பூவரசி காலாண்டிதழ். எனது பார்வையில்.

Spread the love

புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் இலக்கியத்தையும் தங்களோடு எடுத்துச் சென்று புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்தலில் என்ன நன்மையோ, தீமையோ ஆனால் நிறைய பெண் படைப்பாளிகளையும் அது உருவாக்கி இருக்கிறது. தங்களோடு எடுத்து வர முடியாத தாய் மண்ணை தொட்டுணர விரும்பும் ஆசை ஒவ்வொருவர் எழுத்திலும் வெளியாகிறது. பூவரசி காலாண்டிதழ் அந்த மக்களின் புலம் பெயர்தலுக்குக்கும் பின்னான வாழ்வை, போருக்குப் பின்னான ஈழத்தைப் பேசுகிறது.

ஈழவாணியின் பூவரசி புனைவும் நிஜமும் என்ற இணையம் நடத்தி வருகிறார். அது இப்போது காலாண்டிதழாக மலர்கிறது. இலக்கிய இதழ்கள் பல இருக்க இதன் வருகை எதனால் தேவை என அவர் விவரித்திருக்கிறார். விஷ வாயுக்களினதும் ரசாயன அமிலத்தன்மையிலும் ஒரு மரம் பிழைத்துக் கிடக்குமென்றால் அது பூவரச மரம்தான். சின்னப் பிள்ளைகளில் நம் அனைவரின் வீட்டை ஒட்டியும் இது போல பூவரசுகளும் மஞ்சளும் சிவப்புக் கோடும் பதிந்த அந்த மலர்களும் யாரும் மறக்கக் கூடுமோ. பள்ளியிலும் கல்லூரியிலும் தாவரவியலுக்காக அதைப் பதப்படுத்திய நினைவுகளையும், அதன் இலைகள் பறித்துச் சுருட்டி பீப்பீ ஊதினதையும் கூட..

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சுதந்திரத்தோடு செயல்படமுடியாமைக்கு ஈழவாணியே சான்று. செந்தணல் பத்ரிக்கையின் ஆசிரியராகாக அவர் இருந்திருக்கிறார். அதை விட்டு வரவேண்டிய சூழலும் நிலவி இருந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் அவர் தன் மிச்ச கனவுகளை பதிப்பித்து வருகிறார் என சொல்லாம். பூவரசுகளும் பூவரசியும் என்றும் நம் மண்ணின் சின்னங்கள்தானே.

பாலு மகேந்திராவின் நேர்காணல் இலங்கையின் செயல்படுத்த முடியாத தங்கள் இலக்குகளை சொல்கிறது. ஈழப்பிரச்சனையை தான் மலினப்படுத்த விரும்பாததால் அவர் அது பற்றிப் படமெடுக்கவில்லை என சொல்கிறார். போருக்குப் பிந்திய ஈழம் பற்றி தீபச்செல்வனின் கட்டுரையில் தமிழ்க்கிராமங்கள் சிங்களரால் ஆக்கிரமிக்கப்படுதலை படிக்கும்போது வெறுமையாய் இருக்கிறது. பேரினவாத அரசியல் மீது கோபம் மீதுறுகிறது.

சுகிர்த ராணியின் இலையுதிர் காலம் .. வனப்பு குன்றிய தேவதைபோல மனம் உளைக்கிறது. லெட்சுமி சரவணகுமாரின் செவ்வாய்க்கிழமை மனதை வெருட்டியது இப்படி எல்லாம் காமம் உண்டோவென.. பிச்சினிக்காடு இளங்கோவின் இருள் வலையாய்.

தமிழில் பெண்களுக்கான இலக்கிய வரலாற்றின் முக்கியத்துவத்தை ச. விசயலெட்சுமி கூறுகிறார். யாழ் தர்மினி பத்மநாபனின் கட்டுரை இலங்கையிலிருந்து வந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஈழத்து இளைய தலைமுறையின் பார்வையில் பேட்டியாய் விரிகிறது. இரா. தெ முத்துவின் மரப்பாச்சிப் பெண்ணும், சுப்ரமணிய நந்தியின் முகமூடிகளும் விட்டுச் செல்வதும், விட்டுச் செல்ல முடியாததுமான ஒரு விசித்திர மனோ நிலையைப் படம் பிடித்திருந்தது.

