பொன் குமரனின் “ சாருலதா “

யாவரும் நலம் படத்திற்குப் பிறகு, நல்லதொரு திகில் படத்தைப் பார்த்த அனுபவம். பாடல்கள் மட்டும் இல்லாதிருந்தால், நல்லதொரு ஹாலிவுட் படத்தின் மொழி மாற்றம் என்றே சொல்லலாம்.

தேசிய விருதுக்கு தகுதியான நடிகைதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறார் பிரியா மணி. வாலி அஜீத்தை, பெண் பாத்திரமாகக் கற்பனை செய்து கொண்டால், அதுதான் லதா. அப்படியொரு வன்மம் கண்களில். சபாஷ்.

அமானுஷ்ய கதையில், வெறும் பயமுறுத்தலை மட்டுமே பிரதானமாகக் கொள்ளாமல், சில எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டு வந்ததற்கு, இயக்குனரைப் பாராட்டலாம். பன்னீர்செல்வத்தின் கேமரா அழகையும் அச்சத்தையும் சரி விகிதமாகக் காட்டி இருக்கிறது. அமானுஷ்யக் காட்சிகளில் கிராபிக்ஸ் அசத்துகிறது. வயலின் வாசிக்கும் இரட்டையர் என்கிற மைய நூலை வைத்துக் கொண்டு, சுந்தர் சி.பாபு புகுந்து விளையாடி விட்டார், பின்னணி இசையில். புலிக்குப் பிறந்த புலி.

கஞ்சாயிண்ட் டுவின்ஸ் சாருவும் லதாவும். இருபது வயதில் சாருவிடமிருந்து வெட்டப் படுகிறாள் லதா. அதனால் இறக்கிறாள். சாருவும் காதலன் ரவியும் காஷ்மீரில். தாயின் உடல் நிலை மோசமாக, வேதாரண்யம் வருகிறாள் சாரு. அவள் வாழ்ந்த வீட்டில் அவளுக்காக காத்திருக்கிறாள் லதா, அவளைக் கொல்ல. ரவியும் சாருவும் மனநல டாக்டர் துணையுடனும், அது வெற்றி பெறாதபோது, மந்திரவாதி மூலமாகவும் லதாவை கட்டுப்படுத்த, முதல் திருப்பம் கதையில். இறந்தது லதா இல்லை. சாரு. காதலித்த சாருவை, வேண்டுமென்றே லதா கொன்றதாக ரவி நினைக்கிறான். லதாவின் காதலைப் புறக்கணிக்கிறான்.

சாரு இறக்கக் காரணம் லதா இல்லை. அது ஒரு விபத்து. அதன்பிறகே சாரு லதாவிடமிருந்து வெட்டி எடுக்கப்படுகிறாள். இப்போது பழி வாங்கக் காத்திருப்பது சாருதான். இந்த உண்மைகளைச் சொல்லி, இருக்கும் ஒரு மகளையாவது காப்பாற்ற வேண்டுகிறாள் அவர்களின் தாய். உண்மை உணர்ந்து ரவி லதாவை ஏற்கும் சுப முடிவு.

ஆண் பெண் என்று இரட்டையர்களாக குழந்தைகள் பிறப்பதுண்டு. இரண்டும் பெண் என ஆகும்போது, ஒன்று ஆண் தன்மை கொண்டதாக இருக்கும் என்கிற ஒரு உளவியல் தகவலை மையமாகக் கொண்டு பிரியா மணி பாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார்கள். மென்மையான சாருவுக்கு இனிய குரலில் டப்பிங், வன்மையான லதாவுக்கு ஒரிஜினல் பிரியாமணியின் ‘ஆம்பளை ‘ குரல் என்று நுணுக்கமாக யோசித்து, வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். மொத்த மைதானமும் கிடைத்த குஷியில், புகுந்து விளையாடியிருக்கிறார் ப்ரியாமணி. நடை, குரல், பார்வை என அத்தனையிலும் வித்தியாசம் காட்டிய்¢ருக்கும் லதா பாத்திரம் ப்¢ரியாவுக்கு லைப் டைம் ரோல். இன்னொரு விருது கிடைக்க வாய்ப்புண்டு.

வணிக நோக்கத்தில் திணிக்கப்பட்ட பாடல் காட்சிகளும், காமெடி டிராக்கும் வேகத் தடைகள். ஒரிஜினல் கதையென்று, ஏதோ ஜப்பானியப் பெயரைக் காட்டுகிறார்கள். ஆனால் எனக்கு, 30வருடங்களுக்கு முன் பார்த்த The Basket case ஆங்கிலப் படம் தான் ஞாபகம் வந்தது. அதிலிருந்து ஒற்றி எடுத்திருக்கிறார்கள் பலர் என்றாலும், அதை அப்படியே தமிழில் பண்ணும் திறமை ஒருவருக்குத்தான் உண்டு. அவர் உலகநாயகன் கமலஹாசன்.

0

கொசுறு

விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தேருவில் இருந்த அருண் சைவ ஓட்டலை மூடி விட்டார்கள். அந்த இடத்தில் அசைவம் சேர்ந்த வ்¢ஜயா பவன் வந்திருக்கிறது. கட்ச்¢ கூட்டத்தால் எதுகிரி மூடப்பட, கொஞ்சம் அச்சத்துடன் தான் பவனுக்குள் பிரவேசித்தேன். பூப்போன்ற இட்லிகளும் இஞ்சி சுவையுடனான தேங்காய் சட்னியும் என்னை ஆட்கொண்டன. நான் தன்யனானேன்.

0

 

 
சிறகு இரவிச்சந்திரன்.

Series Navigationபயண விநோதம்