மருத்துவக் கட்டுரை – நடுச் செவி அழற்சி – ( Otitis Media )

Spread the love
 
          நடுச் செவி ( Middle Ear ) என்பது செவித்திரைக்கும் ( Tympanic Membrane ) உட்செவிக்கும் ( Inner Ear ) இடையில் உள்ள பகுதி.           இப் பகுதியில்தான் Eustachian Tube எனும் குழாய் உள்ளது. காது வலி அதிகமாகத் தோன்றுவது இப் பகுதியில்தான்.நடுச்செவி அழற்சி வலிக்கான காரணங்கள்

காதுக்குள் அழற்சியை உண்டு பண்ணி, வீக்கத்தினால் வலியை உண்டு பண்ணுபவை நோய்க் கிருமிகள். இவை வைரஸ், பேக்டீரியா, காளான் என்று மூன்று வகைகள்.

தொண்டை, மூக்கு, காது ஆகிய மூன்று உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால் காதுக்குள் கிருமிகள் புகுதல் எளிது.

சாதாரண சளி பிடித்தாலே போதும், காதில் அடைப்பு உள்ளதை நாம் உணரலாம். அது போன்றே மூக்கைச் சிந்தும் போதும் கூட காது வலி தோன்றலாம். இவ்வாறு சளித் தொற்றால் உண்டாகும் காது வலி தற்காலிகமானது. சளி நின்றதும் வலியும் நின்று விடும்.

நோய்க் கிருமிகளில் பேக்டீரியா அதிகம் வீரியமிக்கவை. இவற்றில் பல்வேறு வகைகள் உள்ளன. காது வலிக்கு பரவலான காரணம் Streptococcus Pneumoniae என்ற பேக்டீரியா கிருமிகள்.

இதைத் தவிர வேறு சில பேக்டீரியா கிருமிகள் வருமாறு:

* Pseudomonas Aeroginosa

* Haemophilus Influenzae

* Moraxella Catarrhalis

இவற்றில் Haemophilus Influenzae கிருமிகள் இளம் வயதினரை அதிகம் தாக்க வல்லது.

வைரஸ் கிருமிகளில் சாதாரண சளியை உண்டு பண்ணும் வைரஸ் ( Common Cold Virus ) , Respiratory Syncytial Virus ஆகியவை சுவாசக் குழாய்களின் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதுடன் காதையும் பாதித்து விடுகின்றன.

பல்வேறு வகையான காளான்களும் ( Fungus ) காதுகளில் தஞ்சம் புகுந்து செவித்திரையில் வளர்கின்றன. இவற்றை நாம் பெரும்பாலும் காது குடையும் பஞ்சு குச்சிகளால் பரவ விடுகிறோம்

.          ஒரு சிலருக்கு இப் பிரச்னை தொடர்ந்து காணப் பட்டால் அதை Chronic Otitis Media என்று கூறுவதுண்டு. இதை சரி செய்ய தொடர்ந்து மருந்துகள் பயன்படுத்த வேண்டும்.

வைரஸ் கிருமிகளால் சளி பிடித்த பின் காய்ச்சலுடன் காது வலி உண்டாகலாம். இந்த வலி சளி நின்றதும் போய் விடும். இதை Acute Otitis Media என்பர்.

ஆனால் பேக்டீரியா கிருமிகளால் இப்படி தொற்று உண்டானால் அதிகக் காய்ச்சல் ஏற்பட்டு, நடுச் செவியில் அழற்சியும் வீக்கமும் உண்டாகி, சீழ் பிடித்து, செவித்திரை கிழிந்து, காதுப் பகுதியின் எலும்புகள் பாதித்து கிருமித் தொற்று மூளைப் பகுதியிலும் பரவாலாம். இது ஆபத்தை உண்டு பண்ண வல்லது.

மேற்கூறிய இரண்டு வகையான காது வலியிலும் செவித்திரை பாதிக்கப்பட்டு அதில் துவாரம் ஏற்பட்டு சீழ் வடிய நேர்ந்தால் காது கேட்பதும் பாதிக்கப்படும்.

இவ்வாறு தொடர்ந்து காதிலிருந்து சீழ் வடிந்தால் அதை Chronic Suppurative Otitis Media ( CSOM ) என்பர்.

            சிகிச்சை முறை

சாதாரணமாக காது வலி எனில், கிளினிக்கில் மருத்துவர் காதைப் பரிசோதனை செய்து விட்டு வலி குறைக்கும் மருந்தும், சொட்டு மருந்தும், எண்ட்டிபையாட்டிக் மருந்தும் தருவார்கள். பெரும்பாலும் அதில் வலி குறைந்து குணம் பெறலாம்.

ஆனால் வலி தொடர்ந்து இருப்பின், காது, மூக்கு, தொண்டை நிபுணரைப் பார்ப்பதே நல்லது. அவர் காது, மூக்கு, தொண்டைப் பகுதிகளை ” ஸ்கோப் ” மூலம் பரிசோதனைச் செய்து உண்மைக் காரணத்தைக் கண்டறிவார்.

பொதுவாக Amoxycillin அல்லது Amoxycillin – Clavulanate போன்ற எண்ட்டிபையாட்டிக் மருந்துகள் தரப்படுவதுண்டு.

தேவைப்பட்டால் ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்.

( முடிந்தது )

Series Navigation