மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்

This entry is part 5 of 16 in the series 20 செப்டம்பர் 2015

                                                            

           இரத்தக்கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் இப்போதெல்லாம் அனைத்து நாடுகளிலும் அதிகமாகப் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னேறிய நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் இது அபார வேகத்தில் தோன்றுகிறது. இதற்கு முக்கிய  காரணம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள்.  குறைவான உடல் உழைப்பும் ( உடற்பயிற்சியின்மை  ), உப்பு அதிகமுள்ள பதனிடப்பட்ட உணவுவகைகளையும், அதிகம்  கொழுப்பு நிறைந்த உணவு வகைகளையும் பருகுதல் முக்கிய காரணங்களாகும்.
இரத்த ஓட்டத்துக்கு முக்கியமானது இருதயம். அது சுருங்கும்போது இரத்தம் வெளியேறி இரத்தக்குழாய்களில் ஓடுகிறது. அவ்வாறு ஓடும்போது அது இரத்தக்குழாய்களின் சுவர்களில் செலுத்தும் அழுத்தத்தையே இரத்த அழுத்தம் என்கிறோம். இந்த அழுத்தத்தின் அளவு இருதயம் சுருங்கும்போது ஒரு அளவாகவும் விரியும்போது ஒரு அளவாகவும் இருக்கும். சாதாரணமாக இருதயம் சுருங்கி இரத்தத்தை வெளியேற்றும்போது உண்டாகும் அழுத்தம் 120 mm Hg என்றும் இருதயம் விரிந்து இரத்தத்தை உள்வாங்கும்போது தோன்றும் அழுத்தம் 80 mm Hg என்று அளவிடப்பட்டுள்ளது. இதையே 120/80 என்று குறிக்கிறோம். இதற்கு மாறாக 140/90 என்றிருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் என்கிறோம்.
                        உயர் இரத்த அழுத்தம் உண்டாகக்  காரணங்கள்* வயது – வயது கூட கூட இரத்த அழுத்தமும் கூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இது இன்னும் அதிகமாகிறது.
* பால் – இளம் வயதில் ஆண்களுக்கும், முதிர் வயதில் பெண்களுக்கு இது அதிகம் உண்டாகிறது.
* வாழ்க்கை முறை – இது பற்றி மேலே கூறிவிட்டேன்.
* பரம்பரை – இது பரம்பரை நோய்களில் ஒன்றாகும்.
* மனஉளைச்சல் – மனஉளைச்சல் இருதயத்தை வேகமாக துடிக்கச்செய்து இரத்தக்குழாய்களைப் பாதிக்கிறது.
பெரும்பாலானவர்களுக்கு எவ்விதக் காரணமும் இல்லாமல் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதை இயல்பான உயர் இரத்த அழுத்தம் ( Essential Hypertension ) என்று அழைக்கிறோம். இது உடற்கூறு தொடர்பும் சுற்றுச்சூழல் தொடர்பும் உடயது.
வேறு காரணத்தால் உண்டாகும் உயர் இரத்த அழுத்தம் ( Secondary Hypertension ) என்பது அடுத்த வகை.  இந்த வகை உடலில் வேறு நோயால் அல்லது கோளாறினால் உண்டாகும் உயர் இரத்த அழுத்தம்
* அதிகமான அல்டோஸ்டீரான் ( Aldosterone ) என்னும் ஹார்மோன் பிரச்னையால் உண்டாவது. இதனால் சோடியம் பொட்டாசியம் உப்புகளின் அளவில் மாறுதல்கள் உண்டாகி உயர் இரத்த அழுத்தத்தை உண்டுபண்ணுகிறது.
* அதிகமாக மது அருந்தினாலும் உயர் இரத்த அழுத்தம் உண்டாகலாம்.
* சிறுநீரக நோய்.
* பீயொகுரோமோசைட்டோமா ( Phaeochromocytoma )
* குஷிங்  நோய் ( Cushing Syndrome )
* ஹைப்பர்தைராய்டு
* அட்ரினல் சுரப்பி கோளாறு

                                                                    அறிகுறிகள்

துவக்க காலத்தில் பல வருடங்கள்கூட எவ்வித அறிகுறியும் இல்லாமல் உயர் இரத்த அழுத்தம் இருக்கலாம். பல சமயங்களில் மருத்துவரை வேறு காரணத்துக்காக பார்க்க செல்லும்போது அவர் இதைக்  கண்டுபிடித்து கூறுவதுண்டு. இதனால்தான் இதை ” மௌன கொலையாளி ” ( Silent Killer ) என்றும் கூறுவதுண்டு. இவ்வாறு பல ஆண்டுகள் நீடித்தால் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகலாம். அவை வருமாறு:

* இருதயம் – அதிகமான இரத்த அழுத்தத்தை எதிர்த்து இருதயம் சுருங்கவேண்டும் என்பதால் அதன் வேலை பளு அதிகமாகி இருதயம் வீங்கி பெரிதாகும். இதுபோல் பலவீனமான இருதயம் செயலிழந்து போகும். இதை இருதய செயலிழப்பு ( Heart  Failure ) என்கிறோம். இது உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும். இது உண்டானால் மூச்சுத் திணறல், கால்கள் வீக்கம், வயிற்றில் நீர் தேக்கம், நுரையீரலில் நீர் தேக்கம் போன்றவை உண்டாகும்.

* இரத்தக்குழாயில் வீக்கம் ( Aneurysm ) இது நாளடைவில் பெரிதாக வீங்கி உடைத்தால் உயிருக்கு ஆபத்து. இதில் நெஞ்சு அல்லது வயிறு வலி உண்டாகும்.

* தமனி சுருக்கம் – கொழுப்பு படிவதாலும், இரத்தக் குழாய்களின் சுவர்கள் தடிப்பதாலும் அடைப்பு உண்டாகும். அதனால் முக்கிய உறுப்புகளில் அடைப்பு உண்டாகும்.அது வருமாறு:
# இருதயம் – மாரடைப்பு
# சிறுநீரகம் – செயலிழப்பு
# மூளை – பக்கவாதம்
# கால்கள் – கேங்கிரீன் அல்லது தசைகளின் இறப்பு
# கண்கள் – பார்வை இழப்பு

                                                                 பரிசோதனைகள்

மருத்துவர் பரிசோதனையிலேயே இது தெரியவரும். ஆனால் குறைந்தது மூன்று முறை பரிசோதனையில் இரத்த அழுத்தம் உயர்வாக இருந்தால்தான் உயர் இரத்த அழுத்தம் என்று முடிவு செய்து மருந்து தரப்படும்.
இதர இரத்தப் பரிசோதனைகளின் வழியாக கொழுப்பின் அளவு பார்க்கப்படும். ஈ.சி.ஜி.பரிசோதனையின்மூலம் இருதயத்தின் நிலையை தெரிந்துகொள்ளலாம்சிறுநீர் பரிசோதனை, கண் பரிசோதனை தேவைப்படும்.

                                                                சிகிச்சை முறைகள்

சிகிச்சையில்  வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் முக்கியமாகும். அவை வருமாறு:
* உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது.
*மது அருந்துவதைக் குறைத்துக்கொள்வது.
* காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்வது.
* மீன் வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது.
* உடல் பருமனைக் குறைத்தல்.
* உடற்பயிற்சி செய்தல்.
* புகைப்பதை நிறுத்துதல்.
வாழ்க்கை முறை மாற்றத்தில் இரத்த அழுத்தம் குறையாவிடில் மருந்துகள் உட்கொள்ளலாம்.  முதலில் சாதாரண மருந்து குறைந்த அளவில் எடுக்கலாம். அதிலும் குறையவில்லை என்றால் வேறு மருந்துகள் சேர்த்துக்கொள்ளலாம். தற்போது ஏராளமான மருந்துகள் உள்ளன. மருத்துவர் அவற்றில் எது தேவை என்பதை நிர்ணயம் செய்வார்.
மருந்துகளின் விவரம் வருமாறு:
* சிறுநீர் வெளியேற்றுபவை ( Diuretics )
* பீட்டா ப்ளொக்கர் ( Beta – Blocker )
* கால்சியம் எண்டகோனிஸ்ட் ( Calcium Antagonis
* எ .சி.இ . இன்ஹிபிட்டர் ( ACE Inhibitor )
* அஞ்சியோடென்ஷன் ரிசெப்டோர் ப்ளொக்கர் ( Angiotension Receptor Blocker )

ஆகவே உயர் இரத்த அழுத்தம் துவக்கத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருப்பதால், குடும்ப பரம்பரையில்  இது உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அவர்கள் உணவுப் பழக்கத்திலும் அவ்வாறே இருப்பது  நல்லது. நோய் உள்ளது தெரிந்தபின்பு தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ளவேண்டும். உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த முடியாது. அதை மருந்துகளின்மூலம் கட்டுப்படுத்த முடியும்.

           ( முடிந்தது )
Series Navigationதோற்றம்2015 செப்டம்பர் 16 ஆம் தேதி சில்லியில் நேர்ந்த 8.3 ரிக்டர் பூகம்பத்தில் சிறிய சுனாமி, சிதைவுகள், மக்கள் மரணம்.
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *