பி.வி.பிரசாதின் “ எப்படி மனசுக்குள் வந்தாய்”

Spread the love

திரில்லர் படங்கள் இரு வகை. ஒன்று, குற்றமும் குற்றவாளியும் பார்வையாளர்களுக்குத் தெரிந்து விடும். ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாது. இரண்டாவது வகையில் பார்வையாளர்களுக்கும் தெரியாது. முதல் வகை எஸ். பாலச்சந்தரின் ‘பொம்மை’. ‘அதே கண்கள்’ இரண்டாவது வகை. எ.ம.வ. முதல் வகை.

ஒரு குற்றம் நடந்த பின், கிடைக்கும் தடயங்களை வைத்துக் கொண்டு, அது எப்படி நடந்திருக்கும், யார் செய்திருப்பார்கள் என்று யூகிப்பது ஒரு துப்பறியும் நிபுணரின் மூளை. அதைக் குற்றம் செய்தவனின் குணமாக மாற்றியிருப்பது, இயக்குனரின் புத்திசாலித்தனம்.

சீனு ( விஷ்வா ) சலவைக்காரரின் மகன். மித்ரா ( தன்வி வியாஸ் ) கோவைத் தொழிலதிபரின் மகள். சென்னையில், பேஷன் டெக்னாலஜி படிக்கும் மாணவி. தன் பால்ய வயதுத் தோழன் ஸாமுடன் ( இர்பான் ), அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் மித்ராவைக் கண்டதும், காதல் கொள்கிறான் சீனு. அவளைப் பார்ப்பதற்காகவே, அவள் படிக்கும் கல்லூரியில் சேருகிறான். மெல்ல ஸாம், மித்ரா நண்பனாகிறான் சீனு. ஸாம் பிறந்த நாள் விழாவில், போதையில் மித்ராவின் நிர்வாணத்தைப் பார்க்கும் சீனுவும், அதைப் பார்த்துவிடும் ஸாமும், அதனால் ஏற்படும் மோதலும், ஒரு விபத்தாக, ஸாம் மரணத்தில் முடிகிறது. காவல் துறையும், தனியார் துப்பறியும் படையும், சீனுவைத் துரத்த, அவன் எப்படித் தற்காலிகமாகத் தப்பிக்கிறான் என்பது கதை.

ஒரு பெர்ரி மேஸன் போல, துரத்துபவர்களை, அடையாளம் கண்டு ஹீரோ ஜெயிக்கும் இடங்கள் சூப்பர். அதை முந்தைய காட்சிகளால் – ஹீரோ பைக் சாவியைக் கண்டு பிடிக்கும் உத்தி, மித்ராவின் தொலைந்த செயினைக் கண்டுபிடிக்கும் காட்சி என, நாயகனின் திறமையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ். ஒரு தற்காப்புத் தாக்குதலால் ஏற்பட்ட நண்பனின் மரணம் என்பது சரியாகப் பதிவு செய்யப்படாததால், நாயகன் மீது அனுதாபம் மிஸ்ஸிங்.

விஷ்வா நீண்ட தலைமுடியுடன், ( கொடூரக் கதாபாத்திரங்களுக்கு இது ஒரு அடையாளம் இப்போது – கல்பிரிட் ‘காக்க காக்க ‘ கவுதம் மேனன் ) மந்திரித்து விட்ட ஆடு போல் வருக்¢றார், போகிறார். போலீஸ் துரத்தும்போதும், அவர்களை ஜெயிக்கும்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் இடுங்கிய கண்களோடு பார்க்கிறார்.

தன்வி அழகாக இருக்கிறார் உணர்ச்சி வசப்படும் வரை. சோகமும் கவலையும் சேரும்போது முகம் சுருங்கி, நெற்றியில் விபூதிப் பட்டை போல் மூன்று சுருக்கங்கள் விழுவது, அவரது சைவ அழகை, அசைவமாக்கி விடுகிறது.

கொஞ்ச நேரமே வந்தாலும், இர்பான் கச்சிதம். விஜய் மில்டனின் கேமரா கோணங்கள் அசத்துகின்றன. வசனமும் அவர்தான். ஆனால் அதில் மில்டன் நாட் well done. ‘நாக்க முக்க’ பாணியில் ‘ஊராக்களி’ என்கிற பாட்டு, ஒரு திருஷ்டிப் பொட்டு. மற்றபடி டேனியல் பாடல்களிலும், பின்னணி இசையிலும் நம்பிக்கை வரவாகத் தெரிகிறார். ஒரு ரவுண்ட் வருவார், நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்தால். கலை இயக்குனர் அசத்துகிறார். ஆனால் அந்த டாப் இல்லாத பஸ் யாருடைய கற்பனை என்று தெரியவில்லை. இடிக்கிறது.

இரண்டரை மணிநேரப் படத்தில், முதல் பாதி விர்ர்.. பின்பாதி கொர்ர்.. மறை கழண்ட படங்களாக எடுத்துக் கொண்டிருந்தால், பிரசாத்தை பேக் அப் பண்ணிவிடுவார்கள் மக்கள் எர்ரவாடிக்கு. தெளிவது அவசியம்.

0

கொசுறு

சொகுசு ஏறி, 11 ரூபாய் கொடுத்து, பரங்கிமலை ஜோதிக்குப் போனால், பத்து பேர் படம் பார்க்க வந்திருந்தார்கள். “ பில்லாவே மூணாம் நாள் காத்தாடிச்சு “ என்றார் டிக்கெட் கிழிப்பவர். மெட்ரோ நிலையம், திரை அரங்கு அருகில் வருகிறது. 2013லாவது கூட்டம் வருமா? பத்து பேர் வந்தாலும் ஏசி போடும் வள்ளலார் ஜோதி வாழ்க!

போரூர் பாய் ஓட்டல் சுத்த சைவம்! 15 ரூபாய்க்கு பேப்பர் ரோஸ்ட், கெட்டி சட்னி, தக்காளி தொக்கு, சாம்பார் என அசத்துகிறார்கள். 2008ல் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி போட்ட கடை இது. கிராமங்களிலிருந்து ஐடி வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு கெட்டுகெதர் கடை இதுதான். TCSலிருந்து CTS, CTSலிருந்து IBM, என பணி மாற்றத் தகவல்களும் பரிமாறப்படுவது, பாய்ஸ் மட்டுமே அறிந்த ரகசியம். பரோட்டாவுடன் பயோடேட்டா!

0

Series Navigationபாற்சிப்பிகள்அற்புதமான ஓர் சுய முன்னேற்ற புத்தகம் – Who moved my Cheese