மருத்துவக் கட்டுரை டெங்கி காய்ச்சல்

 

                                                          டாக்டர் ஜி.ஜான்சன்

இன்று சிறு பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் என்றாலே அது டெங்கி காய்ச்சலாக ( dengue fever ) இருக்குமோ என்ற பீதி எல்லாருக்கும் உள்ளது. இதனால் ஒருவேளை மரணம் உண்டாகுமோ என்ற பயமே இதற்குக் காரணம்.

ப்ளேவிவைரஸ் ( flavivirus ) என்ற பெயர் கொண்ட வைரஸ் கிருமியால் டெங்கி காய்ச்சல் ஏற்படுகிறது.இது கொசுக் கடியால் பரவிகிறது. இந்த கொசு வகையின் பெயர் ஏ .எஜிப்டி ( A .aegypti ) என்பது. நான்கு வகையான டெங்கி வைரஸ்கள் உள்ளன. DENV -1,DENV -2, DENV -3, DENV -4 என்பவை அந்த நான்கு வகைகள்.

இந்த கொசு வகையின் பெயர் ஏ ஏஜிப்டி ( A. Aegypti ) என்பது. இந்த கொசு வகை ஆசிய நாடுகள், தென் அமெரிக்கா , ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் பெருகி வருகின்றன. இவை பகல் நேரத்தில் மனிதர்களைக் கடித்து இரத்தம் குடிக்கும் பழக்கம் உள்ளவை.

இந்த வைரஸ் தோற்று உண்டான முதல் 3 நாட்களில் அவர்களிடம் கொசு இரத்தம் குடித்தால், வைரஸ் கொசுவின் உடலினுள் புகுகின்றதது.

அதன்பின்பு 2 வாரங்கள் கழித்து அந்த கொசு அதன் வாழ்நாள் முழுதும் வைரஸ் கிருமியை மனிதனைக் கடிப்பத்தின் மூலமாக பரப்புகிறது.

டெங்கி காய்ச்சல் ஒரே நேரத்தில் பலரிடம் தோன்றும் தன்மைகொண்டது.ஒரு முறை டெங்கி காய்ச்சல் வந்தபின் அதற்கு எதிரான எதிர்ப்புச் சக்தி உண்டாவது குறைவாகே காணப்படுகிறது.

வைரஸ் தோற்று உள்ள கொசு ஒருவரைக் கடித்தபின், 5 முதல் 6 நாட்கள் கழித்து நோயின் அறிகுறி தோன்றும்.

 

டெங்கி காய்ச்சலின் அறிகுறிகள்

—————————————————–

* திடீர் காய்ச்சல்

* தலைவலி

* பலவீனம்

* கண்களுக்குள் வலி

* முதுகு/ இடுப்பு வலி

* தோலில் சிவந்த பொறிகள் – இவை கை கால்களில் முதலில் தோன்றி நெஞ்சு முதுகு பகுதிகளுக்கு பரவும்.

* 3 – 4 நாட்களில் குறைந்து பின்பு ஓரிரு நாட்களில் மீண்டும் தோன்றும்.

* காய்ச்சல் நின்றபோதும் நலமின்மை, மன அழுத்தம் போன்றவை பல வாரங்கள் தொடரும்.

டெங்கி இரத்தக் கசிவுக் காய்ச்சல்

————————————————————

இது டெங்கி காய்ச்சலின் கடுமையான வகை. இதில் வேறு வேறு வகையான டெங்கி வைரஸ் கிருமிகள் இரண்டுக்கும் மேற்பட்ட தோற்றால் உண்டாவது. இது குழந்தைகளிடமும் பிள்ளைகளிடமும் அதிகம் காணப்படுவது. இந்த வகை முழுக்க முழுக்க தென்கிழக்கு ஆசிய நாடுகளில்தான் காணப்படுகின்றது. இது இருமல் சளியுடன் தோன்றி, திடீரென்று காய்ச்சலுடன் தோல் , காது , மூக்கு பகுதிகளில் இரத்தக் கசிவு உண்டாகும். இரத்த வாந்தியும்கூட எடுப்பார்கள்.குடலில் இரத்தக் கசிவு உண்டாகி கரு நிறத்தில் மலம் வெளியேறும். இந்த வகை உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணி விடும்.,

