மருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் AUTISM

            இப்போது பல பிள்ளைகள்  ” ஆட்டிசம் ”  என்னும் குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர்.  இதை தமிழில் தற்சிந்தனை நோய், தன்மயம், தான்தோன்றி, தற்போக்கு என்றெல்லாம் மொழிபெயர்த்துள்ளனர். நான்  இதை தன்மைய நோய் என்றே அழைக்க விரும்புகிறேன்.
          இது மூளைக் கோளாறோ அல்லது பைத்தியமோ கிடையாது. அதற்கு மாறாக பிறவியில் மூளையில் உண்டான குறைபாடு என்னலாம். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்  தன்மீதே காதல் கொண்டு தனிமையில் ஒதுங்கி தர்புணர்வு உலகில் ஆழ்ந்திருப்பர். இது ஏன் இப்படி என்பதை ஆராய்வோம்.
          ” ஆட்டிசம் ”  அல்லது தன்மைய நோய் என்பது ஒரு சிக்கலான வளர்ச்சி குறைபாடு நோய்.  இது குழந்தையின் முதல் மூன்று வயதில் வெளிப்படும். இது நரம்புகளின் பாதிப்பால் மூளையின் செயல்பாடு பாதிப்புக்கு உள்ளாகிறது. அதன் விளைவாக அந்த குழந்தையின் பேசும் திறனும் மற்றவருடன் பழகும் விதமும் தடைபடும்.
          மரபணு ஆராய்ச்சியாளர்கள் “: ஆட்டிசம் ”  இன்னும் நான்கு விதமான மூளை தொடர்பான நோய்களுடன் தொடர்புடையதாகாக் .கண்டுபிடித்துள்ளனர். அவை வருமாறு:
          * A D H D .( Attention – Deficit Hyperactivity Disorder ) – மிகை இயக்கம்  தொடர்புடைய நோய்கள்
          * Bipolar Disorder – இரு துருவ மனக் கோளாறு
          * Schizhophrenia – உளச் சிதைவு நோய்
          * Depression – மனச்சோர்வு
          இந்த ஐந்து விதமான நோய்களிலும் ஒரே மாதிரியான மரபணு குறைபாடு உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
          ” ஆட்டிசம் ”  என்னும் தன்மைய நோய் அகன்ற தன்மைகள் கொண்டது. இதனால் பாதிக்கப்பட்ட இருவருக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படாது.  சிலருக்கு குறைவாகவும் வேறு  சிலருக்கு கடுமையாகவும் அறிகுறிகள் தென்படலாம். அவ்வாறு தோன்றக்கூடிய முக்கிய அறிகுறிகள் வருமாறு:

            * சமூகத்  திறமைகள் – இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மற்ற பிள்ளைகளுடன் சேராமலும் பழாகாமலும் இருக்கவே விரும்புவர். சாதாரண செயல்களில் மந்தமாகவும், எரிச்சலை உண்டுபண்ணுவதுமாகவும் இருக்கலாம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, அதற்கேற்ப எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைத் தெரியாமல் தன் போக்கிலேயே இருப்பார்கள். அடுத்தவரைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்கும். இந்த பிள்ளைகள் ஒருவரிடம் பேசும்போது அவருடைய கண்களைப் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பார்கள் .இவர்கள் தங்கள் வயதுடைய பிள்ளைகளிடம்கூட பேசுவதையும், சேர்ந்து விளையாடுவதையும் தவிர்ப்பார்கள். இதுபோன்று பேசும், விளையாடும் திறமைகள் இவர்களிடம் குறைவு.
          * பரிவுணர்வு-  மற்றொருவரின் உணர்ச்சிகளில் முழுமையாக நுழைந்து கொள்வதற்குள்ள திறனை பரிவுணர்வு என்கிறோம். இது தன்மைய நோய் உள்ள பிள்ளைகளுக்கு மிகவும் குறைவு. இதை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து பழக்கினால் கொஞ்சம் பலன் தரலாம். அவர்களிடம் பேசினால்கூட அவர்களிடமிருந்து எவ்விதமான எண்ணமோ , உணர்ச்சியோ தென்படாது. ஒருவேளை அவர்களுக்குப் பிடித்த பொருளைப் பற்றி மட்டும் நிறைய பேசிக்கொண்டிருக்கலாம்.
          * தொட்டுப் பழகுதல் – சிறு பிள்ளைகளுக்கு கொஞ்சுவதும், தொடுவதும், தூக்குவதும் பிடிக்கும். ஆனால் தன்மைய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் இதை விரும்பமாட்டார்கள்.அனால் எல்லா பிள்ளைகளும் அப்படி இல்லை. சில பிள்ளைகள் தாய் தந்தை உறவினருடன் நெருங்கி உறவாடுவதுண்டு.
          * அதிக சத்தம், சில மணம் , அதிக வெளிச்சம் – இது போன்றவை திடீரென்று தோன்றினால் தன்மைய பிள்ளைகள் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். அது போன்று நிகழப்போகிறது என்பதை தெரிந்து வைத்திருந்தால் அவ்வளவு பாதிப்பு இருக்காது.
          பேச்சு – தன்மைய பிள்ளைக்கு பேசுவது பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில பிள்ளைகளுக்கு சரியாக பேசக்கூட வராது. நாள்பட்டு கொஞ்சம் கொஞ்சம் பேச்சு வரும். அவர்கள் கேட்கும் ஒரு சொல்லையோ வாக்கியத்தையோ திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள்.  இதை Echolalia என்பர். அப்படியே பேச்சு வந்தாலும் அதில் ஏற்றத்தாழ்வு இல்லாமால் ஒரே நிலையில் இருக்கும்.
           * செய்ததையே திரும்ப திரும்ப செய்தல் – தன்மைய பிள்ளைகள் பலதரப்பட்ட செயல்களை திரும்ப திரும்ப செய்வார்கள்.சில உதாரணங்கள் வருமாறு:
          # ஒரே மாதிரியாக கைகளை உதறுதல், தலையை திருப்புவது, உடலை ஆட்டுவது.
          # கட்டாய குணம் – எதற்கோ கட்டுப்பட்டதுபோன்று சில பொருள்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்குவது அல்லது வரிசையாக வைப்பது.
          # ஒரேமாதிரி இருக்க வலியுறுத்துவது – நாற்காலி ஒரே இடத்தில் இருக்கவேண்டும் என்று அடம் பிடிப்பது.
          # தினமும் ஒரே மாதிரியான உணவு  அல்லது உடை என்பதை வலியறுத்துவது.
          # கட்டுப்பட்ட குணம் – வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் ஒரே பொருள் மீது முழு கவனம் கொள்வது – தொலைக்காட்சியில் ஒரே நிகழ்ச்சியில் மூழ்கிப்போவது, ஒரு விளையாட்டு சாமான் மீதே ஆர்வம் கொள்வது.
          # சுயமாக காயங்களை உண்டாக்கிக்கொள்வது – கண்ணைக் குத்துவது, கையைக் கடிப்பது, தலையை முட்டிக்கொள்வது.
          * இதர அறிகுறிகள்
          + மிதமிஞ்சிய சுறுசுறுப்பு ( Hyperactive )
          + அவசரசெயல்பாடு ( Impulsivity )
          + குறுகிய கவனிப்பு ( Short Attention Span )
          + ஆவேசம் ( Aggression )
          +மாறுபட்ட உணவு உண்ணும் பழக்கமும் தூங்கும் பழக்கமும் ( Unusual eating and sleeping habits )
          + பயமின்மை அல்லது அளவுக்கு அதிகமான பயம் ( Lack of Fear or more fear than expected )
          + மாறுபட்ட மனநிலை ( Unusual mood or emotional reaction )

