஏசுவின் கதை உண்மையென்று எடுத்துக்கொண்டால் அதனை ஒரே ஒரு வகையில்தான் விளக்க முடியும். மோசஸுக்கு உதவியதைப்போல தனக்கும் ஆண்டவர் உதவுவார் என்று யூதரான ஏசு நம்பியதையும், அது கடைசிவரை நிகழாமல் போனதன் ஏமாற்றத்தையுமே இது காட்டுகிறது. கிறித்துவ இறையியலில் இது ஏசு சாதாரண மானுடராக உலகில் இருந்ததைக் காட்டுவதாகக் கொள்ளப்படுகிறது. (ஆசிரியர் தனக்காக எதுவும் கேட்கவில்லை, மானுட குலத்துக்காகவே அவர் கேட்டார் என்று எழுதியதாக விளக்கினார்- அதுவும்கூட கேள்விக்குரியதுதான், ஆனால் புத்தக மதிப்புரை என்கிற வட்டத்திலிருந்து விலகுவதால் இந்த விவாதத்துக்குள் நான் போகவில்லை).
–  கடைசியாக, அப்போஸ்தலர் ஜான், ஜான் த பாப்டிஸ்ட் இருவருமே புனித யோவான்  என்று இந்த நூலில் குறிப்பிடப்படுகின்றனர்.  ஜான் த பாப்டிஸ்ட் ஏசுவிற்கு புனித ஸ்நானம் செய்வித்தவர். அப்போஸ்தலர் ஜான் ஏசுவின் சீடர்களில் ஒருவர். இந்த வேறுபாடு தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இவையெல்லாம் தாண்டி நூற்றைம்பதுக்கும் மேலான ஓவியங்களை விரிவான வரலாற்றுப் பின்னணியுடன் நமக்கு அறிமுகப்படுத்துவதிலும், ஓவிய நுட்பங்களையும் அதன் விவரங்களையும்  ஒவ்வொன்றாக அருகே கூட்டிச்சென்று காட்டி எளிதாக விவரிப்பதிலும், பற்பல ஐரோப்பிய பிரதேசங்களின் வழியாக ஓவிய வரலாற்றின் பயணத்தை நமக்கு விளக்குவதிலும் இந்த நூல் பெருவெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் மேற்கத்திய ஓவியத்தை சாதாரண வாசகனுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்த நூல் தமிழுக்கு முக்கியமான முதல் வரவாக ஆகிறது. ஆசிரியரின் அடுத்த புத்தகத்தை எதிர்பார்க்க வைக்கிறது.

Series Navigationவாழ்க்கை ஒரு வானவில் – 17he Story of Jesus Christ Retold in Rhymes