மீரா கதிரவனின் வதை.. கண்ணீர்க் கதை. படித்து முடித்ததும் சிறுதுளி கண்ணீராவது நிறைந்திருக்கும் கண்களில். மனதைக் கொய்து விட்டெறிந்த கவிதைகள் ஈழவாணியுடையவை. துலா ஒவ்வொரு பெண்ணின் சொல்ல முடியாத உள்ளுணர்வாய் உடைந்தது மனதில் .. அது தந்த வலியை வேறு எதுவும் தரவில்லை.

உமா வரதராஜனுடனான நேர்காணல் ரொம்ப யதார்த்தமானது. என்னுடைய முருதாடி கவிதையும் வெளிவந்துள்ளது அதில். ஒரு சின்னப் பெண் தன் அம்மாவின் புரிந்து கொள்ளாத தன்மையினால் பட்ட மன உளைச்சல் அது. அஜயன் பாலாவின் திரைப்படம் பற்றிய கட்டுரை, ஈழவாணியின் தலைப்பிழந்தவை கவிதைத் தொகுதி பற்றி கவிஞர் மதுமிதாவின் விமர்சனம், அருமை

யாழ் தர்மினியின் இரண்டு கதைகளுக்கான விமர்சனம். எஸ், பொ வுடன் ஈழவாணியின் நேர்காணல், கவிஞர் மயூமனோவின் கவிஞர் திருமாவளவன்வுடனான நேர்காணல் எல்லாம் இலங்கை வாழ்வையும் போர் சமயத்திலும் அதன் பின்னும் ஈழத்தின் வாழ்வையும் , புலம் பெயர் வாழ்வையும் புடமிட்டுக் காட்டுகின்றன.

பொருத்தம் என்ற பி கோ சிவகுமாரின் கவிதை வித்யாசமாய் மனம் கவர்ந்த ஒன்று. நீண்டு படுத்திருக்கும் தெருவாய் விரியும் இலையுதிர் காலத் தெருக்களோடு மயூ மனோவின் கவிதை ஆதிமணம். பி கு சரவணனின் மேகக் கலனூறிய தீஞ்சுவை மழைகள் .. தும்புரு மீட்டும் சாரல்கள்

பத்திநாதனின் கட்டுரை முகத்தில் அறைகிறது. விசயலெட்சுமியின் கவிதைகள் நெருப்பாற்றிலிருந்து தப்பித்த ஒரு புறாவை அடையாளமிடுகிறது. பேருந்தில் மாட்டிக் கொண்ட களைப்பையும். மணிவண்ணனின் இன்னாதவைகளோடு இரு இனிய ஓவியங்களும் உண்டு இதில்

தமிழக ஆதரவு தனித்து நிற்குமா என்ற அருள் எழிலனின் கட்டுரையும் உத்தம சோழனின் இன்னமும் ஆறாமலும் வெந்த புண்ணில் வேல் பாய்ந்த அவலத்தை எடுத்துரைத்தன. இலங்கை நாணயங்களும், சிங்களவர் யார் , தமிழர் யார் என்பது பற்றிய விவரங்களும் நிறைய உண்டு. செங்கை ஆழியானின் கழிவிரக்கம் போரின் போராளிகளின் இன்னொரு முகத்தைக் காட்டியது.

இதில் எழுதி இருப்பவர்கள் அனவரும் உண்மையான கருத்துப் பகிர்வு செய்திருக்கிறார்கள். உண்மை சுடத்தானே செய்யும். மொத்தத்தில் பாரபட்சமில்லாம் இலங்கை தமிழ் மக்களுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்து இழைக்கப்பட்ட அநீதியை நெஞ்சுரத்தோடு பதிவு செய்திருக்கும் ஈழவாணியின் பூவரசி ஒரு புரட்சிக்காரிதான். இன்னும் அடுத்த இதழ்களிலும் இந்த உண்மை உரம் கொழுந்து விட்டு ஜொலிக்கட்டும்.

Series Navigationபூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள்தென்கச்சியார் கூறும் மருத்துவக் குறிப்புகள்