                                                                                                            நோய் நிச்சயித்தல் ( Diagnosis )

           தங்களுடைய குழந்தைக்கு பிறப்பிலிருந்து 36 மாதங்கள்வரை தன்மைய நோய் உள்ளதா என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு பெற்றோருக்கே அதிகமாக உள்ளது. குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு உள்ளதை அவர்கள்தான் முதலில் காண்பார்கள். குழந்தை நேருக்குநேர் பார்க்காமல் இருப்பது, பெயர் சொல்லி அழைத்தால் திரும்பி பார்க்காதது, விளையாட்டு சாமான்களை வைத்துக்கொண்டு வினோதமான முறையில் விளையாடுவது போன்றவை ஆரம்ப அறிகுறிகள். அப்படி சந்தேகம் எழும்போது உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவேண்டும். இந்த நோய் உள்ளது என்பதை நிச்சயிக்க தற்போது பரிசோதனைகள் இல்லை. பின்வரும் அறிகுறிகள் ஏதேனும் காண நேர்ந்தால் மருத்துவரின் உதவியை உடன் நாடவேண்டும்.

          * குழந்தை 6 மாதத்தில் பெரிதாக சிரிக்காமல் இருப்பது அல்லது மகிழ்ச்சியைக் காட்டாமல் போவது.
          * 9 மாதங்களுக்குள் ஒலிகள் எழுப்பாதது அல்லது மகிழ்ச்சியான முக பாவனை இல்லாதிருப்பது.
          * 12 மாதங்களில் பேசாமல் இருப்பது.
          * 12 மாதங்களில் சைகை மூலம் காட்டுவது, கேட்பது, நீட்டுவது அசைப்பது போன்றவை இல்லாதாது.
          * 16 மாதத்தில் வார்த்தைகள் உச்சரிக்காமல் போவது.
          * 24 மாதங்களில் அர்த்தமுள்ள 2 வார்த்தை சொல் பேசாமல் இருப்பது.
          * எந்த வயதிலும் பேசாமலும் செயல்திறனும் இல்லாமல் இருத்தல்.

                                                                                                                                           சிகிச்சை முறைகள்

          தன்மைய நோய்க்கு மருந்துகள் இல்லை. ஆனால் ஆரம்பத்திலேயே இந்த குறைபாட்டை  கண்டறிந்து மருத்துவமனை சென்று  பல்வேறு விதங்களில் பயிற்சிகள் பெற்றால்  ஓரளவு முன்னேற்றம் காணலாம். தற்போது இதுபோன்ற சிறப்பு பயிற்சி நிலையங்கள் உள்ளன.  தன்மைய நோய்க்கு சில பயிற்சி மருத்துவம்  செய்யப்படுகிறது. அவை வருமாறு:
          * நடத்தை பயிற்சி – Behavioral Training – இதில் தன்முனைப்பு, சுய உதவி, சமூக திறமைகள் போன்ற பயிற்சிகள் தந்து குழந்தையின் நடத்தையில் முன்னேற்றமும், தொடர்பு கொள்வதில் முன்னேற்றமும் கொள்ள வகை செய்யலாம்.
          * சிறப்பு சிகிச்சைகள் – Specialized Therapies – இதில் பேச்சுப்  பயிற்சி ( Speech Therapy ),, தொழிலியல்  மருத்துவம் ( Occupational Therapy ),, செயல் மருத்துவம் ( Physical Therapy  )  போன்றவை தரப்படும்.
          * மருந்துகள்-  இவை பெரும்பாலும் தன்மைய நோயின் இதர கூறுகளான பரபரப்பு, மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவற்றுக்கே பயன்படுத்தப்படும்.

          ( முடிந்தது )

Series Navigationஇந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்தொடுவானம் 237. சூழ்நிலைக் கைதி