”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.

”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” என்ற நூல் படித்தேன். நாம் சாதாரணமாக சென்று அவசரம் அவசரமாக ஒரு சரித்திரச் சின்னத்தைப் பார்த்து வருகிறோம். அதற்கு எல்லாம் இப்படி ஒரு வழிகாட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே எனத் தோன்றச் செய்த நூல் இது. இது தங்கத்தாமரை பதிப்பகம் வெளியீடு ( சுபா — எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணனுடைய பதிப்பகம்). இந்நூலை வடிவமைத்தவர் பா. கணேஷ். மிக அருமையான வடிவமைப்பு.

இந்த மாதிரி ஓவியங்களோடு கூடிய நூல்களுக்கு ஏற்ற அழகிய வடிவமைப்பு செய்துள்ளார் கணேஷ். அட்டையில் கடற்கரைக் கோயிலும் உள்ளே மற்ற ஓவியங்களும் தத்ரூபம் மற்றும் அருமை. எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர். இந்நூலுக்கு முன்னுரை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் சுபா.

கோயில்களில் அவசர தரிசனம் செய்து வருவது போல நாமெல்லாம் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வரலாற்று சின்னங்களை பார்த்து வருகிறோம். இதில் சிற்பங்கள் மற்றும் அவற்றின் பின்னிருக்கும் அரசியல் வரலாறு எல்லாம் சுட்டப்படுகிறது.கற்களில் பலவகை உண்டு . அவற்றில் சிற்பம் வடிக்கத் தகுதியானவை சிலவே.

கருங்கல், சலவைக்கல், மணற்கல், மாக்கல் போன்றவற்றால் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன. மகாபலிபுரத்தில் காணப்படுவது கருங்கல் சிற்பம். பொதுவாக சிற்பங்களிலும் நால்வகை உண்டு.அவை குகைக் கோயில் எனப்படும் குடைவரைக் கோயில், ஒற்றைக் கல்லில்செதுக்கப்படும் மோனோலித்ஸ், புடைப்புச் சிற்பங்கள் அல்லது மாட சிற்பங்கள், நான்காவது கட்டுமானக் கோயில்கள். இவை நான்குமே மகாபலிபுரத்தில் காணக் கிடைக்கின்றன.

பாசுபதாஸ்திரம், அர்ஜுனன், மண்ணுலகில் கங்கை, பகீரதன், விண்ணுலகக் கலைஞர்கள், இந்திரனும் ஐராவதமும், பஞ்சதந்திரக் கதைகள், நரநாராயணர்கள், வாதாபி ஜீரணிக்கப்பட்ட கதை, அஸ்வத்தாமன் துரோணர், துர்க்கை,பன்றி உருவில் பரமன், திருமாலின் திருஅவதாரங்கள்,இறைவனின் வாகனங்கள்,அர்த்தநாரீஸ்வரத் தத்துவம், வைணவமும் திருமால் அடியார்களும், பற்றி மிக விரிவான தகவல்களை சின்ன சின்னப் பெட்டிச் செய்தியாக தொகுத்துள்ளார்கள். மிக அருமை.

ருத்ராக்ஷம் உருவானது பற்றியும், சிற்பங்களில் பல சுவைகள் பற்றியும் தவம் செய்யும் பூனை, எலிகள்., ராய கோபுரம், வராக மண்டபம், யானைக்குடும்பம், இந்திய ரூபாய் நோட்டில் வெளியிடப்பட்ட மான் சிற்பம் என எல்லா விவரணைகளும் யதார்த்தமான பேசும் மொழியில் பதிவு செய்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ். சரளமான மொழி நடை. கிருஷ்ணரின் வெண்ணை உருண்டைக் கல் ஒரே கல்லே காலப்போக்கில் தனி கல் போலத் தெரிவது ஆப்டிகல் இல்யூஷன் என விளக்குகிறார்.