 

டெங்கி காய்ச்சலுக்கான பரிசோதனைகள்

——————————————————————–

மருத்துவர் பொதுவான உடல் பரிசோதனையில் காய்ச்சலின் அளவு, மற்றும் தோலில் பொறி பொறியாக சிவந்துஉள்ளதா , வேறு எங்கும் இரத்தக் கசிவு உள்ளதா என்பதைப் பார்ப்பார். ஆனால் டெங்கி காய்ச்சல் என்பதை நிச்சயம் செய்ய சில இரத்தப் பரிசோதனைகள் செய்தாக வேண்டும். அவை வருமாறு:

* மொத்த வெள்ளை இரத்த செல்களின் அளவு ( Total white cell count ) – இதன் அளவு குறைந்திருந்தால் அது டெங்கியின் அறிகுறி.

* தகட்டணுக்கள் குறைபாடு ( thrombocytopaenia ) இவை இரத்த உறைவில் பங்கு பெரும் வெள்ளை இரத்த செல்கள். டெங்கி காய்ச்சலில் இதன் அளவு 100,000 குக் குறைவாகத் தென்படும்.இது படிப்படியாகக் குறைந்து ஒரு அளவை எட்டியதும் இரத்தக் கசிவு உண்டாகும். இதுவே தோலில் தோன்றும் சிவந்த பொறிகள்.மூக்கிலும் வாயிலும் வயிற்றிலும் குடலிலும் இரத்தக் கசிவு உண்டாவது இதனால்தான்.

” இமுனோகுலோபுலின் G , இமுனோகுலோபுலின் M பரிசோதனை. – இது இரத்தப் பரிசோதனை .இப் பரிசோதனையின் மூலமாக டெங்கி வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பொருள் ( antibody ) உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.

 

டெங்கி காய்ச்சலுக்கான சிகிச்சை

——————————————————

டெங்கி காய்ச்சல் வைரஸ் கிருமியால் உண்டாவதால் வைரஸுக்கு எதிரான நோய்முறியம் ( antibiotic ) இல்லாத காரணத்தினால் அறிகுறிகளைக் குறைக்கும் வகையில்தான் சிகிச்சை தரப்படுகிறது

.அவை வருமாறு:

* படுக்கையில் போதுமான ஓய்வெடுத்தல்

* நிறைய நீர் பருகுதல்

* நீர் பருக முடியாவிடில் இரத்தக் குழாய் வழியாக சேலைன் ( IV Saline ) ஏற்றப்படுதல்

* தகட்டணுக்கள் 20,000 துக்குக் குறைந்துவிட்டால் புதிய உறைந்த பிளாஸ்மா ( fresh frozen plasma ) ஏற்றப்படும்.

* இரத்தக் கசிவு அதிகம் இருந்தால் இரத்தம் ஏற்றப்படும்.

* ஆஸ்பிரின் ( aspirin ) புருபென் ( brufen ) போன்ற வலி குறைக்கும் மாத்திரைகள் உட்கொள்ளக்கூடாது. இவை இரத்தத்தின் கடின தன்மையை குறைப்பதால் இரத்தக் கசிவை அதிகரிக்கும்.

வெறும் டெங்கி காய்ச்சல் மட்டும் இருந்தால் அது உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணாது.ஆனால் அது டெங்கி இரத்தக்கசிவு காய்ச்சலாக மாறினால் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணலாம் . இதுபோன்றே டெங்கி அதிர்ச்சி நோய் ( dengue shock syndrome ) என்ற ஆபத்தான வகையும் மரணத்தை உண்டுபண்ணலாம்.

ஆகவே டெங்கி காய்ச்சல் என்று தெரிய வந்தபின் உடன் மருத்துவமனையில் சேர்ந்து, தக்க முன்னெச்சரிக்கை முறைகளில் சிகிச்சைப் பெறுவதே மேல்!

( முடிந்தது )

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 71 என் படகோட்டியின் போக்கு .. !ஈசாவின் சில்லி விண்ணோக்கி ஆய்வகம் பூதக் கருந்துளையைச் சுற்றி வியப்பான வெப்ப /குளிர்ச்சி தூசி மயம் கண்டது.