பல்லவர்களும் அவர்களது பகைவர்களும், பல்லவர் காலத்துக்குப் பின் என தொகுக்கப்பட்டது ரொம்ப முக்கியமானது. அங்கே இருந்த மலைகளில் இருந்த சிலை வண்ணத்தை மகேந்திரரும் மாமல்லரும் கலைக் கண் கண்டு நோக்கி அதை சிற்பமா வடித்ததுதான் இன்றைக்கு மிச்சமிருக்கும் மல்லை. படிக்கப் படிக்க கல்கியின் சிவகாமியின் சபதம் தான் நம் ஞாபகத்துக்கு வந்தது. ஆயனச் சிற்பியையும் சிவகாமி அம்மையையும் மனம் தேடியது அந்த சிற்பங்களின் ஊடாக.

இன்றும் நிறைய சிற்பிகள் சிற்பங்கள் வடித்தவாறு இருக்கிறார்கள். கலைக்கூடங்களில் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கிறன. நாம் மனதில் மாமல்லரின் கதையோடு உலவும் போது அந்த சிங்காசனம், வெற்றிக்கு மஹிஷாசுர மர்த்தினி குகைக்கோயில், ஆதி வராக மண்டபம், பழைய கலங்கரை விளக்கம், ஐந்து ரதங்கள், புலிக்குகை, பெருமாள் கோயில், கடற்கரைக் கோயில்கள் அனைத்தும் உயிர் பெற்று அசைகின்றன.

அங்கே மரக்கலம் வருவது போலும், மாமல்லரும் மகேந்திரரும் புரவிகளில் கம்பீரமாக ஆரோகணித்து வருவது போலும் ஏற்படும் மனச் சிற்பங்கள் வடிக்கப்படாத அழகுள்ளவை. சிவகாமியின் நாட்டிய முத்திரைகளும், ஆயனரின் உளிச்சத்தமும் கூடக் கேட்கலாம் மனச் செவியில். நாம் சினிமாக்களில் காண்பது போல சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு , கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணுக்கு என்பதற்கு ஏற்ப சிலைகள் இருந்தாலும். நிறைவுறாத அவரின் காதல் போல சில இடங்கள் நிறைவற்று இருக்கின்றன.

கால மாற்றத்தில் ஏற்பட்டதோ அல்லது பகை உணர்வுடன் சாளுக்கியர் சிதைத்ததோ, மகேந்திரர் மற்றும் மாமல்லர் எனக் கருதப் படும் சிலைகள் ஒச்சமுற்றிருப்பதும், வாதாபி சாளுக்கியரின் சின்னமான வராக உருவம் சிதைக்கப்பட்டிருப்பதும். பகை உணர்வு மனிதர்கள் மனதில் வேரோடிப் போயிருப்பதை வெளிச்சமிடுகின்றன. பல நூற்றாண்டுகள் கடந்தும் இந்தச் சின்னங்கள், சிற்பங்கள் இன்னும்கூட முழுமையாக மறையாமல், கடல் கொண்டும் தப்பிப் பிழைத்திருப்பது அதிசயம்.

மகாபலிபுரத்துக்கு எப்படிச் செல்வது எனக்கூட குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் தொல்லியல் துறை திரு பி. எஸ். ஸ்ரீராமன் அவர்களிடம் முழுமையாக கேட்டு தொகுக்கப்பட்டதாம். சிவகாமியின் சபதத்தின் முன்னுரையில் கல்கி உரைப்பது போல் “கையிலே பிடித்த கல்லுளிகளையே மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இந்த மகேந்திர ஜாலங்களைச் செய்தார்களோ என்று நினைக்கும்போது அந்தச் சிற்பிகளைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. அதேபோல் சிற்பங்களை ஓவியமாக உயிரூட்டிய ஜெ. பிரபாகரின் முயற்சியும் அற்புதம்.

தனித்தனித் தகவல்களை உரிய முறையில் லே அவுட் செய்து தொகுத்த பா. கணேஷ் அவர்களின் உழைப்பும் சிறப்பு. மிக அருமையான புத்தகத்தைக் கொடுத்த சுபா அவர்களின் தங்கத்தாமரை பதிப்பகம் சிறக்கட்டும் இந்தச் சிற்பங்களின் சிறப்பைப் போல்.

நூல் :- மகாபலிபுரம் உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி

பதிப்பகம் :- தங்கத்தாமரை

விலை ரூ. – 70/-

Series Navigationஎருதுப் புண்புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் – 2